டிசம்பர் 15 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : திருநீறு
- SP.VR. சுப்பையா [lala@touchtelindia.net]
| Printable version | URL |


மெய்ஞானம் என்றால் என்ன? மெய்ஞானத்தால் நாம் மேம்பட்டது எப்படி என்று பார்ப்போம்.

சமுத்திரத்தின் எதிரில் ஒருவரை வாளியுடன் நிறுத்தி, இந்த சமுத்திரத்தில் எத்தனை வாளி தண்ணீர் இருக்கிறது என்று சொல்வதற்கு ஒப்பாகும் மெய்ஞானத்தைப் பற்றி விளக்குவது. அத்தனை பெரியது மெய்ஞானம்..முழுமையாகச் சொல்வதென்பது அறிதான காரியம். எனக்குத்தெரிந்த விஷயங்களை, நான் கற்றுத் தேர்ந்தவற்றை என் நடையிலேயே சொல்கிறேன்.

முதலில் திருநீற்ரிலிருந்து துவங்குகிறேன்.

Variyarஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டி ருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன்  இருக்கையில்  அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான் "பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?"

வாரியார் சுவாமிகள்,வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார். ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப்  பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?

வாரியார் சுவாமிகளும் அவன் மொழியிலேயே அவனுக்குப்பதில் சொன்னார், " தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார் கள்.என்நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன.ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள். ஆகவே நீ ஒரு நாளும் உன்நெற்றிக்கு வெள்ளை அடிக்காதே!"

அதற்குப்பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. வாயடைத்துப் போனான்.


திருநீறு செல்வம். அதைப்பற்றி கண்டனூர் சாமியாடிச் செட்டியார் அவர்கள் சிறப்பாகப் பல விஷயங்களைச் சொல்வார்கள். எப்படி நம் கையில் திருநீற்றை வாங்க வேண்டும், எப்படி அதைப் பூசிக்கொள்ள வேண்டும் என்பதைப் பல முறை செய்தும் காட்டியுள்ளார்கள். கையில் மிகுந்து விட்டதை ஏன் கீழே கொட்டிவிடக்கூடாது என்பதற்குக்கூட காரணங்களை விளக்கமாகச் சொல்வார்கள்.

திருநீற்றைப்பற்றிய இன்னொரு சுவையான கதையும் உண்டு !

பெரிய துறவி ஒருவர் தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒருமுறை அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். செல்லும் இடங்களில் தன் பக்தர்களுக்குக் கொடுப்பதற்காக 50 கிராம் அளவுள்ள விபூதி பாக்கெட்டுகளை ஒரு ஸ¥ட் கேஸ் நிறையத் தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்றார்.

நியூயார்க் விமான நிலயத்தில் அந்தப்பெட்டி மாட்டிக்கொண்டு விட்டது. சுங்க இலாகா அதிகாரிகள் அந்தப் பெட்டியையைப் பிடித்து நிறுத்திவிட்டார்கள். அதன் கைப்பிடி மீது கட்டப்பெற்றிருந்த அடையாள அட்டையைப் பார்த்து அதன் உரிமையாளரான துறவியைத் தங்கள் அறைக்கு வரச் செய்து விசாரித்தார்கள். ஸ்கேன் செய்யும் இயந்திரத்தில் தங்கள் பார்வையில் பட்ட அந்தச் சிறு சிறு பொட்டலங்கள் அனைத்தும் கஞ்சாப் பொட்டலங்களாக இருக்குமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு.  அதனால்தான் விசாரனை!

பெட்டி திறக்கப்பட்டது.ஒரு பொட்டலம் பிரித்துப் பார்க்கப்பட்டது. பிரித்த அதிகாரியால் விபூதியின் நெறு நெறுப்பையும், வாசனையை மட்டுமே உணர முடிந்தது. வேறு ஒன்றையும் அவரால் தெரிந்து கொள்ளமுடியவில்லை.

துறவியார் தனது தெளிவான ஆங்கிலத்தில் அதைப்பற்றிய முழு விபரங்களையும், தான் யார் என்பதையும், தன்னை அழைக்க வந்திருப் பவர்கள் யார் யார் என்பதனையும் சொன்னார்

சற்று சமாதானமடைந்த அதிகாரி, ஒரே ஒரு சந்தேகம் - அதை மட்டும் தெளிவு படுத்துங்கள் என்று சொன்னதோடு மேலும் கேட்டார்.

" மொத்தத்தில் இது மாட்டுச்சாணத்தில் செய்த சாம்பல்  என்கிறீர்கள். ஓக்கே.. ஆனால்  இந்த சாம்பலை உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தினமும் பூசிக்கொள்வதன் நோக்கம் என்ன? தினமும் ஏன் அதை பூசிக்கொள்ள வேண்டும்? "

துறவியார் கீழ்க்கண்டவாறு பதிலுறைக்கலானார்

"ஆன்மா (உயிர்), மனம் (உள்ளம்), அறிவு என்ற மூன்று கட்சிக் கூட்டணியால் ஆனதுதான் நமது உடம்பு. அறிவை ஓரம் கட்டிவிட்டு, மனம் தன்னிச்சையாகச் செயல்படும் போது, மனிதன் மது, மாது,   போதை வஸ்துக்கள், தீய உணவுப்பழக்கங்கள் என்று கெட்டுப்போய் விடுகின்றான். பொருள் ஈட்டுவதிலும் அவன் நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றான் அதர்மம்  அவனோடு கைகோர்த்துவிடுகின்றது.
கடைசியில் தன் உடல் நலம் கெட்டு, ஆட்டம் போட்ட கூட்டணி உடைந்து மருத்துவர்களால் கைவிடப்படும்போதுதான் தன் தவறுகளை உணர்கிறான். அப்போது உணர்ந்து என்ன பயன்? ஆகவேதான் சிறுவயதில் இருந்தே நாங்கள் பயிற்சி கொடுக்கின்றோம். அழியப்போகும் உடம்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே- உடம்பு கேட்பதையெல்லாம் கொடுக்காதே -ஒருநாள் அது எரிந்து சாம்பல் ஆகப்போகின்றது.  ஆகவே உன் ஆன்மாவிற்கும், அறிவுற்கும் உகந்தது எதுவோ அதை மட்டும் செய்! மனதை நெறிப்படுத்து இந்த உடம்பு சாம்பல் ஆகப் போகிறது என்பதை நினைவிற் கொள்ள தினமும் இரண்டு முறையாவது இந்த சாம்பலிலான திருநீற்றைப்பூசிக்கொள் என்று சொல்லிக்கொடுத்து பூசச் செய்கின்றோம்!"

துறவியாரின் தெளிவான விளக்கத்தினால் அதிர்ந்துபோன அந்த அமெரிக்கச் சுங்க அதிகாரி மெல்லிய குரலில் சொன்னார்.

"சுவாமிஜீ,  எனக்கு இரண்டு பொட்டலங்களையும், உங்கள் இந்திய முகவரியையும் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். உங்களை சிரமப் படுத்தியதற்கும் எங்களை மன்னியுங்கள்! ".

 

oooOooo
SP.VR. சுப்பையா அவர்களின் இதர படைப்புகள்.   இந்து மதம் என்ன சொல்கிறது ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |