டிசம்பர் 01 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : பாட்டுபாடவா ?
- ஷைலஜா [shylaja01@yahoo.com]
| Printable version | URL |

சவிதா  ஆறுமாதம் அமெரிக்காபோய்விட்டு வந்தாளும் வந்தாள் வந்ததுமுதல் வாயைத் திறந்தால் "அமெரிக்கால நம்ம மக்கள் எல்லாரும் எப்படி இருக்காங்க தெரியுமா. ஒரு பண்டிகைன்னா கூட்றாங்க, வாராவாரம் கோயில் போறாங்க, கார்ல போனா தமிழ் பாட்டுதான் சிடில போட்றாங்க, தமிழ்நாட்டு அரசியல்தான் பேசறாங்க, எல்லாத்தியும் விடுங்க  குழந்தைகளுக்கு  பாட்டு டான்ஸ் ஸ்லோகம்னு பலமைல் கார்ல அழைச்சிட்டு போயி சொல்லிக் கொடுக்கிறாங்க...நாங்க போன வீட்டுல ஒரு நாலுவயசுக் குழந்தை அட்சரம் தப்பாம விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்லித்து.அசந்தே போயிட்டேன்.." என்றுதான் பேசுகிறாள்

"நம்ம ·ப்ளாட்டில் இருக்கிற குட்டீஸ¤க்கு பஜன் க்ளாஸ் நடத்தலாம்ணு திட்டம் . எல்லாம் டீவில போகோ பாக்றதுங்க இல்லேன்னா கார்ட்டூன்.  இதுங்களை நாமதான் வழிக்குக் கொண்டுவரச் செய்யணும் எல்லாரையும் ஒண்ணு சேர்த்து வாரத்துல ஒருநாள் பஜனை வகுப்பு எடுக்கலாம்னு ஐடியா. என்கூட சித்ரா ரம்யா விஜி அருணா  ப்ரபா மேகா எல்லாரும் அவங்களோட குழந்தைகளைக் கூட்டிவந்து பஜனைவகுப்புல சேர்ந்துக்கறாங்க..முதல்ல என் வாலுங்க இரண்டுத்தியும் பஜனை வகுப்புக்குவந்து அடக்க நினைக்கிறேன்.."

சவிதா தன் தோழிகளின் வாண்டுகளோடு அன்று பஜனைக்ளாஸின் முதல் நாளுக்கு என்னையும் அழைத்திருந்தாள்.

வழக்கமாய் ஜீன்ஸிலும் சல்வாரிலும் இருக்கும் எல்லாரும் சேலைகட்டும் பெண்களாய் மாறிய அரியகாட்சியை ஆச்சரியமாய் பார்த்த சவிதாவின் மாமியார்," இதுக்காகவே தினம் பஜனை நடத்தலாம்டியம்மா" என்றார்.

"என்ன இனிமே வாராவாரம் பஜனை க்ளாஸ் சுண்டல்னு ·ப்ளாட் லேடீஸ் எல்லாம் புடவைல்லாம் கட்டிட்டு அமக்களம் பண்ணபோறீங்க போல்ருக்கு? நல்ல டிசிஷன் இது..ஆல் த பெஸ்ட் மை டியர் யங் லேடீஸ்!"

சித்ராவின் கணவர் பையனை கொண்டுவிட்டு வாழ்த்தியபோது,"நேரமாச்சு கிளம்புங்க..ஆண்களுக்கு அனுமதி இல்லை" என்று சித்ரா அவரை வாயால் கெஞ்சி விழியால் விரட்டி அனுப்பினாள்.

பஜனைப்பாடல்கள் எல்லாம் ஜெராக்ஸ்ப்ரதி எடுத்து  வந்தவர்கள் கையில் வழங்கப்பட்டது.

ரம்யாவின் ஆறுவயதுபையன் வருண் அதில் கப்பல் செய்ய ஆரம்பித்தான். வந்திருந்த பத்து குழந்தைகளும் அதைபார்த்து தங்கள் கையிலிருந்த பேப்பரை மடிக்க ஆரம்பிக்க சவிதா ஒருசத்தம் போடவும் கப்சிப் ஆனார்கள்

"சவிதா...இது உன் சீமந்தப்புடவையா? எட்டு வருஷத்துக்கப்றோம் இப்பதான் திரும்ப எடுத்துக்கட்டிக்கறேன்னு நினைக்கறேன் சரியா?"

மாமியாரின் கேள்வியில் தொனித்த கிண்டலை அலட்சியம் செய்த சவிதா அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்த குழந்தைகளை அடக்க என்ன வழி என்று
யோசித்தாள். அதற்குள் அருணா, ஸ்ருதிபெட்டியுடன் உட்கார்ந்து அதில் ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கவும் குழந்தைகள் அவளைச் சூழ்ந்து கொண்டன.

"அருணா..பாட்டு கத்துண்டியா என்ன? யார்ட்ட, டி கேபி கிட்டயா? எம் எஸ்கிட்டயா? மருகேலரா  ஓ ராகவா  ..சித்த பாடேன்...?"

"என்ன ஜாக்கெட் இதுடிம்மா ரம்யா? முதுகெல்லாம் காத்தாட இருக்கே கோடீஸ்வரில குஷ்பூபோட்டுக்றாப்ல?"

"சுண்டலோட துளிப் போல பாயசமும் நைவேத்தியத்துக்கு செஞ்சா என்ன. தயிர்சாதமும் கலந்துட்டா ராத்திரி கடை முடிச்சிட்லாம்.."

சவிதாவின் மாமியார் பாரதிராஜாவின் படம் ஒன்றினை (அலைகள் ஓய்வதில்லை) நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்

"லெட்ஸ்  ஸ்டார்ட்யா"

சித்ரா சொல்லவும் சவிதா ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தைகளிடம்,"எல்லாரும் முதல்ல கண்ணை மூடிட்டு  கைகூப்பி 'ஓம்'னு நாங்க சொல்றதை மூணுதடவை சொல்லணும் தெரிஞ்சுதா?" என்றாள்

குழந்தைகள் பலமாகத் தலையாட்டின.

"அதான் குழந்தைகள் என்கிறது..பவ்யமா உக்காந்துண்டு சமத்தா இருக்குகள் பாரேன்...அதிலும் என் பேரன் அபிஜித்து இப்படி அடங்கி ஒரு இடத்துல உக்காந்து நான்பார்த்ததே இல்ல.இந்தக்காணக் கிடைக்காத காட்சியைப்பார்க்கக் கொடுத்துவைக்காம அவன் தாத்தா  போய்ச்சேர்ந்துட்டாஆஆஆஆஆரேஏஏ"

"அடடா...கொஞ்சம் சும்மா இருங்களேன் ப்ளீஸ்?"

சவிதா பொறுமை இழந்தாள்

"கூல் சவிதா...பெருசுங்கன்னா அப்படித்தான்.நாமதான் கண்டுக்காம போகணும்"

"ஆமாடி இந்தப் பெருசுங்களுக்கும் சிறுசுங்களுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டே நம்ம வாழ்க்கை போய்டும்போல்ருக்கு...என்னவோ போ..சரி சரி..அருணா  ஸ்ருதி
சரியா இருக்கு..அப்டியே இருக்கட்டும்...முதல் பாட்டு..கணேசசரணம் சரணம்கணேசா ஆரம்பிக்கலமா?'


ஓம் ஓம் ஓம்ம்ம்ம்

குழந்தைகள்  மூன்றுதடவைக்கு மேலும் சொல்லிக் கொண்டே இருக்கவும் 'போதும்' என்றாள் சவிதா

"பட் ஐ லைக் இட் "என்றது வர்ஷாகுட்டி

"அடுத்தபாட்டு சொல்லணும் வர்ஷா"

"நோ ஆண்டி ஓம் தான் நான் சொல்வேன்..ஓஓஓம்ம்ம்ம்ம்ம்"

வர்ஷாவோடு மற்றவால்களும் ஓம் என்றே சொல்லிகொண்டிருந்தன

'சரிசரி அதுவும் புண்ணியம்தானே ப்ரணவமந்திரம்" கன்னத்தில் போட்டுக்கொண்ட சவிதாவின் மாமியாரும் தனது கரகரத்த குரலில் குழந்தைகளோடு சொல்லவும்
சவிதா முழித்தாள்.

ஒருவழியாக வர்ஷா நிறுத்திவிட்டு,'எனக்கு ஒன்பாத்ரூம் போகணும்' என்றது. இதரவால்களும் "எனக்கு எனக்கும் எனக்கும்" என்று பின் பாட்டுபாடின

"இந்தக் கூச்சலில் எனக்கு   ஸ் ருதி  சேரவே இல்லை.சே..எல்லாம் மைக்கை முழுங்கினமாதிரின்னா கத்தற்து?" அருணா   பெட்டியை மூடினாள்

"எலக்ட் ரானிக் ஸ் ருதிபெட்டி என்கிட்ட இருக்கு சொல்லிருந்தா கொண்டுவந்திருப்பேன் "ரம்யா பெருமையாக சொல்லிக் கொண்டாள்

அருணா அதை ரசிக்கவில்லை .

வர்ஷாகுட்டியுடன் இதர வால்களும் வந்து அமர்ந்தன.

"கணேச  சரணம்... சொல்லுங்க.."

கணேசசரணம்

ஒழுங்காய் சொல்ல ஆரம்பித்தன

சரணம் கணேசா"

சரணம் கணேசா

"கணேச சரணம்..."

"சமத்து சக்கரைகட்டி.."  
           
சவிதாவின் மாமியார் தன் மூணுவயது பேத்தி திவ்யாவைக் கொஞ்சவும் அது வீறிட்டது

பாட்டி என் கன்னத்துல கிள்ளிட்டா

"கிள்ளலைடிம்மா ஆசையாக் கொஞ்சினேன்.."

பாட்டி என்னக் கிள்ளீட்டாஆஆஆ

"சரிசரி....பாடு திவ்யா.சரணம் கணேசா.."

"மாட்டேன் எனக்கு வலிக்கறது... உவ்வா வந்துடுத்து கன்னத்துல
மருந்துபோட்டுக்கபோறேன்..."

திவ்யா எழுந்து ரூமுக்குப்போகவும் இரண்டுமூன்று வாண்டுகள் அவளைபின்தொடர்ந்தன

'அம்மா...போரடிக்கற்து திரும்பத்திரும்ப ஒரே லைன் சொல்றீங்க...."

என்ற தன்மகனை கெஞ்சலாய்ப்பார்த்த சவிதா,'பஜன் சாங்க்டா கண்ணா..அப்படித்தான் இருக்கும்...நீதானே எல்லார்க்கும் பெரியவன் 7வயசாறது நீயே இப்படி பண்ணினா மத்தகுழந்தைகள் என்னடா செய்யும்? போய்சமத்தா உக்காந்து பாடுமா கண்ணா?"

அதற்குள் திவ்யா ரூமில் எதையோ தள்ளிவிட்ட சத்தம் கேட்டது.

மருந்து டப்பாவை கீழேதள்ளி ஏதோ ஒரு ஆயின்மெண்ட் ட்யூபின் மீது மீது  யாரோ  கால்வைத்து அத்தனையையும் 'கொயக்' என்று பிதுக்கித், தரையில் காலால் தேய்துவிட்டிருந்தார்கள்.

"திவ்யா சமத்தா இருக்கணும்  என்ன?"

"சரிம்மா.."

ஹாலுக்கு வந்த சவிதா," ஸ்ருதிபெட்டி இல்லென்னா என்ன எங்க மாமா மார்கழிமாச பஜனைக்கு தெருல பஜனைபாடிஅடிச்சிட்டுப் போகும்  வெண்கலத்தாளம் இருக்கே அதுல சிங்க்சக்குனு போடலாம் ..." என அதைத்தேடிக் கொண்டுவந்தாள்.

"ஹையா! சிங்க்சக்க் தாளம்   நான் போட்றேன்மா?"

அபிஜித் கூவினான்

"அபி  பிஹேவ் யுவர் செல்·ப்"

"அம்மா ப்ளீஸ்?"

"ஆண்ட்டி எனக்குத்தாங்க அதுல நான் தாளம்  நல்லா போடுவேன்"

"யாருக்கும் இல்லை இது பெரியவங்க வச்சிகறது சும்மா உட்காருங்க எல்லாரும்..."

"அப்டீன்னா நான் ரூம்ல போயி கேம்பாய் வீடியோகேம் விளையாட்றேன்.." அபிஜித் விர்ரென நகர்ந்தான்

"கோபத்துல அப்படியே அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாம பொறந்திருக்காண்டியம்மா..இந்தகாலக்குழந்தைகளுக்கு யார்ட்டயும் லவலேசம் பயமே இல்ல.."

மாமியாரின் புலம்பலில் சவிதா எரிச்சலுடன் கத்தினாள்

"டேய் அப்பீஜ்ஜ்ஜ்ஜித்த்?"

அவன் விளையாடப்போகவும்  கூடவே அர்ஜுன், தன்வின் இருவரும் கழண்டுகொண்டனர்

"என்னடி இது பசங்க இப்படிபடுத்தறாங்க?"

"சவிதா...நேரமாற்தேடிம்மா... சுண்டலை நைவேத்யத்துக்கு கொண்டுவரட்டும்மா?'

"முதல்நாள் பஜனை, நாலுபாட்டாவது பாடி அப்றோம் எல்லாம் செய்யலாம்..."

சவிதாவோடு நாங்கள் எல்லாரும் மீதக் குழந்தைகளை  ஒருமாதிரி தாஜா செய்து பாட உட்காரவைத்தோம்
 

"கணேச சரணம்......ரிபீட் இட் மை டியர் சில்ட் ரன்.. ரிபீட்.." சவிதா இப்படி சொன்னதும்

" ரிபீட்டூ...தேவுடா தேவுடா இந்தபக்கம் ச்சூடுடா...."

வர்ஷா திடீரென சந்திரமுகி திரைப்பாடல் நினைவில் சந்தோஷமுகியானது.

'ஷ்...அதெல்லாம் பஜனைல சேர்த்தி இல்ல...சரி , வேறபாட்டு அம்பா சக்தி ஆதரிதாயே பாட்லாமா?"

"வேண்டாம் ஆண்ட்டீ..."

"சலங்கைகட்டி  ஓடி ஓடிவாகண்ணா சொல்லலாமா? வீரமாருதி கம்பீரமாருதி சொல்லி முடிச்சிடலாமா அட்லீஸ்ட்?" சவிதா அழுதுவிடுவாள் போலிருந்தது.

"அதெல்லாம் இல்ல.  அந்நியன் படத்துலேந்து ரண்டக்க ரண்டக்க அண்டங்காக்கா எல்லா கொண்டைக்காரி ரண்டக்கரண்டக்கா இல்லேனா சுட்டும்விழிசுடரே பாட்டு கஜனிலேந்து பாட்லாம்.."

ஒரு வாண்டு பாடவே ஆரம்பித்துவிட, மற்றவைகள் குதூகலமாய் எழுந்து இடுப்பை அசைத்து ஆட ஆரம்பிக்க.. பஜனைவகுப்பில் ' ரண்டக்க ரண்டக்க'வும்,' சுட்டும்விழிசுடரே'வும் எட்டுக்கட்டையில் ஸ்ருதிகூடி பாடப்பட்டன.

சவிதா தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டாள்.

oooOooo
ஷைலஜா அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |