Tamiloviam
நவம்பர் 13 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
டெலிவுட் : 'கலைஞர்' டிவி
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

Kalaignar TVதமிழகத்தில் தினம் நடக்கிற சங்கதிகளைப் பார்த்தால் எனக்கு ஒன்று தோன்றும். இதையெல்லாம் வெளிநாட்டில் எப்படி எடுத்துக்கொள்வார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்றா அல்லது வாயைப் பிளந்து நடக்கும் கூத்துகளை ரசிப்பார்களா? ஒன்றும் வேண்டாம். தமிழக டிவிக்களை அரைமணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். முகத்திரை கிழியும். 

கருணாநிதி அப்போது சன் டிவியின் நான் - பிளேயிங் கேப்டன். சன் டிவி குறித்து எதுவேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம். அலசலாம். இந்த விஷயத்தில் கலாநிதி மாறனைவிடவும் சுலபத்தில் கருணாநிதியைத்தான் அணுகமுடியும். அந்தத் தைரியத்தில்தான் ஒருமுறை அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

'உங்க டிவியில வர்ற நிகழ்ச்சியில அதிகமாக ஆங்கில கலப்பு இருக்கே?'

'இல்லைப்பா. நான் பேசிட்டேன். நான் ஒரேடியா அவங்க பிஸினஸில தலையிடமுடியாது' என்றார் முத்தமிழ் அறிஞர்.

இன்றைய கலைஞர் டிவிக்கு யார் பாஸ் என்று சொல்லத்தேவையில்லை. ஆனால் அந்த மானாட மயிலாட நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மட்டும் என்ன நடக்கிறதாம்?

தமிழில் வாழ்த்துக்கள் என்று நாம் உச்சரிப்பதை எழுதும்போது வாழ்த்துகள் என்று எழுதினாலே போதுமானது. க் என்கிற எழுத்து அங்கு அவசியம் இல்லை. கலைஞர் டிவியல்லவா! இதற்கென ஒரு ப்ரூஃப் ரீடர் வைத்துச் சரி பார்த்திருக்கலாம். விஷூவலில்  'அன்பு வாழ்த்துகள்' என்றுதான் காண்பிக்கப்படும். மட்டற்ற மகிழ்ச்சி.

ஆனால் அதை அறிவிப்பு செய்யும் கோமாளித் தொகுப்பாளர் எப்படிச் உச்சரிப்பார் தெரியுமா?

'அன்பு வாழ்த்துகல்', வழங்குவோர் ராசாத்தி நைட்டீஸ்....

எழுதும்போது 'க்' வரக்கூடாது என்பதற்காக அண்ணார் உச்சரிக்கும்போதும் புத்திசாலித்தனமாக 'க்'கை கழற்றியெறிந்துவிட்டார். அடுத்தமுறை இசையருவி பார்க்கும்போது கண்டிப்பாக 'வாழ்த்துகல்' பெறுங்கள். 

தமிழ்நாட்டில் ஜ, ஹ, ஷ போன்ற எழுத்துகளை ஒதுக்கிவைக்கும் கூட்டம் உண்டு. அவை வடமொழி எழுத்துகள் என்பதற்காக. ஆனால் ழ என்கிற எழுத்துக்கும் இங்கு அதே கதிதான். கூழாங்கல் வைத்தியம்கூட செல்லுபடியாகவில்லை. அதுவும் ழவை கொலை செய்வதற்கென்றே பிறந்தவர் வடிவேலு. தமில் மக்கல் அங்கே செத்துக்கிட்டு இருக்காங்க என்பார். 

இப்போது கலைஞர் புண்ணியத்தில் தமிழ் மக்களிடம் இருந்த நீண்டநாள் குறைபாடு ஒன்று வெளியே வந்திருக்கிறது. அதாவது 'ழ' எப்படி தமிழர்கள் நாவில் வழுக்கிக்கொண்டு போகுமோ அதுபோலவே 'ஞ'வும் தமிழர்கள் வாய்க்குள் நுழையாது என்கிற மறைக்கப்பட்ட உண்மை வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. பாவம், கலைனர் டிவி என்றுதான் தமிழ்நாட்டின் பாதி ஜனங்களுக்கு சொல்லவருகிறது! அதுவும் சினிமா நட்சத்திரங்கள் கலைனர் டிவிக்கு நன்றி என்று உச்சரிக்கிறபோது அவர்களுடைய எல்லா கம்பீரமும் வடிந்துஓடுகிறது.

ஏற்கெனவே சன் டிவியிடம் சினிமா பட்டபாடு எல்லோருக்கும் தெரியும். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் சினிமாவை விலைக்கு வாங்குகிறேன் என்று சொல்லிவிட்டு நேரடியாக சினிமாவுக்குள் நுழைந்துவிட்டது கலைஞரின் குடும்பம். என்ன ஆச்சர்யம் என்றால் குருவிமீது ஒரு கல்லடிகூட படவில்லை. சன் டிவி சந்தோஷமாக அதன் பாடல்களை வாங்கி ஒளிபரப்பியது. அஜீத் பாடல் யாராவது கேட்டால்தான் அவர்கள் தடங்கலுக்கு வருந்துவார்கள்.

நாக்கமுக்க படத்தின் பாடலை கலைஞரின் இசையருவி டிவி முற்றிலுமாகப் புறக்கணித்தது. பதிலுக்கு தன் விரோதத்தை 'வாரணம் ஆயிரம்' பாடல்களில் காண்பிக்கப்போகிறது சன் டி.வி. மெச்சத்தகுந்த கலாசாரம்தான். டிவியை இடியட் பாக்ஸ் என்று சொன்னவனின் வாயில் பனங்கற்கண்டு போடவேண்டும்.

தாம் தூம் என்று தலைப்பு வைத்தாலும் தமிழ்நாட்டில் அது தமிழ் கலாசாரத்தை வளர்க்கக்கூடிய தலைப்புதான்.  அப்போ சிவாஜி? அது பெயர்ச்சொல் என்று கூறி வாயை அடைத்துவிடுகிறார்கள். அப்படியென்றால் ரிக்கி மார்ட்டின் என்றுகூட தமிழ்ப்படத்துக்குத் தலைப்பு வைக்கலாம்.

கடந்த ஒரு வாரமாக செல்வராகவனின் புதுப்படம் பற்றிய விளம்பரம் ஒன்று வருகிறது. மாலை நேரத்து மயக்கம் என்று தலைப்பு கொடுத்துவிட்டு விளம்பரத்தின் நாலா பக்கமும் she has past, he is fresh, but she is used என்கிற தொனியில் படத்தின் தன்மை ஆங்கிலத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதற்கும் கட்டாயம் வரிவிலக்கு கிடைக்கும். இதாவது விடுங்கள். சென்னை 28 என்கிற படத்தின் தலைப்பை தமிழ்நாட்டில் ஒரு பயலாவது சென்னை இருபத்தெட்டு என்று சொன்னானா? இதில் உள்ள முரண் என்னவென்றால் ஆங்கிலத் தலைப்பு வேண்டாம் என்றுதான் பழைய ஆங்கில தலைப்பை கடாசி எறிந்துவிட்டு சென்னை 28 என்று அதற்குத் தமிழில் பெயர் சூட்டினார்கள். தமிழ்சினிமாவில் ரித்தீஷ் மட்டும்தான் காமெடியன் என்று இனி யாரும் சொல்லாதீர்கள். ப்ளீஸ்.

இதுபோன்ற அவலங்கள் அக்கரையில் நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   டெலிவுட் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |