நவம்பர் 24 2005
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஜன்னல் பார்வைகள் : போலீஸ் அதிகாரிகள் மீதும் ஒரு கண்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| Printable version | URL |

Sharukh with Aamir Khanபோர்ச்சுக்கல் நாட்டில் இருந்து 13 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு அபு சலீம், மற்றும் அவரது காதலி மோனிகா பேடியை இந்திய சி.பி.ஜ. கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்தது தான் தாமதம். இந்திய பத்திரிக்கைகள் முதல் டி.வி சேனல்கள் வரை வோல்கார் புகரை மறந்து விட்டு இவர்களை பிடித்துக் கொண்டன. அபுல் சலீம் எப்படி பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் கூட்டாளி ஆனான், மும்பையில் எப்படி குண்டு வைத்தான், மனைவியை கைகழுவி விட்டு காதலி மோனிகா பேடிக்கு எப்படி காதல் கடிதம் எழுதினான் என்று செய்திகனை சுடச் சுடச் தந்து கொண்டு இருக்கின்றன. இவை ஒரு புறம் நடந்தாலும் மும்பை திரையுலக நட்சத்திரங்கள் பயந்து போய் இருக்கிறார்களாம். இப்போதைய நிலவரப்படி அபு சலீம் எந்த நடிகரோடும் தனக்கு தொடர்பு என்று சி.பி.ஜ. அதிகாரிகளுடன் சொன்னால் போதும் மறு பேச்சே இல்லாமல் கைது தான். இதனால் எங்கே தங்களது பெயரை அபு சலீம் உளறி விடுவானோ என சல்மான்கான் முதல் சாருகான் வரை பயந்து போய் உள்ளனராம். இந்த விவாதம் ஒரு புறம் நடக்க மும்பை முன்னாள் போலீஸ் கமி~னர் இந்த கைது பற்றி கருத்து சொல்லும் பொழுது இந்தப் பயங்கரவாதிகளிடம் பண, படை பலம் இருக்கிறது. நமது போலீஸ்காரர்கள் நாணயத்துக்கு பெயர் பெற்றவர்கள் அல்ல. ஆகவே அபுசலீம், மோனிகா பேடி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. இவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க வேண்டும். இவர்களை காவல் காக்கும் போலீஸ் அதிகாரிகள் மீதும் ஒரு கண் வைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதே போல இந்த பயங்கரவாதிகளுக்கு மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி விசாரிக்க கூடாது, அப்படி கேட்கக் கூடாது என்று கிளம்பக் கூடும் அவர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.  


தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து விட்ட பெருமை அண்ணாவைச் சேரும். அதன் பரிணாம வளர்ச்சியாக தற்போதைய அ.தி.மு.க அரசு மதுக்கடைகளை 2003ம் ஆண்டு முதல் டாஸ்மாக் மூலம் நடத்தி கொள்ளை லாபம் பார்த்து வருகிறது. முதலில் பிராந்தி, விஸ்கி, ஜின்,மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்த டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது குடி மகன்களை குஷி படுத்த பல புதிய மது வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  தனி ருசியைக் கொண்ட ஸ்காட்ச் விஸ்கி, ஓல்டு அட்மிரல் போன்ற சரக்குகளை டாஸ்மாக் அறிமுகப் படுத்தியது. குடித்தவுடன் போதை ஏறி பின் அதே வேகத்தில் போதை இறங்கும் சரக்குகளை குடித்தே பழக்கப்பட்ட தமிழக குடிமகன்கள் இனி வெளிநாட்டு மது வகைகளான ஷாம்பெய்ன், ஸ்காட்ச் விஸ்கியை குடித்து விட்டு மகிழ்ச்சியாக(!) இருப்பதற்கு டாஸ்மாக் அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. அதிலும் ஸிக்னேச்சர் என்ற ஸ்காட்ச் விஸ்கியை குடித்தால் மிக மெதுவாக போதை ஏறி பின் மிக மெதுவாகத் தான் போதை இறங்குமாம். இது தெரியாமல் நமது குடிமகன்கள் அந்தச் சரக்குகளை மொத்தமாக குடித்துவிட்டு இரண்டு நாள்களுக்கு கண் திறக்காமலேயே போதையில் முழ்கிப் போய் விடுகிறார்கள் என்று டாஸ்மாக்கில் வேலைபார்க்கும் பட்டதாரிகள் சொல்லி கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றனர். இதே டாஸ்மாக் ஒரு தொலைபேசி எண்ணை வெளியிட்டு தங்கள் குறைகளை குடிமகன்கள் சொல்லலாம் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வந்தது தான் தாமதம். பீர் பாட்டிலில் கூலிங் லேசாக குறைவாக இருந்தாலும் இந்த எண்ணிற்கு போன் கால்கள் பறக்கிறதாம். ஒரு குடிமகன் போன் செய்து தான் ஒரே கடையில் 2 ஆண்டுகளாக குடித்து வருவதாகவும், தன் கையில் பணம் இல்லாத பொழுது கடை ஊழியர் கடனுக்கு மது கொடுக்க மறுக்கிறார், அதனால் அவரை கண்டிக்க வேண்டும் என்றும் புகார்கள் குவிகிறதாம். அதே சமயம் மது விற்பனையாளர்கள் லேசாக குடிமகன்களை அதட்டினாலும் உடனே போன் பறக்கிறதாம். அதனை நம்பிய அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து விடுகின்றனராம். மொத்தத்தில் தமிழக குடிமகன்கள் போல் கொடுத்து வைத்தவர்கள் யாரும் இல்லை என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார் ஒரு டாஸ்மாக் பக்தர்.


அவ்வப்பொழுது நமது எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது கூட தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுப்பார்கள். 1993ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த பொழுது ஒவ்வொரு எம்.பிக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பின் 1998ம் ஆண்டு இந்த நிதி இரண்டு கோடியாக அதிகரிக்கப் பட்டது. இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்று சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியது. அதில் லோக்சபா எம்.பிக்கள் 25 பேர் தான் தங்களின் நிதியை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர். ராஜ்யசபை எம.பி.க்கள் இந்த நிதி இருப்பதையே மறந்துவிட்டனர். அதிலும் நான்கில் ஒரு பங்கினர் மட்டும் 20 சதவீத நிதியை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்களாம். கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் வரை எம்.பிக்களின் ஒட்டு மொத்த தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 77 சதவீதம் நிதி தான் பயன்படுத்தப் பட்டு இருக்கிறதாம். ராஜ்நாத் சிங், கேசுபாய் பட்டேல், ஜனா கிருஷ்ணமூர்த்தி, பருக் அப்துல்லா, லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்கள் மேல்சபை உறுப்பினர்களாக இருந்த பொழுது இந்த நிதியை நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை என்று அந்த அறிக்கை சொல்கிறது. பெரும்பாலான எம்.பி.க்கள் இந்த நிதியை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் இரா.செழியன் போன்ற சிந்தனையாளர்கள் எம்.பி.களுக்கான நிதியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிதி தான் ஊழலை மேம்படுத்துகிறது என்பது இவரது வாதம்.

Elephant Relaxing in mudhumalai forestமூன்றாவது ஆண்டாக முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் யானைகளின் சிறப்பு நல வாழ்வு முகாமில் தொடங்கியுள்ளது. 40 நாட்கள் நடக்கும் இம்முகாமில் மொத்தம் 72 யானைகள் இதில் கலந்து கொண்டுள்ளன என அறிவித்துள்ளது தமிழக அரசு. ஒரு யானையை கவனிக்க 2 பேர். ஆற்று நீரில் ஒவ்வொரு யானனயும் மூன்று வேளையும் சுகமாக குளிக்க வசதி. ஒரு யானனக்கு செலவான தொகை அறுபதாயிரம் ரூபாய். யானனகளுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது. சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது, தூங்குவது தான் வேலை. ஊட்டச்சத்துமிக்க உணவுகள், தேவையான உணவு, நல்ல சூழ்நிலை, நல்ல ஓய்வு என்று யானைகளுக்கு ராஜ மரியாதை. நாகூர் தர்கா, கடையநல்லூர் தர்கா யானைகளும் போய் உள்ளன என்று தமிழ்நாடு இந்து அறநிலைத் துறை ஆட்சித்துறை ஆணையாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். யானைகளின் இந்த முகாம் அடுத்த ஆண்டு நடக்குமா என்பது சந்தேகமானது தான். ஏன் என்றால் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் ஒரு வேளை அ.தி.முக. ஆட்சியை பிடிக்கவில்லை என்றால் அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சி இந்த முகாமை நடத்துமா என்பது கேள்விக் குறிதான். அப்படி ஒரு வேலை இந்த முகாம் நடத்தப்பட வில்லை என்றால் யானைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு முந்தைய அரசு அளித்த சலுகைகளை திருப்பித் தா என்று போராட்டங்கள் நடத்தினால் எப்படி இருக்கும். நினைத்தாலே சிரிப்பு தான் வருகிறது.

oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   ஜன்னல் பார்வைகள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |