டிசம்பர் 15 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : தவமாய் தவமிருந்து
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

ஆக்ஷன், காதல், மசாலா பார்முலா படங்களாகவே பார்த்து வரும் தமிழ் ரசிகர்களுக்கு மாறுதலுக்காக நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை சினிமாத்தனமில்லாமல் காட்டியிருக்கும் மற்றொரு படம் தான் தவமாய் தவமிருந்து. தமிழ் திரையுலகில் அம்மா செண்டிமெண்ட் படங்கள் எவ்வளவோ வந்திருந்தாலும் அப்பாவை மையப்படுத்தி வந்த படங்கள் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்ற நிலையில் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கை மேம்படவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு தகப்பன் படும் பாடுகளை அழகாகக் காட்டி நம்மை அழ வைத்திருக்கிறார் சேரன்.

Thavamai Thavamirundhuபிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் ராஜ்கிரண் தான் படிக்காத குறையை போக்கிக்கொளும் விதமாக தன் மகன்கள் இருவரையும் தகுத்திக்கு மீறி செலவு செய்து படிக்க வைக்கிறார். மூத்த மகனுக்கு பாலிடெக்னிக்கிலும் இளைய மகனுக்கு பொறியிலல் கல்லூரியிலும் இடம் கிடைக்கிறது. மூத்தவன் படிப்பு முடிந்ததும் பெரிய தொகையை டெப்பாஸிட்டாக கட்டி அவனுக்கு ஒரு நல்ல வேலையும் வாங்கித் தருகிறார் ராஜ்கிரண். கூடவே கல்யாணமும் செய்து வைக்கிறார்.

அப்பாடா.. பிள்ளை தலையெடுத்துவிட்டான். இனி நாம் பிள்ளைகளுக்காக வாங்கிய கடன்களை கொஞ்சம் கொஞ்சமாகச் சமாளிக்கலாம் என்று நினைக்கும் போது குடும்பத்தில் அடுக்கடுக்காக வருகின்றன சோதனைகள். மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தனிக்குடித்தனம் போகிறார் மூத்த மகன். கல்லூரியில் தன்னுடன் படிக்கும் பெண்ணைக் காதலிக்கும் இளைய மகன் ஒரு சமயத்தில் அந்த பெண்ணோடு நெருக்கமாகி விட - கர்பமாகிறார் காதலி. ஒரு கட்டத்திற்கு மேல் விஷயத்தை மறைக்க முடியாது என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படும் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள். மொத்தத்தில் பெற்ற இரு மகன்களாலும் வேதனைகளை மட்டுமே அனுபவிக்கிறார் ராஜ்கிரண்.

சென்னைக்கு ஓடிப் போகும் காதலர்கள் இருவரும் வாழ்க்கையை நடத்த ரொம்பவும் சிரமப்படுகிறார்கள். இதற்கிடையே குழந்தையும் பிறக்கிறது. இனி சென்னையில் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் மகனும் மருமகளும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அப்பாவின் கிராமத்திற்கே வருகிறார்கள். தாங்கி அணைத்துக்கொல்கிறார் அப்பா. ஒரு வழியாக வாழ்கையில் முன்னேற ஆரம்பிக்கிறார் இளைய மகன். தன்னால் ஏகப்பட்ட வேதனைகளை அனுபவித்த அப்பா, அம்மாவை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறார். இளையவனின் வசதியான வாழ்வைப் பார்த்து பொறுமும் மூத்தவன் அப்பாவிடம் கேட்கும் ஒரு கேள்வி அவர் உயிரையே பறிக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்கவில்லை ராஜ்கிரண் - வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. மகன்கள் இருவரையும் சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு செல்லும் காட்சி, தீபாவளிக்கு அவர்களுக்கு துணி மற்றும் பட்டாசு வாங்க அவர் படும் சிரமங்கள், ஒவ்வொரு முறையும் மகன்களுக்காக அவர் கடன்வாங்கும் காட்சிகள், கடைசியில் இளைய மகனிடம் "உனக்கு நான் ஏதாவது குறை வெச்சிட்டேனாப்பா?" என்ரு அவர் கேட்கும் காட்சி என்று பல காட்சிகளில் படம் முழுக்க நம்மை அவரது நடிப்பால் கட்டிப் போடுகிறார். அவ்வளவு எதார்த்தம் அவர் வரும் காட்சிகளில் எல்லாம்.

அவருக்கேற்ற ஜோடியாக சரண்யா.. சரண்யாவா இப்படி நடித்திருக்கிறார் என்று நினைத்து வியக்குமளவிற்கு அருமையான நடிப்பு. மூத்த மகன் தன் மனைவிக்காக அல்வா வாங்கிவரும் போது "ஏன் உன் பொண்டாட்டி மட்டும் தான் அல்வா திங்கணுமோ?" என்று சொல்லிவிட்டு "புள்ளத்தாச்சி பொண்ணுக்கு கடைப்பலகாரம் ஆகாது.. அதான் சொன்னேன்" என்று சொல்லும் காட்சியிலும், வீட்டை விட்டு ஒடிப்போன இளைய மகனை முதலில் புறக்கணித்துவிட்டு பிறகு அவன் குழந்தையைப் பார்த்து மனம் மாறும் காட்சியிலும் கலக்கியிருக்கிறார் சரண்யா.

சேரன் - இளைய மகனாக. மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தன் அப்பாவைப் பார்க்கப்போகும் போது இவர்தான் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் மெறுகேறி வருகிறது சேரனின் நடிப்பு. காதலியுடன் இக்கட்டான சூழ்நிலையில் ஓடிப்போக முடிவு செய்து அதை பெற்றோர்களிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் கட்டத்தில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்துகிறார் சேரன். ஆனாலும் சேரன் அழும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களுக்கு என்னவோ சிரிப்புதான் வருகிறது.

Seran, Padma Priyaபுதுமுகம் பத்மபிரியா சேரனின் காதலியாக. நடிப்பு பிரமாதம் என்றாலும் சில இடங்களில் தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவதை தவிர்த்திருக்கலாம். மூத்த மருமகளாக புதுமுகம் மீனாள். அசாத்தியமாக நடித்திருக்கிறார். தொடர்பு முற்றிலும் விட்டுப் போன மாமனார், மாமியார் மைத்துனர் பல காலம் கழித்து தன் வீட்டிற்கு வரும் போது "வாங்க.." என்று ஒற்றை வார்த்தை கூறுகிறாரே.. யப்பா என்ன அழுத்தம் இந்தப் பெண்ணிற்கு... அதை விட வசதியாக வாழும் மைத்துனன் வீட்டைப் பொறாமை கலந்த ஆதங்கத்தோடு பார்க்கும் போதும் வியக்க வைக்கிறார். படத்தில் ராஜ்கிரணின் பிரஸில் வேலைப் பார்பவராக வரும் இளவரசும் நம் மனதை நெகிழச் செய்கிறார்.

இசை சபேஷ்-முரளி. பாடல்களும் பின்னணியும் ஓஹோ என்று இல்லை. ஆனாலும் ஓக்கே ரகம். பிரபுவின் ஒளிப்பதிவு அருமை. ஒரு நல்ல கதாசிரியராக சபாஷ் வாங்கும் சேரன் இயக்குனராக படத்தின் சில இடங்களில் குறைகளை நிவர்த்தி செய்திருக்கலாம். குறிப்பாக இஞ்ஜினியரிங் பட்டதாரியான சேரன் வேலை கிடைக்காமல் திண்டாடும் காட்சிகள், ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு அவர் பெற்றோர்களுக்கு வசதி செய்துதரும் காட்சிகள், பத்மபிரியா சேரன் கல்லூரி காதல் காட்சிகள் போன்றவை படத்தை சற்று இழுக்கின்றன.

மொத்தத்தில் இன்னொரு ஆட்டோகிராப்பை உருவாக்க முயன்று அதில் மகத்தான வெற்றியும் பெற்றிருக்கிறார் சேரன். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் ஒரு நிமிடமாவது தனக்காக தன் பெற்றோர் பட்ட கஷ்டங்களை நினைப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். அப்படி அவர்கள் நினைத்தால் அதுவே சேரனின் வெற்றி.

oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |