டிசம்பர் 15 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு - 2
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

குருதிப்புனல் - அசோகமித்திரன்

1978-இல் எழுதியது

சென்ற மார்ச் மாதம் பார்லிமெண்ட் தேர்த்லில் ஜனதாவின் வெற்றி எப்படி நாடெங்கும் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கியதோ, அதே போலத் தமிழ் வாசகர்கள் உள்ள இடங்களில் எல்லாம் இவ்வாண்டு 'குருதிப்புனல்' நாவலுக்காக இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருப்பது மிகுந்த உற்சாகத்தையும் மனநிறைவையும் தந்திருக்கிறது.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவரிடமிருந்து சீராகப் பல படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. தமிழ் நாடக உலகுக்கு அவர் ஒரு புதுப் பரிமாணம் அளித்திருப்பவர். பல சிறுகதைகள், கட்டுரைகளும் அவரிடமிருந்து வெளிவந்திருக்கின்றன. தரமான தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு உயிரூட்டி வளமூட்டி வருபவர்களில் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிடத்தக்கவர்.


(சென்ற இதழ் தொடர்ச்சி)


* தினசரி நூறு கவிதைகள் படிப்பீர்களா ?

Indira Parthasarathyஇ.பா.: நான் படிக்கலை. எல்லாத்தையும் (கணையாழி கஸ்தூரி ரங்கனுக்கு) அனுப்பி வைத்து விடுவேன். இதை சொல்லும்போது, இன்னொன்று நினைவுக்கு வருகிறது. கவிதைக்காக அப்பொழுது ஒரு சிறிய, சைஸிலும் மிகச்சிறிய பத்திரிகை ஒன்று இருந்தது. 'புள்ளி' என்ற பெயரிலோ அல்லது அது போன்ற ஏதோ ஒரு பெயரிலோ வந்து கொண்டிருந்தது. ஸ்டாம்பை விட கொஞ்சம் பெரியதாக இருக்கும். நண்பர் ஒருவர் என்னுடன் டில்லியில் தங்கிக் கொண்டிருந்தார். அவர் அந்தப் பத்திரிகைய எடுத்து ஷேவ் செய்ததை, எடுத்துப் போடுவதற்கு பயன்படுத்திவிட்டார். அன்றுதான் போஸ்ட்டில் வந்த பத்திரிகை அது. 'என்னப்பா இது... பத்திரிகையில் செய்கிறீர்களே?' என்றேன். 'கிழிஞ்ச பேப்பர் என்றுதானே நினைத்தேன்' என்கிறார் அவர். நவீன கவிதை என்பதே ஜோக்காக ஆகிப்போனது.

புதுக்கவிதை நல்ல பாரம்பரியம் உடையது. பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் என்று மூத்த கவிஞர்கள் இருந்தார்கள். இப்பொழுது கவிதை பாருங்க. உடனே சினிமாவுக்குத் தாவிடறான். லான்ச்பேட் மாதிரி கவிதை எழுதுகிறார்கள். எனக்கு உண்மையிலே ஈடுபாடு கவிதைதான், இலக்கியம்தான் என்று அனைவரும் சொல்லிக் கொண்டாலும், சாப்பாட்டுக்காக சினிமாப் பாடல் எழுதுகிறேன் என்று புலம்பி மட்டும் விடுகிறார்கள்.

* பாரம்பரியத்துடன் உறவில்லாத சமுதாயத்தில் அர்த்தகனமான இலக்கியம் படைப்பது கடினமான காரியம். இன்றைய சூழலில் கலாசாரம், பழங்கால மரபுத் தொடர்ச்சி, என்று கருத்துக்களை முன்வைத்தால் கன்சர்வேடிவ் ரைட், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வா என்று விமர்சிக்கப்படலாம். முத்திரை குத்தப்படாமல் பாரம்பரியம் குறித்த சிந்தனைகளை வைக்கமுடியுமா?

இ.பா.: நாம் எழுதுவது நம்மை கன்வின்ஸ் செய்தால் போதுமே! நான் பிஜேபி அல்ல; காங்கிரஸ் அல்ல; நான் சொல்ல விரும்புவதில் நம்பிக்கை உடையவன். அப்படியென்று நம்பிக்கை இருக்க வேண்டும். பின்னாளில் விமர்சனம் வருமே என்று எழுதிக் கொண்டிருந்தால் எழுத்தில் 'sub-conscious constraints' வந்துவிடும். அதனால் அப்படியில்லாமல் முதலில் you have to convince yourself. நீங்கள் முத்திரைகளைக் குறித்து கவலை கொள்ளவில்லை என்று இருக்கவேண்டும். அந்த ஒரு கன்விக்ஷன் இருந்தால் போதும். எழுத்து தானே அமைஞ்சுடும். முத்திரை குத்துவாங்களே என்று பயந்து கொண்டே போனால், பொலிடிகலி கரெக்டா எழுதற மனப்பான்மை வந்துவிடும். அது உங்களுக்கே நீங்கள் தடை விதித்துக் கொள்வது போன்றது.


* ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாக உங்களின் முதல் கதை பிரசுரமாகியுள்ளது. தற்போதைய வணிகப் பத்திரிகை உலகம் எப்படி இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கிறது? சிறு பத்திரிகைகளில் எழுதித் தேர்வடைவது இன்று எப்படி இருக்கிறது?

இ.பா.: அந்த பீரியடில் ஆனந்த விகடன் 'அக்ரஹாரத்துப் பத்திரிகை' என்னும் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் மெதுவாக மாற்றம் தொடங்கியிருந்தது.

'குமுதம்' எல்லோரையும் எழுப்பிவிட்டது. எஸ்.ஏ.பி clientele-ஐ மாற்றிக் காட்டினார். புது மாற்றங்களைக் கொண்டு வந்தார். இதே சமயத்தில்தான் தினத்தந்தி வெகுவாக வரவேற்பை பெற்றது. ஆனந்த விகடன் என்பது மைலாப்பூர், திருவல்லிக்கேணியில் மட்டும்தான் விற்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் 61, 62களில் ஜெயகாந்தனை கூப்பிட்டு எழுதச் சொன்னார்கள். என்னுடைய ஆறு கதை முத்திரைக் கதையாக வெளிவந்தது. New kind of writing. நான் டெல்லியில் இருக்கேன் என்பது தவிர என்ன்னைக் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. இது விற்பனையைக் கூட்டக் கூடியது என்பது அவர்களுக்குத் தெரியும். கன்ஸ்யூமர் ப்ராடக்ட்.

இப்பொழுது அதெல்லாம் விற்கவில்லை. இன்றிருக்கும் இளைஞர்கள் எழுதினாலும், இ.பா.க்களோ, ஜெயகந்தனோ எழுதினாலும் விற்பனையை அதிகரிக்கவில்லை. இப்பொழுது சினிமாதான் விற்கிறது.

அவர்களின் அடிப்படை மனோபாவம் மாறியதாக சொல்லமுடியாது. Off-of-Broadway-இல்தான் வித்தியாசமான நாடகங்கள், புதிய கலைஞர்கள்தான் கிடைப்பார்கள். Off-of-Broadway-இல் ஒரு நாடகம் சிறப்பாக ஓடினால் அது Off-Broadway-க்கு வரும். அதன் பிறகு Broadway-க்கு வரும்.

Thats the death of the writer. Laissez Faire பொருளாதாரத்தில் இன்று இவற்றிற்கான தேவை குறைந்துவிட்டது.

* நீங்கள் கஷ்டமான விஷயங்களை எளிமையாகச் சொல்வதில் கைதேர்ந்தவர். இன்றைய சூழலில் வெகுஜன ஊடகங்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் எளிமையில் பெருத்த வேறுபாடு காணப்படுகிறது. காலப்போக்கில் இந்த வித்தியாசங்கள் மறைந்து நெருங்குமா? பரந்த அறிவு பெற்றவர்கள், இலக்கியக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்கள், அரசியல், பொலிடிகலி கரெக்ட் நடுநிலைமை போன்ற தடைக்கற்கள் நிறைந்த சிறுபத்திரிகையின் சமுதாயப் பங்கு எப்படி இருக்கிறது? எப்படி உருமாற்றம் அடைய வேண்டும்?

இ.பா.: கஷ்டமான விஷயங்களை எளிமையாக சொல்வதுதான் உயரிய இலக்கியம். உண்மையான இலக்கியம். The simplicity of Tolstoy is amazing. எளிமையென்றால் எளிமைப்படுத்தப்பட்ட விஷயங்கள் அல்ல. உயரிய கருக்களைத் தாங்கிய விஷயங்கள். The idea is to reach people. இலக்கியம் என்பது என்னவென்று பார்த்தால் நம்மைக் குறித்த அடையாளங்களை நாமே அறிந்து கொள்வது ஒன்றாகக் கருதலாம். அதே சமயத்தில் மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்னும் அக்கறையும் இருக்கிறது.

காற்றாடி எதிர்காற்று இல்லாமல் பறக்குமா? வாசகன் இல்லாதவன் எப்படி எழுத முடியும்? 'இதயத்திலே ஒளி உண்டாயின்; வாக்கிலே ஒளி உண்டாம்' என்று பாரதி பாடியிருக்கான் இல்லையா? If there is clarity of thought, there is clarity of diction and clarity of style, clarity of writing.

* மனித மதிப்பீடுகள் மாறிய வண்ணம் இருக்கின்றன. கெட்ட விஷயங்கள் கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாதிக்கும் காலம் இது. போதனை வலியுறுத்தும் கதைகள், மனிதனைப் பண்படுத்துகிற உள்ளுணர்வு போன்ற கருத்துகளுக்கு இன்னும் இலக்கியத்தில் மதிப்பு தரவேண்டுமா?

இ.பா.: சிறந்த இலக்கியம் போதனை செய்ய வேண்டும் என்று அவசியமல்ல. விஷயத்தை சொல்லவேண்டும். ஆனால், கணக்கு வாய்ப்பாடு போல் நேரடி போதனையாக இருந்தால் யார் படிப்பார்கள்?

Art for artsake என்று சொல்றாங்க. ஆனால், art is for life. Open propaganda-வாக இருந்தால் அது இலக்கியமே இல்லை. திருக்குறள் போதனை இலக்கியமாகவும் நீதி நூலாகவும் இருந்தாலும், அதை ஏன் எல்லாரும் படிக்கிறாங்க? அதனுள் இலக்கியம் இருக்கிறது என்பதால்தான். இலக்கியம் ப்ரொபகாண்டாவாக இருந்தால், அதற்குப் பெயர் manifesto. அறிவுபூர்வமா யோசிக்க வைக்கணும். Think and conquer. எழுத்து நம்மை அசைத்திருக்க வேண்டும்.

நல்ல புத்தகமென்பது முடிவிற்குப் பின்னால்தான் தொடங்கவே ஆரம்பிக்கிறது. அப்பொழுதுதான் அது நம்மிடம் பேச ஆரம்பிக்கிறது. பிரச்சாரத்தில் எல்லாமே வெளிப்படையாக இருக்கிறதே? அப்புறம் எப்படி அது இலக்கியமாகும்!

* Art for art sake என்று சொல்வது போல் கலாபூர்வமாய், வடிவநயத்துடன் மட்டுமே அழகுபூர்வமாக எழுதப் படுவது இலக்கியத்தின் குறிக்கோள்களுள் ஒன்றாகக் கருதலாமா? திருக்குறள் கூட வித்தியாசமாக ஒன்றே முக்காலடியில் வருகிறது. கலாபூர்வமான ஓசைநயம், படிக்க மாறுதலாக இருப்பதால் கவனிக்கத்தக்க இலக்கியமாக கொள்ளலாமா?

இ.பா.: அந்தக் காலத்தில் இருந்த forms-ஏ இப்பொழுது இல்லையே! மாற்றம் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. புதிய வடிவங்கள் அந்தந்தக் காலத்தின் நிர்ப்பந்தத்தினால் ஏற்படுகிறது.


* உங்கள் எழுத்தை குடும்பதில் இருந்தவர்கள் படித்தார்களா? பெற்றோர், பிள்ளைகள், மற்றவர்களிடமிருந்து என்ன மாதிரியான எதிர்வினைகளும் வரவேற்புகளுமிருந்தது?

இ.பா.: மனைவி படித்திருக்கிறாள். அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.


* நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் படிக்கிறபோது பக்தி இலக்கியமாக இருக்கிறதே தவிர, திருக்குறள் போன்று பொதுமையான சமூக நோக்கு அமையப் பெறவில்லை. முக்தி, ஞானம், பக்தி, என்று லயித்தும் பகவானின் அழகைப் போற்றியும், வரைவின் மகளிர் போன்ற தேடல்களுக்குத் தடா போட்டும் எழுதப்பட்டிருக்கிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் இன்றைய நாளில் காவியத்தின் கூறுகள் பிரபந்தத்தில் எங்கு கிடைக்கிறது?

இ.பா.: அதை எப்படிப் படிக்கிறோம் என்பதைப் பொருத்த விஷயம். நாலாயிர திவ்விய பிரபந்தங்களுக்கு வியாக்கியானம் எழுதியிருக்கிறார்களே... அவற்றை அனுபவித்துப் படிக்க வேண்டும். They had approached it as literature. வியாக்கியானத்தைப் படிச்சுப் பார்த்தாலே தெரியும்.

'அஞ்சிறைய மட நாராய்' என்று திருவாய்மொழியில் ஒரு பாட்டு வரும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள். அவர்கள் களவொழுக்கத்தில்தானே ஈடுபடுகிறார்கள்!? பராங்குச நாயகி என்று சொல்வார்கள். 'நாயிக பாவம்' என்று சொல்வார்கள் அல்லவா? இது பக்தி வெளிப்பாட்டின் இன்னொரு அம்சம். கடவுள்தான் நாயகன். பக்தர்கள் எல்லோரும் நாயகிகள். சங்க இலக்கியத்தில் இருந்து (பிரபந்தத்தில்) இது தொடர்கிறது. இந்தப்பாடலில் இறைவனுக்கு தூது அனுப்புகிறாள் தலைவி.

'அம் சிறைய மட நாராய் என் செய்யுமோ'. - 'அழகிய இறக்கைகளை உடைய, உதவக் காத்திருக்கும் நாரையே! நீ தூது போ' என்று அனுப்புகிறாள்.

இதை அப்படியே பார்த்தால் 'இதில் என்ன இருக்கிறது' என்றுதான் தோன்றும். குழந்தை பிறந்தவுடன் தாயிடம் பால் அருந்த வாய் வைத்தது போல் பறப்பதற்கு ஏதுவான சிறகுகளின் மேல் கண் வைக்கிறாள். தூது போவதற்கு சிறகு வேண்டாமா!? அதனால் 'சிறகு'மேல் கை வைக்கிறாள். 'மட நாராய்' என்றால் பெண் நாரை இது. அது அப்பொழுதுதான் தன் துணையுடன் கூடியிருக்கிறது. இது மாதிரி இன்னும் பல இடங்களில் அனைத்தும் கிடைக்கும். இதெல்லாம் இலக்கியமில்லாமல் என்ன?

அந்தக் காலத்தில் இதையெல்லாம் பக்தி இலக்கியமாக ஒதுக்கி வைத்துவிட்டார்கள். உங்களை மாதிரி இளைஞர்கள் எல்லாம் அதை பக்திமான்கிட்டேயிருந்து மீட்ட வேண்டும்.

ஆன்மிகமாகவும் அதை பார்க்கலாம். பக்தி என்றால் என்ன அர்த்தம்? பக்திங்கறது individual salvation மட்டும் அல்ல. தனக்கு மட்டும் கேட்பது அல்ல. 'பஜ்' என்கிற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து பக்தி வந்திருக்கிறது. பஜ் என்றால் பஜனை என்பது போல் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து collective salvation for all people. சமூக அமைதிக்கான சிந்தனை.

ஆண்டாள் மாதிரி down to earth ஆக வேண்டும். 'அம்பரமே, தண்ணீரே, சோறே' என்று சொல்கிறாள். குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர், உணவு, உடுத்த ஆடை ஆகிய அத்தியாவசியத் தேவைகளாக இறைவனை நினைக்கிறாள்.

திருவாய்மொழியில் 'உண்ணும் சோறும் வடுவில் நீரும் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணனே'. இங்கே 'வெற்றிலை'யை சொல்கிறார். சாப்பாடு சாப்பிட்டபிறகு, வெற்றிலை மீது போகம் என்று வியாக்கியானம் சொல்லும். How they enjoyed these things! பக்தி இலக்கியத்தில் உள்ள நயங்கள் எல்லாம் மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுக்கும்.

* கம்ப ராமாயணத்திற்கு, சங்கப் பாடல்களுக்கு எல்லாம் விரிவாக உரை எழுதியது போல் ஆழ்வார் பாடல்களுக்கும் சுவையான பொழிப்புரை இருக்கிறது?!

இ.பா.: வியாக்கியானங்கள் பல இடங்களில் நமக்கு இலக்கியத்தை காட்டுகிறது. பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்ட உரைகள் இருக்கிறது. எண்ணூறு வருடம் பழமையானது. இராமானுஜர் காலத்திலேயே வந்துவிட்டது. இராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களைக் கூப்பிட்டு நாலாயிர பிரபந்தங்களுக்கும் உரை எழுத சொன்னார். அதில் வந்ததுதான் இவை எல்லாம். கம்ப ராமாயணத்துக்கு உரையே கிடையாது. வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் எழுதியதுதான் முதல் உரை. அதற்கு முன்னால் இல்லை. உரையெல்லாம் இப்பத்தான் வந்தது. சங்க இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் உரை எழுதிய மாதிரி, கம்பராமாயணத்துக்குக் கிடையாது.

* ஓர் எழுத்தாளன் எழுத நினைப்பதை எழுதக்கூடாது என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஜாதிமதங்களை வைத்து நாகரீகமற்று விமர்சித்துக் காயப்படுத்தி வைத்திருக்கும் சூழலில், இன்றைய சிறுபத்திரிகைகள் பிரச்சினைகளைக் விசிறி விடுகிறதா? காட்டாக 'பிள்ளை கிடைத்தால் வினை' குறித்த கடுமையான விமர்சனங்களை பார்க்கலாம். பிறப்பினால் ஒருவன் தகுதியின்மையையும் தன்மையையும் நிர்ணயிக்கலாமா?
(குறிப்பு: சுந்தர ராமசாமி மறைவுக்கு முன் இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்டது.)

இ.பா.: எல்லாமே இங்கு politicize ஆகி விடுகிறது. நல்ல இலக்கியமாக இருந்தால் இவற்றைத் தாண்டி நிற்கும். இப்பொழுது இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் அடங்கிப் போயிடும். ஆனால், அந்த கதையோ, நாவலோ, சிறப்பாக இருந்தால் காலத்தைத் வென்று நிற்கும்.

* தனது வளர்ப்பியல்புகளும் சார்பியல்புகளும் எழுத்தாளனது படைப்புகளில் எப்படியாவது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமா?

இ.பா.: நிச்சயமாக.

நான் ஏன் எழுதறேன்? ஒரு சம்பவத்தைப் பார்க்கிறேன். அதனால் பாதிக்கப் படுகிறேன். எப்படி அந்த பாதிப்பு ஏற்பட்டது... அந்த விஷயம் எந்த விதமான சலனங்களை ஏற்படுத்தியது?

அதற்கு காரணம் என்னுடைய பிறப்பு, வளர்ந்த விதம், சூழ்நிலைகள், கல்வி; அப்புறம் என்னுடைய தனித்தன்மை... இதெல்லாம் எனக்கே எனக்கு மட்டுமே இருக்கக்கூடிய கை ரேக¨யைப் போல. மற்றவர்களுக்கு வேறு விதமாய் இருக்கும். இதை நிர்ணயிப்பது என்னுடைய பேக்கிரவுண்ட், இவையெல்லாம்தான்.

சல்மான் ருஷ்டி எழுதுகிறார் என்றால், அவர் திருப்பி திருப்பி தெற்காசியாவையும் இந்தியாவையும்தானே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார்! அவருடைய லேட்டஸ்ட் நாவல் படிச்சீங்களா?

* ஷாலிமார் தி க்ளௌன் இன்னும் முடிக்கவில்லை. பாஸ்டனில் ட·ப்ட்ஸ் பல்கலைக்கு வந்திருந்தார். புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறேன். நீங்கள் படித்துவிட்டீர்களா?

இ.பா.: நான் படிச்சுட்டேன். இட்ஸ் எ க்ரேட் நாவல். காஷ்மீரைக் குறித்து எழுதியிருக்கிறார்.

* சுஜாதா சமீபத்தில் தன் வாசகர்களை சந்தித்தபோது சொல்லியிருந்தார். 'வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது வேண்டும்; இடைவெளி தேவை' என்று சொல்லியிருந்தார். ருஷ்டியின் அன்றைய வாசகர் சந்திப்பில், ஒருவர் இதே கேள்வியைக் கேட்டிருந்தார். 'வாசகர்களை விட்டு தூரத்தில் மறைந்திருந்தது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. என்னுடைய புத்தகங்களைப் படிப்பவர்களை நான் அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்.' என்று நேர்மாறான கருத்தைப் பகிர்ந்து கொண்டார். உங்களின் கருத்துக்கள்?

இ.பா.: எப்பொழுதுமே புகழ் வெளிச்சம் கண்ணைக் கூச வைத்தால் இதுதான் பிரச்சினை. ருஷ்டி மாதிரி பல காரணங்களுக்காக limelight-இல் இருந்தால் ரீடர்களைப் பார்ப்பதே இல்லை என்றுதான் தோன்றும்.

நானும் வாசகரை விட்டு அதிக தூரத்தில் இருப்பதைத்தான் விரும்புகிறேன். வெளிச்சம் பட்டுக் கொண்டே இருந்தால், அந்த வெளிச்சத்திற்காக அசுரப்பசி ஒன்று வரலாம். அது உங்கள் சென்சிடிவிட்டியைக் கெடுத்துவிடும். நுண்ணுணர்வு எல்லாம் இல்லாமல் காணாமல் போய்விடும்.

* உங்களுடைய எழுத்துக்களில் வைணவத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? அல்லது பாதிப்பு தென்படாமல் கவனமாக எழுதுவீர்களா?

இ.பா.:  ( பதில் அடுத்த  இதழில் ...)

oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |