நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : உலகளாவிய நகர்நிலைத் தொலைத்தொடர்பு அமைப்பு - 4
- எழில்
| Printable version | URL |

யு எம் டி எஸ் நுட்பத்தில் அகலப்பட்டை ஸி டி எம் ஏ பயன்படுத்தப்படுகின்றது என்று பார்த்தோம். ஸி டி எம் ஏ நுட்பத்தின் சில சிறப்புக்களான திறன் கட்டுப்படுத்தல் மற்றும் மென் கைமாறல் குறித்த அம்சங்களைச் சென்ற பதிவில் கண்டோம் . இப்பதிவில் மேலும் சில தகவல்களைக் கூறலாம்.

அகலப்பட்டை ஸி டி எம் ஏ முறையில் பயம்படுத்தப்படும் அதிர்வெண் பட்டை ஐந்து மெகா ஹெர்ட்ஸ் அகலம் உடையது என்று பார்த்தோம். ஜி எஸ் எம் திட்டத்தில் இது வெறும் இருநூறு கிலோபைட்டுகள் தான் . தள நிலையமும் செல்பேசியும் ஐந்து மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் பட்டையில் தகவல்களைச் அனுப்பிப் பெறுகையில் அத்தகவல்கள் சரியான முறையில் எதிர்முனையை அடைய வேண்டும் . உதாரணமாகத் தள நிலையம் தகவல் அனுப்புகின்றது எனலாம். தள நிலையம் அனுப்பிய அத்தகவலானது செல்பேசியை நோக்கிப் பயணம் செய்கையில் அது ஒருவழிப் பயணமாய் அமைவதில்லை. செல்பேசியை அந்த வானலை அடையப் பல பாதைகள் உள்ளன. தள நிலையத்திலிருந்து நேரடியாய் அலைகள் செல்பேசியை அடையலாம் . அல்லது அருகிலுள்ள கட்டிடங்களில் பட்டு எதிரொலித்துப் பின் செல்பேசியை அடையலாம். வானலைகளுக்குப் பொதுவாகவே இந்தப் பண்பு உண்டு . பல்வழி விலகல் (Multipath fading) என்று இதை அழைக்கிறார்கள் . இவ்வாறு பல வழிகளில் வரும் வானலையானது சில இடங்களில் ஒன்று சேர்ந்து அதன் அளவு அதிகரிக்கலாம். சில இடங்களில் அவை எதிர் எதிர் படிகளில் (Phase) இருப்பின் அவ்வலைகள் மோதி அழிந்து போகவும் வாய்ப்புண்டு . பல்வழிகளில் வரும் வானலையானது ஒரே நேரத்தில் பெறுனரை(Receiver) அடைவதில்லை . நேரடியாய்ச் செல்பேசியை அடையும் அலைகள் முன்னதாகவும் , எதிலாவது பட்டு எதிரொலிக்கப்பட்டு வரும் அலைகள் சற்று நேரம் கழித்தும் (சில மைக்ரோ அல்லது மில்லி வினாடிகள் இடைவெளியில்) செல்பேசியின் பெறுனரை அடைகின்றன.

ஜி எஸ் எம் திட்டத்தில் பயன்படுத்தப்படும் வானலைப்பட்டையானது குறும்பட்டை தான். இருநூறு கிலோஹெர்ட்ஸ் அகலம் கொண்ட பட்டையே . அதுவும் தொடர்ச்சியாக அனுப்பப் படாமல் சிறு சிறு நேரத்துண்டுகளில் அனுப்பப் படுகிறது. அதனால் இத்திட்டத்தில் பல்வழி விலகலின் தாக்கம் மிகக் குறைவே . ஆனால் யு எம் டி எஸ் திட்டத்தில் பயன்படுத்தப்படும் அகலப்பட்டை ஸி டி எம் ஏ -வில் ஐந்து மெகாஹெர்ட்ஸ் அகலமுள்ள அதிர்வெண் பட்டையைப் பயன்படுத்துவதால் பல்வழி விலகலின் தாக்கம் அதிகம் உணரப்படும் . 

சரி, இத்தகு குணமுடைய வானலைகளை எவ்வாறு செல்பேசியிலும் தள நிலையத்திலுமுள்ள பெறுனர்கள் சிறந்த முறையில் பெற்றுப் பயன்படுத்த முடியும் ? ஒன்றுக்கு மேற்பட்ட பெறுனர்களைப் பயன்படுத்தினால் பல்வழியில் வரும் வானலைகளைப் பெற்றுப் பயன்படுத்த முடியும்தானே? இவ்வாறு பல பெறுனர்கள் சேர்த்த அமைப்புக்கு கூட்டுப் பெறுனர் (RAKE Receiver) என்று பெயர். தெருவைச் சுத்தம் செய்யப் பயன்படும் துடைப்பத்தைப் பார்த்திருப்பீர்கள் . நீள நீளமாய்ப் பலகுச்சிகள் சேர்ந்து கட்டியிருப்பார்கள் . தெருவிலுள்ள குப்பைகளை எல்லாம் சேர்த்துத் துடைத்தெடுக்க இந்த துடைப்பான் பயன்படுவதைப் போல, சிதறிக்கிடக்கும் வானலைகளை ஒன்று சேர்த்து அவ்வலைகளைப் பெருக்கம் செய்து பயன்படுத்த ஒன்றுக்கு மேற்பட்ட பெறுனர்கள் உதவுகின்றன , இதனால் இப்பெறுனர்கள் இப்பெயர் பெற்றன (Rake receiver). ஒரு தள நிலையத்துடன் இணைக்கப்பட்ட செல்பேசிகளின் பெறுனர்கள் வானலைகளைச் சிறந்த முறையில் பெற்றுப் பயன்படுத்த , அந்தத் தள நிலையம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அலைகளின் பண்பு பற்றி ஓரளவிற்குத் தெரிந்திருந்தல் அவசியம். செல்பேசியில் உள்ள மென்பொருளானது பெறுனர்கள் சிறந்த முறையில் இயங்குவதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்படிருக்கும். சில மைக்ரோ வினாடிகள் இடைவெளியில் வருகின்ற அலைகளைச் சரியான முறையில் பெற்று, தள நிலையம் அனுப்பிய தகவல்கள் சிதைந்து விடாமல் மீட்டுத்தருவதில் இந்தப் பெறுனர்கள் சிறந்த பணியாற்றுகின்றன.

தள நிலையத்தின் இன்னுமொரு சுவாரஸ்யமான செயல்பாட்டினையும் பார்க்கலாம். செல்பேசி ஒன்று பேசிக்கொண்டே நகர்ந்து செல்கிறது எனலாம். தள நிலையத்திலிருந்து விலகிச் செல்கையில், தள நிலையத்திலிருந்து வரும் அலைகளின் திறன் குறைந்து கொண்டே செல்லக்கூடும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வானலைகளின் திறன் குறைந்தால், அருகிலுள்ள மற்றொரு தள நிலையத்திற்குக் கைமாறல் நடைபெறும் என்று பார்த்தோம். சில சமயங்களில் கைமாறல் நிகழ்வதற்குப் பதில் தற்போது இணைந்துள்ள தள நிலையமே தனது திறனைச் சற்று அதிகரித்து , அந்தச் செல்பேசி தொடர்ந்து பேச்சுப்பரிமாற்றம் நிகழ்த்த உதவும். செல்பேசி பேசி முடித்ததும், தள நிலையம் ஒலிபரப்புத் திறனைத் தனது எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளும். நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தள நிலையங்களில் இவ்வகைச் செயல்பாடு அடிக்கடி நிகழும் ஒரு செயல். இவ்வாறு, தள நிலையம் தனது எல்லையை விரித்துச் சுருக்கும் முறைக்குச் செல் சுவாசித்தல் ( Cell Breathing) என்று பெயர். அதாவது , நாம் சுவாசம் செய்கையில் நம் உடல் எவ்வாறு சுருங்கி விரிகிறதோ அதற்கு ஒப்பாக இச்செயல் அமைந்துள்ளதால் இந்தப்பெயர்.

சரி, நீங்கள் காரில் சென்று கொண்டிருகையில் பேசிச் செல்கிறீர்கள் எனலாம். விரைவாகச் சென்று கொண்டே பேசுகையில் நீங்கள் பல தள நிலையங்களைக் கடந்து செல்கிறீர்கள். ஆகவே, ஒவ்வொரு தள நிலையத்தைக் கடந்து செல்கையிலும் கைமாறுதல் நடந்து செல்பேசியின் கட்டுப்பாடு மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு அடிக்கடி கைமாறுதல் நடப்பதால் தள நிலையங்களுக்கும் , செல்பேசிக்குமிடையேயான கட்டுப்பாட்டுத் தகவல்கள் அதிகம் பரிமாற வேண்டியிருக்கும். பேசிக்கொண்டிருக்கையில் அடிக்கடி தள நிலையங்களை மாற்றிக்கொண்டே செல்வது செல்பேசியின் இயக்கத்துக்கும் உகந்ததல்ல (மின்கலன் செலவு அதிகரிக்கும்). இவ்வாறு நகர்ந்து கொண்டே இருக்கும் செல்பேசிகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தனியாக ஒரு தள நிலையம் அமைக்கப்பட்டிருக்கும். இத்தள நிலையத்திற்குக் குடைத் தள நிலையம் ( Umbrella cell ) என்று பெயர். இதன் ஒலிபரப்புத் திறன் அதிகம். ஒரு நகர் முழுமைக்கும் அல்லது நகரின் பெரும்பான்மையான பகுதியை அடையும் வண்ணம் இதன் திறன் இருக்கும். நகர்ந்து கொண்டே பேசிக்கொண்டு செல்லும் செல்பேசிகளின் கட்டுப்பாடு கண்காணிக்கப்படுகிறது. அவை தொடர்ந்து நகர்ந்து கொண்டே செல்கின்றன என்றால், ஒன்றிரண்டு கைமாறுதல்களுக்குப்பின் அவற்றின் கட்டுப்பாடு குடைத் தள நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. குடைத் தள நிலையத்துக்கு மாற்றப்பட்டவுடன்,செல்பேசி கைமாறுதல் செய்யத் தேவையில்லை. குடைத் தள நிலையத்தின் திறன் அதிகமாய் இருப்பதால், செல்பேசி நகர்ந்து கொண்டே இருப்பினும் , பிற தள நிலையத்துடன் மாறத் தேவையின்றி தொடர்ந்து குடைத் தள நிலையத்துடன் இணைந்து கொள்கிறது. 

மேற்சொன்ன செல் சுவாசித்தலும், குடைத் தள நிலைய அமைப்பும் ஜி எஸ் எம் திட்டத்திலும் உண்டு.

oooOooo
எழில் அவர்களின் இதர படைப்புகள்.   உள்ளங்கையில் உலகம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |