டிசம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : மகாகவி பாரதியாரின் 125வது பிறந்த தினம்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

மகாகவி பாரதியாரின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதி திருவிழா சென்னை பாரதியார் நினைவு .இல்லத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் மூன்றாம் நாளில் பாரதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி, கவிஞர் வைரமுத்து, நடிகை லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பாரதி விருது பெற தேர்வு செய்யப்பட்டவர் இயக்குநர் பாலசந்தர். 1996ம் ஆண்டு இன்றைய ஜனாதிபதியான அப்துல்கலாமிற்கு இந்த விருது வழங்கப்ட்டது. அதே போல நீதியரசர் இ.ஆர்.கிருஷ்ணய்யர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், சிற்பி கணபதி ஸ்பதி, எழுத்தாளர் சிவசங்கரி, தொல்பொருள் ஆய்வாளர் நா.கந்தசாமி ஆகியோர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

Anitha Ratnamவிருது வழங்குவதற்கு முன்னதாக நாட்டியப் பேரொளி அனிதா ரத்னம் நடனம் நடைபெற்றது. பாரதியின் வசன நடைக் கவிதைக்கு இவரும், இவரது குழுவினரும் ஆடிய நடனத்திற்கு பொது மக்களிடம் அப்படி ஒரு வரவேற்பு.

ஆசை முகம் மறந்து போச்சே.............. இதை யாரிடம் சொல்வேனடித் தோழி.............. என்ற பாரதியின் வசன நரடக் கவிதைக்கு அற்புதமான நடனமாடி அசத்தினார் அனிதா ரத்னம். இவ்விழாவில் சென்னை பார்த்தசாரதி திருக்கோவிலில் இருந்து பாரதியார் இல்லம் வரை பாரதியாரின் படத்தை ஜதிப் பல்லாக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

 

இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு பாரதி விருது வழங்கி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி பேசும் பொழுது...

Lalitha Bharathy hands over the award to Balachandar பாரதியாரின் 125வது பிறந்த நாளில் இயக்குனர் பாலசந்தருக்கு பாரதி விருதை வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த விழாவில் பாரதி படத்தை தேரில் வைத்து ஜதி பல்லக்கில் கொண்டு வரப்பட்டதை பார்த்து நான் ஆனந்தம் அடைந்தேன். இந்த ஜதிப் பல்லக்கிற்கு ஒரு வரலாறே இருக்கிறது. பாரதியார் கவிதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எட்டையபுரத்து மன்னனிடம் சென்று தனது கவிதையை நாடு போற்றுகிறது. மக்கள் போற்றுகிறார்கள். அதனால் எட்டையபுரத்து அரசனாகிய நீங்களும் என்னை பாராட்ட வேண்டும். பாராட்டுவதோடு எனக்கு பரிசுகள், மரியாதைகள் வழங்க வேண்டும். அத்தோடு என்னை ஜதி பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இன்று எத்தனையோ பாரதி விழாக்கள் நடைபெறுகிறது. இங்கு நடந்தது போல் பாரதி படத்தை ஜதி பல்லக்கில் வைத்து பாரதி நாமம் பாடி யாரும் ஊர்வலம் சென்றதில்லை. இங்கு அது நடந்தது. அதற்காக விழா குழுவினரை பாராட்டுகிறேன் என சுருக்கமாக பேசினார்.

பாரதி விருது பெற்ற பாரதியை வாழ்த்திப் பேச வந்தார் நடிகையும், அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி நாயகியுமான திருமதி. லட்சுமி. அவர் பேசும் பொழுது...

Lakshmi during her speechஇந்த விழாவில் மேடையில் அமர்ந்திருக்கும் எங்களை பாரதியின் வாரிசுகள் என்று சொன்னார்கள். எனக்கு அந்த வார்த்தை பெரிய வி~யம். கவிஞர் வைரமுத்துவுக்கு அது பெரிய விஷயம் இல்லை. விழாவின் கதாநாயகனான பாலச்சந்தருக்கும் அது பெரிய விஷயமில்லை. ஏனென்றால் அவரை பாரதியாரின் வாரிசாக நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம். என்னை எப்படி பாரதியின் வாரிசாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதை நான் யோசித்துப் பார்க்கிறேன். எந்த விதத்தில் பாரதியின் வாரிசாக நான் இருக்க முடியும்? பாரதியை உணரத் துடிப்பவர்கள், அவரை உணர முடியாது. அவரை அறியத் துடிப்பவர்கள் எல்லாருமே பாரதியின் வாரிசுகள் தான். உணர்வு என்பது பெரிய விஷயம். மகாகவி பாரதியை உணர முற்பட காரி, மஸ்தானா, தாரா போன்றவர்களை உணர வேண்டும். அவர்களை உணர்ந்தால் தான் பாரதியை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு கொஞ்சமாவது தகுதி வரும். எனக்கு பாரதியை எப்படி தெரியும்? பொதுவாக வீடுகளில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா....... என்ற பாடல்களைத் தான் போடுவோம்.அதவும் சிவராத்திரி அன்று மட்டும் தான் போடுவோம்.

எனக்கு 8 வயதாக இருக்கும் பொழுது கப்பலோட்டிய தமிழன் படம் பார்க்கும் பொழுது அதில் வந்த பாரதியைப் பார்த்து இவர் தான் பாரதி போல என நினைத்தேன். அப்ப ஒரு ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்த தமிழ் இன்றும் முழுமை அடையவில்லை. மனித வாழ்க்கை தேடல்களாகவே இருந்துக்கிட்டு இருக்கு. இந்தத் தேடல் இருந்துக்கிட்டே இருந்தால் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கான அர்த்தம். தேடல்கள் இல்லை என்றால் சடம் தான். பாலச்சந்தரை இயக்குனர் சிகரம் என்று எல்லாம் சொல்லாதீர்கள். ஏன் என்றால் சிகரம் என்றால் ஒரு அளவில் முடிந்து விடுகிறது. ஆனால் பாலச்சந்தருக்கு எல்லைகளே கிடையாது. அவர் ஆகாசத்தில் பரந்து இருக்கிறார். ஆகாயம் ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம் பல நிறங்களை, வண்ணங்களை காட்டுவதைப் போல திரைப்படங்கள் வாயிலாக காட்டி நம்மை கட்டிப் போட்டவர் பாலசந்தர்.

என்னை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி நானும் இன்று மேடைகளில் பேசுகிறேன் என்றால் அதற்கு Lakshmi with Balachandarகாரணம் பாலச்சந்தர். அவர் எனது குருநாதர். முதன் முதலில் என்னிடம் ஒன்றைச் சொன்னார், லட்சுமி நீ நடிக்காமல் போவது நல்லதல்ல. நடி எனறு சொல்லி என்னை அறிமுகப்படுத்தினார். அன்று நடிக்கத் தொடங்கிய நான் நடித்தேன், நடிக்கிறேன். நடிப்பேன். நான் ஒரு படம் டைரக்ட் பண்ணலாம் என்று விஷப் பரிட்சையில் இறங்கிய பொழுது, யாரை சிலுவையில் அறையலாம் என நான் யோசித்த பொழுது பாலச்சந்தர் தான் என் கண்ணில் பட்டார். நேர அவரிடம் போய் ஸார் நான் படம் டைரக்ட் பண்ணப் போறேன் என்றார். உடனே அவரும் பண்ணு என்றார். பாதி படம் எடுத்து விட்டேன். ஒரு நாள் போன் பண்ணி லட்சுமி, உன் படம் ஜெயித்தால் உனக்கு பெயர். படம் தோற்றால் எனக்கு ரிப்பேர் என்றார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவும் அவர் தான் உதவினார். அலைகடலுக்கு முடிவில்லை. வானத்திற்கு எல்லையில்லை. அதே போல பாலச்சந்தருக்கும் முற்றுப் புள்ளியில்லை என்று சொல்லி விடைபெறுகிறேன்.

அடுத்து பாரதி விருது பெற்ற பாலச்சந்தரை பாராட்டிப் பேச வந்தவர் கவிஞர் வைரமுத்து. தனது தடித்த குரலில் அவர் கலகலப்பாக பேசிய பொழுது...

Vairamuthuபாரதி விருது பெறும் பாலச்சந்தரை நான் பாரட்ட வரவில்லை. நன்றி சொல்ல வந்திருக்கிறேன். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பாலச்சந்தர் என்ற பெயரை நெஞ்சில் மந்திரமாக எழுதிக் கொண்டிருந்தவன் நான். கல்லூரி நாட்களில் அவள் ஒரு தொடர்கதை படத்தைப் பார்த்து விட்டு இப்படி எல்லாம் சிந்திக்க முடியுமா? தமிழ் சினிமாவை இப்படி எல்லாம் ஒரு புதிய பரிணாமத்திற்கு கொண்ட செல்ல முடியுமா? என ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். பாரதிக்கு என்ன பெருமை தெரியுமா? அவருக்கு முன்பும் தமிழ்  சொற்கள் இருந்தன. சிந்தனை இருந்தன.

தமிழ் என்ற பிரபஞ்சம் விரிந்தே கிடந்தன. தமிழ் புலவர்களின் வரிசை விரிந்து, வளர்ந்தே இருந்தது. ஆனால் மகாகவி பாரதிக்கு என்ன பெருமை.  மொழி என்பது ஒரு பொழுது போக்கு கருவி, கற்பனையின் விலாசம் என்று இருந்தது. பாரதி வந்தார். அவர் வந்த பின்பு தான் கவிதை வானத்திலிருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்டது.

கவிதை பரணியில் இருந்து மக்களுக்கு கொண்டு வரப்பட்டது. பெண்களை எப்படி பார்க்கிறார் என்பதைப் பொறுத்துத் தான் ஒரு கவிஞரின் சிந்தனையின், சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கப்படுகிறது. பெண்ணை காலம் தோறும் உலகம் எப்படி பார்த்தது, சமூகம் எப்படி பார்த்தது, கலை எப்படி பார்த்தது, சினிமா எப்படி பார்த்தது, மனிதன் எப்படி பார்த்தான்,  பெண்ணை, ஒரு பெண் எப்படி பார்த்தாள் என்பதை வைத்துத் தான் ஒரு சமூகத்தின் நாகாPகம் எடை போடப் படுகிறது. பாரதிக்கு முன்னும் பெண்ணைப் பாடினார்கள். பெண்ணை ஒரு துய்க்கும் கருவியாய், அலங்காரப் பதுமையாய், பாடப்படும் கருவியாய் என 800 ஆண்டுகள் பெண்னை பாடினார்கள். மகாகவி பாரதி தான் பெண்ணை பிரபஞ்சம் என்றார். பெண்ணை பேச வைத்து, கவிதைகளில் தான் பெண்ணை பாரதி மாற்றி எழுதினார். பாலச்சந்தர் பெண்ணை திரையில் மாற்றிக் காட்டினார். அது தான் பாலசந்தருக்கும், பாரதிக்கும் உள்ள ஒற்றுமை. அவள் ஒரு தொடர்கதையில் வந்த பெண், அச்சமில்லை அச்சமில்லையில் வந்த பெண், தண்ணீர் தண்ணீரில் வந்த பெண் என இவர்கள் எல்லாம் பாரதி சொன்ன பெண்ணிண் நகல்கள் என்றால் அது மிகையல்ல.

அச்சுக்கு வந்த என் கவிதைகளை நான் படிப்பதில்லை. அதில் ஆன்மா குறைந்திருப்பதாக எனக்குத் தோன்றும். பாட்டு எழுதிய பிறகு படங்களையும் அதிகமாக நான் பார்ப்பதில்லை. என் கற்பனைக்கும், படத்தின் ஒளிப்பதிவிற்கும் இருக்கும் இடைவெளியை நினைத்து என் இதயம் வலிக்கும். அப்படிப்பட்டஉணர்வு கொண்ட நான் சொல்கிறேன். எனக்கு தெரிந்து நான் எழுதிய 6000 பாடல்களில் மூன்றே மூன்று பாடல்கள் தான் நான் நினைத்த இடத்தை விட உயரமாக படமாக்கப்பட்ட பாடல்கள். ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடல், மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் வரும் உயிரே உயிரே பாடல், புன்னகை மன்னனில் வரும் என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடல்கள் தான் அவை. என்ன சத்தம் இந்த நேரம்...... என்ற பாடலை பார்த்து விட்டு இரண்டு இரவுகள் நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளப்போகிற காதலன், காதலி. தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பாடலில் சொல்லக் கூடாது என்பது பாலச்சந்தர் எனக்கு இட்ட கட்டளை. அந்தப் பாடலை பார்க்கும் பார்வையாளன் அவர்கள் எப்படி எல்லாம் வாழப் போகிறார்கள் என்று தான் தோன்றும்.

26 ஆண்டு காலம் எனக்கும், 40 ஆண்டுகாலம் பாலச்சந்தருக்கும் சினிமா துறையில் அனுபவம் உள்ளது. நான் Vairamuthu and Balachanderதமிழ் சமூதாயத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.  இன்னொரு தலைமுறையில் 40 ஆண்டு காலம் திரைத் துறையில் வளர எவருக்கும் வாய்ப்புக் கிடைக்காது. அந்த வாய்ப்பு பாலசந்தருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. இனிமேல் சினிமா எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. நாவல் எழுதி விடலாம். அது எழுதுபவனுக்கும், பேனாவுக்கும் மட்டுமே உள்ள உறவு. எழுது கோளுக்கும், தாளுக்கும் மட்டுமே உள்ள உறவு. ஆனால் சினிமா என்பது அப்படியல்ல. அது ஒரு கூட்டுத் தளம். நினைத்ததை கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.  ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குநர் தனது மனதில் ஓட்டிப் பார்த்த காட்சிகளின் மிச்சம் என்று தான் நான் சொல்வேன். பாலசந்தர் படங்கள் வெற்றிப் படங்கள், தோல்விப் படங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். புரிந்து கொள்ளப் பட்ட படங்கள், புரிந்து கொள்ளப் படாத படங்கள் என்று தான் சொல்வேன்.

கவிராஜன் கவிதைகள் என்று நான் எழுதி நூல் இன்று 20 பதிப்புகளை கடந்துள்ளது. அதற்கு ஊற்றாக இருந்தவர் பாலச்சந்தர். ஒரு நாள் என்னை அழைத்து மகாகவி பாரதியாரை பற்றி பட்டுக் கொரு புலவன் என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுக்கப் போகிறேன். அதில் பாரதியாக கமலஹாசன் நடிக்கிறார். அதற்காக அவரை இளைக்கச் சொல்லி இருக்கிறேன். அவர் இளைப்பதற்குள் நீங்கள் பாடல்களை இழைக்க வேண்டும் என்றார். நானும் சரி என்று சொல்லி 200க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கி படித்து தயாரித்து வைத்திருந்தேன். இதற்கிடையே ஒரு அரசியல் குறிக்கீடு எங்களுக்கு வந்தது. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்தத் திட்டம் கை விடப்பட்ட பொழுது பாரதி இரண்டாவது முறையாக மரித்துப் போனதாக நான் நினைத்துக் கொண்டேன்.

பாலச்சந்தர் என்னை வளர்த்து விட்டார். என்னை விசாலப் படுத்தினார். அவர் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். சிந்திப்பவர்களுக்கு, செயல்படுபவர்களுக்கு வயதாவது கிடையாது. அது பாலச்சந்தருக்கும் பொருந்தும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கருத்தை தமிழ் சமூகம் தவறாக புரிந்து கொண்டுள்ளது. உங்கள் வளர்ச்சிக்கு சக்திக்கு போதும் என்ற மனம் உண்டா? சி;ந்தனையுடைய வாழ்வுக்கு போதும் என்ற எல்லை உண்டா?  இல்லையே. அந்த எல்லையை நாம் தாண்ட வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்.

பாரதி விருது பெற்ற இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இறுதியில் பேச வந்தார். அவர் பேசும் பொழுது..........

Balachandarநான் முறையாக தமிழ் படித்தவன் இல்லை. பள்ளிகளில் முறையாக தமிழ் பயின்றவனும் இல்லை. பள்ளிகளில் வடமொழி படித்தேன். கல்லூரிகளில் பிரஞ்சு மொழி படித்தேன். நான் தமிழில் நாடகங்கள் எழுதத் தொடங்கிய பொழுது தான் தமிழை முறையாக கற்க வில்லையே என்று ஆதங்கப்பட்டேன். இந்த விழாவில் இதற்கு முன்பு பாரதி விருது பெற்ற பெரியவர்களின் பெயர்களை கேட்டு நான் மெய்ச்சிலிர்த்துப் போனேன். அதுவும் பாரதியின் பேத்தி லலிதா பாரதியின் கைகளினால் விருது வாங்கியதை நினைத்து பெருமைப் படுகிறேன்.

என்னை மிகவும் பாதித்தவர் திருவள்ளுவர். திருக்குறள் மீது எனக்கு அப்படி ஒரு மோகம். அதனால் தான் எனது நாடகங்களிலும், திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. என்ற குரலை கடவுள் வாழ்த்தாக வைத்திருக்கிறேன். திருவள்ளவருக்கு அடுத்ததாக என்னை ஆட்கொண்டவர் பாரதி. என்னை இயக்கியவர் என்று சொல்லலாம். சத்தியம், நேர்மை பெண் உரிமை, ஜாதி, மத, இனம் கடந்த மனித நேயம், நாட்டுப்பற்று, கலை இலக்கிய மோகம், விடுதலை உணர்வு போன்றவை மூலம் பாரதி என்னை வெகுவாக கவர்ந்தவர். அதனால் தான் எனது படங்களில் பாரதியாரின் கருத்துக்களை புகுத்தி வந்திருக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாரதியாரை பற்றி படம் எடுக்க திட்டமிட்டதையும் அது கைவிடப்பட்டதையும் கவிஞர் வைரமுத்து இங்கு சொன்னார். பாட்டுக்கொரு புலவன் என்ற பெயரில் நாங்கள் படம் எடுக்கப் போகிறோம் என்ற செய்தி வெளியே தெரிந்தவுடன் பொது மக்கள், திரைத் துறையினர், பத்திரிக்கைகளிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அரசாங்கத்தின் சார்பில் பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்படும் என அறிவித்தனர். இது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிறகு நாங்கள் ஒன்று கூடிப் பேசி அரசாங்கத்தோடு நாம் போட்டி போட முடியாது என நினைத்து அந்த திட்டத்தை கை விட்டு விட்டோம். ஆனால் அரசாங்கத்தின் அன்றைய அறிவிப்பு இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல் கிடக்கிறது. பாரதியின் சிறப்பு என்னவென்று என்னிடம் கேட்டால், அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தது தான். பெண்களின் அங்கங்களை பார்த்து கவிதை எழுதிய கவிஞர்கள் தான் அதிகம். ஆனால் பாரதி பெண்களின் ஆன்மாவைப் பார்த்து கவிதை எழுதினார்.

பெண் விடுதலையைப் பற்றி பாரதி பாடுவதை விட்டலுக்குரிய கம்பீரம், கம்பனுக்குரிய மிடுக்கு, ஜெக்காவுக்குள்ள செரிவு என அனைத்தும் கை கோர்த்து கூத்தாடுகிறது என வலம்பூரி ஜான் ஒரு முறை சொல்லி இருக்கிறார். அதனை நானும் ஏற்றுக் கொள்கிறேன் எனச் சொல்லி தனது உரையை முடித்தார்.

| | | | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |