அக்டோபர் 28 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
திரைவிமர்சனம்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
திரையோவியம்
அறிவிப்பு
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : பாண்டிய நாட்டின் வளம்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 55

  பணிநிமித்தமாகவோ, அல்லது சுற்றுலாவுக்காகவோ, நாம் ஒரு ஊருக்குப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம், அங்கிருந்து திரும்பும்போது, எதை மறந்தாலும் ஒரு விஷயத்தைமட்டும் மறக்கமாட்டோம் - அந்த ஊரில் என்ன விசேஷமோ, அதை நம் ஊருக்கு வாங்கிக்கொண்டுதான் திரும்புவோம் - திருநெல்வேலிக்குச் சென்றால் அல்வா, திருப்பதிக்குச் சென்றால் லட்டு, மதுரைக்குச் சென்றால் மல்லிகைப்பூ, ... இப்படி.

  ஆனால், திருநெல்வேலியிலும், மதுரையிலும் என்ன விசேஷம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆகவே, சட்டென்று வேண்டியதை வாங்கிக்கொண்டு கிளம்பிவிடலாம் - இவை அல்லாத வேறொரு ஊருக்குச் சென்றால் என்ன செய்வது ? அங்கே என்ன கிடைக்கும் என்று எப்படித் தெரிந்துகொள்வது ?

  வேறு யாரை விசாரிக்கமுடியும் ? அந்த ஊரிலிருக்கிற மக்களைதான் கேட்கவேண்டும்.

  நாம் அப்படிக் கேட்டதும், 'என்ன இப்படிக் கேட்டுட்டீங்க ?', என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டு, 'எங்க ஊர்ல இது கிடைக்கும், அது கிடைக்கும்', என்றெல்லாம் தங்கள் ஊரின் அருமைபெருமைகளை அடுக்குவார்கள் அந்த மக்கள் - எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு, நாம் நமக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு கிளம்பவேண்டும்.

  இப்படிதான், பாண்டிய நாட்டுக்கு வந்த ஒரு பயணி, அங்கிருந்த ஒருவரிடம், 'இந்த நாட்டில் என்ன விசேஷமாய்க் கிடைக்கும் ?', என்று தெரியாத்தனமாய்க் கேட்டுவிட்டார்.

  அடுத்த விநாடி, அவர்முன்னே ஒரு பெரிய பட்டியலையே நீட்டிவிட்டார்கள் பாண்டிய மக்கள்.

  'முதலாவதாக, எங்கள் பாண்டிய மண்ணைத் தோண்டினால், செம்பொன் கிடைக்கும்.

  அடுத்ததாக, எங்கள் ஊர்ச் சாலைகளில் நடந்துசென்றால், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழும் முழங்குவதைக் கேட்கலாம், அற்புதமான தமிழ் நூல்கள் கிடைக்கும்.

  மூன்றாவதாக, எங்களுடைய நீர்நிலைகளில் குதித்துத் தேடினால், அற்புதமான வெண் சங்கும், விலைமதிப்பற்ற சிறந்த முத்துகளும் கிடைக்கும்.

  எங்கள் ஊருக்கு வெளியே, மலைச்சாரல் இருக்கிறது, அங்கே சென்றால், கம்பீரமான, சிறந்த யானைகள் கிடைக்கும்.

  இவை எல்லாவற்றையும்விட முக்கியமாய், எங்கள் அரசன், வலிமை மிகுந்த பாண்டியனின் கூர் வேலின் நுனியில் தேடினால், அவனால் கொல்லப்பட்ட பிற தேசத்து மன்னர்களின் 'மாலை அணிந்த மார்புகள்' ஏராளமாய்க் கிடைக்கும்.'

  - இப்படியாக, பாண்டிய நாட்டின் வளத்தைச் சொல்வதற்காகத் துவங்கிய இந்தப் பட்டியல், இறுதியில், பாண்டிய மன்னனின் வீரத்தைச் சொல்லி முடிகிறது !


  பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
  நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் சாரல்
  மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
  தலைபடுப தார்வேந்தர் மார்பு.

  (பார் - நிலம்
  படுப - காணப்படும்
  பதி - இடம் / ஊர்
  நித்திலம் - முத்து
  வய - வலிமையான
  தார் - மாலை)  பாடல் 56


  படமெடுத்து ஆடும் நாகப் பாம்பின் தலையில், கிடைப்பதற்கு அரிதான மாணிக்கக் கல் உள்ளது என்று சிலர் நம்புகிறார்கள் !

  ஆனால், அந்தப் பாம்பை நேரில் பார்க்கிறபோது, அதன் தலையில் மாணிக்கக் கல் இருக்கிறதா, இல்லையா என்று யாரும் சோதிப்பதில்லை, அந்த மாணிக்கக் கல்லை எடுத்து விற்றால் எத்தனை கோடி கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுவதில்லை - அவர்கள் எத்தனை பெரிய தைரியசாலிகளாய் இருந்தாலும், 'ஐயோ பாம்பு, ஐயோ பாம்பு ...', என்று அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.

  இப்படிப் பாம்பைப் பார்த்து பயந்து ஓடியவர்கள்தான், 'பாம்பென்றால் படையும் நடுங்கும்.', என்ற பழமொழியை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்பலாம்.

  பழமொழி கிடக்கட்டும், இப்போது நம் முத்தொள்ளாயிரப் புலவரிடம் சில கேள்விகள் கேட்கவேண்டியிருக்கிறது.

  புலவரே, இந்த மனிதர்கள் எல்லோரும் பாம்பைப் பார்த்து நடுங்குகிறார்கள். ஆனால், அந்தப் பாம்பு எதைப் பார்த்து நடுங்கும் ?

  'பார்த்து' நடுங்காது, 'கேட்டு' நடுங்கும்.

  எதைக் கேட்டு ?

  வானத்திலிருந்து முழங்கும் இடி ஓசையைக் கேட்டால், பாம்புக்கு பயம் வரும் என்று சொல்கிறார்கள்.

  அது எப்படி ? எங்கோ மேலே ஒலிக்கிற இடிச் சப்தத்தைக் கேட்டு, கீழே தரையில் இருக்கிற பாம்புக்குப் பயம் வரும் ?

  இந்த பூமியிலிருக்கும் அரசர்கள் எல்லோருக்கும், பாண்டிய மன்னனின் சிவந்த கண்களையும், கோபம் கொண்ட வேலையும் கனவில் நினைத்தாலே உடம்பு வெலவெலத்துப்போகிறதாம்., அந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு ?

  ஆறறிவு படைத்த மனிதர்கள், அதுவும் அரசர்கள், அவர்களே, எங்கோ இருக்கிற பாண்டியனை நினைத்து இப்படிப் பயப்படும்போது, பாவம், அந்த ஐந்தறிவுப் பாம்பு, இடியை நினைத்து பயப்படுவதில் என்ன ஐயா ஆச்சரியம் ?


  அருமணி ஐந்தலை ஆடுஅரவம் வானத்து
  உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செருமிகுதோள்
  செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே
  அங்கண்மா ஞாலத்து அரசு.

  (அரு - அரிய / அரிதான
  ஐ - அழகு
  அரவம் - பாம்பு
  உருமு - இடி
  ஒளிக்கும் - ஒளிந்துகொள்ளும்
  செரு - பகை
  அம் - அழகிய
  ஞாலம் - பூமி)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |