டிசம்பர் 15 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஆன்மீகக் கதைகள் : தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும் - 1
- ர. பார்த்தசாரதி
| Printable version | URL |

முன்னுரை

என் தாயார் எனக்கு, பாரதக் கதை சொல்லும் போது, திரௌபதி அரசவையில் வாதிட்டு ("என்னை இழந்து தன்னை இழந்தாரா? அல்லது தன்னை இழந்து பின் என்னை இழந்தாரா?"), கையால் காய்களைத் தொடாமல், கால்களால் ஆடி, பாண்டவர்களை திரும்ப வென்றதாகவும், சகுனியின் சூதினால் யுதிஷ்டிரன் இரண்டாம் முறையும் விளையாடி, ஆட்டத்தில் தன்னால் வெற்றி கொள்ள முடியும் என்று தெரிந்தும், தர்மத்திலிருந்து வழுவாதிருப்பதற்காக தெரிந்தே தோற்றதாகவும் சொல்லியிருக்கிறார்.

நான் கேட்ட கதையை 'தர்மரின் பொறுமையும், திரௌபதியின் பெருமையும்' என்ற தலைப்பில் ஒரு கதையாக எழுதினேன். இது பின்னால், என் தாயார் மறைந்தபின், முதலாவதாண்டு அஞ்சலியின் போது புத்தகமாகவும் வெளி வந்தது. அதை இங்கே ஆறு பாகங்களாகத் தருகிறேன்.முதல் பாகம்

இயற்கையாகவே துரியோதனன் பொறாமை கொண்டவன். யுதிட்டிரனின் ராஜசூய யாகம் சென்று வந்தபின் அதில் அசூயையும் சேர்ந்து கொண்டது. பாண்டு புத்திரர்களின் ஐஸ்வர்யத்தை முழுவதையும் அபகரிக்க வேண்டும், என்ற எண்ணம் பெருகிப் பெருகி, மாமா சகுனியிடமும், நண்பன் கர்ணனிடமும் வாய்விட்டு புலம்பும்படி செய்துவிட்டது.

சகுனியும் பல நாட்கள் தீவிரமாக சிந்தித்து, ஒரு நாள் துரியோதனையும் கர்ணனையும் தன் இருப்பிடத்திற்கு வரச் சொன்னான்.

சகுனி: 'துரியோதனா! சில நாட்களாக, எங்கள் இருவரிடமும் உன் எண்ணத்தை வாய்விட்டு சொல்லி வருகிறாய். நான் யோசித்து ஒரு வழி உருவாக்கியிருக்கிறேன். அதன் மூலம் பாண்டவர்கள் ஐஸ்வர்யம் அனைத்தையும் அவர்கள் நாட்டையும் வென்று விடலாம். அதற்கு ஒரு நாடகம் நடத்த வேண்டும். நாடகம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடக்க வேண்டுமானால் ஒரு முறையாவது ஒத்திகை பார்க்க வேண்டும்.'

துரியோதனன்: 'நாடகமா? போர் இல்லாத வெற்றியா?', அவநம்பிக்கை தொனிக்க விழைகிறான்.

Sakuni Duryodhananசகுனி: 'என்ன நாடகம் என்று சொல்லுகிறேன். அதைக்கேள்! யுதிட்டிரனையும் மற்ற பாண்டு புத்திரர்களையும் இங்கு விருந்துக்கு அழைக்க வேண்டும். பிறகு நிதானமாக சொக்கட்டான் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யுதிட்டிரனை ஆட அழைக்க வேண்டும். ஆட ஆரம்பிக்கும் முன் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருப்பதற்காக சில பொற்காசுகள் வைத்து விளையாடலாம் என்று ஆரம்பித்து அதற்கு யுதிட்டிரன் சரி என்று சொன்னதும், வலை விரிப்பது போல் பகடைப் பாயை விரிக்க வேண்டும். பிறகு பகடை அஸ்திரத்தை எடுப்பதற்குமுன், ஒவ்வொரு முறை காயை உருட்டும் போதும் சில பல பணய பொருள்கள் வைக்கலாம் என்று ஆரம்பித்து, ஆட்ட முடிவில் யாரிடம் பணயம் வைக்க ஏதும் பொருள் இல்லையோ அவர்கள் நாட்டை - இராஜ்யத்தை வைத்து ஆட வேண்டும் என்று முடிக்க வேண்டும்.'

துரியோதனன்: ''மாமா, புரிகிறது! சொக்கட்டான் ஆடி வெல்லலாம் என்று சொல்கிறீர்கள். நாடகத்தில் நீங்களும், நானும், கர்ணனும் வேண்டுமானால் நடிக்கலாம். யுதிட்டிரன் வந்து நடிக்க வேண்டும். அவன் வந்தாலும், அதற்கு மேலாக பகடைக் காய்கள் நடிக்க வேண்டும். போகாத ஊருக்கு வழி என்பார்கள். இப்போது போகாவிட்டாலும், எப்போதாவது போகும் போது கேட்ட வழி உபயோகப்படும். ஆனால் தங்கள் யோசனை 'கிட்டாத பழத்திற்கு கொட்டாவி' என்று தான் முடியும். பழமே கிட்டாத போது வாயைத் திறந்து மூடினால் என்ன பயன்? இவ்வளவு நாட்கள் யோசித்து இப்படி ஒரு வழி. ஆட்டம் முழுவதும் அனைத்தும் தோற்று யுதிட்டிரன் நாட்டை வைக்கும் போது, நான் எதிர் பணயமாக எந்த நாட்டை வைப்பது? இந்த நாடு இன்னும் என் கைக்கே வரவில்லை! வரும் முன்பே பணயம்? இது சரிப்படாது. வேறு வழி உண்டானால் கூறுங்கள்!'

சகுனி: "துரியோதனா! நீ கேட்பது சரிதான். நானும் இப்படித்தான் ஆரம்பிப்பேன் - நீயும் இப்படித்தான் கூறவேண்டும். 'என்னிடம் நாடு இருந்தால் வைத்து விளையாடுவேன். இல்லாததால் இதுவரை வென்ற பொருள் அனைத்தும் பணயமாக வைத்து விளையாடுகிறேன்' என்று சொல். யுதிட்டிரனும் சரி என்பான்".

துரியோதனன்: "நாட்டுக்கு ஒரு சாக்கு சொல்லிவிட்டீர்கள். முதலாவதாக யுதிட்டிரன் பொருள் அனைத்தும் இழக்க வேண்டும். கடைசியாகத்தான் நாடு. நான் முன்பே கேட்டேன். நாம் நடிக்கலாம். பகடைக் காய்கள் நம் பக்கம் நடிக்க வேண்டுமே?"

சகுனி: "புரிகிறது துரியோதனா! காய்கள் தன்னிச்சையாகத்தானே விழும். வேண்டிய எண்ணிக்கை எப்படி விழும் என்று தானே கேட்கிறாய். இதோ பார்! இரண்டு விதமான பகடைக்காய்கள் வைத்திருக்கிறேன்." மடியிலிருந்து ஒரு ஜோடி மரத்தால் ஆனதும், மற்றொரு ஜோடி தந்தம் போன்ற வெள்ளை காய்களையும் எடுத்து வைத்தான் சகுனி. "துரியோதனா! முதலில் இந்த மரக்காய்களின் சக்தியைப் பார். நீ முன்று எண்ணிக்கைகளை சொல்".

துரியோதனன்: "ஒன்று, ஐந்து, பன்னிரண்டு"

சகுனி மூன்று முறை காய்களை உருட்ட, ஒன்று, ஐந்து, பன்னிரண்டு விழுகிறது. துரியோதனனும், கர்ணனும் கண்கள் அகல விரியப் பார்க்கிறார்கள். சகுனி, அருகில் அமர்ந்த கர்ணன் காதில் ஏதோ சொல்லிவிட்டு, துரியோதனைப் பார்த்து, "நீ இப்போது இந்த காய்களை எடுத்து மூன்று முறை உருட்டு" என்று கூற, துரியோதனன் உருட்டுகிறான். பன்னிரண்டு, ஐந்து, ஒன்று விழுகிறது. துரியோதனன் சந்தேகமாய்ப் பார்க்கிறான்.

கர்ணன்: "நண்பா! மாமா என் காதில் 'பன்னிரண்டு, ஐந்து, ஒன்று என்று விழும் பார்' என்று தான் கூறினார். ஆக மாமா காய்களை நடிக்க வைப்பார் என்று தான் தோன்றுகிறது.

துரியோதனன்: "மாமா, இந்த வெள்ளைக்காய்கள்?"

சகுனி: "இந்த காய்கள், மரக்காய்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. முதல் ஆட்டத்தில் நான் வெள்ளைக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவேன், யுதிட்டிரன் மரக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவான். பிறகு இரண்டாவது ஆட்டத்தில் காய்களை மாற்றி ஆடலாம் என்று கூறி இந்த வெள்ளைக்காய்களை யுதிட்டிரனிடம் கொடுப்பேன். அவன் தோற்பான்.

கர்ணன்: "மாமா! அதிக சக்தி உள்ள காய்களை யுதிட்டிரன் கையில் கொடுத்தால்...எனக்குப் புரியவில்லையே?"

சகுனி: "சக்தி உள்ளது என்றால், என்னிடமிருந்து விலகி இருந்தாலும் , நான் சொன்னபடி கேட்கும் என்பதுதான். புத்திசாலி, அதிபுத்திசாலி இருவரில் அதிபுத்திசாலி பக்கத்தில் இல்லாது எதிரில் எங்கோ இருந்தாலும் குறிப்புணர்ந்து காரியம் செய்வான். அதுபோலத்தான் வெள்ளைக்காய்கள். புரிகிறதா?"

துரியோதனனும் கர்ணனும் வாய்பேசாது தலையை ஆட்டுகிறார்கள்.

துரியோதனன்: "மாமா! நீங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது உறுதியான பின், இரண்டாவது ஆட்டம் ஏன்? முதல் ஆட்ட முடிவில் நாடு முழுவதும் நம் கையில். பின் என்ன?"

சகுனி பெரிதாகச் சிரிக்கிறான்.

சகுனி: "துரியோதனா! செல்வமும் நாடும் நம் கைக்கு வந்ததும் பகையை மறந்து விடுவதா? பாண்டு புத்திரர்களை அப்படியே விட்டுவிடலாமா? அடுத்த ஆட்டத்தில் ஐவரையும் அடிமைப்படுத்த வேண்டும்."

கர்ணன்: "ஐயோ! அடிமைப்படுத்துவதா?"

சகுனி: "துரியோதனா, தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற சொற்படி நீதான் கலவரப்பட வேண்டும். ஆனால் கர்ணன் 'ஐயோ' என்று துடித்துவிட்டான். இதோ பார்! கர்ணன் வாயாலேயே பாண்டவர் ஐவரும் அடிமை என் கூற வைக்கிறேன்....ம்...இரண்டாவது ஆட்ட ஒத்திகையை ஆரம்பிப்போமா? கர்ணா! நீ இங்கு என் எதிரில் வந்து அமர். நீதான் யுதிஷ்டிரன். நான் துரியோதனன் சார்பில் ஆடும் சகுனி. துரியோதனா - நீ துரியோதனன் தான்."

கர்ணன்: "எனக்கு மட்டும் வேறு வேடமா, அதுவும் யுதிஷ்டிரன் வேடம்?"

சகுனி: "என் பங்கை நான் தான் செய்ய வேண்டும். அதுபோல துரியோதனனும் தான். யார் இப்போது யுதிஷ்டிரனை அழைத்து வர முடியும்? அதற்காகத்தான் நீ!"

கர்ணன் எழுந்து எதிர் பக்கம் அமர்கிறான். துரியோதனன் சகுனியையும் கர்ணனையும் மாறி மாறிப் பார்க்கிறான்.

சகுனி: "இது துரியோதனன் பேசும் வசனம் - 'யுதிஷ்டிரா! முதலில் இரண்டு ஆட்டம் சொக்கட்டான் ஆடலாம் என்று சொன்னோம். எதிர்பாராத விதமாக முதல் ஆட்டத்திலேயே நீ நாட்டை இழக்கும் படி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் ஆட என்ன செய்வது? முதல் ஆட்டத்தில் இந்த வெள்ளைக் காய்கள் மாமா சகுனிக்கு அபரிமிதமான வெற்றியை கொடுத்தது. இரண்டாவது ஆட்டத்தில் அதன்மூலம் உனக்கு வெற்றி கிடைக்குமோ என்னவோ! யாருக்குத் தெரியும்? இரண்டாவது ஆட்டம் ஆடாது போனால் நான் ஏதோ இந்த வெள்ளைக்காய்களில் சூது செய்து வெற்றியைப் பெற்றுவிட்டேன் என்றுகூடச் சொல்லுவார்கள். ஆகையால் அவசியம் ஆட வேண்டும்.

இந்தமுறை பணயமாக பெரிதாக ஒன்றும் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர், நம் சகோதரர்களை மாற்றிக்கொண்டால் போதுமானது. அதாவது உன் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் என் சகோதரர்கள் எண்ணிக்கையில் இருபதுபேர் சமம். நீ முதல் தடவை காய்கள் உருட்டுவதில் வெற்றி பெற்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை சொல்லி அது விழுந்தால் என்பக்கம் இருந்து இருபது பேர் உன்பக்கம் வந்து விடுவார்கள். உனக்கு அடிமை செய்வார்கள். நான் வென்றால் நகுல, சகாதேவன், இருவரில் ஒருவரை எனக்கு கொடுத்துவிட வேண்டும்.'

கர்ணன் தன்னை முழுவதுமாக யுதிஷ்டிரனாக பாவித்து யோசிக்கிறான்.

"யுதிஷ்டிரா, உன் பதில் என்ன?" என்று வாஞ்சையோடு சகுனி வினவுகிறான்.

"துரியோதனா! உன் வார்த்தைகள், எந்த தவறும் இல்லாதவை. இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்."

கர்ணன் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் சகுனி உற்சாக மிகுதியில் பலமாக படபடவென கை தட்டுகிறான். கர்ணன் திடுக்கிட்டு விழிக்கிறான். "என்ன?", கர்ணன் வினவ, துரியோதனன், "கர்ணா! நீ சொன்ன வார்த்தைகள் உனக்கே தெரியவில்லை. ஆட்டமிழந்து தோற்றால் நாங்கள் ஐவரும் அடிமை என்றுதான் சொன்னாய். 'என்ன?' என்று இப்போது கேட்கிறாயே?"

கர்ணன் நடந்ததை முழுதும் கேட்டு மனம் துடிக்கிறான். 'யுதிஷ்டிரனாக பாவித்த மாத்திரமே சகோதரர்கள் நூற்றியைந்து என்று கூறியிருக்கிறானா? யுதிஷ்டிரன் அப்படிப்பட்டவனா?' கர்ணன் சிந்தனை தடைபடுகிறது.

 

சகுனி மறுமுறை முதலிலிருந்து எப்படி யுதிஷ்டிரனை சொக்கட்டான் ஆட்டத்திற்கு அழைப்பது, வலைவிரிப்பது, பிடிப்பது என்று உற்சாகமாய் கூறலானான். 'தூண்டிலில் புழுவை வைத்து பெரிய மீன்களை பிடிப்பது போல, பாசம் சகோதர பாசம் என்னும் தூண்டிலில் யுதிஷ்டிரனைப் பிடித்து விடலாம்' என்று முடித்தபோது, துரியோதனன் மிகவும் திருப்தியடைந்தவன் ஆனான்.

அதே சமயம், கர்ணன் மட்டும் சற்று மனம் கலங்கி குழம்பினான். தூண்டில் புழுவாக சகுனி உபயோகிக்க, துரியோதனன் தன் சகோதரர்களையே தர தயாராகி விட்டானோ என்ற பயம் ஏற்பட்டது. அந்த நொடி நேர தடுமாற்றமும் துரியோதனனுக்கு சகுனி கூறிய உற்சாகமான வார்தைகளில் மறைந்து போனது. சகுனி சற்று மௌனமானான்.

அதே நேரத்தில் துரியோதனன் கர்ணன் இருவரும் பாண்டவர்கள் ஐவரையும் வெற்றி கொண்ட கனவை அசை போட்டு அமர்ந்திருந்தனர்.

சகுனி மனத்துள் எண்ணினான். பாண்டவர் ஐவரையும் சூதாட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட அழித்துவிடலாம். அடிமையாக்கி விடலாம். ஆனால் திரௌபதி? திரௌபதி? … மேற்கொண்டு சகுனியால் சிந்திக்க முடியவில்லை. கர்ணனும், துரியோதனனும் அவர்களுக்கே உண்டான வெறுப்பு, ஆத்திரத்துடன் 'பாண்டவர்களை ஒடுக்கிவிட்டோம்; ஆனால் திரௌபதி? திரௌபதி?  மேற்கொண்டு அவர்களாலும் சிந்திக்க முடியவில்லை.

மூவரும் ஏக காலத்தில் திரௌபதியை நினைத்து நினைத்து, அழிவுவர வேண்டும் என்று வேண்டினர். ஆக பாண்டவர்களோடு திரௌபதிக்கும் கேடு வர வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் முடிவாக திரௌபதி, திரௌபதி ... அழிவு வேண்டும் என தங்களுக்கே கேடு வெண்டி நின்றனர்.

பலமுறை பல சந்தேகங்களை, துரியோதனனும் கர்ணனும் கேட்டுக் கேட்டு ஆட்டத்தில் வெற்றி என உறுதி செய்து கொண்டனர். வழி அனுப்பும் முன்பாக சகுனி துரியோதனன், கர்ணன் இருவரையும் பார்த்துக் கூறினான்.

"இந்த நாடகம் இத்துடன் முடிந்து விட்டது என்று எண்ணாதீர்கள். பாண்டு புத்திரர்கள் ஐவரையும் வென்ற பிறகு மிக முக்கியமான பகுதி இந்த நாடகத்தில் உண்டு. அதை இப்போது உங்களுக்கு கூற மாட்டேன். ஒத்திகை ஏதும் இல்லாமல் நான் நடத்தப் போகும் பகுதி அது. துரியோதனா! அந்த நேரத்தில் நீ மிகவும் பொறுமையாகவும், நிதானத்துடனும் இருக்க வேண்டும். அதிலும் அதற்கு அடுத்த வெற்றிக்கும் பிறகு கூட மிக மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இது மிக அவசியமானது. என்னிடம் இப்போது ஏதும் கேட்காதீர்கள். அந்த சந்தர்பத்தில், துரியோதனா! ஏதும் யோசியாது நான் சொல்வதற்கு 'சரி' என்று மட்டும் நீ சொல்ல வேண்டும். பிறகு பண்டவர்கள் வாசம் வனவாசம். போய்வாருங்கள்!" என விடை கொடுத்தான் சகுனி.

நாடகத்தின் கடைசி பகுதி என்னவென்று சகுனி முன்பே முடிவு செய்துவிட்டான். சகுனியின் நினைப்பு இப்படிப் போனது! 'கடைசிப் பகுதியை இப்போதே சொன்னால் துரியோதனன் தயக்கம் காட்டுவான். கர்ணனும் கூட உற்சாகப் படுத்த மாட்டான். 'பாண்டவரை அடிமைப்படுத்த வேண்டும்' என்ற உடனேயே கர்ணன் கையைச் சுட்டுக்கொண்டவன் போல 'ஐயோ!' என்று கூவிவிட்டான்.

யுதிஷ்டிரன் எல்லாவற்றையும், எல்லோரையும், தன்னையும் இழந்து நிற்கும் போது 'யுதிஷ்டிரா! உன்னிடம் விலை மதிப்பில்லா மாணிக்கம் ஒன்று உள்ளது. அது உனக்கு எப்போதும் சகல சௌபாக்கியத்தையும் தரவல்லது. அதை எதிர் நிறுத்தினால் நிச்சம் வெற்றி உனக்கு உண்டாகும்', என பலவாறு வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசி, திரௌபதியை பணயமாய் எதிர் நிறுத்தி, இதுவரை இழந்த பொன், பொருள், நாடு, நகரம் முதலியவற்றை எதிர்வேண்டி ஆடு எனச் சொல்ல வேண்டும். திரௌபதியை தாராளமாய் புகழ வேண்டும்; துதிக்க வேண்டும்.

தண்ணீரில் மூழ்குபவன் சிறு மரத்துண்டு மிதந்தாலும் அதைப் பற்றுவான். அதுபோல், கலங்கி நிற்கும் யுதிஷ்டிரன், புத்தி, மனம் ஏதும் செயல்படாது. பிரமித்து, திரௌபதியையும் வைத்து விளையாடுவான். தவிர தோற்றாலும் 'நீங்கள் அனைவரும் உள்ள இடத்திற்குத்தான் அவளும் வருவாள்' என புரிந்தும் புரியாமலும் வேகமாய் முன்னும் பின்னும் சொல்லி ஏதாவது குழப்பம் செய்து, ஆட வைத்து, வெற்றி கொண்டு, பிறகு யுதிஷ்டிரன் செய்தது அனைத்தும் தவறு, குற்றம், என குறைகள் கூறி, பாண்டவர்கள் வனவாசத்திற்கு வழி வகுத்துவிட வேண்டும்.

இந்த சாகசத்தில் துரியோதனன் ஒத்துழைப்பும் வேண்டும். 'நாட்டை வென்ற பிறகு இரண்டாவது ஆட்டம் ஏன்?' என்று கேட்டவன் அல்லவா? சிறு பொறியே, பெரு நெருப்புக்குக் காரணம் ஆகும். திரௌபதியோ அணையா நெருப்பு. அவளையும் அடிமை என்று கடைசியில் சொல்லி, நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும். பாண்டவரை வென்ற வெற்றிக் களிப்பில், துரியோதனன் இருக்கும் போது இதைச் சொல்லி, சொல்லியபடி செய்து, எல்லோரையும் வனவாசத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

துரியோதனன் தன் புஜபலத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவன். பாண்டவர்களை எப்படியோ வெற்றி கொண்டு வனவாசம் அனுப்பிவிட்டால் போதும்; திரௌபதியால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணுவான். எனக்குத் தெரியும் அவளால் பெருந்தீயை உருவாக்க முடியும் என்று. சட்டியில் இட்ட தீயைப் போல, அவளையும் அடிமை என்று கூறி, நாட்டை விட்டு எட்டி வைத்துவிட வேண்டும். அப்படி செய்யாமல் போனால், திரௌபதி நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் தீதுதான்.'

சகுனி தனிமையில் அமர்ந்து மேலும் சிந்தித்தான். 'துரியோதனன் ஒன்று, ஐந்து, பன்னிரண்டு என்ற காய்களை உருட்டுதல் மூலம் வெற்றி என நினைக்கிறான். நாடகத்தில் காய்கள் ஒரு சிறு அங்கம். "காய்கள் நடிக்குமா?" என்றும் கேட்டான்! நடிக்க வைப்பேன் என நம்பவைத்தேன். இது ஆரம்பம்; அவ்வளவுதான்.

முதலில் யுதிஷ்டிரனை வரவழைக்க வேண்டும். காய் ஆட வைக்க வேண்டும். பிறகு ஆட்ட முடிவில் நாடு எங்களுடையது என்று முடிக்க வேண்டும். இது நாடகமோ அல்லது நிஜமோ. இந்த அங்கம் எதிர்பாராது கடைசியில் தான் வர வேண்டும். இந்த வனவாசத்தை முதலிலோ அல்லது ஆட்ட நடுவிலோ சொன்னால் எல்லாம் குலைந்து போய்விடும். துரியோதனன் ஒரு முரட்டுக் குதிரை. நாடு என்னும் புல்லை காட்டி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

யாருக்கும் துளி சந்தேகம் கூட ஏற்படாதவாறு என் சொக்கட்டான் வலை பின்னப்பட வேண்டும். பாண்டவர்களோ, அல்லது விதுரர், பீஷ்மர் போன்றவர்களோ சற்று சந்தேகப் பட்டுவிட்டால், நான் என்ன சாமர்த்தியம் செய்தாலும் காரியம் கைகூடாது.

முதலில் சிறு எண்ணிக்கையில் பொற்காசுகள் பணயம். அப்போது, துரியோதனன் கைப்பொருள் மட்டும் தான் ஆட உபயோகப் படுத்தப்படுகிறது - என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அரசாங்க கருவூலத்திலிருந்து அரைக்காசு கூட துரியோதனன் பெறவில்லை என்று விதுரர் முதலில் நம்ப வேண்டும். பிறகு யுதிஷ்டிரன் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும்படி செய்ய வேண்டும்.

மன்னன் என்பவன் தனக்கு பிரியமானவர்களுக்கு சந்தோஷ மிகுதியால் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களைத்தான் தருவான். துரியோதனனும் முதலில் யுதிஷ்டிரனின் முத்து மாலையைத்தான் கேட்க வேண்டும். யுதிஷ்டிரன் கண்ணில் சூது மறைந்து, தம்பி துரியோதனன் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற மன ஆவலை உண்டாக்க வேண்டும். பிறகு பசு மந்தைகள், சில கிராமங்கள், பல கிராமங்கள் என வலையைப் பெரிதாக்க வேண்டும். ஒரு நிலையில் பல பிரதேசங்களை வென்று, கடைசியில் இந்திரப்பிரஸ்தம் என்று கேட்க வேண்டும். அப்போது யுதிஷ்டிரனின் நாட்டின் பல பகுதிகள் துரியோதனன் கையில் வந்திருக்கும். அந்த நிலையில் யுதிஷ்டிரனால் ஏதும் செய்ய முடியாது. வென்ற பகுதிகளை பணயமாய் காட்டி, இந்திரப்பிரஸ்தம் கவர வேண்டும். குரங்கு ஆப்பம் பிட்ட கதைதான் - நாடு முழுதும் நம்வசம்!

"ஐயோ!" என்று கூவிய கர்ணன் வாயால், "இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்" எனக் கூற வைத்தது போல், நாடகத்தின் மறுபகுதியை நடத்திவிட வேண்டும்'.


Draupathiசகுனி யோசித்து திட்டமிட்ட நாடகம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஆனால் யுதிஷ்டிரன் திரௌபதியையும் தோற்றான் என்றவுடனேயே, சகுனியின் பிடிப்பை மீறி, துரியோதனனும், அவன் சகோதரர்களும் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர். சற்றும் எதிர்பாராமல் கர்ணனும் கூட அல்லவா, திரௌபதியிடம் தன் துவேஷத்தை, தாசி என விளித்து அவையில் கொட்டி விட்டான்.

ஆக, இதுவரை, ஆற அமர பல நாட்கள் ஒத்திகை பார்த்து நடத்திய நாடகத்தின் முடிவில் எது நடந்துவிடக் கூடாது என சகுனி நினைத்தானோ அதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் துரியோதனனும் அவன் கூட்டமும்.

சகுனி பாண்டவர் ஐவரையும் அடிமையாய் காட்டி, பாஞ்சாலியையும் கூட நாட்டைவிட்டு எட்டி வைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் பஞ்சபூதங்களின் துணையுடன் பட்டினப்பிரவேசம் புறப்பட்டதுபோல், பாஞ்சாலி அரச அவையில் விரித்த கூந்தலுடன் வளர்ந்த வஸ்திரத்துடன், ஊழி கூத்து நடத்தும் மாகாளி போலே நின்று கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

சூதும் சதியும் அறிந்த சகுனியே கலங்கிவிட்டான். இனி நடப்பது எதுவும் நம் கையில் இல்லை. நடப்பது நடந்தே தீரும் - என்று எதிர்பார்த்து மனத்தை திடப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் சகுனி.

oooOooo
ர. பார்த்தசாரதி அவர்களின் இதர படைப்புகள்.   ஆன்மீகக் கதைகள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |