டிசம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : காட்டு வளம்
- கோ. இராகவன் [gragavan@gmail.com]
| | Printable version | URL |
(முன்பு எப்பொழுதோ எழுதிய ஒரு கதையில் காட்டு வளத்தைப் பற்றிய ஒரு சிறுபகுதி. நான் மிகவும் ரசிக்கும் பகுதி. )

உண்மைச் சிறப்பு என்று அந்தக் காட்டிற்குப் பெயர். பெயருக்கு ஏற்றாற்போல் உண்மையிலேயே சிறப்புற்றிருந்தது காடு. பருத்த பெரிய மரங்கள். இடியாப்பம் போன்ற கிளைகளும் அவற்றை மூடிய இலைகளும் விண்ணை மறைத்தன. காதலியை இடுக்கு வழியே நோட்டமிடும் காதலன் போல் கதிரவனின் பொற்கதிர்கள் ஊடூடே நுழைந்து பாய்ந்து மண்மகளை முத்தமிட்டன. காதலன் முத்தமிட்டும் நாணமில்லாமல் நிலமகள் கிடப்பதைப் பார்த்தால் இது நெடுநாள் காதல் போலத் தெரிகின்றது.

காதல் விளையாட்டில் பெருகிய வேர்வைத்திவலைகள் மண்மகள் மேனியை ஈரமாக்கியிருந்தன. கதிரவன் கரம் பட்ட இடங்கள் மட்டும் ஈரமின்றியிருந்தன. இரவில் ஒரு காதலன். பகலில் ஒரு காதலன். நிலமகளே நீ பொல்லாதவள். உன்னுடைய திருட்டு விளையாட்டுக்களை உன் காதலர்கள் அறிவாரோ இல்லையோ நாங்கள் அறிவோம். ஒருவரோடு நீ கூடிக்கிடக்கும் வேளையில் மற்றவர் வந்தால் உன்னை எச்சரிக்க எத்தனை ஒற்றர்கள். சந்திரனோடு கூடிக்கிடக்கும் வேளையில் ஆதவன் வந்தால் புள்ளினங்கள் கூப்பாடு போட்டு உன்னைக் காப்பாற்றுகின்றன. மையல் மயக்கத்தில் காது கேளாமல் நீயிருந்தாயானால் தாமரை மலர்கள் மலர்ந்து மணம் பரப்பி உன்னை எச்சரிக்கின்றன. ஒருவேளை சந்திரன் காதல் வேகத்தில் அள்ளித்தெளித்த அமுத கலைகளால் நறுமணத்தை நீ உணரமாட்டாயாயின் மரங்கள் தங்கள் தலையை ஆட்டி உன்மேல் பன்னீர் தெளிக்கின்றனர். அதேபோல் மாலை வேளைகளில் வேறு பணியாட்கள். அவர்கள் உன் உப்பைத் தின்றவர்கள் அல்லவா! வேறு என்ன அவர்களிடம் எதிர்பார்க்க இயலும்.

வண்ண வண்ண விளக்குகளை மரங்களில் மாட்டிவிட்டவர் யார்? ஓ! மலர்களா! எத்தனை நிறங்கள். எத்தனை வடிவங்கள். எத்தனை வகைகள். எத்தனை மணங்கள். அந்த மலர்களை முத்தமிட்டு முத்தமிட்டு தேனைத் திருடிய ஈக்கள் பெரிய மரங்களின் உச்சிகளிலும் பாறைகளின் இடுக்களிலும் பெரிய பெரிய மெழுகுக் கலன்களில் சேமித்து வைத்தன. அவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருந்த தேனைக் குரங்கினங்களும் கரடிகளும் ஈக்கள் இல்லாத வேளைகளில் கள்ளத்தனமாகச் சுவைத்தன. திங்கத் தெரியாமல் தின்று சிந்திய தேன்துளிகளின் தடங்களால் தேடி வந்த தேனிக்களால் கோட்டவும் பெற்றன. தடித்த மயிர் சூழ்ந்ததால் கரடிகள் தப்பித்தன. குரங்குகள் பாவம்! கிளைக்குக் கிளை மரத்துக்கு மரம் தாவி தப்பிக்கமுடியாமல் கொட்டுப்பட்ட எரிச்சலை மறைக்க குளங்களில் குதித்தன. குளத்து நீரில் தண்மை தாளாமல் கரைக்குத்தாவின. அந்தக்கோவத்தில் அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டன. ஆங்காங்கே மான்களும் இன்னபிற சைவ விலங்களும் தென்பட்டன. ஏதேனும் சிறு ஒலியெழுந்தாலும் திடுக்கிட்டுத் துள்ளி ஓடி ஒன்றுமில்லையென்று உறுதிசெய்து மீண்டும் புறப்பட்டயிடத்திற்கே வந்தன. ஆங்காங்கே நரிகளும் அவற்றின் மறிகளும் தென்பட்டன.

| | | | |
oooOooo
                         
 
கோ. இராகவன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |