பாடல் 67
சில ஆண்களுக்கு, அவர்களின் அழகான முறுக்கு / நறுக்கு மீசை ஒரு தனி கம்பீரத்தைக் கொடுக்கிறது. இந்த மீசையை, ஆண்மையின் அடையாளமாகவே சொல்கிறவர்களும் உண்டு.
இப்படி கம்பீரமான தனது 'மீசை'யால், ஒரு பெண்ணின் மனதைக் கவர்ந்து, அவளுடைய காதலைப் பரிசாகப் பெற்றான் ஒருவன். பின்னர் ஒரு நாள், சவரம் செய்யும்போது சிறு கவனக்குறைவு - திடுதிப்பென்று அவனுடைய மீசை தொலைந்துபோய்விட்டது !
இப்போது அவனுடைய நிலைமையை யோசித்துப் பாருங்கள் - அவனுடைய மீசை அழகுக்காகவே அவனை நேசிக்கத் தொடங்கிய அந்தப் பெண்ணின் முகத்தில் இனி எப்படி விழிப்பான் அவன் ? அவள்முன் சென்று நிற்பதற்குக்கூட கூச்சப்பட்டுக்கொண்டு, இந்த மீசை பழையபடி வளரும்வரை அவளுடைய கண்ணில் படாத தொலைவில் சென்று தொலைந்துவிடமாட்டோமா என்றுதான் நினைப்பான் அந்தக் காதலன்.
இவ்வாறாக, ஆண்களுக்கு கம்பீர அடையாளமாய் விளங்குகிற இந்த மீசையைப்போல், ஆண் யானைகளுக்குத் தந்தங்கள்தான் அழகு, கம்பீரம்.
ஆனால், பாண்டியனின் படையைச் சேர்ந்த யானைகளுக்கு, அந்த கம்பீரமும் நிரந்தரமில்லாத நிலைமை.
எதிரிகளின் வலுவான கோட்டைச் சுவர்களின்மீது முட்டி, மோதி அவற்றை உடைத்துத் தகர்க்கும் பாண்டியனின் யானைகள் - ஆனால், இந்தக் களேபரத்தில் அந்த யானைகளின் தந்தங்கள் உடைந்து அல்லது முறிந்து அல்லது சிதைந்து அல்லது காணாமல் போய்விடுகின்றன.
தந்தம் முறிந்துபோய்விட்டபின், அந்த யானைகள் என்ன செய்யும் ? (பிள்ளையாராய் இருந்தாலாவது, உடைந்த தந்தத்தை வைத்துக்கொண்டு மகாபாரதத்தைப் பிரதியெடுக்கலாம் !)
இந்தக் கேள்விக்கு விடை தெரிந்துகொள்ள, பாண்டியன் படையிலிருக்கிற எல்லா யானைகளையும் நம்மால் கவனிக்கமுடியாது - ஆகவே, இந்த ஒரு யானையைமட்டும் கவனித்துத் தெரிந்துகொள்வோம் - ஒரு ஆனைக் கூட்டத்துக்கு, ஒரு ஆனை பதம்.
சண்டை முடிந்து, பாண்டியன் ஜெயித்துவிட்டபிறகும், போர்க்களத்திலிருந்து வெளியேற மனமில்லாமல் நிற்கிறது இந்த யானை., ஏன் ?
நாம் அக்கறையோடு விசாரிக்க, 'அடப் போப்பா.,', என்று சலித்துக்கொள்கிறது அந்த யானை, 'தந்தங்கள் ரெண்டும் முறிந்துபோயாச்சு, இந்தக் கோலத்தில், நான் எப்படி என் காதலியைப் பார்க்கப் போவேன் ?'
நியாயமான கவலைதான், 'வீரமாய்ப் போரிட்டு ஜெயித்த கதையெல்லாம் சரிதான், ஆனால், இப்படி தந்தத்தைத் தொலைத்துவிட்டு வந்து நிற்கிறாயே.', என்று தன்னுடைய ஜோடிப் பெண் யானை கேலியாய்ப் பேசிச் சிரித்துவிடுமோ என்று வெட்கப்பட்டுக்கொண்டு, இந்த ஆண் யானை இங்கேயே நிற்கிறது.
ஒருவேளை, தன்னைத் தேடிக்கொண்டு, அந்தப் பெண் யானை இங்கேயே வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்தில், இறந்துபோன அரசர்களின் குடல்களை வாரி, தன்னுடைய உடைந்த தந்தங்களை மறைத்துக்கொள்கிறது அந்த யானை.
அடுமதில் பாய அழிந்தன கோட்டைப் பிடிமுன் பழகஅதுஅழில் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல் தென்னவர் கோமான் களிறு.
(அடுமதில் - கொல்லக்கூடிய கருவிகள் நிறைந்த மதில், கோடு - தந்தம் பிடி - பெண் யானை அழில் - அழிவு குடர் - குடல் களிறு - ஆண் யானை)
பாடல் 68
பாண்டியனின் போர்க்களம் - வழியெங்கும், அவனோடு போரிட்டு இறந்த பகை மன்னர்களின் உடல்கள் வீழ்ந்துகிடக்கின்றன.
உயிர் போய்விட்ட நிலையிலும்கூட, அந்தப் பகை மன்னர்களின் முகங்களில், ஆத்திரமும், கோபமும், பாண்டியனின்மீதான பொறாமையும் நிறைந்திருக்கிறது.
பாண்டியனின் வாளால் வெட்டப்பட்டு, அல்லது ஒளி விடும் வேல்களால் குத்தப்பட்டுக் கிடக்கும் அந்தப் பிணங்களைத் தின்பதற்காக நரிக் கூட்டங்கள் வருகின்றன.
ஆனால், பக்கத்தில் வந்த நரிக் கூட்டம், அந்தப் பிணங்களின் முகத்தில் பொங்கும் ஆத்திர உணர்ச்சிகளையும், கோபமாய் வளைந்திருக்கும் புருவங்களையும் பார்த்து பயந்துவிடுகிறது - 'ஒருவேளை, இந்தக் கிராதகப் பயல் உயிரோடுதான் இருக்கிறானோ ? இவனைத் தின்பதற்காக நாம் பக்கத்தில் நெருங்கினால், சட்டென்று விழித்தெழுந்து நம்மைப் பிடித்துச் சாப்பிட்டுவிடுவானோ ?', என்றெல்லாம் பயந்துகொண்டு, சத்தமாய் ஊளையிட்டபடி, வெகுதூரத்துக்கு ஓடிவிடுகின்றன அந்த நரிகள்.
வெருவரு வெஞ்சமத்து வேல்இலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண்டு அஞ்சி நரிவெரீஇச் சேண்கணித்தாய் நின்றுஅழைக்கும் செம்மற்றே, தென்னவன் வாள்கணித்தாய் வீழ்ந்தார் களம்.
(வெரு - பயம் வெஞ்சமம் - கொடுமையான போர் இலங்க - ஒளி வீச முரிவு - மடிப்பு / வளைவு வெரீஇ - பயந்து சேண் - தூரம் செம்மற்றே - செம்மை உடையதே வாள்கணித்தாய் - வாளுக்கு அருகே)
|