நவம்பர் 18 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
இசையோவியம்
திரையோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
துணுக்கு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : பாண்டியனிடம் அடிபணிந்த அரசர்கள்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 61

  அந்தக் காலத்தில், சிறிய நாடுகளின் அரச பதவி என்பது, சும்மா 'ஒப்புக்கு'தான் - மரியாதையும், கௌரவமும் உண்டு. என்றாலும், அதை வைத்துக்கொண்டு எதுவும் பெரிதாய்ச் செய்துவிடமுடியாது.

  ஏனெனில், சிறிய நாடு என்பதால், அவ்வளவாய் வருமானம் போதாது - நாமாக ஒரு வலுவான ராணுவத்தை அமைத்து நடத்துவது சாத்தியமில்லை - ஆகவே, அக்கம்பக்கத்திலிருக்கிற மற்ற நாடுகளின்மீது போரிட்டு, நம் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ளமுடியாது.

  மற்ற நாடுகளின்மீது நாம் போர் தொடுப்பது ஒருபக்கமிருக்க, நம்மீது வேறு எவனாவது போர் தொடுத்துவிட்டால், அதை எப்படிச் சமாளிப்பது ? அதற்கும் அங்கே வழியில்லை - ஆகவே, எந்நேரமும் நித்ய கண்டம், பூர்ணாயுசுதான்.

  இதைத் தவிர்ப்பதற்காக, சிற்றரசர்கள் ஒரு வழி கண்டுபிடித்தார்கள் - யாரேனும் ஒரு பேரரசனைக் கண்டுபிடித்து, 'ஐயா, நீதான் பூலோக ராஜா, எங்களைக் காப்பாற்று.', என்று சொல்லி, அவன் காலில் விழுந்துவிடுவது. ('ம்ஹ¤ம், அப்படியெல்லாம் விழமாட்டேன்.', என்று நாம் பிடிவாதம் பிடித்தால் ஆபத்து, கொஞ்ச நாள்களில், அவனே நம்மீது போரிட்டு, நம் நாட்டை மொத்தமாய்ப் பிடித்துக்கொண்டுவிடுவான் !)

  நாமாக முந்திக்கொண்டு இப்படிச் சரணாகதி அடைவதால் ஆய பயன் என்னவெனில், அந்த விநாடியிலிருந்து, நம்மைக் காப்பாற்றுவது அந்தப் பேரரசனின் கடமையாகிவிடுகிறது - நாம்தான் மொத்தமாய் அவனுடைய கட்சியில் சேர்ந்துவிட்டோமே.

  அதன்பின், யாரேனும் நம்மை முறைத்தால், 'யோவ், எங்க தலைவர் யார் தெரியுமா ?', என்று பதிலுக்கு மிரட்டினால் போதும், அவன் பயந்து ஓடிவிடுவான்.

  ஆனால், இந்தப் பாதுகாப்பு, சௌகர்யமெல்லாம் சும்மாக் கிடைத்துவிடாது - நம் பெருந்தலைவருக்கு, மாதம்தோறும், அல்லது வருடம்தோறும் வரி / கப்பம் (அந்தக்கால சினிமா ரசிகர்களுக்குப் புரிகிறமாதிரி சொல்வதானால், 'கிஸ்தி') செலுத்தவேண்டும்.

  இப்படி ஒவ்வொரு பேரரசனுக்குக்கீழும், ஏராளமான சிற்றரசர்கள் இருப்பார்கள் - அவர்கள் கொண்டுவந்து கொட்டுகிற வரிப் பணத்திலேயே தங்களின் நாட்டைச் செழிப்பாக்கிக்கொள்வார்கள்.

  ஆனால், மேற்சொன்ன அடிமைக் கூட்டத்தில், சில புத்திசாலி (அல்லது 'அசட்டு தைரிய') சிற்றரசர்களும் இருப்பார்கள், 'எப்படியும் வரி செலுத்தப்போறோம்., ஒரு பத்து நாள் கழிச்சுக் கட்டினா மவராசனுக்குத் தெரியவாபோகுது ?', என்றோ, அல்லது, 'ஒருதடவை கட்டலைன்னாதான் என்ன ?', என்றோ சிந்தித்து, வரி கட்டுவதைத் தள்ளிப்போடுவார்கள்.

  இந்த விஷயம் பேரரசருக்குத் தெரியாதவரையில் பிரச்சனை இல்லை - ஒருவேளை அவருக்குத் தெரிந்துவிட்டால், வரி செலுத்தாத அரசர்களுக்கெல்லாம் கெட்ட காலம் துவங்கிவிட்டது என்று அர்த்தம்.

  பேரரசர் என்ன செய்வார் ?

  முதலில் ஒரு தூதனை அனுப்பி, வரியை வசூலிக்கப் பார்ப்பார். (பண விஷயமாச்சே, அவசரம் கூடாது !)

  அதற்கும் மசியாத சிற்றரசர்களுக்கு, ஒரு எச்சரிக்கை பறக்கும் - 'எச்சரிக்கை' என்று சொல்வதைவிட, 'போர் அறிவிப்பு' என்று சொல்லலாம் - 'இதோ, என் போர் யானையின்மீது போர்க் குடையைத் தூக்கி வைத்துவிட்டேன், ஏறி உட்கார்ந்தால், நேராக உங்கள் ஊருக்குதான் வருவேன், ஒரே நசுக்கில் உங்களைத் தரையோடு தேய்த்துவிடுவேன்.', என்று அவர்களை மிரட்டுவது. (இந்த மிரட்டல் உத்திக்கு 'குடை நாட்கோள் குறிப்பது' என்று பெயர்.)

  இதைக் கேள்விப்பட்டதும், குட்டி அரசர்களின் தாற்காலிக தைரியமெல்லாம் கரைந்துபோக, 'குய்யோ, முறையோ' (?) என்று அலறியடித்துக்கொண்டு மஹாராஜாவைப் பார்க்க ஓடுவார்கள், 'ஐயா, எங்கள்மீது கோபப்படாதீர்கள், நாங்கள் உங்கள் கோபத்தைத் தாங்கமாட்டோம்.', என்று கதறி அழுது, வரிப்பணத்தைப் பைசா மீதமில்லாமல் செலுத்திவிடுவார்கள்.

  இங்கே, நம் பாண்டியனுக்குமுன்னால், அப்படியொரு காட்சிதான் அரங்கேறுகிறது.

  இத்தனைக்கும், குவளை மலர்களைத் தொடுத்து மாலையாய் அணிந்த பாண்டியனுக்குத் தனது சிற்றரசர்கள்மேல் எந்தக் கோபமோ, வருத்தமோ இல்லை - 'சும்மா' ஊரைச் சுற்றி உலாப் போகலாம் என்று ஆசைப்பட்டு, யானையின்மீது ஏறி உட்கார்கிறான், முழு நிலவுபோல் காட்சிதரும் அவனுடைய வெண்கொற்றக் குடையும் யானையின்மீது ஏறிக்கொள்கிறது.

  இதைக் கேள்விப்பட்டதும், பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களெல்லாம் பயந்து நடுங்குகிறார்கள்.

  தங்கள்மீது போர் தொடுப்பதற்காகதான் பாண்டியன் யானையேறியிருக்கிறான் என்று அவர்களாய்க் கற்பனை செய்துகொண்டு, அதிவேகமாய் ஓடிவருகிறார்கள், பாண்டியனின் அரண்மனைமுன்னால் கூட்டமாய் மொய்த்துநிற்கிறார்கள்.

  அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் தீவீரமான திகில் பரவியிருக்கிறது, 'அரசே., திடீரென்று எங்கள்மேல் ஏன் இந்தக் கோபம் ?', என்று கெஞ்சுகிறார்கள் அவர்கள், 'தயவுசெய்து எங்கள் நாட்டின்மீது போர் தொடுக்கவேண்டாம்., இதோ, உங்களுக்கு உரிய வரிப்பணத்தைக் கொண்டுவந்திருக்கிறோம், வாங்கிக்கொள்ளுங்கள்.', என்று பாண்டியனுக்குமுன்னால் பணத்தைக் கொட்டி நிறைக்கிறார்கள்.


  நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன்
  குடைதோன்ற ஞாலத்து திறைகொள்
  இறையோஎன அரசர்வந்து இடம்பெறுதல் இன்றி
  முறையோஎன நின்றார் மொய்த்து.

  (மதி - நிலவு
  தார் - மாலை
  ஞாலம் - உலகம்
  திறை - வரி / கப்பம்
  இறை - இறைவன்)  பாடல் 62

  சென்ற பாடலில், பாண்டியனிடம் அடிபணிந்த அரசர்களைப்பற்றிப் பார்த்தோம் - இந்தப் பாடலில், அதற்கு நேரெதிராக, அவனுடைய கோபத்தைச் சம்பாதித்துக்கொண்ட பகை மன்னர்களைப் பார்க்கிறோம்.

  பாண்டியனின் கையிலிருக்கும் வேல், பளபளப்பாய் ஒளி வீசுகிறது, ஆனால், போர் துவங்கிவிட்டால், அதே வேல், மிகக் கொடுமையான தோற்றம் கொள்ளும் - கணக்கற்ற எதிரிகளைக் குத்திக் கொல்லும் அந்த வேல்.

  அந்த வேலை ஏந்திய பாண்டியன், இப்போது பெரும் கோபத்தில் இருக்கிறான்.

  போர் துவங்கிவிட்ட செய்தியை அறிவிப்பதற்காக, அவனுடைய போர் முரசு ஒலிக்கிறது, அந்தச் சப்தத்தைக் கேட்டதும், பாண்டியனின் பகை மன்னர்கள், இடி ஓசையைக் கேட்ட நாகப் பாம்பைப்போல் பயந்து நடுங்குகிறார்கள்.

  பயத்தின் நடுவே, 'பாண்டியன் வரும்வரை நாம் இங்கேயே இருந்தால், நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.', என்று அவர்கள் தங்களுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள்.

  இப்போது, அவர்கள் உயிர் பிழைக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது - பாண்டியனின் கண்ணில் படாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாய், காட்டுப் பசுக்கள் மேயும் மலைப் பிரதேசத்துக்கு ஓடிப்போய்விடுவது.

  'இத்தனை காலமாக அரண்மனையில் சொகுசு வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, இப்போது காட்டில் ஒளிந்து வாழ்வதா ?', என்றெல்லாம் யோசிக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை - பாண்டியனின் போர் முரசுச் சப்தம் நெருங்கிவருகிறது.

  ஆகவே, அந்தப் பகை மன்னர்கள் அவசரமாய் காட்டை நோக்கி ஓடுகிறார்கள் - பாண்டியனை நினைத்த ஆங்காரத்தில் அவர்களுடைய வயிறெரிகிறது, ஆனால், அதையும் மீறி, உயிர் பயம் அவர்களைத் துரத்துகிறது - அவர்கள் அதிவேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.


  செருவெங் கதிர்வேல் சினவெம்போர் மாறன்
  உருமின் இடிமுரசு ஆர்ப்ப அரவுஉறழ்ந்து
  ஆமா உகளும் அணிவரையின் அப்புறத்து
  வேமால் வயிறுஎரிய வேந்து.

  (செரு - போர்
  வெம் - கொடுமையான
  உருமு - இடி
  ஆர்ப்ப - சப்தமிட
  அரவு - பாம்பு
  உறழ்ந்து - போல (பாம்பைப்போல)
  ஆமா - காட்டுப் பசு
  உகளும் - துள்ளித் திரியும்
  வரை - மலை
  வேம் - சூடாகும்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |