Tamiloviam
டிசம்பர் 13 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : சுவிசில் ஓர் விடுமுறைநாளில் அதிகாலைப்பொழுது.
- நளாயினி [nalayiny@hotmail.com]
| | Printable version | URL |

சிவத்தக் கொண்டை,
உருட்டும்
உருண்டை விழிகள்.
கொட்டாவி விட்டே
சோம்பல் முறித்து
விடியலைக் கூறும்.

வேலை அலுப்பில் இரவு
கட்டிலில் விழுந்த உடம்பு.

உடம்பசதி, நேரம்,
இவை எல்லாம் தெரியாமல்
அல்ப்ஸ் மலைத்தொடரின்
மடியில் இருந்து
விழுந்து தொலைக்கும்
சூரியக் குழந்தை.

அடர்ந்த
போர்வையையும்
தாண்டி
காலில் முத்தமிட்டு
அட சீ..

மெல்ல , மெல்ல,
உடம்பெல்லாம் சூடேற்றி
கண்மடலில் உரசி
சூடாய் முத்தமிட்டு
கண் மணியோடு
சண்டை பிடிக்கும்
சூரிய உதடு.

சிணுங்கும் என்னை
இறுக அணைத்து
இழுத்துச் செல்லும்
சூரியக் கைகள்.

யன்னல் திறந்து
வெளியில் பார்த்தால்
சூரியனின் முகம் பார்த்து
முத்தமிடும் சக்களத்தி ..

அடடே..!
மஞ்சள் கம்பளம் மேல்
கறுத்தப் புள்ளிகள்.
திருஸ்டிக் கழிப்போ.!?

குளித்து
சுத்தபத்தமாய் ,
பறவைகளின்
இசை கேட்ட படி
சூரிய அடுப்பில்
உணவு தயாரிக்கும்
மரங்கள்.

இசை விற்பனர் எ
ல்லாம் தோற்றனர் போ.

ஒருவரை ஒருவர்
மிதித்தெழாது
கீதம் இசைக்கும்
குருவிகளின்
கான இசை.

ம்!
தனிப்பாட்டு ,
குழுப்பாட்டு
எல்லாம், எல்லாம்.
போதை ஏறும்.

உணர்வில் மேடை போட்டு
கானம் இசைக்கும் துள்ளல்.

மனசோ..
ஓசை எழுப்பாமல்
இறக்கை நெய்து
மரக்கிளையின்
பனித்துளிகளைக்
காயப்படுத்தாமல்
மரத்தில் அமர்வு.

இவற்றை எல்லாம்
தொலைத்து
அவசரமாய்ப் போகும்
ஆறு மணிப் புகையிரதம்.

ஓடி ,ஓடி
தானும் களைத்து
இயற்கையையும் மாசாக்கி
இன்று மட்டும்
ஓய்வெடுக்கும்
சிவப்பு ,வெள்ளை
கறுப்பாய் கார்கள்.

மலையின் உச்சியில்
பனி மணல்
பல இரவுகள்
வீணாய் நிலா.
யாருமில்லை அங்கு.,

ஏக்கத்தோடு
மலையுள்
முகம் மறைத்து

என் மனசு மட்டும்
கீச்சு மாச்சு தம்பளம்
விளையாடிய காலைகள்.

அருகில் பச்சை
மரக்குடைகளின் கீழ்
இரவுக் காதலனின்
சரசத்தை சுகித்த படி
சூரிய உதடுகளை
முத்தமிடத்துடிக்கும் பூக்கள்.

அதனுள் மரத்தை தறித்து
தாம் அமர செய்து வைத்துள்ள
பொறுப்பற்ற மனிதரின்
இருக்கும் அமர்வுகள்.

இவற்றை எல்லாம்
ரசிக்க மறந்து
உலக விடயத்துள்
மூழ்கிய படி
இருக்கும் அமர்வில்
வெள்ளைக்காரப் பாட்டி.

என்ன பார்க்கிறாய்..!?
வா.. வா.. அருகில்.

என்னைப்போல்
உன்னால் பூக்க முடியுமா ?
எனக் கூறி
சிவந்து,சிரித்து நிக்கும்
அப்பிள் பூக்கள்.

என் வீட்டுப்
பனங் கூடலுக்கால்
முகங்காட்டி வரும்
என் வீட்டுச்சூரியனை
நினைத்து, நினைத்து
சொல்ல நினைத்ததை
சொல்லாமல் தடுத்தது
தழுதழுத்த குரல்.

விம்மி , வெடித்து
மீண்டும் பஞ்சணையில்
முகம் புதைத்தழும்
உயிரும் மனசும்.

oooOooo
                         
 
நளாயினி அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |