நவம்பர் 18 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
இசையோவியம்
திரையோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
துணுக்கு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரையோவியம் : தி இன்க்ரெடிபிள்ஸ்
  - பாஸ்டன் பாலாஜி
  | Printable version |

  பிக்ஸார் தயாரிக்கும் படங்களை நம்பிக்கையாக தியேட்டரில் சென்று பார்க்கலாம். டாய் ஸ்டோரி, மான்ஸ்டர்ஸ் இன்க், ·பைண்டிங் நீமோ என்று பெரியவர்களை சிந்திக்க வைத்து, அவர்களுக்குள் இருக்கும் குழந்தைமனதையும், அவர்களுடன் கூட வரும் சிறுவர்களையும் கைதட்டி சிரித்து மகிழ வைக்கும் திரைப்படங்கள். அவர்களின் புத்தம்புதிய தயாரிப்பு 'தி இன்க்ரெடிபிள்ஸ்'. படம் ஆரம்பிப்பதற்கு முன் ஆந்திராவில் நியுஸ் ரீல் போடுவது போல், சகாக்கள் எடுத்த குட்டிப் படத்தை பிக்ஸாரின் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் இலவசமாக போட்டுக் காட்டுவார்கள். இந்த முறையும் ஏதோ ஒரு ரசிக்கத்தக்க, ஆனால் மறந்துவிட்ட ஐந்து நிமிட கார்ட்டூன் வந்து போனது. மொத்த இரண்டு மணி நேரத்துக்கான திரையரங்கு வசிப்பில், என்னுடைய மூன்று வயதுக்கு மிகவும் பிடித்த தருணம் இதுதான்.

  இதுவரை வெளிவந்த பிக்ஸார் தயாரிப்புகள் அனைத்துமே பொம்மைகளையும் மிருகங்களையும் ஆடிப் பாட வைத்திருந்தது. அவற்றின் மூலமாக, அன்றாட வாழ்வில் நடக்கும் முரண்களையும் கோடிட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். முதல் முறையாக பூலோகத்து மனிதர்களைக் கொண்ட படம் என்பதே எதிர்பார்ப்பை எகிறவைத்தது. அந்த எதிர்பார்ப்பை திருப்தி தரும் அனுபவமாக படம் அமைகிறது. 'தி டே ஆ·ப்டர் டுமாரோ', 'மம்மி' போன்ற மனிதர்களை வைத்து எடுக்கப்படும் அறிவியல் புனைப்படங்களே கணினி வித்தைகளை நம்பவைக்க முடியாமல் 'ஙே' என்று கடுப்படிக்க வைக்கும்போது, நிஜ மனிதர்களை அனிமேஷனில் கொண்டு வந்திருக்கிறது இந்தப்படம்.

  வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதை. மிஸ்டர். இன்க்ரெடிபிள் என்னும் புனைப்பெயருடன் சூப்பர் ஹீரோ பாப். எலாஸ்டி கேர்ள் என்னும் காரணப்பெயருடன் காதலி+மனைவி ஹெலன். நாட்டில் கொலை, கொள்ளை (சரி... தற்போதைய சாமியார் பிரச்சினைகள்) என எதுவானாலும் போலீஸ¤க்கு முன் ஆஜராகி நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். காவல்துறை தெரியாமல் தவறு இழைத்துவிடுவது போல, ஒன்றிரண்டு குழப்படிகளால், சூப்பர் ஹீரோ இமேஜ், டேமேஜ் ஆகிறது. எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவையில்லை; சாதாரணர்கள் போதும் என மக்கள் வெகுண்டெழ, நாடு/வீடு/காடு மாறி பெயர் மாற்றி, பொதுஜனம் ஆக்கப் படுகிறார்கள். பதினைந்து வருடங்கள் அஞ்ஞாத வாசம் அனுபவிக்கிறார்கள்.

  மகன் டாஷ், ஓட்டநாயகன். வெகு வேகமாக ஓடுகிறான். ஆசிரியரின் இருக்கையில் ஆணி வைக்கிறான். ஆசிரியரோ குறும்பு செய்யும் மாணாக்கர்களுக்காகவே வீடியோ கேமரா வைத்திருக்கிறார். இருந்தாலும் கேமிராவின் லென்ஸில் மண்ணைத் தூவிவிடுமளவு அசகாய சூரன்.

  மகள் வயலெட் காணாமல் போக்கிக் கொள்வதில் கில்லாடி. தன்னைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்கத் தெரிந்தவள். இவள் மட்டும் கிடைத்தால், கறுப்பு பூனைப்படையை முற்றிலும் கழற்றிவிட்டுவிட்டு, வயலெட்டை மட்டும் Z+ பாதுகாப்பில் இருக்கும் பிரதம மந்திரிக்கு கமாண்டோ ஆக்கி இருப்பார்கள்.

  சாதாரண வாழ்க்கை ஹீரோவுக்கு போரடிக்கிறது. நியாயத்தை நிலை நிறுத்த முடிவதில்லை. சக்தியைப் பிரயோகிக்க முடிவதில்லை. தினமும் காலை ட்ரா·பிக்கில் அலுவலகம். காப்புரிமை விற்பனை. மேலாளர்களிடம் இருந்து வசவு. மாலை டிவி என்று உருட்டுசட்டி வாழ்வு ரசிக்கவில்லை. சமயம் பார்த்து வில்லன் அழைப்பு விடுக்கிறார்.

  வில்லனின் வலையில் வீழும் நாயகனை, இல்லாளும், இஷ்ட மித்திர பந்துக்களும் எவ்வாறு மீட்கிறார்கள், உலகத்தை எவ்வாறு ரட்சிக்கிறார்கள் என்பது மீதி கதை.

  ஆரம்பத்தில் படத்தின் முக்கிய கதாபத்திரங்களை அசத்தலாக அறிமுகம் செய்கிறார்கள். டாகுமெண்டரி தயாரிப்பாளருக்கு பேட்டிக் கொடுப்பதாக படம் ஆரம்பிக்கிறது. தற்கால சாதனையாளர்கள் பேட்டி கொடுக்கும்போது காணப்படும் விவரிப்பு, முக அசைவுகள், நாணம் என்று விரியும்போதே, அவர்களின் சூப்பர் திறமைகளைக் காண்பிப்பது டக்கென்று அவர்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது.

  ரப்பர் பேண்ட் போல் வளையும் நாயகி வில்லனின் கோட்டைக்குள் சென்று நீட்டி, குறுகி, பந்தாகி, பலூனாகி, படகாகி இன்னும் பலவாகி தப்பிப்பது படத்தின் கிரீடக்கல். ரஜினி ஸ்டைலில் மக்களை பார்ப்பது கூட இயல்பாக கையாளப்பட்டிருக்கிறது. மொட்டை பாஸ் வில்லன் கோஷ்டியிடம் இருந்து தப்பித்து ஓடும் மகன் டாஷ் -- நிலம் முடிந்து கடலருகில் வந்து விடுகிறான். தொடர்ந்து தண்ணீரில் நடப்பது, அப்படியே திரும்பி நம்மை பார்த்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வது, காமெடி கலந்த உருக்கம். எனது மகனே அங்கு ஓடுவது போலவும், 'சீக்கிரம் ஓடுடா' என்று கத்தவும் சொல்லவைத்தது.

  படம் முழுக்கவே இந்த மாதிரி பல காட்சிகளால் ஒன்றவைத்துவிடுகிறார்கள். நடு-வயது நடுக்கங்கள் கொள்பவரைப் போன்ற ஹீரோ. குடும்பத் தலைவியின் தலைவலிகள். பள்ளிக்கூட பாலிடிக்ஸ். நவீன உலகின் சூப்பர் ஹீரோக்களான எய்ன்ஸ்டீன் அறிவியலாளர்கள். அதே சமயம் சாதாரணமாகப் படங்கள் சொல்லும் 'நீதி'யை படத்தின் மூலம் சொல்லவில்லை.

  'நீங்கள் அத்தனை பேரும் சமமே; உங்களுக்கே உங்களுக்கு உரிய திறமைகளை உலகுக்காக பயப்படாமல் வெளிக்கொணருங்கள்' என்பதுதான் இதுபோன்ற பல படங்களின் தார்மீக கருத்தாக இருக்கும். 'தி இன்க்ரெடிபிள்ஸ்' இங்கு விலகி நிற்கிறது. பத்தொடு பதினொன்றாக நீங்களும் இருப்பது அர்த்தமற்றது. ஆயிரத்தில் ஒருவனாக இருக்க முடிந்தால், அப்படித்தான் விலகி வாழவேண்டும். மற்ற 999 பேர்களுக்காக உங்களைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள்.

  எட்னா என்னும் ஆடை வடிவமைப்பாளர் பாத்திரமும் படத்தில் குறிப்பிடத்தக்கது. நவீன பேஷனுடன் சூப்பர் ஹீரோக்களுக்குத் தேவையான மாதிரி அழிக்க முடியாத ஆடைகளை வடிவமைக்கிறார். வருங்காலத்தை சொல்லும் தேர்ந்த அறிவியல் புனைசித்திரமாக படம் இங்கு ஆகிறது. மறையக் கூடிய உடைகள், எவ்வளவு தூரம் வேணுமானாலும் நீட்டிக்க, குறைத்துக் கொள்ள முடியும் சிக் உடைகள், நெருப்பு, நீர், எல்லாவற்றிலும் இருந்து காக்கும் ஆடைகள், அவற்றுக்கான சோதனைகள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

  படத்தின் குறைகள் என்று பெரிதாக எதுவும் எனக்குப் படவில்லை. என் குழந்தை பயந்து தூங்கிப் போனாள். ஏழெட்டு வயதைத் தாண்டியவர்களால் மட்டுமே படத்தின் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் ஜீரணிக்க முடியும் என்பதுதான் ஒரே நெகடிவ்.

  கண்ணைக் கவரும் அருவிகள், நெருப்புக் குளங்கள், அடுக்கு கோபுர நவீன நகரங்கள், மாமலை நிறைந்த அடர்ந்த காடுகள் என உறுத்தாத கிரா·பிக்ஸ். சட்டத்தை காக்கும்போது சிறிது பிசகினால், எங்காவது துளி சேதம் விளைவித்தால் பரவாயில்லையா; வித்தியாசமானவர்களைக் கூட தன்னம்பிக்கை இழக்க வைத்து சாதனை புரிய விடாமல் தடுக்க வேண்டுமா, என அவரவர் மனநிலைக்கேற்ப தற்காலத்திற்குப் பொருத்தமான சிந்தையைக் கிளறும் கேள்விகள் எழுப்புவதாலும் 'அசாதாரணமான' (Incredible) படம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |