டிசம்பர் 22 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : கண்ட நாள் முதல்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

நண்பனுக்கு மனைவியாகப்போகிறவள் சந்தர்ப்பவசத்தால் தனக்கு காதலியானால் அந்த நண்பன் - காதலன் - காதலி இம்மூவரின் மனநிலை எப்படி இருக்கும்? கண்ட நாள் முதலின் ஒருவரிக்கதை இதுதான்.

Karthik, Laila, Prasannaகுழந்தை பருவத்திலிருந்தே சதா சண்டை போட்டுக்கொள்ளும் பிரசன்னா - லைலா மோதல் கல்லூரி காலத்திலும் தொடர்கிறது. பார்க்கும் போதெல்லாம் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை - சண்டை தான். இந்நிலையில் லைலாவை பெண் பார்க்க வருகிறார் பிரசன்னாவின் உயிர் நண்பனான கார்த்திக்குமார். லைலா தான் தன் நண்பன் பார்க்க வந்த பெண் என்பது தெரிந்தவுடன் லைலாவைப் பற்றி தன்னால் முடிந்தவரை எடக்கு மடக்காக பேசி கல்யாணத்தை நிறுத்தப்பார்க்கிறார் பிரசன்னா. ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டாசாக வெடிக்கும் லைலா இந்தக் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காகவே தன் குணத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு சாந்தமாக கார்த்திக் முன் உலாவருகிறார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் லைலாவை தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அமெரிக்கா சென்று விடுகிறார் கார்த்திக்.

இந்நிலையில் தன் கல்யாணம் தடைபட பிரசன்னாதான் காரணம் என்று நினைத்து அவர் மீது மேலும் ஆத்திரப்படுகிறார் லைலா. எரிகிற நெருப்பில் எண்ணெய் விடும் விதமாக லைலாவின் தங்கை வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். தான் எடுத்த முடிவிற்கு பிரசன்னா கொடுத்த அறிவுரை தான் காரணம் என்று கூறுகிறார் தங்கை. ஆக பிரசன்னாவின் மீதான லைலாவின் கோபம் பலமடங்கு அதிகரிக்கிறது. இளைய மகள் வீட்டை விட்டு ஓடியதால் லைலாவின் அம்மா ரேவதி இதய நோயால் பாதிக்கப்படுகிறார். இந்நிலையில் பிரசன்னா நிதானம் இழக்காமல் லைலா குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

Laila, Prasannaநண்பர்களாக பழக ஆரம்பிக்கும் லைலா பிரசன்னா இருவரும் ஒரு கட்டத்தில் காதல் கொள்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை சொல்ல இருவருமே தயங்கும் போது கார்த்திக் மீண்டும் இந்தியா வருகிறார். லைலாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். கார்த்திக்கின் இந்த முடிவால் இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சியடைகிறார்கள். திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. பிரசன்னா தன் காதலை நண்பனுக்காக விட்டுக்கொடுக்க, லைலா - கார்த்திக் கல்யாணம் நடந்ததா என்பதே கிளைமாக்ஸ்.

அருமையாக நடித்திருக்கிறார் பிரசன்னா. லைலாவுடன் முதலில் சண்டை போடும் காட்சிகளாகட்டும், கார்த்திக்கிடம் லைலாவைப் பற்றி போடுக்கொடுப்பதாகட்டும், கல்யாணம் நின்று போன சூழ்நிலையில் லைலா குடும்பத்தாருக்கு உதவி செய்வதாகட்டும் - கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் பிரசன்னா.

அடங்காப்பிடாரியாக லைலா. ஆக்ரோஷம், பிடிவாதம் என எல்லாம் கலந்த கலவை. நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். தன் காதலை பிரசன்னாவிடம் சொல்லத் தயங்கும் காட்சிகளில் தனக்கு எந்த அளவிற்கு நடிக்க வரும் என்பதை அற்புதமாக நிரூபித்துள்ளார்.

புதுமுகம் கார்த்திக்குமார் - இவரைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. பொம்மை மாதிரி வந்து போகிறார். லைலாவின் அம்மாவாக ரேவதி மற்றும் கார்த்திக்கின் அம்மாவாக லஷ்மி. கொஞ்சமாக வந்தாலும் இருவருமே தாங்கள் நடிப்பில் எத்தனை சீனியர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

இசை யுவன்ஷங்கர்ராஜா. பாடல்கள் ஒக்கே ரகம். கண்ட நாள் முதலாய் பாடலில் மட்டும் முத்திரை பதிக்க முயன்றுள்ளார் யுவன். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். தயாரிப்பு பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்கம் ப்ரியா.. தமிழ் திரையுலகிற்கு கிடைத்துள்ள புதிய பெண் இயக்குனர். தெரிந்த கதை என்றாலும் அதை அழகாக எடுத்திருக்கும் விதத்திற்காகவே ப்ரியாவிற்கு ஒரு சபாஷ்.

oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |