நவம்பர் 25 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
நையாண்டி
சமையல்
அறிவிப்பு
சிறுவர் பகுதி
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : இருபத்திரண்டு காரட் ஜொலிஜொலிப்பு
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 63

  இந்தக் காலத்தில், போர் வீரர்கள் தங்களின் காலணிகளையும், இடுப்புப் பட்டைகளில் பொருத்திய உலோகப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து - பாலிஷ் செய்து - பளபளப்பாகவும், கம்பீரமாகவும் தெரிகிறார்கள்.

  ஆனால், இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை - அந்தக் காலத்தில், பாண்டியனின் குதிரைப் படையிலிருந்த குதிரைகள்கூட, இப்படிப் பளபளப்பாய்த் திரிந்துகொண்டிருந்தன என்று இந்தப் புலவர் சொல்கிறார் - சாதாரணப் பளபளப்பு இல்லை, தங்க முலாம் பூசிய இருபத்திரண்டு காரட் ஜொலிஜொலிப்பு !

  அதென்ன புதுக்கதை ? போர் செய்யும் குதிரைக்கு ஏது தங்க ஜொலிஜொலிப்பு ? செய்கூலி, சேதாரம் கருதி அந்தக் குதிரைகளுக்குத் தங்க நகை செய்து கொடுத்தது யார் ?

  இதையெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டுமானால், நாம் இந்தப் புலவரோடு, பாண்டியனின் போர்க் களத்துக்குச் செல்லவேண்டும்.

  பாண்டியனுக்கும், அவனுடைய பகை மன்னர்களுக்கும் இடையே கடுமையான போர் மூண்டிருக்கிறது - ஒழுங்கான வரிசையில் நிற்கும் பாண்டியனின் குதிரைப் படை, ஆக்ரோஷமாய் முன்னே பாய்ந்து சென்று, எதிரே யானையின்மீது அமர்ந்திருக்கும் எதிரி மன்னர்களைத் தாக்குகிறது.

  அப்போதுதான், நம் புலவர் அந்த ஆச்சரியமான காட்சியைச் சுட்டிக்காண்பிக்கிறார், 'அதோ, பாண்டியன் படையிலிருக்கும் குதிரைகளின் கால்களைப் பாருங்கள்., தங்கம்போல் ஜொலிஜொலிக்கிறது !'

  அட, ஆமாம், குதிரையின் குளம்பில் யாரோ தங்கத்தை உரைத்துப் பூசியதுபோல ஜொலிஜொலிக்கிறது - அது எப்படி ?

  'பாண்டியனின் வீரப் படை செய்த மாயம் அது.', என்கிறார் புலவர், 'இந்தக் குதிரைப் படை, எதிரில் நின்ற யானைப் படையின்மீது மோதியது, அந்தத் தாக்குதலால், யானையின் கழுத்தில் கட்டியிருந்த 'புரைசை' (அல்லது 'புரோசை') என்ற கயிறு அறுந்து விழுந்துவிட்டது., அதே நேரத்தில், யானையின்மீது உட்கார்ந்திருந்த பகை அரசர்களும் தடுமாறிக் கீழே விழுந்தார்கள்.'

  'அப்புறம் ?'

  'அப்புறமென்ன ? பாண்டியனின் குதிரைகள், கீழே வீழ்ந்த அந்தப் பகை மன்னர்களின் தலையிலிருந்த கிரீடங்களை உதைத்து விளையாடத்துவங்கிவிட்டன.', என்று சிரிக்கிறார் புலவர், 'இப்படி நாள்முழுதும் எதிரி மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உதைத்துக்கொண்டிருப்பதால்தான், அந்தக் குதிரைகளின் குளம்பில் தங்கம் படிந்து ஜொலிஜொலிக்கிறது !'


  நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
  புரைசை அறநிமிர்ந்து பொங்கா அரசர்தம்
  முன்முன்னா வீழ்ந்த முடிகள் உதைத்தமாப்
  பொன்உரைகல் போன்ற குளம்பு.

  (நிரை - வரிசை
  புரைசை - புரோசை - யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு
  அற - அறுந்து விழ
  பொங்கா - பொங்கி
  முடி - கிரீடம்
  மா - குதிரை)  பாடல் 64

  பாண்டியனின் போர்க்களத்தில் நாம் காணும் அதிசயக் காட்சிகளுக்குக் கணக்கே இல்லை.

  சற்றுமுன், தங்க முலாம் பூசிய குதிரைக் குளம்புகளைப் பார்த்தோம், இப்போது, கவிதை எழுதும் யானைகளைப் பார்க்கிறோம் !

  யானைகள் கவிதை எழுதுமா ? அதுவும், போர்க்களத்தில் ? சந்தேகத்துடன் உன்னித்துப் பார்க்கிறோம் -

  நாம் கேள்விப்பட்டது உண்மைதான் - பாண்டியன் படையைச் சேர்ந்த யானைகள் உற்சாகமாய் ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றன - யானைகள், எதிரிகளின் மார்புகளைக் குத்திக் கிழிப்பதைதான், புலவர் இப்படி நயமாய்க் குறிப்பிடுகிறார்.

  அந்த யானைகள், தங்களின் தந்தங்களையே எழுத்தாணியாய்க் கொண்டு, வீரம் மிகுந்த எதிரி நாட்டு மன்னர்களின் அச்சமூட்டும் மார்பை ஓலையாய்க் கொண்டு, 'செல்வம் நிறைந்த இந்த உலகம்முழுதும், எங்கள் மன்னன் பாண்டியனுக்குச் சொந்தம்.', என்று எழுதுகின்றன.


  மருப்புஊசி யாக மறங்கனல்வேல் மன்னர்
  உருத்தகு மார்பு ஓலையாகத் திருத்தக்க
  வையகம் எல்லாம் எமதுஎன்று எழுதுமே
  மொய்யிலைவேல் மாறன் களிறு.

  (மருப்பு - கொம்பு / தந்தம்
  மறம் - வீரம்
  உரு - பயம்
  உருத்தகு - பயம்கொள்ளத்தகுந்த
  திரு - செல்வம்
  திருத்தக்க - செல்வம் நிறைந்த
  மொய்யிலை - நெருங்கிய / செறிந்த இலை)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |