டிசம்பர் 16 2004
தராசு
கட்டுரை
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : வெற்றி மற்றாங்கே!
  - எஸ்.கே
  | Printable version |

  "அவர் பந்தை உதைத்துத் தள்ளும் லாவகம்தான் எவ்வளவு ஜோரா யிருக்கிறது. பந்தைத் தலையால் முட்டுவதும், தடுப்பதும் மற்றும் dribbling, follow through எல்லாம் ஒரு காவியம்போல் அல்லவா இருக்கிறது!"

  "ஆமாம். அவரிடம் பந்து சென்றால் அப்படியே அடிமையாகி விடுகிறதே!"

  "அதெல்லாம் சரி ஐயா, எவ்வளவு கோல் போட்டார்? அதைச் சொல் முதலில்!"

  இதுதான் இவ்வுலகின் நிதர்சனமான நடைமுறை!

  என்னென்ன சாதனைகளை செய்து முடித்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதுதான் நமக்குப் பெயரைப் பெற்றுக் கொடுக்கும். முழுமையாக்கப்படாத எந்த முயற்சியும் கவைக்கு உதவாது. சென்னைத் தமிழில் சொன்னால், "வேலைக்கு ஆகாது"!

  Consummation - என்பதன் அவசியத்தை அனைவரும் அறிவார்கள்!

  நீங்கள் உங்கள் உதவியாளரைக் கூப்பிட்டு உங்களுடைய முக்கியமான பிரயாணத்திற்கான டிக்கட் வாங்கச் சொல்லி அனுப்புகிறீர்கள். சுமார் மூன்று மணி நேரம் கழித்து திரும்பி வருகிறார்.

  "என்னப்பா, டிக்கட் வாங்கிட்டயா?"

  "இல்லீங்க, கிடைக்கல்லே"

  "பின்னே இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டிருந்தே?"

  "கியூவிலே போய் நின்னேன். நிறைய பேர் கியூவை உடைச்சு முந்திப் போய் டிக்கட் வாங்கிட்டதாலே எனக்குக்  கிடைக்கல்ல"

  "சரி, எல்லாரும் போன மாதிரி நீயும் முண்டியடிச்சு வாங்கறத்துக்கு என்ன?"

  "அதெல்லாம் தப்பில்லைங்களா? மத்தப் பேர் ஊடாயிலெ நுழைஞ்சா நாம்பளும் அதே மாதிரி செய்யலாமா? அடிச்சு பிடுச்சுப் போய் வம்படிக்கறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுங்க."

  இந்த மாதிரி பேர்வழியை உங்களுக்குப் பிடிக்குமா என்ன? கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடிக்கும் ஆளைத்தானே எல்லோரும் விரும்புவர்!

  இலக்கை வெற்றிகரமாக அடைதல் முக்கியமா, அல்லது அதை அடைவதற்கு எத்தகையான வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறோம் என்று ஆராய்வது முக்கியமா என்கின்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

  "Means should be as good as the ends" என்று ஒரு சாராரும், "Ends will justify the means" என்ற கருத்தை மற்றொரு சாராரும் வலியுறுத்தி வருகின்றனர்.

  செயல்முறைகளைத் திட்டமிட்டு, வெற்றி இலக்கை எப்படி அடைவது என்றாய்ந்து, அதற்கான தந்திரவியல் (strategy) திறனைக் கைக்கொண்டு, முழுமையாக ஒரு வேலையை செய்து முடிப்பவர்கள்தான் சாதனையாளர்கள் என்று போற்றப் படுவர். அவ்வாறில்லாமல், அந்த முயற்சியில் ஈடுபடும்போது கையாளப் போகும் செயல்பாட்டின் கூறுகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டு, அதிலேயே உழன்று கொண்டிருந்தால் வெற்றி இலக்கை எட்டுவது எங்ஙனம்?

  இதைப்பற்றி வள்ளுவர் தீர்மானமான கருத்துக்களை எடுத்துரைக்கிறார்:-

   வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
   தீர்ந்தாரின் தீந்தன்று உலகு.

  எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனைப் பாதியில் நிறுத்தக் கூடாது. முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். குறையோடு விட்டோடுபவர்களை இவ்வுலகம் வெறுக்கும் - என்ற கருத்துக்கொப்ப அமைந்தது அந்தக் குறள். 

  நம்மால் முடியுமா என்று மலைக்காமல் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அது வெற்றி பெரும் வலிமையைக் கொடுக்கும் என்பதை இந்தக் குறளில் வலியுறுத்துகிறார்:-

   அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
   பெருமை முயற்சி தரும்.

  பாதிக் கிணறு தாண்டுபவர்களை யார் வேண்டுவர்? "எப்படியாவது" காரியத்தை சாதித்துக் கொடுப்பவர்களைத்தான் உலகம் விரும்புகிறது! அதற்காக தவறான வழிகளில் சென்று, சட்டங்களை மதிக்காமல் செயல்பட்டு, தீயவர்களுடன் சேர்ந்து, "வெட்டிக் கொண்டு வா" என்றால் "கட்டிக் கொண்டு வந்து விட்டேன்" என்ற செயல்பாட்டினை நான் வலியுறுத்தவில்லை. இந்த உலகம் எந்த நிலையிலும் ஒரு மிதமான போக்கையே வலியுறுத்துகிறது. ஏந்தவொரு கோட்பாட்டையும் முரட்டுப் பிடியாகப் பிடித்துக் கொண்டு, விளைவைப் பற்றிக் கவலையில்லை என்ற மன நிலை நடைமுறைக்கு ஒவ்வாது.

  கே.பாலசந்தரின் "புன்னகை" என்ற திரைப் படத்தில் மூன்று நாயகர்கள். ஒருவர் "கொள்கைப் பிடி, குரங்குப் பிடி" என்றிருப்பவர். இரண்டாமவர் அதன் நேர் எதிர் - கெட்ட வழியில் செல்பவர். மூன்றாமவர் நீரோட்டம் எப்படிச் செல்கிறதோ அதன்படி தன் செயல்பாட்டை மாற்றிக் கொண்டு, தடைகள் வந்தால் அதனுடன் மோதிக் கொண்டு காயப் படாமல், அதனின்று ஒதுங்கி வெற்றி இலக்கை நோக்கிச் செல்லும் "பிழைக்கத் தெரிந்தவர்". யார் இந்த உலகத்தோடு "ஒட்ட ஒழுகுபவர்" என்பதை நீங்களே தீர்மனித்துக் கொள்ளுங்கள்.

  அரிச்சந்திரன் கதையை ஒரு பள்ளி மாணவன் படித்தான். ஆசிரியர் அவனிடம் கேட்டார், "அரிச்சந்திரன் கதையிலிருந்து என்ன அறிந்து கொண்டாய்" என்று.

  அதற்கு அந்த மாணவனின் பதில், "என்னிலையிலும் ஒரு பொய் கூட பேச மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதத்துடன் இருந்தால், அரசு போய், செல்வம் போய், மனைவி இழந்து, மக்களிழந்து, மயானத்தைக் காவல் காத்து வயிற்றைக் கழுவும் நிலைக்குத் தள்ளப்படுவாய் என்று தெரிந்து கொண்டேன்" என்றான்.

  அவன் புத்திசாலி! "உண்மை" என்பது ஒரு relative term என்பதை அறிந்து கொண்டான்! வறட்டு வேதாந்தங்கள் வேணுமானால் "அவ்வுலகுக்கு" சாதகமாக இருக்கலாம்; ஆனால் நிச்சயமாக இவ்வுலகில் "பொய்மையும் வாய்மை யிடத்த" என்று சூழ்நிலைக்கொப்ப ஒழுகுதல் அவசியம்.

  நீங்கள் வாழும் உலகம் ஒரு Utopia அல்ல என்பதை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்!

  கொள்கைப் பிடிப்பு என்பது தேவைதான். ஆனால் அதுவே மிகையாகக் கூடாது. ஏனென்றால், எந்தக் கோட்பாடோ, நூல்களில் எழுதப்பட்ட வாசகங்களோ, இறை வசனங்களோ எல்லா கால கட்டங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற்போல் அமைவது சாத்தியமில்லை. எனவே நம் அறிவை (robust commonsence) பயன் படுத்தி, மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் செல்லும் பாதையில் அவ்வப்போது திருத்தங்கள் செய்து கொண்டு (course correction), முன்னேறுதல்தான் இயற்கைக்கு ஒத்த செயல்பாடு! அதனால்தான் சட்டங்கள் தொடர்ந்து திருத்தப் படுகின்றன. தீர்ப்புக்கள் மாற்றப் படுகின்றன.

  நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் மேலதிகாரியின் சுமையைக் குறைப்பவராக, உங்களிடம் ஒன்றை ஒப்படைத்தால் எப்படியாவது செய்து முடித்து விட்டு "வெற்றி" என்ற பதிலை மட்டும் சொல்பவராக இருந்தால்தானே விரும்பப் படுவீர்கள். Management by objectives - என்று சொல்வார்கள். அதாவது focus on result approach - நிச்சயமாக பலன் கொடுக்கும் முயற்சியை மட்டும் மனதில் கொண்டு செயல்பட்டு, இலக்குகளை எட்டுதல். இந்த முறையில் செயல்படுவதால் ஒரு நிறுவனத்தின் செம்மை உயர்கிறது என்று, நிர்வாகத்துறையின் குரு என்று கருதப்படும் பீட்டர் ட்ரக்கர் தன் 'The Practice of Management' என்ற நூலில் விவரித்திருக்கிறார்.

  எல்லா நிறுவனங்களுக்கும், அவர்கள் நடை முறையில் அரசு சார்ந்த பலதரப்பட்ட துறைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு அலுவலகங்களின் தொடர்பு தேவை. அங்கு ஆக வேண்டிய வேலைகளை தாமதமில்லாமல் செய்து முடிக்க ஒரு ஆள் தேவைப் படும். ஒவ்வொரு நிறுவனத்திலும் இது போன்ற இடைத் தொடர்பு (liaison) மற்றும் lobbying செய்வதற்கென்றே ஒருவர் திறமை கொண்டவராக இருப்பார். அவருக்கு எப்போதுமே மிகுந்த கிராக்கி இருக்கும்! லைசென்ஸ் வாங்குவது, மோட்டார் வாகன படிமம் பெறுவது, மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் உள்ள தொடுப்பு, காப்பீட்டுத்துறை, உரிமங்கள் பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது, பத்திரப் பதிவு செய்தல் இது போன்ற பற்பல வேலைகளை அதிகப்படி செலவில்லாமல் சீக்கிறமே, நூறு சதம் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பவர்களை தெய்வமாகக் கூட எற்கத் தயாராக இருப்போம்!

  ஹிந்தியில் "ஜுகாட்" என்று சொல்வார்கள் - எப்படியோ ஜித்து வேலை செய்து எடுத்த காரியத்தை முடித்துக் கொடுப்பது! அதே நேரத்தில் தப்புத் தண்டாவில் ஈடுபடாமல், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கொஞ்சம் "அட்ஜஸ்ட்மெண்ட்" மனப்பான்மை மற்றும் மிதவாத உணர்வுடன் செயற்பட்டோமானால் நம் கடமைகளை பிரச்னையின்றி முடிக்கலாம். நம் வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல் தடையின்றிச் செல்லும்!

  இவ்வுலகில் வாழ் மனிதர்களின் மனப்பாங்கைப் புரிந்துகொண்டு, நம் இலக்கு என்ன, நமக்கு வேண்டுவது என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து, அதை ஈட்டுவதற்கு வேண்டியவைகளைத் திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு, "எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" என்று முரசு கொட்டுவோமாக!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |