Tamiloviam
டிசம்பர் 11 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : இறக்காதவன் - ப்ரூஸ் லீ!
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

 

ஜாக்கி சானும் அவரது இரு நண்பர்களும் புல்தரையில் படுத்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். வீர விளையாட்டுகளைக் கற்பிக்கும் மார்ஷியல் பள்ளியில் படித்துமுடித்துவிட்டு மூவரும் ஹாங்காங் திரையுலகின் கதவுகளைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்த காலம் அது. ஜாக்கி சான் துணை நடிகராகச் சில படங்களில் தலைகாட்டியிருந்தார். ஆனால் எவ்வளவு முயன்றும் நல்ல வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரவில்லை. விரக்தியில் எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தார்.    

”நம்ம ஹாங்காங் சினிமாவிலுள்ள அடிப்படைப் பிரச்னை என்ன தெரியுமா?” ஜாக்கி சான் பேச ஆரம்பித்தார். மற்ற இருவரும் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘கதாநாயகிக்குச் சமமா கதாநாயகனும் அழகா இருக்கணும்னு ஒரு விதி இங்கே இருக்கு. இதனாலதான் தகுதியில்லாதவங்க எல்லாம் ஹீரோவாயிட்டாங்க.  சாகசங்கள்னு அவர்கள் சொல்றதை மக்களை காமெடியாப் பார்க்கறாங்க.  நம்ம ஹீரோக்களுக்கு சினிமாவுல நடிக்கணும்னு ஆர்வம் இருக்கே ஒழிய அதுக்குத் தேவையான திறமைகள் இல்லை. ஒரு குங்ஃபூ  ஹீரோன்னா பறந்து பறந்து அடிக்கணும், கங்காரு மாதிரி தாவணும், டைவ் அடிக்கணும். மின்னல் வேகத்துல செயல்படணும். ஹீரோ அங்கே அடிச்சா நமக்கு இங்கே வலிக்கணும். ஆனா  ஒயரை  முதுகில மாட்டிகிட்டு உடம்புல பொட்டுக் காயம்கூட ஏற்படாம நடிக்கறாங்க. டூப் போட  நம்மளை மாதிரி ஆள்கள் குவிஞ்சிருக்கறதால  உடல் நோகாம பெயர் வாங்கிடறாங்க.  இதெல்லாம் குங்ஃபூ கலைக்கே அவமானம்.’

தகுதியுள்ள தங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பல இடர்பாடுகள் நேரும்போது தகுதியில்லாதவர்களால் எப்படி சினிமாவில் ஹீரோவாக நிலைத்து நிற்கமுடிகிறது?  ஜாக்கி சான் போல முறையாக குங்ஃபூ பயின்றவர்களின் கவலையும் கேள்வியும் இதுதான்.

‘ஜீவனில்லாத சண்டைக்காட்சிகளைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு.  ஹாங்காங் சினிமாவுக்கு ஒரு விடிவே கிடையாதா?’

ஜாக்கி சானுக்கு அழவேண்டும்போல இருந்தது. ஆனால் சங்கடத்தை, ஆற்றாமையை,ஆதங்கத்தை விழுங்கத்தான் முடிந்தது.

BigBoss BruceLeeஅது எழுபதுகளின் ஆரம்பம்.  ஹாங்காங் செழிப்புற வளர்ந்து கொண்டிருந்தது. நாகரீகம் நன்கு வேரூன்றியிருந்தது. ஆனால் ஹாங்காங் சினிமா சுரத்தில்லாமல் இருந்தது. கடும் வறட்சி. நல்ல படங்கள், நல்ல நடிகர்கள், திறமையான ஹீரோக்கள் இல்லாமல்  திரையுலகம் தடுமாறிக்கொண்டிருந்தது. கிடைத்ததை வைத்துக்கொண்டு இதுதான் சினிமா என்று காண்பித்துக்கொண்டிருந்தார்கள். யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை. பிடித்தால் வந்து பார். பிடிக்கவில்லையா. வாயைப் பொத்திக் கொள். இப்படியொரு தன்னாட்சியதிகாரத்தால் ஹாங்காங் சினிமா சிக்கிக்கொண்டிருந்தது. 

கண்மூடித் திறப்பதற்குள் மாற்றம் ஒன்று நிகழ்வதுபோல இருந்தது. ஹாங்காங் காற்றில்  ஒரு பெயர் மட்டும் உலவிக்கொண்டிருந்தது.

ப்ரூஸ் லீ!

ஸ்டூடியோக்களில், சினிமா கம்பெனிகளில் ஒருவரை  மட்டும் ஓயாது விவாதித்துக் கொண்டிருந்தனர்.

ப்ரூஸ் லீ! ப்ரூஸ் லீ!

சினிமா திரையரங்குகளில் வேறு ஏதோவொரு  படத்தை பார்க்கவந்துவிட்டு ரசிகர்கள் இவரைப் பற்றி நிறைய பேசிக்கொண்டனர்.

ப்ரூஸ் லீ! ப்ரூஸ் லீ!

நடித்து ஒருபடம்கூட வெளியாகவில்லை. ஆனால் எந்தப் பத்திரிகையைத் திருப்பினாலும் இவர் புகைப்படம்தான். 

ப்ரூஸ் லீ! ப்ரூஸ் லீ!

திடீரென ஹாங்காங் திரையுலகம் விழித்துக் கொண்டதுபோல இருந்தது. ப்ரூஸ் லீயின் முதல் படமான ‘தி பிக் பாஸ்’க்கு  ஹாங்காங் முழுக்க பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இவன் சாதாரண ஆள் இல்லை என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்களே - இப்படி  எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

உலகிலேயே மூன்றாவது பெரிய திரையுலகம் ஹாங்காங் திரையுலகம். ஹாலிவுட், பாலிவுட்டுக்குப் பிறகு அதிக சினிமாக்களையும் அதிக ரசிகர்கர்களையும் கொண்டது. ஹாங்காங் திரையுலகுக்கு  எப்போதும் அரசின் உதவிகள் கிடைக்காது. ஆகவே முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு செயல்படும் திரையுலகம் அது. சீன மொழிகளில் ஒன்றான கேண்டோனிஸ் மொழியில் எடுக்கப்படும் ஹாங்காங் படங்களில்  காமெடி, ஆக்ஷன் காட்சிகள் கட்டாயம் இடம்பெறும். நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பும் சுவாரசியமும் இருக்கவேண்டும். இதுதான் ஹாங்காங் சினிமாவின் இலக்கணம்.

ஹாங்காங் சினிமா பேசத்தொடங்கி அப்போது நாற்பது  ஆண்டுகள் ஆகியிருந்தன. மார்ஷியல் கலைகளை மையமாகக் கொண்ட படங்கள் ஐம்பது ஆண்டுகளாக ஹாங்காங்கில் வந்துகொண்டுதான் இருந்தன.  ஆனால் ஒருபோதும் இப்படியொரு புரட்சி நிகழவில்லை. எல்லோராலும் அதிகமாக நினைக்கப்பட்டார்; அதிகமாக உச்சரிக்கப்பட்டார் ப்ரூஸ் லீ.

என்ன அதிசயம் இது! அமெரிக்காவில் பிறந்த ஒருவரால் எப்படி ஹாங்காங்கில் மாயம் செய்யமுடியும்! யாரிவர்? எங்கிருந்து முளைத்தார்? மூடிக்கிடக்கும் ஹாங்காங் சினிமாவின் கதவுகளையும் ஜன்னல்களையும் இவர் உடைத்தெறியப் போகிறார் என்று ஆளுக்கு ஆள் பேசிக்கொள்ளும் அளவுக்கு இவர் ஜித்தனா?

நடப்பதெல்லாம் ஜாக்கி சானுக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.  படம் பார்க்கப் போ என்று உள்மனம் சொல்லியது. 

‘தி பிக் பாஸ்’ ஒரு வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. தன் நண்பர்களோடு படத்தைப் பார்க்கச் சென்றார் ஜாக்கி சான்.

திரையரங்கில் மக்கள் வெள்ளம். டிக்கெட் வாங்குவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார் ஜாக்கி சான். மக்களின் ஆர்வத்தைப் பார்த்து அவருக்குச் சிரிப்பு வந்தது.

படம் முடிவடையும்போது ஏன்தான் இந்தப் படத்துக்கு வந்தோமோ என்று அனைவரும் விழிபிதுங்கப் போவது நிஜம். அமெரிக்க நடிகனால் எப்படி ஹாங்காங் ரசிகர்களை வசப்படுத்த முடியும். வீண் எதிர்பார்ப்பு. குங்ஃபூ திறமை என்பது தவம் இருந்து கிடைக்கக்கூடிய வரம். அமெரிக்காவில் குங்ஃபூ என்கிற வார்த்தையைக்கூட யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ம்... இன்று திரையரங்கின் இருக்கைகள் கிழியப் போவது நிஜம்.

பெருத்த அவநம்பிக்கையோடு இருக்கையில் அமர்ந்தார் ஜாக்கி சான்.

விளக்குகள் அணைக்கப்பட்டன. திரையில் ப்ரூஸ் லீயின் முகம் தெரிந்தது. 

காட்சிகள் நகர நகர தனக்குள் ரசாயன மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தார் ஜாக்கி சான். ப்ரூஸ் லீயிடம் தனித்துவமான ஸ்கீரின் பிரசன்ஸ் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அறிவு, அழகைவிட இந்த ஸ்கிரீன் பிரசன்ஸ்தான் எல்லோரையும் கட்டிப்போடுவதைக் கண்ட  ஜாக்கி சான் உணர்ச்சிவசப்பட்டார். தன் நண்பர்களிடம் புருவத்தை உயர்த்தி, தலையை ஆட்டி முக சமிக்ஞை காட்டினார். 

இதுதான் ஆக்ஷன் படம், இவர்தான் ஆக்ஷன் ஹீரோ. இவர்தான்.  இவர் மட்டும்தான் இதுவரை.


ப்ரூஸ் லீ - இறக்காதவன் - ச.ந. கண்ணன் - கிழக்கு பதிப்பகம் 

http://nhm.in/printedbook/929/Bruce%20Lee

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |