ஒருபுறம் அரசாங்கம் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவித்து ஏராளமான சலுகைகளைக் குடிமக்களுக்குக் கொடுத்தும் வருகிறது. மக்கட்தொகை உயர என்னென்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்கிறது. மறுபுறமோ கொஞ்சம் அக்கறைக்கும் அதிர்ச்சிக்குமுரிய கண்டுபிடிப்பை சமீபத்தில் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கிறது.
கருத்தரித்தல் குறைந்து வரும் வேளையில், Miscarriage என்றறியப்படும் இயற்கையாகவே கலைந்துவிடும் கருக்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனவாம். 4,500 குழந்தைகள் முதல் சில வார கர்ப காலத்திலேயே தாய்மார்களால் இழக்கப்படுகின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இது 16% அதிகமாம். 1993 ல் 3,930 தாக இருந்த இந்த எண்ணிக்கை 1998ல் 4,507 ஆக உயர்ந்தது. போன வருடம் இன்னும் அதிகரித்து 4,573 ஆனது. இதற்கு முக்கியமான காரணங்கள் தாமதமாகக் கருத்தரித்தல் மற்றும் தேவைக்கதிகமான ஊட்டமுள்ள உணவு ஆகிய இரண்டும் என்கின்றனர்.
பிறப்புவிகிதம் குறைந்து வருதைப்பார்ப்போம். 1993ல் 50,225 குழந்தைகள் பிறந்தன. போன வருடமோ 37,633 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இதுவரை இல்லாத குறைந்த எண்ணிக்கை இது. சிங்கப்பூர் பொதுமருத்துவமனையில் 1993ல் 4,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இது அப்படியே பாதியாகக் குறைந்து போன வருடம் 2,000க்கு வந்துள்ளது. இதே மருத்துவமனையில் தரித்த சிலவாரங்களிலேயே இயற்கையாகக் கலைந்துபோன கருக்களின் எண்ணிக்கை 300 லிருந்து 390 ஆக உயர்ந்திருக்கிறது.
சிங்கப்பூரர்கள் வயதுகூடியபின் மணம் புரிகிறார்கள், அதற்குப் பிறகும் பிள்ளைப்பேற்றைத் தள்ளிப் போடுகிறார்கள் என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வயது முப்பதுக்கும் அதிகமான பெண்களால் தரித்த தங்கள் கருவில் சிக்கல்களில்லாமல் 12 வாரங்களைக் கூடக் கடக்கமுடிவதில்லை. பலருக்குக் கரு கலைந்துதான்விடுகிறது. எதிர்பாராமல் ஏற்படும் இழப்பை ஏற்கும் மனப்பக்குவம் எல்லோரிடமும் இருப்பதில்லை. 1993 ல் பெண்களில் பெரும்பாலோர் 25 வயது முதல் 29 வயது வரையில் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஆனால், பத்துவருடங்களுக்குப் பிறகு அதாவது போன வருடம், 30 வயதைக் கடந்தபிறகே பெரும்பான்மையான பெண்கள் தாய்மையடைதிருக்கின்றனர். இது குழப்பங்கள் நிறைந்த கர்பகாலத்துக்கும் பிரசவத்திற்கும் வழிவகுப்பதாக தீவிரமாக நம்புகின்றனர் மருத்துவர்கள்.
தாம்ஸன் மெடிகல் செண்டரின் நிர்வாகியும் தலைவருமான டாக்டர். செங்க் வேய் சென், "குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருமுட்டைகளோடு பெண்கள் பிறக்கிறார்கள். பருவம் எய்தவுடனேயே ஒவ்வொரு வருடமும் இந்தக் கருமுட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்து வருகிறது. வயது ஏற ஏற கருவுருவாவதில் சிக்கல்கள் கூடும்", என்கிறார். இவர் தன் மருத்துவமனையிலேயே 10-15 விழுக்காடு வரை இயற்கையாகக் கலைந்துபோன கருக்களின் எண்ணிக்கை கூடியதாகக் கூறியிருக்கிறார்.
தேசிய பல்கலை மருத்துவமனையின் விரிவுரையாளர் பி.ஸீ.வோங்க்," ஒரு பெண் முதல் குழந்தையைப் பெற்றெடுக்க மிகச்சரியான வயது 20. எப்படியும் 27 வயதிற்குள் பெற்றுவிடுதல் நலம்", என்கிறார். நிறைப்பிரசவத்தில் குறைபாடுகள் உள்ள குழந்தை பிறக்கும் சாத்தியங்கள் குறைவு என்கிறார் இவர். குறைப்பிரசவத்தில் தான் அதிகம். Down's syndrome போன்ற குறைகளுடைய பிள்ளைகள் பிறக்க மிக முக்கியமான காரணமாக இவர் கருதுவது மரபணுக்களில் இருக்கக்கூடிய குறைகளை. அதைத்தவிர தாயின் ஆரோக்கியமும் ஒரு காரணம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும்கூட சிக்கல்கள் முளைக்கும். உளைச்சல் நிறைந்த வாழ்க்கைமுறையும், புகைத்தல் போன்ற பழக்கவழக்கங்களும்கூட ஓரளவிற்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்.
சீக்கிரமே ஒரு பெண் தாய்மையடைவதைத் தவிர வேறு என்னென்ன செய்யலாம் என்று கே.கே.தாய்சேய் மருத்துவமைனையின் டாக்டர் ஷம்மி நாயரிடம் கேட்டபோது, "கருத்தரிப்பதற்கு முன்பே அந்தப்பெண் தன் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உதாரணமாக அவளுக்கு நீரிழிவுப்பிரச்சனை இருந்தால் மருத்துவரைப் பார்த்துப் பேசவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டின் வழி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஏறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்", என்றார் .
பாஸி·விக் ஹெல்த் கேரின் டாக்டர். ஆன் டான்,"நிறைய பெண்கள் ரத்த சோகையினால் (anaemic) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரும்புச்சத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ·போலிக் ஆஸிட் எடுத்துக்கொள்வதால்கூட சில சிக்கல்களைத் தவிர்க்கமுடியும்", என்றார்.
முதல் 12 வாரங்களுக்குத் தான் கருக்கலையும் அபாயம் அதிகம் உள்ளது. அப்போது வேலைக்குப்போகும் பெண்கள் விடுப்பெடுத்துக் கொண்டு ஓய்வில் இருக்கவேண்டும் என்கிறார் க்ளெனீகல்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ·பூங்க் லிஅன் ச்யூன். ஆனால், இது எத்தனை பெண்களுக்கு சாத்தியம்? இத்தகைய வயது கூடியபின் கருத்தரிக்கும் பெண்களுக்கு ஓய்வு எடுக்கவென்று மறுக்காமல் விடுப்பு வழகவேண்டும் என்று அரசாங்க அதிகாரி ஹலிமா யாகோப் கூறினார். பின்விளைவுகளை யோசிக்காமல் பிள்ளைபெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போட்டபடியிருக்கும் சிங்கப்பூர்களிடையே 'விழிப்புணர்வு' ஏற்படுத்துவது இன்றியமையாததாகிறது என்கிறார் இவர்.
சமீபத்தில் பல இடர்களைச் சந்தித்து மீண்டு ஒரு வழியாக ஒரு மகளைப் பெற்றெடுத்துள்ள திருமதி லிம், தன் நண்பர்களை மணம் புரிந்தவுடனேயே பிள்ளைபெற்றுக் கொள்ளத் தூண்டிவருகிறார். காலம் தாழ்த்தினால், பிறகு வேண்டும் என்கிறபோது உடனேயே பிள்ளைபெற முடியாதுபோகலாம் என்றும் அக்கறையோடு கூறிவருகிறார்.
இயற்கைக்கு எதிராகச் செயல்படும் மனிதனை இயற்கை மிக இயல்பாகவே வஞ்சித்துதான் விடுகிறது. பலவற்றை உதாரணமாச் சொல்லலாம் எனினும் இதுவும் ஒரு மிகச்சிறந்த உதாரணமே. இல்லையா?
|