டிசம்பர் 08 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : குளிச்சா குற்றாலம் - இறுதி பாகம்
- திருமலை ராஜன் [strajan123@yahoo.com]
| Printable version | URL |

(சென்ற இதழ் தொடர்ச்சி)

குற்றாலம் நகரில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருப்பது  ஐந்தருவி. மெயின் ·பால்ஸில் இருந்து ஒரு ஐந்து கி மீ தூரத்தில் அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. ஒரு இத்தினிக்கூண்டு ஏரியில் படகு சவாரி விடுகிறேன் பேர்வழி என்று நாலைந்து போட்டுகளை வைத்துப் பம்மாத்துப் பண்ணீக் கொண்டிருந்தார்கள். இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். சீசன் இல்லாத பொழுது மூன்று அருவிகள் ஒளிந்து கொண்டு இரண்டருவியாக விழுந்து கொண்டிருந்தன. அடர்ந்து வளர்ந்து தன்னுள்ளே பல மர்மங்களை ஒளித்து வைத்துக் கொண்டு அருவியைக் கொட்டுகிறதோ என்று பிரமிக்க வைக்கிறது அந்த அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பழக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பழங்கள் கண்களைக் கவருகின்றன. ஆண்களும் பெண்களும் மீண்டும் வழிய வழிய எண்ணெய் தடவிக் கொண்டிருக்கின்றனர். காமன்சென்ஸ் என்ற ஒரு விஷயம் அருவியில் அடித்துக் கொண்டு போய் விட்டது போலும்.

இந்த அருவிக்குப் போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் மிக அழகிய இரு சின்ன அருவிகள் கைக்கு அடக்கமாக, அருவி நிறைந்து விழும் இடத்தில் ஒரு அற்புதமான தடாகத்துடன் இருக்கின்றன. மிகவும் சுத்தமாக அந்த அருவிகள் பராமரிக்கப் படுகின்றன. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே
உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும். வி ஐ பிக் கள் என்பவர்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள், மந்திரிப் பிரதானிகள், அவர்கள் சொந்தங்கள், எம் பி, எம் எல் ஏக்கள், ஆலை அதிபர்கள் போன்ற புதிய மனுதர்மத்தின் உயர்தட்டு மக்களுக்காக மட்டுமே அரசாங்கம் தனியாக ஒரு அருவியை ஒதுக்கி வைத்துள்ளது. அரசாங்கம் பின்பற்றும் இந்த சமூக ஏற்றதாழ்வைக் கேட்பார் இல்லை. சாமானியர்கள் அந்த ஊர்க் காரர்களும் கூட அருகில் நெருங்க முடியாது. ஐந்தருவியில் குளிக்கவும் எகக் கூட்டம் வரிசையில் நின்றது.  இங்கும் ஷாம்புக்கள், சோப்புக்கட்டிகள், எண்ணெய்கள். இந்த அருவி விழும் இடம் ஒரு பள்ளத்தில் இருக்கிறது. படிகளில் இறங்கிச் செல்ல வேண்டும்.

இந்த அருவிகளின் இடிபாடுகளின் நடுவே குளிக்க விருப்பமில்லாதவர்கள், கொஞ்சம் மலையேறிச் செல்ல உடம்பில் வலு இருந்தால், மலையின் மீது ஏறிச் சென்றால் காடுகளின் நடுவே இருக்கும் இரு அருவிகளை அடையலாம், அதில் முதலில் வருவது செண்பகாதேவி அருவி. இந்த அருவிகளில் குளிப்பது சற்று ஆபத்தானது. பாதுகாப்பு வளைவுகள் ஏதும் இல்லாத தடாகங்கள் உள்ள அருவிகள். அருவி நீர் நேரே ஒரு தடாகத்தில் விழுந்து அங்கிருந்து நதியாக கீழே பாய்கிறது. தடாகத்திலும் நீந்திக் குளிக்கலாம். சற்று தவறினாலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடும் அபாயம் நிறைந்த அருவிகள். இருந்தாலும் மலையேறி அந்த அருவிகளில் குளிப்பது ஒரு சாகசம்தான். கூட்டமும் அதிகம் இருக்காது. கீழேயுள்ள அருவிகளில் உள்ள
தொல்லைகள் எல்லாம் இல்லாமல் ஏகாந்தமாகக் குளிக்கலாம். அவசியம் தவற விடக்கூடாத அருவிகள்.

குற்றாலத்திலேயே பல தங்கும் விடுதிகள் உள்ளன. கூடுமான வரை அங்கு தங்கி அனுபவிப்பதே சிறப்பானது. இல்லாவிடில் திருநெல்வேலியிலோ அல்லது தென்காசியிலோ தங்கிக் கொண்டு போய் வரலாம். திருநெல்வேல்யில் பெரிய நல்ல விடுதிகள் பல உள்ளன. மதுரையில் இருந்து 4 மணி நேரப் பயணத்திலும், திருநெல்வேலியில் இருந்து 1 மணி நேரப் பயணத்திலும் அமைந்துள்ளது. செங்கோட்டை வழியாகப் போகும் கொல்லம் எக்ஸ்ப்ரஸ்களில் சென்று  தென்காசியில் இறங்கிக் கொள்ளலாம். ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் சென்று வருவது சிறப்பானது. மற்ற சமயங்களில் தண்ணீர் இருந்தாலும் கூட்டம் இருக்காது.

குற்றாலத்தின் அருகே ஒரு ஐந்து கி மீ சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமரன் கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றி பச்சை பசலேன வயற்பரப்பும் சுற்றிலும் மேகம் கவிந்த குற்றால மலைத்தொடருமாக இயற்கை அன்னையின் எழில் உங்கள் கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளூம். அருகில் உள்ள இலஞ்சி என்ற அழகிய கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது. குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத அற்புதமான அருவிகள் அவை. கொஞ்சம் மலையேறலும், காட்டுக்குள் நடையும் தேவைப் படும், இருப்பினும் அங்குள்ள இயற்கை எழிலின் உன்னதத்தைக் காண்கையில் அந்த உழைப்பு வீண் போகாது. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளி
த்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

குற்றாலத்தில் நகராட்சியும், தனியாரும், மக்களும், வனத்துறையும், சுற்றுலாத்துறையும் செய்ய வேண்டிய காரியங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அதைப் பற்றி யாரும் கவலைப்படும் நிலையில் இல்லையாகையால்,அதைச் சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய் விடும். காடுகளில் உள்ள அரிய மரங்கள் திட்டமிட்டு அழிக்கப் படுகின்றன, கொள்ளை போகின்றன. அருவி நீர் பொறுப்பில்லாத மக்களால் பலவாறாகவும் சேதப் படுத்தப் படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்களால் போற்றி, பாடி, ரசித்துப் பாதுகாக்கப்பட்ட ஒரு இயற்கை அதிசயத்தை பாழ் படுத்தும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது? அது நமது சந்ததியனருக்கு நாம் விட்டு விட்டுச் செல்ல வேண்டிய பரம்பரைச் சொத்தல்லவா? நமக்கு அனுபவ பாத்தியதை தவிர அழிக்கும் உரிமையை யார் அளித்தது?  இயற்கையைப் பேணிக் காக்கும் உணர்வும் அக்கறையும் என்றாவது ஒரு நாள் எல்லோருக்கும் வரலாம்

நகரத்தில் வாழும் பலருக்கும் குற்றாலம் வருவதற்கே பிடிப்பதில்லை. பல இடங்களில் கீழே கால் வைக்கவே அருவருப்பாக உணர்கிறார்கள். பல தமிழ் நாட்டு நகர வாசிகள் குற்றாலத்துக்கு ஒரு முறை வந்தால், முகஞ்சுளித்து அடுத்த முறை அங்கு செல்லவே அஞ்சும் நிலையில்தான் குற்றாலம் இன்று இருக்கிறது என்பதால் பலரும் குற்றாலம் பக்கம் செல்வதில்லை.  அங்கு கூடும் கட்டுக்கடங்காத கூட்டம் பலருக்கு குற்றாலம் என்றாலே குலை நடுக்கத்தைக் கொடுக்கலாம். அப்படி நெரிசலில் யாராவது போய் குளிப்பார்களா என்று கேட்கலாம். அவர்களது அசுயையையும் நியாயமானதே. லட்சகணக்கான மக்கள் கூடி அசுத்தப் படுத்தும் ஒரு இடத்திற்கு அது சொர்க்கமே ஆனாலும் செல்லத்தான் வேண்டுமா என்று கேட்டால் அதுவும் நியாயமான கேள்வியே, இருந்தாலும் ஏதோ பழகி அனுபவித்த பழைய மனது தேடுகிறது. தேடாதவர்களுக்கு வீட்டில் ஷவரில் வரும் தண்ணீரே குற்றால அருவி. கண் முன்னே அழிந்து கொண்டிருக்கும் மற்றுமொரு தமி ழகச் செல்வம். இந்த இடத்தை மீட்டெடுக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அனைவரும் அனுபவிக்கச் செய்யவும்,மக்களுக்கு இயற்கையை முறையாக ரசிக்கவும், போற்றவும் பாதுகாக்கவும் கற்றுக் கொடுக்கவும், இயற்கையோடு இணைந்த சுற்றுலாவை வளர்க்கவும், இயற்கை வள மருத்துவத்தை கொண்டு செல்லவும், குற்றாலம் மூலம் வருமானத்தைப் பெருக்கவும் வழிகள் பல உள்ளன. மனதுதான் யாருக்கும் இல்லை.

ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே, குற்றால அருவியில் குளித்தது போல் இருக்குமா என்ற பாடல் வரிகளில் இன்னும் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அந்த அழகு முழுமையாக அழிவதற்குள் நீங்களும் ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடுங்களேன். அங்கு செல்லும் பொழுது நீங்களாவது சோப்பு, ஷாம்பு போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, குப்பைகளைப் போடாமல் இயற்கையோடு ஒன்றி இருந்து விட்டு வாருங்கள்.

oooOooo
திருமலை ராஜன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |