அக்டோபர் 12 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பேரரசு
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | | Printable version | URL |

பெற்றவரைக் கொன்ற வில்லன்களை இரட்டையர்களான உடன்பிறப்புகள் கொல்வது தான் பேரரசுவின் ஒன்லைன் கதை.

Perarasuநீதிபதி நாசர் முகம்தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்டு பல நாட்களாகியும் போலீஸால் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதைப் பற்றி துப்பறியும் சி.பி.ஐ ஆபீசர் காசிவிஸ்வநாத்தாக வருகிறார் விஜயகாந்த். கொஞ்சம் கொஞ்சமாக துப்பறிந்து நாசர் கொலை செய்யப்பட்ட விவரத்தையும் அவரது கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் காவல் துறையைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் என்பதையும் கண்டுபிடிக்கிறார். அந்த அதிகாரிகள் மூவரையும் தன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரும் விஜயகாந்த் அவர்களை கைது செய்ய நினைக்கும்போது அவர்கள் ஒவ்வொருவராக விஜயகாந்தாலேயே கொல்லப்படுகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரியை விஜயகாந்த் கொல்லும் போது நேரில் பார்த்த முத்துக்காளை அதைப் பற்றி சாட்சி சொல்ல காவல் நிலையம் வரும்போது அங்கே உயர் அதிகாரியாக விஜயகாந்த் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறார். இவர்  தான் கொலை செய்தவர் என்று அவர் சாட்சியம் சொல்ல குழம்பிப்போகிறது காவல்துறை மற்றும் விஜயகாந்த். தன் சாயலில் இருப்பவர் யார் என்பதை அறிந்துகொள்ள விஜயகாந்த் செய்யும் முயற்சிகள் பலன் தருகின்றன.

பாஞ்சாலங்குறிச்சியில் வாழும் பெரிய மனிதர் சரத்பாபு. அவருக்கு பேரரசு, இளவரசு என்று இரண்டு பிள்ளைகள்.Vijayakanth, Pandiyarajan மனைவிக்கு அந்திமக்கடன் செய்ய காசிக்குச் செல்லும் போது பணத்தாசை பிடித்த ஒருவனால் தன் மகன்களில் ஒருவனான இளவரசுவை தொலைத்துவிடுகிறார் சரத்பாபு. ஊரில் மிகுந்த செல்வாக்கு பெற்றவரான  அவர் பொதுத் தேர்தலில் பணத்தாசை பிடித்த மன்சூர் அலிகானுக்கு பதிலாக மக்கள் தொண்டாற்றும் பிரகாஷ்ராஜை எம்.எல்.ஏ ஆக்குகிறார். ஆனால் பிரகாஷ்ராஜை மன்சூர் தன் பணபலத்தால் மயக்கிவிட இருவருமாக சேர்ந்து ஊரைக் கொள்ளையடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களை எதிர்க்கும் சரத்பாபுவை இவர்கள் இருவரும் போலீஸ் உதவியுடன் கொலைசெய்கிறார்கள். நடந்தது அனைத்தையும் பார்த்து கொதித்துப் போகும் இளவயது விஜயகாந்த் அன்றே அவர்கள் அனைவரையும் கொல்ல சபதம் செய்கிறார். செய்த சபதத்தில் பிரகாஷ்ராஜ் தவிர பாக்கி அனைவரையும் அவர் போட்டுத் தள்ள, பிரகாஷ்ராஜை கொல்ல முடியாதபடி குறுக்கே வருகிறார் சி.பி,ஐ அதிகாரியான தம்பி விஜயகாந்த். நடந்த கதை எல்லாம் தெரிந்தும் கூட ஒருவனை தண்டிக்கும் உரிமை சட்டத்திற்கு மட்டும் தான் உண்டு என்று நம்பும் இவர் தன் அண்ணனையே எதிர்கிறார். தம்பியின் எதிர்ப்பையும் மீறி பேரரசு விஜயகாந்த் தான் செய்த சபதத்தில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

இரட்டை வேடம் போடுவது என்பது விஜயகாந்திற்கு அல்வா சாப்பிடுவதைப் போல. அதிலும் இரட்டை பிறவி என்பதால் அவர் போடும் கொஞ்சூண்டு கெட்டப் சேஞ்சும் இதில் கிடையாது. எம்.எல்.ஏ ஆன பிறகு பக்கம் பக்கமாக அரசியல் வசனம் பேசி டார்ச்சர் செய்யப்போகிறார் என்று நினைத்தால் அதற்கு மாறாக இருக்கிறது. கொஞ்சமாக பேசினாலும் திருத்தமாக பேசுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல பட்டையைக் கிளப்புகிறார். சி.பி.ஐ ஆபீசரை விட பேரரசு பாத்திரத்தில் விஜயகாந்த் கம்பீரமாக இருக்கிறார்.

நாயகி தாமனி இரண்டு பாடல்களுக்கு விஜயகாந்துடன் ஆடுவதைத் தவிர ஒன்றுமே செய்யவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆனந்தராஜ் மலையாளம் பேசுவது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் அதை ஈடுசெய்கிறார். பாண்டியராஜனின் காமெடி சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் பல இடங்களில் படுத்துகிறது.

வில்லன்களாக மன்சூர் அலிகான் மற்றும் பிரகாஷ்ராஜ். மன்சூருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. ஆனால் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வழக்கம்போல அட்டகாசம் செய்கிறார். நாசர் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விடுகிறார். சரத்பாபு மற்றும் சந்திரசேகர் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

பிரவீன்மணியின் இசையில் பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான். பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவும் ராக்கி ராஜேஷின் சண்டைபயிற்சியும் பாராட்டப்படவேண்டியவை. தற்சமயம் வெளிவரும் பெரும்பாலான படங்களில் உள்ள அதீத வன்முறை ஆக்ஷன் காட்சிகளும், ஆபாச காட்சிகளும், திணிக்கப்பட்ட காமெடி, அரசியல் நெடி தூக்கலாக வீசும் பஞ்ச் டயலாக்குகளும் இதில் அதிக அளவில் இல்லாதது ஒரு பெரிய ஆறுதல். ஆனாலும் கதாநாயகி சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே தேவையற்றவையாகவே தோன்றுகின்றன. மொத்தத்தில் கதை ரொம்பவே பழசு என்றாலும் புதுமையாக திரைக்கதை அமைத்து சபாஷ் வாங்கியுள்ளார் இயக்குனர் உதயன்.

| | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |