டிசம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : சுனாமி பாதிப்புகளும் நிவாரணப்பணிகளும்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

சுனாமியின் கோரத் தாக்குதல் நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. சுனாமி என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் தங்கள் உறவுகளையும் உடைமைகளையும் இழந்துவிட்டு கதறிய மக்களின் ஓலம் இன்னும் காதுகளை விட்டு அகல மறுக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் அரசு திகைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஏகப்பட்ட தொண்டு நிறுவனங்களும் தன்னார்வ மையங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார்கள். முதலில் மெத்தனமாக இந்ருந்தாலும் பிறகு  சுதாதரித்துக் கொண்ட மாநில அரசு தற்காலிக உதவிகளைச் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் அப்போதைய பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது.

உலக அளவிலிருந்து வந்த குவிந்த உதவிகளை மறுத்த மத்திய - மாநில அரசுகள் "இந்தியாவிற்கு உதவிகள் தேவையில்லை.. எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் சக்தி எங்களுக்குள்ளது. எனவே இந்த உதவிகளை மற்ற நாடுகளுக்கு அளியுங்கள்.." என்று கூறின. நம் தலைவர்களின் நம்பிக்கையை அது உலக அளவில் உணர்த்தியது. மேலும் எதையும் தாங்கும் வல்லமை படைத்தது இந்தியா என்பதை உலக நாடுகள் உணர்ந்து கொள்ளவும் அது ஏதுவாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வேறு இந்தியாவிற்கு இரண்டு முறை வந்து நிவாரண நடவடிக்கைகளைப் பார்த்து பாராட்டிவிட்டுச் சென்றார்.

ஆனால் சுனாமி பாதித்து 2 ஆண்டுகள் முழுவதுமாக முடிவடைந்த இன்று உண்மையாகவே சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? சுனாமியால் பாதித்த மக்கள் அனைவரும் அந்த கோரச் சம்பவங்களை ஓரளவு மறந்து, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் அரவணைப்போடு தங்கள் வாழ்க்கையைத் துவக்கினர். தற்காலிகக் குடியிருப்புகளே நிரந்தரமாகிவிடுமோ என்று அஞ்சும் நிலைக்கு இன்று அவர்கள் தள்ளப்பட்டுளார்கள். சுனாமி பாதித்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும்,சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை இன்னும் இருள் நிறைந்தே உள்ளது. சுனாமி குடியிருப்பில் போதிய வசதிகள் இல்லை. சுகாதார வசதிகள் இல்லை. மின் வசதி கூட ஒழுங்காக இல்லை. குடிநீர் பிரச்னை, மின் பிரச்னைக்கு தீர்வு கேட்டு பொதுமக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஓராண்டுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு இன்னும் கிடப்பிலேயே உள்ளது.

கடலூர் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர குடியிருப்புகளை கனஜோராக கட்டிய அரசு - மற்ற இடங்களை எல்லாம் எப்போது கண்டுகொள்ளப்போகிறது? போன ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மத்திய அரசு சொன்னபடி மாநில அரசிற்கு பணம் வழங்கவில்லை என்று அப்போதைய முதல்வர் குற்றம் சாட்டினார். நாங்கள் சொன்னபடி பணத்தை எல்லாம் ஒழுங்காகக் கொடுத்துவிட்டோம்.. ஆனால் முதல்வர் தான் நலப்பணிகள் ஒன்றுமே செய்யவில்லை... என்று மத்திய அரசு அப்போதைய முதல்வர் மீது குற்றம் சாட்டியது. ஆக மொத்தத்தில் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி தூற்றினார்களே தவிர உருப்படியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.

ஆட்சி மாறிய பிறகாவது அவலம் தீருமா என்று எதிர்பார்த்திருந்து காத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்யப்போகிறது? தொட்டதெல்லாம் இலவசம் என்ற ரீதியில் இலவச டீ.வி, கேஸ் அடுப்பு என்று இலவசங்களை அடிக்கிக்கொண்டே போகும் இந்த அரசாவது சுனாமியால் பாதிக்கப்பட்டு நிர்கதியாக - உண்மையாக ஆதரவு தேடி நிற்பவர்களைத் திரும்பிப் பார்க்குமா? தேடி வந்த உதவிகளையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தாங்களும் உதவி செய்யாமல் இருப்பதுதான் அரசுக்கு அழகா? சுனாமி நிவாரணப்பணம் எல்லாம் எவருக்கு பினாமியானதோ தெரியாது - நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்னமும் சுனாமி எச்சரிக்கை கருவியை பொருத்தவில்லை - தருவதாகச் சொன்ன எந்த ஒரு நிவாரணமும் ஒழுங்காகத் தரவில்லை.

செய்வதைத் தான் சொல்வோம்  சொன்னதைத்தான் செய்வோம் என்று வாய் கிழிய பேசுபவர்களுக்கு இந்த நிவாரணப்பணிகளைச் செய்ய இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ தெரியவில்லை.. அதுவரை இன்னொரு சுனாமி தமிழகத்தைத் தாக்காமல் இருக்க இறைவன் தான் துணைபுரியவேண்டும்.
 

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |