அக்டோபர் 14 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
வேர்கள்
முன்னுரை
கட்டுரை
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : தன் கையே தான் தனக்குதவி ?
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |

  கட்டுமானத்துறை முதலாளிகள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் தொழிலாளிகளுக்காக அரசாங்கத்திடம் எப்படி வரி (levy) கட்டுகிறார்களோ, அதேபோல வெளிநாட்டுப் பணிப்பெண்களை அமர்த்திக்கொள்பவர்களும் சிங்கப்பூரில் அரசாங்கத்திடம் வரி(levy) செலுத்தவேண்டும். இங்கு ·பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனீசியா போன்ற நாடுகளிலிருந்து பணிப்பெண்கள் வீடுகளில் வேலை செய்து பொருளீட்ட இந்நாட்டுக்கு வருகிறார்கள்.

  கடந்த ஆண்டு சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் (ஒரு தாயிற்கு) 1.25க்கு இறங்கிவிட்டது. 35,000 குழந்தைகள் சிங்கப்பூர் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் பிறந்துள்ளன. இது அரசாங்கம் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட 1000 குறைவு. ஆகவே, சிங்கப்பூர் அரசாங்கம் வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு மேலும் பல சலுகைகளைக் கொண்டு வந்திருக்கிறது. நாட்டின் மக்கட் தொகையைக்கூட்டும் எண்ணத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் பணிப்பெண்களை நியமித்துக்கொள்பவர்கள் செலுத்தும் வரியைக் குறைக்கவிருக்கிறது. இது வேலைக்குப் போகும் தாயாகப்போகும்/ தாயாகியிருக்கும் பெண்களுக்கு ! 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிருக்கும் வேலைக்கும்போகும் தாய்மார்கள் பணிப்பெண்ணை நியமித்துக்கொள்ள நினைத்தால் அவர்களுக்கும் குறைந்த வரி செலுத்தக்கூடிய சலுகையை வழங்குகிறது. இந்தக் கட்டணத்தை $ 345 லிருந்து $ 250 என்று அரசாங்கம் குறைத்துள்ளது ஆகஸ்ட் முதல்தேதியிலிருந்து. 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோரைப் பேணும் குடும்பங்களுக்கும் பணிப்பெண் வரியில் சலுகையுண்டு.

  அரசாங்கம் சலுகைகளை அறிவித்தவுடன் சிங்கப்பூரர்கள் 'ஹாட்லைன்' எனப்படும் கட்டணமில்லாத் தொலைபேசியில் அழைத்து விவரங்கள் சேகரித்தார்கள். ஒரு நாளைக்கு 1000 அழைப்புக்கள் வந்தனவாம். மலிவு விற்பனை, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு வந்தால் போதும், எங்கிருந்தெல்லாமோ கூட்டம் குவிந்துவிடும் அல்லவா? ! அதேபோலத்தான் இப்போதும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள இவர்கள் ஈடுபாடு காட்டுகிறார்கள். உணவகம் தூரத்தில் இருக்கிறது என்று காரணம் கூறிப் பிள்ளைபெற்றுக்கொள்ளத் தயங்கும் சிங்கப்பூரர்களிடையே 'சலுகைகள்' என்றதுமே ஏற்படும் இத்தகைய ஆர்வம் அலாதிதான். அந்தவருடத்திற்குக் கிடைக்கும் வரிவிலக்கு, சம்பளத்துடனான விடுப்பு என்று எல்லாச்சலுகைகளும் அவர்களைப் பிள்ளை பெற்றுக்கொள்ளத் தூண்டுகின்றன.

  வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பலசலுகைகள் கொண்டுவரும் அதே நேரத்தில் வேலைக்குப்போகாமல் வீட்டிலிருக்கும் தாய்மார்களைக் கணக்கில் கொள்ளவில்லையே என்ற சர்ச்சையும் ஒருபுறம் மிகவும்சூடாக நடந்தது. வீட்டிலிருக்கும், சுயதொழில்செய்யும் மற்றும் தத்தெடுத்திருக்கும் தாய்மார்களுக்கும் இரண்டாம், மூன்றாம், நான்காம் குழந்தைகளுக்குக் கிடைக்ககூடிய அவ்வருடத்தின் வருமானவரிச்சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் செய்யும் தாய்மார்களுக்கும் வருமானவரிச்சலுகையுண்டு. தத்தெடுத்து வளர்க்கும் தாயிற்கும் குழந்தை ஆறுமாதத்திற்குள் இருந்தால், சிங்கப்பூர் குடிமகனாகவும் இருந்தால், சுமந்து பெற்ற தாய்மார்களுக் கொடுப்பதுபோலவே நான்கு வாரச்சம்பளம் அரசாங்கம் கொடுக்கும்.

  சரி, பணிப்பெண் விஷயத்திற்கு வருவோம். இவ்வருடம் ஆகஸ்ட் 30 வெளியான செய்தியின்படி பணிப்பெண்களுக்கான இந்த வரிச்சலுகை அமுல்படுத்தும் அதேவேளையில் அரசாங்கம் பணிப்பெண்களின் குறைந்தபட்ச வயதைக்கூட்டுகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் கொண்டு வந்த பெரிய மாற்றங்களில் வெளிநாட்டுப்பணிப்பெண்களின் குறைந்தபட்ச வயதைக்கூட்டியதும் ஒன்று. இதன் மூலம் பணிப் பெண்களுக்கும் முதலாளிகளுக்குமான பிரச்சனைகள் குறையும் என்றே அரசாங்கம் நம்புகிறது. குறைந்தபட்ச வயதைமட்டுமில்லாமல் பணிப்பெண்களுக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதியும் தேவை என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஏற்கனவே வேலைபார்த்துக்கொண்டிருக்கும் பணிப்பெண்களுக்கு இந்த மாற்றங்களால் பாதிப்புக்கள் இருக்காது.

  குழந்தையைப்போன்ற மனம் படைத்த பெரியவர்களையும் பார்க்கிறோம். அதே சமயம் மனமுதிர்ச்சியுடைய (பிஞ்சிலேயே பழுத்த ?!) இளசுகளையும் தானே நாம் பார்க்கிறோம். வயதிற்கும் மனமுதிர்ச்சிக்கும் சம்பந்தமிருக்கவேண்டுமென்றாலும் நடைமுறையில் எப்போதும் இருக்கிறதா என்ன?! இருந்தாலும்,..

  வயது கூடிய கல்வியறிவுடைய பணிப்பெண்களின் தேவையை மனிதவள அமைச்சர் திரு. இங் எங்க் ஹென் 29 ஆகஸ்ட் அன்று தோபாயோ சமூகமன்றத்தில் நிருபர்களுக்களித்த பேட்டியில் கூறினார். நகர வாழ்க்கைக்குப் பணிப்பெண்கள் பழக முடியாமை மற்றும் மிகக்குறைந்த வயது ஆகியவையே முதலாளிகள் மற்றும் பணிப்பெண்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாகின்றன என்றார் அவர். கல்வியறிவுடைய, கொஞ்சம் வயது கூடிய பணிப்பெண்கள் நம் நாட்டுக்கு வரும்போது பணிப்பெண்களின் சேவையின் தரம் கூடும், என்றும் கூறினார். " இதனால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைத்துவிடாது. ஆனால், ஓரளவிற்கு, கொஞ்சம் கணிசமான அளவிற்குப் பிரச்சனைகளைக் களையலாம்", என்றும் அவர் கூறினார். இதனால் முதலாளி பணிப்பெண் உறவில் வரவேற்கத்தக்க மாறுதல்களை எதிர் பார்ப்பதாகக்கூறினார். இனிமேல் தான் அதிகாரப்பூர்வமாக பணிப்பெண்ணின் குறைந்தபட்ச வயது அறிவிக்கப்படும். அவர் பணிப்பெண்களின் குறைந்த பட்ச வயது 18 லிருந்து 25 திற்குள் வருமென்றும் சொன்னார். மலேசியாவில் கூட பணிப்பெண்கள் குறைந்தது 25 வயதிருக்கவேண்டும் என்பதையும் சுட்டினார். பணிப்பெண்கள் சேவை நிறுவனங்களுடன் (ஏஜென்ஸி) இணக்கமாகப்பேசித் தேவையான பணிப்பெண்களைத் தருவிக்கவே அமைச்சு முயலும் என்றார்.

  1999 முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 100 இந்தோனீசியப்பணிப்பெண்கள் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாடி ஜன்னல்களைத் துடைக்கும்போது இறந்தவர்கள். ஜனவரி 2002 முதல் ஜூலை 2003 வரையிலான காலகட்டத்தில் பணிப்பெண்ணை அமர்த்திக்கொள்ளும் வசதி 67 குடும்பங்களுக்குத் தடைசெய்யப்பட்டது. பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்துவது மட்டுமில்லாமல் இதற்குப் வேறுபல காரணங்களும் கூறப்பட்டுள்ளன.

  வயதுகுறைந்த பணிப்பெண்கள் சிலர் முதலாளிகள் நியாயமில்லாமல் இடும் சிலபணிகளை மறுக்கமுடியாது போகலாம் என்பது அதிகாரிகளின் கணிப்பு. என் காலைப்பிடித்துவிடு என்றோ, ஜன்னலின் வெளிப்புறத்தைத் துடைத்துச்சுத்தம் செய் என்றோ சொல்லும் போது இட்டபணியை அப்படியே செய்கிறார்கள், முதிர்ச்சியும் அனுபவமும் இல்லாதவர்கள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைப்பராமரிப்பு, வீட்டுவேலை என்று எல்லாவற்றையும் சரிவரச்செய்ய இத்தகையோருக்கு எளிதாக வருவதில்லை. குழந்தைகளைப் பராமரிக்க இந்த சின்ன வயதுப்பெண்களுக்கு அனுபவம் போதாது  என்பதும் பணிப்பெண் சேவை நிறுவனங்களின் (ஏஜென்ஸி) அனுமானம். குறைந்தது ஆரம்ப இருபதுகளில் இருக்கும் பெண்கள் பணிப்பெண் வேலைக்குச் சரியாக இருப்பார்கள் என்கிறார்கள் இவர்கள்.

  சிறப்பான சேவை பெற அதிக சம்பளம் கொடுக்கத் தயாராய் இருக்கவும் வேண்டும் சிங்கப்பூரர்கள் என்றும் சொல்கிறார்கள் பணிப்பெண் சேவை நிறுவன உரிமையாளர்கள் . குறைந்தபட்ச வயது மற்றும் வரிகளில் மாற்றங்களை அரசாங்கம் அறிவிக்கும் இதே நேரத்தில் முதலாளிகள் பணிப்பெண்ணுக்கான குறைந்தபட்ச சம்பளத்தைப்பற்றியும் சிந்திக்கவேண்டும். அதுவும் நியாயமான தொகையாயிருத்தல் அவசியம் என்கிறார்கள். கல்விச் சான்றிதழ், வயது குறித்த ஆவணங்கள் ஆகியவற்றைச் சோதிக்க மேலும் சிறப்பான வழிமுறைகள் தேவை என்பது முதலாளிகளின் வேண்டுதல். வயதைக்கூட்டிவிட்டால், பணிப்பெண்களிடம் முதிர்ச்சியை எதிர்பார்க்கமுடியுமா என்ற கேள்வி எழுகிறதில்லையா? வயதிற்கும் முதிர்ச்சிக்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பொதுவாகப் பார்த்தோமானால், நிச்சயம் சில வரவேற்கத்தக்க சிறு மாற்றங்கள் வருமென்றே தோன்றுகிறது.

  இவை ஒருபுறமிருக்க பணிப்பெண்களிக்கான ஏஜென்ஸிகள் தான் பணிப்பெண்களின் சம்பளவுயர்வில் குளிர்காய்வதாக அக்டோபர் முதல்வார சர்ச்சைகள் சொல்கிறன. ஒவ்வொரு பணிப்பெண்ணும் ஏஜென்ஸிக்கு தரகுத்தொகையாகச் (fees) செலுத்த வேண்டிய பணத்தை சம்பளத்திலேயே கழித்துக்கொள்வர். அவர்கள் பட்டிருக்கும் இந்தக்கடனை மாதமாதம் கட்டித்தீர்க்கிறார்கள். இது சில வருடங்களுக்கு நீடிக்கும். ஒருவர் இந்தோனீசியப் பணிப்பெண்ணை அமர்த்திக்கொண்டால் முன்பை விட $10 அதிக மாதசம்பளம் கொடுக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். கூடவே அந்தப்பெண்கட்டவேண்டிய கடனும் கூடுகிறதாம். அதாவது, ஏஜென்ஸி ·பீஸ¤ம் (fees) கூடும். அது கிட்டத்தட்ட $1540 யிலிருந்து $1750 க்கு உயரும்.ஆக, இரண்டுவருடங்களில் $240 ல் $210 ஏஜெண்டுக்கே போய்விடும். மீதி $30 தான் இரண்டுவருடத்தில் சம்பளவுயர்வால் அவள் பெறும் ஆதாயம். சில ஏஜெண்டுகள் பணிப்பெண்களின் சம்பளத்தை $ 280 முதல் $ 340 வரை கூட உயர்த்துவதாக ஆசைகாட்டிப் பணிப்பெண்களை வரவைக்கின்றனர். வரி(levy) குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளநேரத்தில், பணிப்பெண்களின் சம்பளமும் கொஞ்சம் உயர்ந்து தான் உள்ளது. ஆனால், இதனாலெல்லாம், பணிப்பெண்களோ இல்லை, அவர்களை அமர்த்திக் கொள்ளும் பொதுமக்களோ அதிக பயனடைவதாகத் தெரியவில்லை. ஆக, ஏஜென்ஸிகளின் காட்டில்தான் இப்போது நல்ல மழையாம் !

  முன்பு ஒருமுறை என் சீன சிநேகிதி சொன்ன அவளின் சொந்தச் சோகக்கதைதான் நினைவுக்கு வந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 17 வயது இரண்டுங்கெட்டான் ·பிலிபினோ பணிப்பெண்ணை அமர்த்தியபோது, அந்தப்பெண் செய்த வேலைகள் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. குடும்பத்துச் சிறார்களோடு வீட்டிற்குள் ஒளிந்து விளையாடி பூச்சாடிபோன்றவற்றை உடைத்திருக்கிறாள். அது மட்டுமா, ஒளிந்து விளையாடும்போது 4 வயதுப்பாலகனை 'அவன் கேட்டுக்கொண்டான்' என்று ஸ்டோர் ரூமில் கப்போர்டிற்குள் வைத்து மூடி, ஸ்டோர்ரூம் கதவையும் மூடிவிட்டுத்தானும் வேறு அறையில் ஒளிந்துகொண்டிருக்கிறாள், மற்றொரு 6 வயதுச் சிறுவன்  தேடிக்கண்டுபிடிக்க. எத்தனை ஆபத்தான செயல்! ஒவ்வொரு நாளும் சிநேகிதி வீடுதிரும்பும்போது வீடு கிடக்கும் நிலையைப்பார்த்து செய்வதறியாது மலைத்திருக்கிறார். அந்தப்பெண்ணை நிறுத்திவிட்டு இரண்டாவதாக நடுத்தர வயதுப்பெண் ஒருவரை நியமித்துக்கொண்டார். இவர் கதை வேறு மாதிரி. நடுத்தர வயது மாதவிடாய்ப் பிரச்சனைகள் இருந்திருக்கிறது பாவம் இவருக்கு. அது தவிர, கணவனும் மருமகனும் இவருடைய 4 வருட சம்பாத்தியத்தையும் சேமிப்பையும் பிடுங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். பணிப்பெண்ணாகச் சிங்கப்பூரில் அவர் வேலைசெய்து சேமிப்பெல்லாம் போன துயரத்தில் அந்தப்பெண் வீட்டுவேலைசெய்யாமல் சதா
  அழுதுபுலம்பிக்கொண்டேயிருப்பார். வீட்டில் வேலையும் ஆகாமல், அந்தப்பெண்ணின் மன அழுத்தம் மெல்ல சிநேகிதிக்கும் தொற்ற ஆரம்பிக்கவே, வேறு வழியில்லாமல் இதெல்லாம் சரிவராது, தன்கையே தனக்குதவி என்ற முடிவோடு என்று தன் அலுவலகவேலையை விட்டுவிட்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு நான்கு மாதமாக வீட்டில் தானிருக்கிறார்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |