நவம்பர் 03 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
திரைவிமர்சனம்
ஜன்னல் பார்வைகள்
கட்டுரை
சிறுகதை
கவிதை
கேள்விக்கென்ன பதில் ?
தொடர்கள்
கடிதம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : புஷ்பேக் விமானங்கள்
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

Flight Travelவிமானத்தில் ஏறும்போது கடமுடா வஸ்துக்களை உணவருந்தி விட்டு ஏறக்கூடாது. தவிர்க்க இயலாமல் வயிற்றுக்குள் ஜிகிர்தண்டா கொடுக்கும் பதார்த்தங்களை உட்கொண்டாலும் ஜன்னலோர இருக்கைக்கு கைகுட்டை போட்டு பிடிக்காதீர்கள். நுழைவு வாயில் சோதனைக்காவலர் 'அலைகள் ஓய்வதில்லை' ரசிகர் என்று தெரிகிறது. பூணூலையும் அரைஞான் கயிறையும் வெகு நேரம் ஆராய்வார். இன்னும் கொஞ்ச நேரத்தில் 'எங்கே பிராமண்', எப்படி ஆவணி அவிட்டம் என்று வினவ ஆரம்பிப்பதற்குள் தப்பிக்க வேண்டும்.

பிறருக்கு உதவ நினைக்கும் மனம் இருந்தாலும் கைப்பெட்டியை வைக்க இடம் தேடும்போது, உள்ளிருக்கும் மிருகம் எட்டிப் பார்த்து குட்டியும் போடும். வசந்த கால விடுமுறையில் போகும் சக மாணவி பக்கத்தில் உட்கார விரும்புபவனின் கேள்விக்கு பதில் முசுடாக கொடுக்கும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் உபசரிப்பு மாப்பிள்ளை வீட்டாரை தாலி கட்டுவதற்கு முன் கவனிக்கும் மாமனார் போல இருக்கிறது. காலை உணவு தயார் என்று இன்முகத்தோடு சொல்வதற்கு முன் 'குடிக்க பியர் வேணுமா? வைன் வேண்டுமா?' என்பார்கள். 'தண்ணீர் போதும்' என்றவுடன் வினோத டைனோசாரை அறிந்தது போன்ற முகபாவனையுடன் 'வோட்கா இருக்கிறது; ஜின் இருக்கிறது. எப்படி வேண்டும்?' என்று சமையல் காண்ட்ரா¡க்டரை அடுக்களைக்குளிலிருந்து அழைப்பது போல் உபசரிப்பார்கள். அர்த்தராத்திரிக்கு அவர்கள் கொடுத்த இலைதழைகளை சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் அதே வைன், பியர், ஜின், வோட்கா இன்ன பிற தண்ணி உபசரிப்பு. பொண்ணு வீட்டுக்காரனாக இருக்க ஏற்றவர்கள்.

சாப்பிட ஆரம்பித்தவுடன்தான் முன்னே அமர்ந்திருப்பவனுக்கு தன்னுடைய இருக்கையுடன் விளையாட ஆர்வம் எழும். எவ்வாறு முன்னே இழுப்பது, எப்படி சாய்த்துக் கொள்வது, எங்ஙனம் அமர்ந்தால் பிருஷ்டம் பொருந்துகிறது, முதுகை எத்தனை விதங்களில் சாய்க்கலாம் என்றெல்லாம் 'இருக்கைப் பயிற்சி' எடுத்துக் கொள்வான். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. நடு ராத்திரி ப்ரேக்·பாஸ்டுக்கு முன்பு ரெண்டு 40 ப்ரூ·ப் வைனும், உணவிற்கு பின்பு ரெண்டு வைனும் உள்ளே சென்றதன், சீட் விளைவாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் காசு அதிகம் கொடுத்த முதல் வகுப்புப் பயணிகள், அதற்கும் முன்பு வயதான சக்கர நாற்காலி

அட தத்துவம் !

எவரெஸ்ட் சிகரமே, நான் நிச்சயமாக உன்னை தோற்கடித்துக் காட்டுவேன். எதனால் இப்படிச் சொல்கிறேன் தெரியுமா ? உன்னுடைய உயரத்தைத் தாண்டி உன்னால் போக முடியாது ஆனால் என்னால் முடியும் !

முதியவர்கள் மற்றும் சக்கர நாற்காலி தேவையில்லாவிட்டாலும் துண்டு போட்டு இடம் பிடித்துப் பழகிய மத்யமப் பெரியோர்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், எட்டு வயது பச்சிளம் பாலகருடன் பயணம் செய்வோர், அதன் பின் விமானத்தின் பிற்பகுதியில் அமர்வோர் என்று மண்டலவாரியாக பிரித்து அழைக்கப்பட்டாலும், அவற்றைப் பொருட்படுத்துபவர்கள் எவருமில்லர். விமானத்தினுள் நுழைந்தவுடன் பாஸ்டனோ, சென்னையோ வந்துவிடும் என்பது தவறான கணிப்பு என்று அறிவுறுத்த நினைத்தேன். அதன் மூலம் நான் சீக்கிரம் உள்ளே போக முடியும் என்னும் நப்பாசை காரணமாகவும் அறிவுரை கூற விரும்பி இருக்கலாம்.

சில வருடம் முன்புவரை இந்தியர்களுக்கு மட்டுமே பொறுமை குறைவு என்றும், நம்மவர்கள் மட்டுமே அவசர அவசரமாக உள்ளே நுழைய விரும்புபவர்கள் என்று நினைத்திருந்தேன். அதற்கு உரிய காரணமும் உண்டு. அண்ண பல்கலையில் இடம் வேண்டுமா? முதல் நாற்பது தரப்பட்டியலில் உள்ளோருக்கு மட்டுமே. ரேஷனில் பாமாயில்? உங்கள் கேன் இருபது மீட்டர் எல்லைக் கோட்டுக்குள் இருக்க வேண்டும். பால் க்யூ, மண்ணெண்ணெய் லைன் என்று முந்தி முந்தி விநாயகருக்குக் கடமைப்பட்டவர்கள்.

கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன என்பதன் அடையாளமாக மேற்கத்தி மக்களும் இப்பொழுது நம்மை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களும் முண்டியடித்து கர்சீப், கைத்துண்டு, ஜாக்கெட், இன்ன பிற போட்டு ரிசர்வ் செய்த சீட்டை உறுதிபடுத்துகிறார்கள்.

சென்னை பல்லவனில் உராசியவர்களுக்கு இப்பொழுது அமெரிக்காவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. பாதுகாவலர்களின் சோதனையில் அவர்கள் சிறப்பாக பணிபுரிகிறார்கள். உடலெங்கும் தடவுவது, மேடுகளையும் பள்ளங்களையும் விலாவாரியாக ஆராய்வது, இடுக்குகளில் கைவிட்டு சோதிப்பது என்று அமெரிக்கர்கள் முயற்சித்தாலும், சென்னை பல்லவன் மேய்ப்பர்கள் அளவுக்கு மேம்பட்டவர்களாக இல்லை. அங்கே நடக்கும் ஆராய்ச்சிகள் உயர்தரமானவை. அவர்களை அமெரிக்காவில் விட்டால், பின் லாடெனுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுப் போயிருக்கும்.

பாத்ரூம் சுவரில் கிறுக்கவென்றே ஒரு வெள்ளைப்பலகை வைத்திருக்கிறார்கள். 'பாரத் மாதா கீ ஜே' போன்ற தகவல்கள் கிடைக்கிறது. விட்டால் லக்னத்தில் சனி, ஏழாம் இடத்தில் குரு என்று கட்டம் போட்டுவிடுவார்கள். அமெரிக்காவில் எஸ்கலேட்டர் வேலை செய்வது அபூர்வம். ஜெர்மனியில் பரவாயில்லை.

ஜெர்மனி விமான நிலையத்தில் புகை பிடிக்கக் கூடிய இடத்துக்கும் புகை தடை செய்யப் பட்ட இடங்களுக்கும் அதிகபட்சமாக ஓரங்குல தூரம் இருக்கும். ரொம்ப நாளாக பாஸிவ் ஸ்மோகிங் செய்யாதவர்களுக்கு ·ப்ரான்க்·பர்ட் விமான நிலையம் வரப்பிரசாதம்.

வைன் ஊட்டி விடுவதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணிப்பெண்கள் கர்மசிரத்தை என்றால் ஓசியில் பேப்பர் கொடுப்பதில் ·ப்ரான்க்·பர்ட்டை யாருமே அடித்துவிட முடியாது. ஒரே ஒரு நிபந்தனை. ஜெர்மானிய மொழி தெரிந்திருந்தால் குறைந்தது ஆறு நாளிதழ்களும் எட்டு சஞ்சிகைகளும் கிடைக்கும்.

ஆனால், மொழியெல்லாம் தேவையே இல்லாத 'ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடடி'ன் நீச்சலாடை சிறப்பு வெளியீடு எல்லா புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. அனைவரும் எடுத்து எல்லாப் பக்கங்களையும் மாடல்களையும் புரட்டிவிட்டு, நூற்றி நாற்பத்தேழாம் பக்கத்தில் யாஸ்மின் ப்ளீத் அணிந்திருந்த ஒற்றைக்கல் நெக்லஸை வாங்கிக் கொடுக்கத்தான் முறைத்துக் கொண்டிருந்ததாக காதலியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேற்படி அம்மணி நீச்சலுடை ஸ்பெஷலில் நீச்சலாடையே இல்லாமல் தோன்றியிருந்தது முரண்நகை.

விளைக்கை அணைத்த பிறகு மும்தாஜுக்கும் இரண்டு கண்கள்தான், கமலா காமேஷ¤க்கும் இரண்டு கால்கள்தான் என்பது போல் வானத்தில் இருந்து பார்த்தால் சஹாராவும் சொர்க்கபுரியாகத்தான் தெரியும். தூரத்து மெர்க்குரி விளக்கு கண்ணுக்கு மின்னல் கீற்று.

நமது பெட்டியைத்தான் நாம் தள்ளிக் கொண்டு வெளியே வருகிறோம் என்று கஸ்டம்ஸ்காரர்களுக்கு தெரிந்திருக்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. பெட்டி எதையும் செக்-இன் செய்யாமல், லண்டனோ, சிகாகோவோ பறக்க வேண்டும். அமைதியாக பேகேஜ் எடுக்கும் இடத்திற்கு சென்று அனுமாரை கண்மூடி தேமேவென்று சுற்றும் பக்தர் போல ஒரு சுற்று சுற்றிவிட்டு அனாதையாக மறுபடி அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கும் பெட்டியிரண்டை லபக் செய்துகொண்டு வெளியேறிவிட வேண்டும். இவ்வாறு நான்கைந்து முறை தப்பித்துவிட்டால், பின் வாயிற்காப்போன்களிடம் கொஞ்சம் சிரத்தை அதிகரிக்கலாம்.

காதல் இனிது; கல்யாணம் கூட இனிது; ஆனால் மழலைச் செல்வத்துடன் பயணம் புரிவது மில்லியன் டாலர் ப்ராஜெக்ட்டை முரண்டு பிடிக்கும் அவுட்சோர்ஸிங் மக்களுடன் மூன்றே மாதத்தில் மல்லுக்கட்டுவது போன்றது. விமானம் கிளம்பும்போது சீட் பெல்ட் போடாவிட்டால், விமானத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் ஐக்கியமாகி விடுவீர்கள் என்று பயமுறுத்தாத குறையாக ஆறு மாத குழந்தையை அழ அழ கயிறு போட்டு இறுக்கிவிட்டுச் செல்வாள், வைன் உபசரிப்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணிநாயகி.

அங்கே ஆரம்பிக்கும் வ்வ்வ்வ்வ்வ்வீவீவீல் அழுகை விமானத்தில் இருந்து தப்பித்து குடியேறல்/கடவுச்சீட்டுப் பரிசோதனை வரை தொடரும். குழந்தைகளுக்கு என்று சிறிய விளையாட்டு அரங்கம் ஒன்றை உள்ளே நிர்மாணித்தால் நன்றாக இருக்கும். குட்டி சறுக்கு மரம், ஓரிரண்டு சாய்ந்தடம்மா குதிரைகள், கொஞ்சம் பலூன்கள் என்று வைக்கலாம்.

ஆங்கிலப் படங்களில் பாத்ரூமில் செக்ஸ் வைத்துக்கொள்வதாக வரும் காட்சிகள் பிரசித்தம். அவர்களை அடுத்தமுறை லண்டனிலிருந்து கிளம்பும் ஏர் இந்தியாவிலோ, அல்லது, டாக்காவிலிருந்து புகைமூட்டத்திற்கு (சிகரெட்தான்) நடுவே புறப்படும் பிமானிலோ (பங்களாதேஷின் சேவை) படப்பிடிப்பை வைக்க சொல்ல வேண்டும். அவற்றை விட சிறந்த சூழல் எங்கும் இராது. சாதாரணமாகவே ஆங்காங்கே மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டும், கமகம மணத்திலும், கதவைத் தட்டும் பொறுமையிலர்களும் நிறைந்த லெமூரியா லெட்ரீனின் இண்டு இடுக்குகளில் காதல் காட்சிகளை வைத்துக் கொள்ளும் அவசரக்காரர்களைக் கறபனை செய்ய முடிகிறதோ?

மொத்தத்தில் விமானப் பயணம் என்பது தெய்வீக அனுபவம்.

திருப்பதியில் ஏழுமலையானைக் காண்பதற்காகக் கூண்டைத் திறந்தவுடன் ஓடியே சென்று முண்டியடித்து தரிசிப்போம். ஆனால், 'ஜருகண்டி சேவா' முடிந்தவுடன் அமைதியாகப் பிரகாரத்தில் உட்கார்ந்து கூட்டத்தில் தொலைந்துபோன கூட வந்த நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சிறிது சிரித்து, உட்கார்ந்து, கதைத்து, வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பிடுவோம்.

விமானங்களிலும் முண்டியடிப்பது உறவுகளையும் நட்புகளையும் கண்டு தெளியும் ஆன்மிகப் பயணத்துக்காகத்தான். இறைவர்களுடன் எப்போதும் இருந்தால் செய்யும் தொழில் மெய்மறக்கும்.

oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |