நவம்பர் 18 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
இசையோவியம்
திரையோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
துணுக்கு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : திரைகடலோடியும் திரவியம் தேடு,..
  - ஜெயந்தி சங்கர்
  | Printable version |

  சரியான குடிநுழைவு ஆவணங்களில்லாத கள்ளக்குடியேறிகளைப் பணியில் அமர்த்தும் முதலாளிகள் ஒவ்வொரு கள்ளக்குடியேறிக்கும் 24 முதல் 48 மாத வெலி (levy) எனப்படும் வரியைக்கட்டவேண்டும். அல்லது ஒரு வருடச்சிறைத் தண்டனை. சிலசமயம் இரண்டும். இரண்டாம் முறை இதே குற்றத்தைச்செய்யும் முதலாளிக்கு ஒருமாதம் முதல் ஒருவருடம் வரை கட்டாயச்சிறைத் தண்டனையுண்டு. 1998ல் 23,000 சட்டவிரோதக் குடியேறிகளும் விசா காலாவதியானவர்களும் கைதானார்கள். 1999ல் இந்த எண்ணிக்கை 17,000 துக்குக் குறைந்தது. விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்த கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியது கண்டு பிடிக்கப்பட்டால் முதலாளிக்கு 2 வருடச்சிறை, $6000 அபராதம், மற்றும் அத்தகைய தொழிலாளிகளின் எண்ணிக்கை 5க்கும் மேலிருக்குமானால் பிரம்படியுமுண்டு.

  2004 செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இரண்டு 32, 37 வயது இந்தியக்கள்ளக்குடியேறிகள் கைதானார்கள். இருவரும் எதற்குத்தெரியுமா கைதாகியிருக்கிறார்கள்? வேறுசில கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியதற்காக. 14 கள்ளக்குடியேறிகளைத் பாத்திரம் கழுவவும் இடத்தைச்சுத்தம் செய்யவும் உணவகங்களிடம் வேலைக்கு அனுப்பியதற்காக. 22 முதல் 52 வதுவரையிருந்த இந்த 16 பேரில் கள்ளக்குடியேறிகளுடன், விசா முடிந்து நாட்டைவிட்டு வெளியேறாதவர்கள் சிலருமுண்டு. தாம்சன் ரோடு, ஸ்காட்ஸ் ரோடு, திலோக் ப்ளாங்கா ரோடு, ஆர்சர்ட் ரோடு மற்றும் மெர்சண்ட் ரோடுகளில் இருக்கும் உணவகங்களுக்குச் சென்று திடீர்ச்சோதனைகள்
  மேற்கொண்டனர் குடிநுழைவுதுறை அதிகாரிகள். குடிநுழைவுச் சட்டத்தின்படி இவர்கள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் தண்டனை, குறைந்தது 2 மாதம் முதல் 6 மாதம் வரை சிறைத் தண்டனை மற்றும் 3 கசையடிகள் ஆகியவையாகும். குறைந்த விலையில் கிடைத்த உழைப்புக்கு ஆசைப்பட்டுக்கொண்டு இவர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்ட உணவகங்களுக்கு $6000 வரை அபராதம், மற்றும் அந்தக்கடை உரிமையாளர்களுக்கு 2-6 மாதச் சிறைத்தண்டனை உண்டு.

  கள்ளக்குடியேறிகளை வீட்டுவாடகைக்கு அமர்த்துவதும் சிங்கப்பூரில் குற்றமாகும். வேலைக்கோ வாடகைக்கோ அமர்த்துமுன்னர் பாஸ்போர்ட்டுகளைச் சோதித்தறிய பொதுமக்களை அவ்வப்போது கேட்டுக்கொண்டு வருகிறது குடிநுழைவுத்துறை.

  'Ferry Tale' comes to an end for human smuggler என்று 2004 ஜூன் மாதம் 26 ஆம் தேதி ஒரு செய்தி வெளியானது. 28 வயதான இந்தோனீசிய ஆடவன் சை·புர் ரோஹ்மன் என்பவன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். இவன் விசைப்படகு நிறைய ஏற்றிவந்த பயணிகளுடன் கள்ளக்குடியேறியையும் நாட்டிற்குள் கடத்தமுயன்ற குற்றத்திற்குத்தான் பாத்தாமிலிருந்து சிங்கப்பூர் வந்ததும் கைது செய்யப்பட்டான்.படகின் ஸ்டீரிங்க் வீலுக்கு அடியில் கீழ்தளத்தில் இருந்த பொந்தில் குணாலன் என்று தன் பெயரைச்சொன்ன 26 வயது ஆடவன் மறைந்திருந்தான். அவனையும் படகோட்டியையும் படகு ஹார்பர் ·ப்ரண்ட் என்னும் துறைமுகத்தை அடைந்தபோது சோதைனைசெய்த குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பாத்தாமில்(Batam) குணாலனைக் கடத்த $300 கொடுக்கப்பட்டதை சை·புர் ரோஹ்மன் ஒப்புக்கொண்டான். கெப்பல் மெரினாவில் படகுக்கு டீசல் ஊற்றும்போது தப்பித்துப்போகத் தான் குணாலன் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே சை·புர் ரோஹ்மன் ஏப்ரலில் ஒரு கள்ளக்குடியேறியை இதேபோலக் கடத்திய செய்தியும் விசாரணையில் வெளியானது. சை·புர் ரோஹ்மனுக்கு 30 மாதச் சிறைத்தண்டனையும் 6 கசையடியும் வழங்கப்பட்டது. குணாலனுக்கு ஒரு மாதச்சிறையும் 4 கசையடிகளும் கிடைத்தன.

  சக மனிதன் ஒருவனின் உடல் உருத்தெரியாமல் சிதைந்து போயிருப்பதைப்பார்ப்பது மிகமிகக்கொடுமை என்கிறார் 47 வயதான கடற்கரைப் பாதுகாப்புக் காவல்துறை (Police Coast Gaurd ) அதிகாரி மொஹமத் தாஹா. இவ்வாறு இறப்பது மிகவும் வருந்தக்கூடியது, ஒவ்வொரு முறையும் வயிற்றைப்பிறட்டும், கடலில் ஊதிப்போன பிணத்தைக்காண்பதைவிடக் கொடுமை வேறு இல்லை என்கிறார் ஐந்து வருடங்களாக காவலராகப்பணியாற்று இவர். ஒரு நாளானாலும் பிணங்கள் கடலில் முற்றிலும் புதிய உருவம் கொள்கின்றன. உப்பிக்கொள்வதுடன் விறைத்தும் கொள்கின்றன. தொட்டதுமே தோல் உரிகிறது. உரோமங்கள் உதிர்கின்றன. கைகால் விரல் நகங்கள் விழுந்துவிடுகின்றன. புழுக்கள் பெருகியுள்ள இத்தகைய பிணங்களைப்பார்ப்பது ஒவ்வொரு முறையும் புதிய அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவரை குறைந்தது ஆறு பிணங்களைக் கண்டு இழுத்துக்கரையில் சேர்த்திருக்கிறார் இவர். சமீபத்தில், அதாவது அக்டோபர் மாதத் தொடக்கத்தில் நான்கு நாட்கள் நீரில் இருந்து உப்பிப்போயிருந்த பிணம் ஒன்றினைக் கண்டெடுத்திருக்கிறார்.

  இவ்வருடம் மேமாதம் 18 ஆம் தேதி ஒரு பிணம் வுட்லண்ட்ஸ் வட்டாரக் கடற்கரையோரம் கிடைத்தது. அழுகி, உருத்தெரியாதிருந்தது. எந்த இனம், என்ன வயது ஒன்றுமே கணிக்கமுடியாது போனது. ஏனென்றால், தோல் தன் நிறைத்தை முற்றிலும் இழந்துவிடுகின்றது. முகம் வீங்கியிருந்ததில் முக அடையாளங்களைக்கூடக் காவல்துறையால் கணிக்கமுடியவில்லை. கடைசியில் விரல் ரேகைகளின் வழியாகத்தான் இறந்தவனின் விவரம் தெரிந்தது. இறந்தவன் பர்மாவைச்சேர்ந்தவன். இவன் திருட்டுத்தனமாக தீபகர்ப மலேசியவின் தென்மாநிலமான ஜோஹோரிலிருந்து கடலில் நீந்தியே சிங்கப்பூருக்குள் நுழையத்திட்டமிட்டிருக்கிறான். கடற்கரைப் பாதுகாப்புப் போலிஸ் இவரின் அடையாளத்தைக்கண்டு பிடித்துள்ளது. 24 வயதான தாட் கோ கோ என்னும் இவ்விளைஞன் சிங்கப்பூரில் கள்ளக்குடியேறி என்று ஜூன் மாதம் 2003 வருடம் கைதுசெய்யப்பட்டு சென்ற வருடம் ஒரு மாதம் சிறையில் இருந்திருக்கிறான். நான்கு கசையடிகளும் இவனுக்குக் கொடுக்கப்பட்டன. அதன்பிறகு, ஆகஸ்ட் மாதம் விடுதலை ஆனதும் சொந்தநாட்டுக்கே அனுப்பியும் வைக்கப்பட்டிருந்தான்.

  இந்தப்பிணம் கிடைத்த 10 நாட்களில் மறுபடியும் ஒரு பிணம் கடற்கரையிலிருந்து 30 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நபரின் அடையாளம் இன்னமும் (அக்டோபர் 4 ஆம் தேதி வரை) கண்டுபிடிக்கப்படவில்லை. கழுத்தில் ஒரு பௌத்த மதத்தின் தாயத்து இருந்தது. வலது மணிக்கட்டில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மணிகளைக்கொண்ட பூஜைக்கயிறு கட்டப்பட்டிருந்தது. இதைவைத்து அவன் அவனுடைய செயலின் பின்விளைவுகள் மற்றும் ஆபத்தை அறிந்து எதிர்நோக்கியே இருந்திருக்கிறான் என்று காவலர்கள் கணித்தனர். 2 கிலோமீட்டர் நீளமுள்ள பெரும் அலைகளுடனும் வேகமுடையதுமான ஆழமான கடலைக் கடப்பது மிகவும் அபாயகரமான செயலே.

  பொதுவாகக் கள்ளக்குடியேறிகள் பிடிபடும் கடற்கரையோரத்தில் தான் மேற்கூறப்பட்ட பிணங்கள் பிடிபட்டிருக்கின்றன. ஆகவே, கடந்த செப்டம்பரில் நீதி மன்றத்தில் இவ்விரண்டுமே கள்ளக்குடியேறிகள் என்று தீர்ப்பு வழங்கி வகைப்படுத்தப்பட்டது.

  2000 ஆண்டுமுதலே கிட்டத்தட்ட 730 கள்ளக்குடியேறிகள் கடற்கரைப் பாதுகாப்புப் போலிஸால் பிடிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு மாதத்திற்கு 13 பேர். இந்த வருடம் 120 பேர் பிடிபட்டுள்ளனர். இதே கதியில் போனால் போனவருட சாதனையான 133 பேரையும் தாண்டிவிடும் போலிருக்கிறது. இரவானாலும் பகலானாலும், கடந்துபோகும் கப்பல்களினால் அடித்துச் செல்லப்படுவர். இல்லையென்றால், கடலின் வேகத்திற்கு இணையாக நீந்திக்கரையேற முடியாது மூழ்கிவிடுவர். உயிரோடு தப்பினால், கள்ளக்குடியேறிகள்
  கடற்கரைப் பாதுகாப்புப் போலிஸால் பிடிக்கப்படுவர். அல்லது நீரில் ஒளிந்துகொள்ள முயன்று மூழ்கி இறப்பர். நவீனத் தொழில் நுட்பச்சாதனங்கள், விசைப்படகுகளையும் தாண்டி இவர்கள் நாட்டிற்குள் புக முடியாது என்கிறார் உயர் அதிகாரி ஒருவர்.

  உயிரைப்பணயம் வைத்தாவது சம்பாதிக்க நினைக்கும் இவர்களை நினைத்தால் ஒருவிதத்தில் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |