நவம்பர் 11 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
திரைவிமர்சனம்
சிறுகதை
கட்டுரை
சமையல்
கட்டுரை
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : ரம்பை, ஊர்வசி, திலோத்தமை
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 59

  காதலர்களிடையே, ஊடல் என்கிற பொய்க்கோபம், பலவிதமான வேடிக்கைகளைச் செய்கிறது - அவற்றில் ஒன்றுதான் இந்தப் பாடலில் காட்சியாய் விரிகிறது.

  சந்தோஷமான கூடல் காட்சியின்போது, காதலியைக் கொஞ்சி மகிழும் காதலன், அவளுடைய மார்பில், குங்குமத்தையும், சந்தனத்தையும் ஆசையோடு அள்ளிப் பூசுவான்.

  அடுத்து, ஊடல் காட்சி வருகிறது - காதலன்மீது பொய்க்கோபம் கொண்ட காதலி, 'நீ பூசிவிட்ட இந்த அலங்காரம் எனக்கு வேண்டாம்., போ !', என்று சொல்வதைப்போல, சந்தனமும், குங்குமமும் கலந்த அந்தக் கலவையை, தன் மார்பிலிருந்து வழித்து, வீதியில் எறிந்துவிடுவாள்.

  இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், ஆண்களின்மீது ஊடல் கொண்டு, சந்தனத்தையும், குங்குமத்தையும் வழித்து எறிவதால், உயர்ந்த மாடங்கள் நிறைந்த பாண்டிய நாட்டின் மதுரை நகர வீதிகளிலெல்லாம், சேறு படர்ந்திருக்கிறது.

  அந்த வீதியில் நடக்கிறவர்களெல்லாம், நறுமணம் கமழும் அந்தச் சேற்றில் தடுமாறி விழுகிறார்கள்.


  மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட
  குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறுஇழுக்கி எங்கும்
  தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன்
  நெடுமாடக் கூடல் அகம்.

  (மைந்தர் - ஆண்கள்
  ஊடி - ஊடல் / பொய்க் கோபம் கொண்டு
  திமிர்ந்திட்ட - வாரியிறைத்த / சிதறிவிட்ட
  ஈர்ஞ்சாந்து - ஈரமான / குளிர்ந்த சந்தனம்
  இழுக்கி - வழுக்கி
  தன்மைத்து - தன்மை உடையது
  நெடுமாட - உயர்ந்த மாடங்கள்)  பாடல் 60

  வானுலக தேவர்களுக்கும், பூமியில் வாழும் மனிதர்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் இரண்டு -முதலாவதாக, சில விநாடிகளுக்கு ஒருமுறை மனிதர்களின் கண்கள் அனிச்சையாய்ச் சிமிட்டிக்கொள்ளும் (அல்லது) இமைத்துக்கொள்ளும் - சில, பல அழகிகள் எதிர்ப்படும்போது, இந்தக் கண் சிமிட்டல் வேகம் அதிகமாவதும் உண்டு.

  ஆனால், எந்நேரமும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று பேரழகிகளைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, தேவர்களின் கண்கள் எப்போதும் இமைப்பதில்லை.

  அடுத்து, மனிதர்களாகிய நாம், தரையில் நன்றாகக் கால் பதித்து நடக்கிறோம் - ஆனால் தேவர்களின் பாதங்கள் எப்போதும் தரையில் படுவதில்லை - ஒருவேளை அவர்கள் பூமிக்கு உல்லாசப் பயணமாய் வந்தாலும், தரையில் பாதம் பதிக்காமல், தரைக்குச் சற்று மேலே, மிதப்பதுபோல்தான் நடந்துவருவார்கள்.

  இந்த நம்பிக்கையை, ரசனை மிகுந்த ஒரு பாடலாகச் செய்திருக்கிறார் முத்தொள்ளாயிரப் புலவர்.

  கண்களை இமைக்காத தேவர்கள், இந்த பூமியில் பாதம் பதிப்பதில்லை, ஏன் தெரியுமா ?

  எங்கள் பாண்டியனுக்கு பயந்துதான்.

  தேர்ச் சக்கரத்தைத் தாங்கி நிமிர்த்தக்கூடிய வலுவுடைய, ஒளி மிகுந்த மாலையை அணிந்த, அழகான, உயர்ந்த வெண்கொற்றக்குடையை உடைய எங்கள் பாண்டியனின் ஆணைப்படிதான், அந்த தேவர்கள் தரையில் பாதம் பதிக்காமல் உலா வருகிறார்கள்.

  ஒருவேளை, தவறிப்போய் அவர்களின் பாதம் தரையில் பட்டுவிட்டால், அவர்களும், இந்த பூலோகத்தை ஆளும் பாண்டியனின் அடிமைகளாகிவிடுவார்களே ! அதற்கு பயந்துதான், அவர்களின் பாதங்கள் தரையைத் தொடுவதே இல்லை.


  நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
  காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
  ஏம மணிப்பூண் இமையார் திருந்துஅடி
  பூமி மிதியாப் பொருள்.

  (நேமி - (தேர்ச்) சக்கரம்
  நிமிர் - நிமிர்த்துகின்ற
  தார் - மாலை
  காமர் - அழகு
  ஏமம் - தங்கம்
  பூண் - அணிகலன்
  இமையார் - (கண்களை) இமைக்காதவர்கள்
  திருந்து அடி - திருத்தமான பாதங்கள்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |