அக்டோபர் 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : நல்ல காலம் பொறக்குது
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |

Udukaiநல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என்ற இந்த வார்த்தைக்கு சொந்தக் காரர்கள் சாமக் கோடாங்கிகள். குடுகுடுப்பைக்காரர்கள்  என்று சொல்லக் கூடிய சாமக் கோடாங்கிகள் தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்து வாழ்பவர்கள். ஓர் சமூகமாக இருந்தாலும் இந்த குடுகுடுப்பைக்காரர்களை தெய்வங்களின் சார்பில் வந்து மக்களுக்கு அருள் வாக்கு சொல்லிகளாக தமிழர்கள் பார்க்கிறார்கள். குடுகுடுப்பைக்காரர்கள் என்று சொல்லக் கூடிய சாமக் கோடங்கிகள் எப்படி இயங்குகிறார்கள். அவர்கள் சொல்லும் அருள் வாக்குகளை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?  என்பதை அறிய முயன்ற பொழுது சுவராஸ்யமாகவே இருந்தது.

சாமக் கோடாங்கிகள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தான் தனது பணியை தொடங்குகின்றனர். நள்ளிரவு காவி நிறத்தில் ஒரு வேட்டி, நெற்றி நிறைய விபூதி, விபூதி மேல் அதிகமான சிகப்பு பொட்டு, சீராக இல்லாதமீசை, தாடி, கழுத்தில் ஏராளமான பாசி மாலைகள், உடம்பை மறைக்க ஒரு கருப்புக் கலரில் போர்வை, கையில் ஒரு சின்ன குடுகுடுப்பை என எடுத்துக் கொண்டு தங்கள் பணியை துவங்குகின்றனர்.  பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலேயே இயங்கும் இவர்கள் ஒரு தெருவின் தொடக்கத்தில் இருந்து நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என்று சொல்லிக் கொண்டே குடுகுடுப்பையை ஆட்டிக் கொண்டு செல்லும் பொழுது திடீரென்று ஒரு வீட்டின் முன் நின்று மாயி மகமாயி,  வனகாளி வாக்கு....... ஜக்கம்மா வாக்கு........ கெடகாளி மாயி...... மாரி மகமாயி...... காளி..... சூளி...... என்று குடுகுடுப்பையை ஆட்டிக் கொண்டு சொன்னவர், இந்த வீட்டு ராசாவுக்கு நல்ல காலம் பொறக்குது, தொட்ட குறை எல்லாம் தூரத்துல போகப் போகுது, பட்ட க~;டங்கள் எல்லாம் பஞ்சாப் பறக்கப் போவுது, அதுக்கு காளி துணையிருக்கா, சக்கம்மா கூட வர்ற...... இந்த வீட்டுல ஒரு மாலை பூக்கப் போவுது, எண்ணி மூனு மாசத்துல எல்லாக் குறையும் குறையப் போவுது... குடி விளங்கும் தெய்வம் துணையிருக்கு, கொம்பன் கொடி கட்டிப் பறப்பாரு என்று சொல்லி ஒவ்வொரு வார்த்தைக்கும் குடுகுடுப்பையை ஆட்டி ஒரு ராகத்தோடு அருள் வாக்கு சொல்லி விட்டுக் அடுத்த தெருவை நோக்கி கிளம்பினார்.

தமிழ்நாட்டில் மலைவாழ் மக்கள், நரிக்குறவர்கள் போல கம்பளத்து நாயக்கர்கள் என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் சாமக் கோடாங்கிகள். தமிழ் சமூக வாழ்க்கையில் மாறாமல் இருக்கும் சில வி~யங்களில் சாமக் கோடாங்கிகளும் ஒன்று. பொதுவாக இவர்கள் நாடோடி போல வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால் இவர்களின் வாக்குக்கு நல்ல வரவேற்பு அந்தக் காலத்தில் இருந்து இக்காலம் வரை உண்டு. பொதுவாக நள்ளிரவில் வந்து ஒரு வீட்டின் முன்பு நின்று குடுகுடுப்பையை ஆட்டி வாக்கு சொல்லும் இவர்கள் மறு நாள் காலையில் வாக்கு சொன்ன வீட்டிற்கு வந்து தான் சொன்ன வாக்கை விளக்கமாக சொல்லுவர். அப்பொழுது அந்த வீட்டில் உள்ளவர்கள் முடிந்த வரை அவருக்கு காணிக்கை கொடுத்து அனுப்புவர். அந்தக் காணிக்கை தான் அவர்களுக்கு சாப்பாடு. பெரும்பாலும் கிராமங்களில் காணிக்கையாக பணத்தை கொடுப்பதில்லை. மாறாக அவர்களின் வீட்டில் இருக்கும் தானிய வகைகளைத் தான் கொடுப்பார்கள். சாமக் கோடாங்கி சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பும் வழக்கம், கிராமங்களில் உண்டு. அது பெரும்பாலும் நடக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஒரு வீட்டின் முன்னால் நின்று கொண்டு இந்த வீட்டு ஆடி வேர் ஆடுது, ஆலமரம் சாயுது என்று மட்டும் சொல்லிவிட்டு போவார். சில நாட்களில் அந்த வீடடில் யாராவது பெரியவர்கள் இறந்திருப்பார்கள். இது எனது சிறு வயதில் நான் கண்ட உண்மை என்று சொல்லும் கல்லூரி பேராசிரியரான கல்யாணசுந்தரம், சாமக் கோடங்கிகள் நல்லதையும், கெட்டதையும் பாகுபாடு இல்லாமல் குறி சொல்பவர்கள் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் இன்று வரை இருப்பதால் அவர்களின் மதிப்பு குறைவதில்லை என்கிறார்.

பொதுவாக நாங்கள் கம்பளத்து நாயக்கர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு கூட்டமாகத் தான் வாழ்கிறோம். எனக்கு திருமணம் எல்லாம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. எங்க பரம்பரை பரம்பரையா நாங்க தான் கிராமபுறங்களில் வாக்கு சொல்லிக் கிட்டு இருக்கோம். நாங்க நள்ளிரவு 12 மணிக்கு ஊர் மயானத்தில் காளி, ஜக்கம்மாவை வணங்கி, அவர்களிடம் வாக்கு வாங்கி விட்டுத் தான் மக்களுக்க வாக்கு சொல்ல கிளம்புவோம். நள்ளிரவில எந்த தெருவுக்குள்ள நாங்க குடுகுடுப்பையை ஆட்டிக் கிட்டு போற சத்தத்தைக் கேட்டு யாரும் வெளிய வரமாட்டாங்க. எங்களை நேருக்கு நேரே பார்த்தால் சாமிக்குத்தம் என்று ஆகிவிடும். ஆனால் நாங்கள் சொல்லும் வாக்கு நிஜமானது. ஜக்கம்மா வாக்கு அது. இந்த தொழிலில் எங்களுக்கு அதிக வருமானம் கிடையாது. ஆனாலும் எங்க பரம்பரைத் தொழிலை செய்துக்கிட்டு இருக்கோம். முன்ன மாதிரி இந்தத் தொழில் இல்லைங்க சாமி. முன்ன எல்லாம் கிராமப் புறத்துல போனாலே வீட்டுக்குள்ள இருந்து நாங்க சொல்றதை கேட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப அந்த மாதிரி ஒரு சில இடத்துல தான் கேட்குறாங்க. அதே மாதிரி எங்க புள்ளைகளும் இந்த தொழிலுக்கு வர மாட்டங்குதுங்க. நாட்டுல என்ன என்னமோ வந்துப் புடுச்சு. டி.வி, டேப் என்று அது இதுனு வந்துருச்சு. எங்க ஆளுங்க தான் இன்னும் அப்படியே இருக்கோம். இந்த அரசாங்கம் எங்களுக்கு எதாவது வீடு, கீடு கட்டிக் கொடுத்த நல்லா இருக்கும். இதுக்கெல்லாம் அந்த சக்கம்மா வழி செய்வா என்று சொல்லி சிரிக்கிறார் சாமக் கோடாங்கியான கருப்பனசாமி.
 
பொதுவாக சாமக் கோடாங்கிகள் பார்க்க பயங்கரமாக இருப்பார்கள், அவர்கள் இரவில் வரும் பொழுது அவர்களை நேருக்கு நேர் பார்த்தால் பல தீமைகள் உண்டு என்று சொல்வதுண்டு. அவர்கள் சொல்லும் வாக்குகளை அப்படியே நம்பின, நம்பும் காலம் இருந்தது. ஆனால் இன்று அந்த நம்பிக்கை இல்லை. எவ்வளவோ மாற்றங்கள், நாகரீகங்கள் வர வர மக்கள் அவர்களை நீராகரிக்கத் தொடங்கி விட்டனர். அதனால் தான் அவர்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது கூட ஒரு வித ஆக்கிரமிப்பு என்று சொல்லலாம். சாமக் கோடாங்கிகள் எல்லாமே பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இரவில் ஒரு வீட்டின் முன்பு அருள்வாக்கு சொல்லிவி;ட்டு பின் சென்று விடுவார்கள். பின் மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு வந்து அவர் சொன்னதை மறுபடி சொல்லி அதற்கான பரிகாரங்களையும் சொல்லுவார். அப்படி அவர் சொன்னதற்கு பணம் என்று எதுவுமே வாங்க மாட்டார்கள். மாறாக உணவு, உணவு தானிய பொருட்களைத் தான் வாங்கிச் செல்வார்கள். இன்று இருக்கக் கூடிய வளர்ந்து வரும் பெரும் தெய்வங்களும், சாமியார்களும் கிராம மக்களை தங்கள் பக்கம் இழுக்கத் தொடங்கி விட்டனர். அதனால் சாமக் கோடாங்கிகள் பரம்பரை தொழிலை விட்டு வேறு வேலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். காவல் துறையினர் நள்ளிரவில் செல்லும் அவர்களை சந்தேக கேஸில் கைது செய்ததாகக் கூட செய்தி படித்திருக்கிறேன். தமிழ் சமூகம் பல ஆழமான உறவுகளை இழந்து வருகிறது. அதில் சாமக் கோடாங்கிகளும் ஒன்று என்கிறார் தி.க. கொள்கையில் பற்றுள்ள 60 வயதான நாதன்.

|
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |