அக்டோபர் 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : அன்பளிப்பு
- குமரவேலன் [thambudu@hotmail.com]
Save as PDF | | Printable version | URL |

யார் யாருக்கோவெல்லாம் என்னென்னவோ சாமான்கள் தரும்போது உங்களுக்கு எதுவும் தராட்டா என் மனசு ஏதோ குத்தம் பண்ணிட்டாப்பிலே தவிக்குது.

அமெரிக்காவிலிருந்து அடுத்த வாரம்  குடும்பத்தோடு சென்னைக்கு வரப்போவதாக என் மகன் சுரேஷ் முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் சொல்லி விட்டான்.

உற்சாகத்தில் தலைகால் புரியாமல் என் மனைவியும் மகளும் பேச்சோடு பேச்சாக அக்கம் பக்கத்து வீடுகளுக்கு இந்த விஷயத்தை சொல்லிவிட்டார்கள்.

அதுவரையில் எங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்த அக்கம்பக்கத்தவர்களும் சொந்தக்காரர்களும் திடீரென்று-- ஏதோ தற்செயலாய் வருவது போல்-- எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தார்கள். வந்தார்கள் எங்களிடம் பொதுப்படையான விஷயங்களைப் பேசினார்கள். பாசத்தோடு குசலம் விசாரித்தார்கள். எங்கள் மகனின் குடும்பத்தைப் பற்றியும் அவன் வரவைப்பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்கள்.

சுரெஷ் வெளிநாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு வரும்போது  தங்களை மறந்து விடவேண்டாம் என்று சூசகமாய் ஞாபகப்படுத்துவது தான் அவர்களின்  வரவின் முக்கிய நோக்கம் என்பது எங்களுக்கு நன்றாகவே புரிந்த விஷயம்.

ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போதும் சுரேஷின் முக்கிய பிரச்னை இதுதான். யார் யாருக்கு என்னென்ன பொருள் வாங்கித்தருவது என்று மண்டையைக் குடைந்து கொள்வான். அவனுக்கு எல்லாரையும் திருப்திப்படுத்தியாக வேண்டும். யாரும் அவனைக் குறை சொல்லிவிடக்கூடாது. இதற்காக சர்வ ஜாக்கிரதையாக அடிக்கடி எங்களிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு எங்கள் ஆலோசனைகளை மனதில்
குறித்துக்கோள்வான்.

எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கொஞ்சமும் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் தேவைப்படும் வெளிநாட்டுப் பொருள்களை எங்களிடம் கேட்டு விடுவார்கள். இந்தத் தடவை வேலைக்காரிக்கு ஒரு ரீசார்ஜபிள் டார்ச் லைட் வேண்டுமாம். டிரைவருக்கு நல்ல கைக்கடிகாரம்; சமையல் மாமிக்கு (மகனுக்கு) சென்ட் வகையறா-பால் டெலிவெரி பையனுக்கு ஒரு பேனா- வாட்ச்மெனுக்குக் குடை. இப்படி ஒவ்வொருவரும் குறைந்தது
ஒரு அயிட்டத்திற்கு  அப்ளிகேஷன் போட்டுவிட்டார்கள்.

ஒவ்வொரு தடவை இந்தியாவுக்கு வருவதற்கு முன்பும் சுரேஷ் எங்களிடம் தவறாமல் கெஞ்சிக் கேட்பான்:
"எவ்வளவு கேட்டாலும் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லவே மாட்டீங்கறீங்களே அதுதான் எனக்கு வருத்தமா இருக்கு. யார் யாருக்கோவெல்லாம் என்னென்னவோ சாமான்கள் தரும்போது  உங்களுக்கு எதுவும் தராட்டா என் மனசு ஏதோ குத்தம் பண்ணிட்டாப்பிலே தவிக்குது. தயவு செய்து தேவையானதைத் தயங்காம கேளுங்க. உங்களுக்கு வாங்கித் தந்தால் தான் என் மனசுக்கு உண்மையிலே சந்தோஷமாயும் திருப்தியாயும் இருக்கும். அந்தக் காரணத்துக்காகவாவது  ஏதாவது கேளுங்களேன்" 

அதற்கு நாங்கள்சொல்லும் பதில் இதுதான்:.

"இந்த வயசான காலத்தில் எங்களுக்கு என்னப்பா வேணும்? ஏற்கனவே நீ முதன் முதலா வந்தப்போ கொண்டு வந்த பொருள்களே , உபயோகிக்கப்படாம கிடக்கு. எங்களுக்காகக் கண்டிப்பாக எதையும் வாங்கி வர வேண்டாம். . நீ இங்கே வந்து கொஞ்ச நாட்கள் குடும்பத்தோட சந்தோஷமா எங்க கூட தங்கி இருந்தாலே போதும். அதைவிட எங்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது வேறெதுவும் இல்லை. அதை நல்லாப் புரிஞ்ச்¢க்கோ" அவனும் ஏமாற்றத்தோடு பேச்சை அத்தோடு நிறுத்திவிடுவான்.

சொன்ன தேதியன்று சுரேஷ் வந்து சேர்ந்தான் குடும்பத்துடன். அடுத்த நாளிலிருந்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். வீடே திருவிழாக் கோலம் பூண்டு கலகலப்பாயிருந்தது.
 
வந்தவர்கள் மரியாதைக்காகக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவர்கள் கேட்டிருந்த பொருள்களை திருப்தியுடன் வாங்கிக்கொண்டு, காபி சாப்பிட்டுவிட்டு, உதட்டளவில் ஒரு, "ரொம்ப தாங்க்ஸ்' சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்கள்.

சுரேஷின் லீவ் முடிந்து ஊருக்குக் கிளம்புவதற்கு முதல் நாள். லக்கேஜை எல்லாம் பாக் செய்யும்போது, பெட்டியிலிருந்த ஒரு பையிலிருந்து நிறைய ஷர்ட்டுகளும் பாண்ட்களும் எடுத்துப்போட்டான். பார்க்கும்போதே தெரிந்தது அவை உபயோகப்பட்டுப் பழசாகிப்போனவை என்பது.

"அப்பா, இதெல்லாம் என்னுடைய பழைய சட்டை பாண்ட்டுகள். எனக்குத் தேவைப்படாததால் இங்கே யாருக்காவது உபயோகப்படுமேன்னு கொண்டு வந்தேன். யாராவது ஏழைகளுக்கோ, வாச்மேனுக்கொ, வேலைக்காரங்களுக்கொ குடுத்துடுங்க" என்றான்

என் மனது உள்ளூர ஆனந்தத்தால் துள்ளியது. நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தது இதைத்தான்..

வருஷா வருஷம் சுரேஷ்  உபயோகமில்லாத பழைய டிரெஸ்களைக் கொண்டு வந்து  கொடுப்பான். யாருக்காவது கொடுத்துவிடச் சொல்வான். எனக்குத்தான் மனசு வராது. அவைகளை யாருக்கும் தராமல் நானே உபயோகித்துவிடுவேன். இந்த விஷயம் அவனுக்குத் தெரியாது.

உண்மையில் இவைதான் இப்போது எனக்குத் தேவையானவை, உபயோகமுள்ளவை. நான் கேட்காமலேயே எனக்குக் கிடைக்கும் அந்த  பழைய உடைக¨ளை விலைமதிப்பற்றவையாக எண்ணுகிறேன். அவைகளை அணிவதில் நான் காணும் சுகமும் திருப்தியும் அலாதி. அதை நிச்சயமாக வேறெந்த அன்பளிப்பாலும் தர முடியாது.

"சரிடாப்பா, அப்படியே செய்கிறேன்." என்று சொல்லிக்கொண்டே அந்தத் துணிகளை முகமலர்ச்சியுடன் ஆவலாக அள்ளிக் கொண்டேன்.

| | |
oooOooo
                         
 
குமரவேலன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |