நவம்பர் 24 2005
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : அந்நியமுகி
- சம்பத்
| Printable version | URL |

"அட முத்தம்மாவா, உள்ள வா! ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்று கதவை திறந்துக்கொண்டே கேட்டாள் அனிதா.

சுமார் ஐநூறு அபார்ட்மெண்டுகள் கொண்ட அந்த பெரிய அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில், அனிதாவை அனைவருக்கும் பிடிக்கும். இத்தனைக்கும் அவள் தன் கணவனோடு அங்கு குடிவந்து ஒரு வருடம்தான் ஆகிறது. அவர்களை பார்த்தால் ஒரு கல்லூரி மாணவன், மாணவி போல் தான் இருப்பார்கள். அதில் அனிதா மிக அழகும், அறிவும் நிறைந்தவளாக இருந்தாள். எல்லோரிடமும் கலகலவென அன்போடு பழகினாள்.

மேலும் யாருக்காவது ஒரு பிரச்சினையென்றால் அனிதாவிடம் சென்றால் போதும். மிகச்சரியான ஆலோசனை தருவாள். அதனாலே அவளை எல்லோரும் அட்வைஸ் அனிதா என்று செல்லமாக அழைத்தனர்.

இன்றும் அவளிடம் அட்வைஸ் கேட்கவே முத்தம்மாள் வந்திருந்தாள். முத்தம்மாளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். முத்தம்மாளின் கணவன் ஒரு சலவைத்தொழிலாளி. அதே அபார்ட்மெண்டிற்கு சலவை வண்டியுடன் தினமும் வருவான். முத்தம்மாளும் கூடவே ஒத்தாசை பண்ண வருவாள். கொஞ்ச நாளாகவே அவள் வாடிப்போயிருந்தாள். அவள் கணவனும் ஒழுங்காக நேரத்துக்கு சலவை வண்டியுடன் வருவதில்லை.

"என்ன முத்தம்மா, ஏன் சோகமா இருக்கே" என்று மீண்டும் அனிதா கேட்டாள்.

"என் புருஷனோட போக்கே ஒண்ணும் சரியில்லைம்மா. இப்போல்லாம் என்னை அடிக்கடி அடிக்கிறார், குப்பத்துல இருக்குற வயசு பொண்ணுங்களை பாத்தா கண்ணடிக்கிறார், பின்னாடியே சுத்துறார். மானமே போவுது. என்னா பண்றதுன்னு தெரியலை. அதான் உன் கிட்டே ஏதாவது ஐடியா கேட்கலாம்னு வந்தேம்மா"

"எப்பவுமே அடிக்கிறாரா?"

"பல சமயம் அடிக்கிறாரு. எப்பவாது மூடு வந்திச்சின்னா அப்ப மட்டும் இளிச்சிக்கிட்டே, பதுசு போல என்கிட்டே வருவாரு"

"அப்பவாது ஏன்யா இப்படியெல்லாம் நடந்துக்கிறேன்னு கேட்க வேண்டியது தானே?"

"கேட்டேன்மா. என்னவோ 'மல்டிபிலிட்டி பெர்சனல்'ன்னு புதுசா ஒரு காரணம் சொல்றாரு"

"மல்டிபில் பெர்சனாலிட்டியா? அந்நியன் படத்துல வருமே அந்த மாதிரியா?"

Anniyan Vikram"ஆங். ஆமாம்மா. பொண்ணுங்க பின்னாடி சுத்தறது அவரில்லையாம். அவருக்குள்ளேர்ந்து ஸ்டைலா, ராமோவோ ரெமோவோ, அப்படி ஒருத்தன் வந்திடறானாம். அவன் தான் அந்த மாதிரி பண்றானாம். அப்புறம் என்னை அடிக்கிறது, திட்டறதெல்லாம் அவரில்லையாம். அவருக்குள்ளேயிருந்து அந்நியன் மாதிரி ஒருத்தன் வந்திடறானாம். ஆனா, இந்த அந்நியனுக்கு, யாரவது அவனை தட்டிக்கேட்டா பிடிக்காதாம். நான் தான் ஏன்யா இப்படியெல்லாம் நடந்துக்கிறேன்னு கேட்கறேனில்லே, அதனால கோவம் வந்து அடிச்சிடறானாம். மத்தபடி என்கிட்டே இளிச்சிகிட்டே அன்பா வரும்போதுதான் அவர் ஒரிஜினலாம்"

"அட லூஸ¤! இதை நீ நம்பிட்டியாக்கும்"

"என்னம்மா பண்றது. என்னால நம்பவும் முடியல, நம்பாவுமிருக்க முடியலை"

"சரி. இந்த மல்டிபிள் பெர்சனாலிட்டியெல்லாம் எப்பத்தான் போகுமாம்?"

"அவரோட ஆசையெல்லாம் தீர்ந்தாத்தான் போகும்கிறாரு. அதை நினைச்சாதான் பயமாயிருக்கும்மா. அவர் பாட்டுக்கும் ஆசையை தீர்த்துக்கிறேன்னுட்டு, பொண்ணுங்ககிட்ட ஏடாகூடமா நடந்துடக்கூடாதேன்னு தான் நான் ஆண்டவனை வேண்டிகிட்டிருக்கேன். ஏம்மா இந்த மல்டிபிலிட்டி பெர்சனலை' போகவைக்க ஏதாவது வழி இருக்கான்னு நீதாம்மா சொல்லனும்" என்று முத்தம்மாள் அழுதாள்.

"ஒரு வழி இருக்கு. ஆனா அதை நீதான் தைரியமா செய்யனும். செய்வியா?"

"எந்த வழியானாலும் பரவாயில்லைம்மா. அவருக்குள்ள இருக்கிற அந்த இரண்டு மல்டிபிலிட்டி பெர்சனல் ஆளுங்க அவரைவிட்டு போனாப்போதும்மா"

முத்தம்மாளை அருகே அழைத்து அவள் காதில் கிசுகிசுவென அந்த வழியைச் சொன்னாள்.

அதற்கப்புறம் இரண்டு நாட்கள் முத்தம்மாவையும் அவள் கணவனையும் காணவில்லை. சலவை வண்டியும் வரவில்லை. அபார்ட்மெண்டில் அனைவரும் 'என்னாயிற்றோ' என்று கவலை பட்டனர். ஆள்விட்டு அனுப்பியதில், இருவருக்கும் உடல் நலமில்லை என்று பதில் வந்தது. ஆனால் அனிதா மட்டும் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவள் கொடுத்த ஐடியா வேலை செய்ய அட்லீஸ்டு இரண்டு நாளாவது ஆகும் என்று எதிர்ப்பார்த்திருந்தாள்.

மூன்றாம் நாள் அதிகாலை...

அனிதா குளித்து முடித்துவிட்டு பால்கனிக்கு வந்தாள். கீழே கண்ட காட்சி அவளுக்கு ஆனந்தமாக இருந்தது.

முத்தம்மாளின் கணவன் அதிகாலையிலே சலவை வண்டியை நேரத்திற்கு கொண்டு வந்துவிட்டான். ஒழுங்காக குளித்துவிட்டு, விபூதியணிந்து, சுத்தபத்தமாக காட்சியளித்தான். கூடவே முத்தம்மாளும் மலர்ந்த முகத்துடன் இருந்தாள். பரபரவென்று வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

முத்தம்மாள் அடிக்கடி அனிதாவின் பால்கனியையே பார்த்துக்கொண்டிருந்தாள். அனிதாவின் தலை தெரிந்ததும், தன் கணவனிடம் "இதோ வந்திடறேன்" என்று சொல்லிவிட்டு அனிதாவை நோக்கி மலர்ச்சியுடன் ஓடிவந்தாள். அனிதா அவளை மேலே வரச்சொல்லி சைகை காட்டினாள்.

"என்ன முத்தம்மா. நான் கொடுத்த ஐடியா வேலை செய்துச்சா?" என்று அனிதா கேட்டாள்.

Ra Ra"நீங்க கொடுக்கிற ஐடியா வேலை செய்யாம இருக்குமாம்மா? நல்ல சேஞ்சிச்சும்மா. நீங்க சொன்ன மாதிரியே ரெண்டு நாளா அவர் என்னை அடிக்க வரும் போதெல்லாம் 'லக்க லக்க லக்கன்னு' சந்திரமுகி கணக்கா கண்ணை உருட்டி கத்திக்கினே அவரை நாலு சாத்து சாத்தினேன். உன்னை விட்டு எப்போ அந்த இரண்டு மல்டிபிலிட்டி பெர்சனல் ஆளுங்க போவாங்களோ அப்பத்தான் இந்த சந்திரமுகியும் போவான்னு சொல்லி, நாலஞ்சி அரை விட்டேன். அவ்வளவுதாம்மா. இரண்டே நாள்ல அவரு வழிக்கு வந்துட்டாரு. என்ன, அவரை அடிக்கும்போதுதான் மனசுக்கு என்னவோ பண்ணிச்சு. இருந்தாலும் ரொம்ப சூப்பரான வழி சொன்னேம்மா" என்று முத்தம்மாள் சிரித்தாள்.

"சூப்பரான வழின்னு சொல்லாதே. சூப்பர் ஸ்டாரான வழின்னு சொல்லு" என்று அனிதாவும் சிரித்தாள்.

oooOooo
சம்பத் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |