நவம்பர் 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | | Printable version | URL |


மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 அமலுக்கு வந்து விட்டது. குடும்ப பெண்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இருக்காது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர். அதனால் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் ஓர் சட்டம் தேவை என்று மகளிர் அமைப்புக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அதற்கு இன்று தீர்வு கிடைத்திருக்கிறது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இச்சட்டத்தின் படி கணவன் தன் மனைவியை அடித்தாலோ, அவமானப்படுத்தினாலோ 20 ஆயிரம் ரூபாய் அபதாரம், மற்றும் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும். இது ஒரு வரவேற்க வேண்டிய சட்டம். இன்று பெண்கள் முன்னேறாத துறையே கிடையாது என்ற, அளவிற்கு பெண்களின் வளர்ச்சி இருக்கிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 53,12,77,078 பெண்கள் 49,57,38,169. இப்படி எண்ணிக்கையில் ஆணுக்கு சமமாக இருக்கும் பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம், செயல்பாடு நமது நாட்டில் இல்லை. ஆனால் அவர்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது குடும்பம் என்கிற அமைப்பு. இந்த அமைப்பில் தலைவனாக இருக்கும் கணவன்மார்களால், பெண்கள் பெரும்பாலும் துன்புறுத்தப் படுகிறார்கள். குறிப்பாக கிராமம், இரண்டாம் நிலை நகரப் பகுதிகளில் குடும்ப வன்முறை அதிகமாகவே இருக்கிறது. குடும்ப வன்முறை என்பது மனைவியை அடித்தல், தகாத வார்த்தையை சொல்லி திட்டுதல், காலால் மிதித்தல் என்று சொல்லப் படுகிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் மனைவியாக இருப்பவர் நாள் ஒன்றிற்கு  99 வேலைகளை செய்கிறார் என்று ஓர் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளிவந்தது. இது அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லாத பெண்ணிண் நிலை. அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் இதனை விட அதிகமாக வேலைகளை செய்கிறார்கள். பெண்கள் இப்படி வேலைகள் செய்தாலும் அவர்களுக்கு குடும்ப அமைப்பில் பாதுகாப்பு இல்லை. கணவன்மார்கள், மாமியார், மாமனார் போன்றவர்களின் கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். சில சமயங்களில் துன்புறுத்தவும் படுகிறார்கள். இதற்கு குடும்ப வள்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஓர் முற்றுப் புள்ளி வைக்கும் என்கிறார் மாதர் சங்கத்தின் வட்டாரச் செயலர் சுகந்தி.

குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 அமலுக்கு வந்தவுடன் குடும்ப பெண்களின் வாழ்வில் ஓளி வந்து விட்டது என்பது எல்லாம் ஓர் வளமையான கற்பனை. கணவனை சிறைக்கு அனுப்பி விட்டு தான் மட்டும் நிம்மதியாக இருக்க எந்த நடுத்தர, கீழ்தர, ஏழை பெண்களும் விரும்பவே மாட்டார்கள். குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம், வரதட்சனை தடுப்பு சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், ஈவ் டிசிங் தடைச் சட்டம் போன்ற சட்டங்கள் இருந்தாலும் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. குழந்தை தொழிலாளர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள். வரதட்சனை வாங்கப்பட்டு, கொடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன, குழந்தை திருமணங்கள் வட மாநிலங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குடும்ப பெண்களை பாதுகாக்க இதற்கு முன்பும் சட்டத்தில் வழி வகைகள் இருந்தன. இந்த சட்டத்தில் மனைவியை அடிக்கும் கணவனுக்கு 20 ஆயிரம் அபதாரம், ஓராண்டு சிறை என்று இருக்கிறது. இந்த தண்டனையை கணவன் பெற வேண்டும் என்றால் மனைவி புகார் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் பெண்கள் தங்களது கணவனுக்கு எதிராக புகார் கொடுக்கவே பெரும்பாலும் வர மறுக்கிறார்கள். மேல் தட்டு வர்க்க மக்கள் வேண்டுமானால் வரலாம், ஆனால் நடுத்தர, கீழ்த்தர, வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் பிரிவு பெண்கள் தங்களது கணவனுக்கு எதிராக புகார் கொடுக்க வரவே மாட்டார்கள். ஏன் என்றால் இத்தகைய குடும்பங்களில் கணவன் மூலமாகத் தான் வருமானமே வருகிறது. நடுத்தர குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பார்கள். இதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களில் கணவனின் சம்பளம் வீட்டிற்கு வராது. அந்தப் பணம் மதுக் கடை, பீடி, சிகரெட் என்று போய் விடும். அந்தக் குடும்பத்தை மனைவி தான் வழி நடத்திச் செல்வார். அப்படி பட்ட பெண்களை கணவன்கள் அடிக்கும் பொழுது அப்பெண் காவல் நிலையத்திற்கு எப்படி புகார் கொடுக்க செல்வார்? அப்படியே ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், ஆண்களின் அதிகாரம் நிறைந்த காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுகின்றனர். அதிகமான முற்றின புகார்களைத் தான் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.   

இந்தியாவில் ஒரு மணிக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளி வந்தது. இப்படி கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு, தவறு நிருபிக்கப்பட்டால் கற்பழித்தவருக்கு  நீதி மன்றம் ஒரு ஆண்டு முதல் பத்து ஆண்டு வரை சிறை தண்டனை கொடுக்கிறது. இப்படி தண்டனை பெற்ற கைதிகள் பத்து ஆண்டுகள் சிறையில் இருப்பதே கிடையாது. நன்னடத்தை என்ற பெயரில் நான்கு, ஜந்து ஆண்டுகள் மட்டும் சிறையில் இருக்கிறார்கள். பின் விடுதலை பெற்று வெளியே வந்து விடுகின்றனர். இப்படி கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டத்தை கொண்டு வருவதை விட்டு விட்டு கணவன்களை தண்டிக்க சட்டம் கொண்டு வந்திருப்பது வினோதமாகவே இருக்கிறது. எழுத்தாளர் N~hபா டே பெண்களுக்கு எதிரான பாலியல், வன்முறை பலாத்காரம் என்பது கொலைகளை விட கொடுமையானது. பாதிக்கப்பட்ட பெண் அவமானத்துடனேயே வாழ வேண்டி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.அதனால் ஒடடு மொத்த பெண் இனத்தை பாதுகாக்க ஒரு கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்.

அமலுக்கு வந்த குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005ன் முக்கிய அம்சங்களை படித்துப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. மனைவிகளை மிரட்டினால், பொருளாதார, உணர்வுப் பூர்வமாக துன்புறுத்தினால் கூட கணவனை தண்டிக்க இந்த சட்டம் வழி விடுகிறது. அதே போல சட்டத்தை அமல்படுத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது கடமையில் இருந்து தவறினால் அவர்களையும் தண்டிக்க இந்த சட்டம் வழி சொல்கிறது. பெண்கள் எல்லாம் கடந்த பழைய காலத்தைப் போல இருக்கவில்லை. கணவன் மனைவியை ஏய் என்றால், மனைவி கணவனை என்னடா என்கிற நிலை இன்று வந்து விட்டது. இந்தச் சட்டம் கணவனை பழி வாங்க மனைவிகளுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தவறான தகவல்களை கொடுத்து கணவன்மார்களை பழி வாங்கும் மனைவிகளை தண்டிக்க இந்த சட்டம் ஒரு வழி முறைகளைக் கூட சொல்லவில்லை.

எழுதியவன் ஏட்டை கிழித்தான், படித்தவன் பாட்டை கிழித்தான் என்ற ஒரு பழமொழி கிராமப் பகுதிகளில் சொல்வதுண்டு. குடும்பம் என்ற அமைப்பு இருக்கின்ற வரைக்கும் சண்டை, சச்சரவு இருக்கத் தான் செய்யும். கொஞ்சம் அன்பு, சண்டை, இருந்தால் தான் குடும்ப வாழ்க்கை சுவராய்ச்சியமாக இருக்கும். ஒரு குடும்பத்தில் ஒரு கணவன் மனைவிக்கும் சண்டை வந்து சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் பேசாமல் அவர்கள் வேலைகளை மட்டும் செய்வார்கள். பின் ஒரு கட்டத்தில் பேசத் தொடங்கும் பொழுது அப்பொழுது தோன்றும் அன்பை, இரக்க குணத்தை எந்த சட்டத்தாலும் கொடுக்க முடியாது. குடும்பத்தில் வன்முறை அதிகமாகாமல் பார்த்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. இன்று இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் கணவனை மனைவியோ, மனைவியை கணவணோ அனுசரித்து போய் கொண்டு இருப்பதால் தான் எந்தப் பிரச்சிணையும் இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது. அதே போல மத்திய அரசு சட்டம் மட்டும் தான் கொண்டு வர முடியும். அதனை அமல் படுத்த வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உண்டு. அப்படி இந்த சட்டம் முழுமையாக அமல் படுத்தப்படுமா என்பதுவும் ஒரு கேள்விக்குறியே என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் பெண் கவிஞர்.

| |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |