Tamiloviam
டிசம்பர் 27 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : சுனாமி
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

 

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் தமிழகம் மட்டுமல்லாது தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்த சுனாமியின் மூன்றாம்  ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் மனித உயிர்களை மொத்தமாக கடலுக்குள் இழுத்துச் சென்றன ஆழிப் பேரலைகள். சுனாமி பாதித்த அனைத்து நாடுகளையும் பார்வையிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் தலைமையிலான குழு - மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சுனாமி மறுவாழ்வு பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருவதாக 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டது.

ஆனால் அந்த மறுவாழ்வுப்பணிகளால் இன்றளவும் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்காண மக்கள். வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் இவர்களது மறுவாழ்விற்காக பணம் வந்தாலும் அதை எல்லாம் சுருட்டி ஏப்பம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது ஒன்றுமே செய்யாமல் அவர்களை ஒவ்வொரு நாளும் வேதனைப்படவைக்கிறார்கள் பல தொண்டுநிறுவன இயக்குனர்கள். இவர்கள் கட்டிய பல வீடுகள் அட்டை வீடுகளாக ஒழுகுகின்றன. கட்டித்தருவதாக சொன்ன வீட்டின் அமைப்பு வேறு - கட்டிய வீட்டின் அமைப்பு வேறு.. எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்றிருக்கும் இவர்களை அரசு இன்று வரை தட்டிக்கேட்கவில்லை.

இதில் கடற்கரையோரங்களில் வாழும் மீனவர்களில் நிலைதான் மிகப்பரிதாபம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் எந்த உத்தரவாதமும் கேட்காமல் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் அவர்களுக்கு கடனுதவி செய்ய வேண்டுமென மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியிருந்தாலும் சம்மந்தப்பட்ட வங்கிகளோ பல ஆவணங்களைச் கொண்டு வரச்சொல்லி கடன் தரமறுக்கின்றன. மேலும் மீனவர்களுக்கான நலவாரியத்தை தமிழக அரசு அமைத்திருந்தாலும், அதனால் என்ன பயன் கிடைக்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆகவே இவ்வாரியங்களின் மூலம் நலத்திட்டங்கள் எதுவும் மீனவர்களைச் சென்றடையாமல் இருக்கின்றன.

மேலும் சுனாமிக்குப்பின் கடலில் நீண்ட தூரம் சென்றாலும் இவர்களுக்கு போதிய மீன்கள் சிக்குவதில்லை. தொழில் சரியாக இல்லாததால் வறுமையில் வாடும் குடும்பம் ஒருபுறம், நீண்ட தூரம் மீன்பிடிக்கப்போய் இலங்கை கடற்படையிடம் சிக்கிக்கொள்ளும் மீனவர்களின் கஷ்ட நிலை மறுபுறம் என அந்திரத்தில் ஊசலாடுகிறது இவர்களது வாழ்க்கை. போதிய வருமானம் இல்லாததால் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீனவர்கள் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கித்தவிக்கின்றனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகியும் இன்னும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கும் இவர்களது வாழ்வில் ஒளியேற்ற மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தர விவசாய கூட்டுறவு வங்கிகள் உள்ளதுபோல, மீனவர்களுக்காக மீனவர் கூட்டுறவு வங்கிகளை அமைக்க அரசு முன்வரவேண்டும். இவ்வங்கிகள் மூலம்  மீன்பிடி தொழிலுக்கு வேண்டிய புதிய வலைகள், படகுகள் முதலியவற்றை வாங்க உதவி செய்யவேண்டும். மீன்பிடிக்கப்போகும் இடங்களில் அயல் நாட்டு ராணுவத்தினரிடம் மீனவர்கள் சிக்கிக்கொள்ளாதிருக்க கடல் எல்லைகளைத் தெளிவாக குறிப்பிடவேண்டும்.

சுனாமியால் இழந்த உயிர்களை நம்மால் திருப்ப இயலாது.. குறைந்த பட்சம் இழந்த உடைமைகளையாவது திருப்பித் தர முயற்சி செய்யலாம்.

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |