நவம்பர் 4 2004
தராசு
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
அறிவிப்பு
சமையல்
சிறுவர் பகுதி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 57

  நம்முடைய பிறந்த நாள் வரும்போது, நம் நண்பர்கள் நமக்குப் பரிசுகள் கொண்டுவருகிறார்கள்.

  ஆனால், இதற்கு நேரெதிராக, அரசர்களுடைய பிறந்த நாள் வரும்போது, அவர்கள், தங்களின் மக்களுக்குப் பரிசு அளிப்பார்கள், 'என் பிறந்த நாளை முன்னிட்டு, உங்கள் எல்லோருக்கும் இந்த மாத வரியைத் தள்ளுபடி செய்கிறேன்.', என்றோ, அல்லது, 'அடுத்த ஏழு நாள்களுக்கு நீங்கள் யாரும் வேலைக்குப் போகவேண்டியதில்லை, எல்லோரும் இஷ்டம்போலக் குடிக்கலாம், கூத்தாடலாம்.', என்றோ அரசர்கள் அறிவிப்பார்கள் - அதைக் கேட்ட சந்தோஷத்தில், மக்களும் அரசனின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி, அவனுடைய தாராள மனப்பான்மையைப் போற்றுவார்கள்.

  இங்கே, இந்தப் பாண்டிய அரசனுக்குப் பிறந்த நாள் வருகிறது - ஆனால், அதைக் கேள்விப்பட்டதும், பாண்டிய நாட்டுக் குடிமக்களைவிட, அவனுடைய எதிரிகள்தான் அதிக சந்தோஷம் அடைகிறார்கள்.

  ஏன் ?

  பின்னே, வருடத்துக்கு ஒருமுறைதான் பாண்டியனுக்குப் பிறந்த நாள் வருகிறது., அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டாமா ?

  போர் செய்வதையே தொழிலாகக் கொண்டவன் பாண்டியன் ! ஆனால், அவனுடைய பிறந்த தினமாகிய இந்த உத்திராட நட்சத்திர நாளில்மட்டும், அவன் யாரோடும் சண்டையிடுவதில்லை - மகிழ்ச்சியான மனோநிலையில் காணப்படுகிறான்.

  ஆகவே, பாண்டியன் நம்மீது போர் தொடுத்துவிடுவானோ என்கிற பயம் இல்லாமல், இந்த எதிரி நாட்டு அரசர்கள், தங்கள் கோட்டைகளின் அழகான, பெரிய கதவுகளைத் திறந்துவிடுகிறார்கள், யானைகளிலும், தேர்களிலும், குதிரைகளிலும் சவாரி செய்து மகிழ்கிறார்கள், ஊரெங்கும் இசை ஒலிக்கச் செய்து, அதற்கேற்ப ஆடும் குதிரைகளோடு சேர்ந்து, அவர்களும் நடனமாடுகிறார்கள்.

  ஆனால், இந்த உற்சாகமெல்லாம் ஒரே ஒரு நாளைக்குதான் - பாண்டியனின் பிறந்த தினக் கொண்டாட்டம் முடிந்ததும், பழையபடி அவன்மேலான பயம் இவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்பதால், இந்த ஒரு நாளை அவர்கள் மிகச் சிறப்பாய் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

  நியாயம்தான்., இந்தத் திருநாளை நன்றாகக் கொண்டாடுங்கள் எதிரிகளே., இப்போது தவறவிட்டால், இனிமேல் அடுத்த வருடம்தான் - அதுவரை, பாண்டியன் உங்களை உயிரோடு விட்டுவைக்கிறானோ, என்னவோ ! ஆகவே, இப்போதே நன்றாகக் கொண்டாடிக்கொள்ளுங்கள்.


  கண்ணார் கதவம் திறமின், களிறொடுதேர்
  பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் நண்ணாதீர்
  தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாள்
  போர்வேந்தன் பூசல் இலன்.

  (கண்ணார் - கண்களைக் கவர்ந்திழுக்கும்
  கதவம் - கதவு
  திறமின் - திறந்துவிடுங்கள்
  களிறு - ஆண் யானை
  பண்ணார் - இசைக்கு ஏற்றபடி
  புரவி - குதிரை
  பண்விடுமின் - இசையுங்கள்
  நண்ணாதீர் - பகைவர்களே
  இலன் - இல்லாதவன்)


  பாடல் 58

  முத்துக்குப் புகழ்பெற்றது பாண்டிய நாடு.

  ஆகவே, இந்தச் சிறப்பை எடுத்துக்காட்டுவதுபோல், பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடையில், ஒளி மிகுந்த சிறந்த முத்துகள் அலங்காரமாய்ப் பதிக்கப்பட்டிருக்கின்றன.

  பாண்டிய நாட்டின் கடைத்தெருவில் நாம் நடந்து சென்றால், ஏராளமான வகை முத்துகள் விற்பனைக்குக் கிடைக்கும், அற்புதமான முத்துகளைக் கோர்த்துச் செய்யப்பட்ட முத்து மாலை, முத்து வளையல் போன்ற சிறந்த அணிகலன்களையும் அங்கே பார்க்கலாம்.

  இப்படி விலைமதிப்பற்ற பல முத்துகளை ஒன்றாய்ப் பார்த்த ஆச்சரியத்துடன், நாம் கடைத்தெருவிலிருந்து விலகி, கடற்கரையோரமாய் நடக்கிறோம், அங்கேயும் ஆங்காங்கே முத்துகள் சிதறிக்கிடக்கின்றன !

  அந்தக் காட்சி தந்த வியப்பில் நம்முடைய வாய் தானாய்ப் பிளந்துகொள்கிறது, 'இது என்ன அதிசயம் ? என்னதான் பாண்டிய நாட்டில் முத்து வளம் அதிகம் என்றாலும், இப்படியா தரையெங்கும் முத்துகள் இறைந்துகிடக்கும் ?', என்று ஆச்சரியப்படுகிறோம்.

  கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால், நமக்கு உண்மை புலப்படுகிறது - அங்கே கிடப்பவை நிஜ முத்துகள் இல்லை - சங்கு முட்டைகளும், திறக்காத புன்னை மொட்டுகளும், பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சொட்டிய மொட்டுகளும்தான் அப்படித் தரையில் சிதறிக் கிடக்கின்றன.

  கோளாறு நம் பார்வையில்தான் - பாண்டிய நாட்டு மன்னனின் வெண்கொற்றக் குடையிலும், மக்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களிலும், கடைவீதியிலும் - இப்படி எங்கே பார்த்தாலும் முத்துகளே நம் கண்ணில் பட்டுக்கொண்டிருப்பதால், கடற்கரையோரமாய்க் கிடந்த சங்கு முட்டைகளும், புன்னை, பாக்கு மொட்டுகளும்கூட, நமக்கு முத்துப்போல் தெரிந்துவிட்டன.

  நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
  பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித்
  திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
  நகைமுத்த வெண்குடையான் நாடு.

  (நந்து - சங்கு
  சினை - முட்டை
  பந்தர் - பந்தல்
  கமுகு - பாக்கு
  முத்தம் - முத்து
  செம்மற்றே - தனித்துவம் / பெருமை உடையது
  நகைமுத்தம் - ஒளிமிகுந்த முத்து)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |