Tamiloviam
டிசம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இயேசு சொன்ன கதைகள் : கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்
- சிறில் அலெக்ஸ்
| | Printable version | URL |

Jesusஇயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய், புரட்சிக்காரனாய், சீரமைப்பாளராய், மக்கள் நாயகனாய், கடவுளாய், அதிசயங்கள் புரிந்த ஒரு சாதரண மனிதனாய் இன்னும் பலவாய் காட்சிதருகிறார் இயேசு.

தெய்வீகக் கூறுகளை விலக்கிவிட்டு இயேசுவைப் பார்ப்பவர்கள் குறைவே. ஒரு போதகராக அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மத போதனைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் வாழ்வியல் கருத்துக்கள் பலரையும் சென்றடையவில்லை என்பது சற்றே சோகமான உண்மை. இந்தப் போதனைகள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருந்தால் இன்னும் சில காந்திகள் மலர்ந்திருப்பார்களோ என்னவோ?

இந்த தொடரின் மூலம் இயேசு சொன்ன சில உவமைகளை, உவமைக்கதைகளை சுவைக்கத் தருவதில் மகிழ்ச்சி.

ஒரு கருத்தை பக்கம் பக்கமாய் எழுதிவைப்பதைவிட, பலமணி நேரங்கள் விவாதிப்பதைவிட ஒரு சின்னக் கதையின் மூலம் எளிதாய் சொல்லிவிட முடியும். ஜென் கதைகளானாலும், பஞ்சதந்திரக் கதைகளானாலும், முல்லாவின் குறும்புக்கதைகளாயினும், தெனாலிராமனின் புத்திக் கதைகளாயினும் சில வரிகளுக்குள்ளேயே மாபெரும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எளிய மனத்தோருக்கு வலிய கருத்துக்களை எடுத்துச் செல்ல ஏற்ற சாதனங்கள் கதைகள்.


இறை வார்த்தையை அல்லது நல்ல கருத்துக்களை கேட்பதுபற்றி இயேசு ஒரு கதை சொல்கிறார்.

விதைப்பவன் ஒருவன் விதைக்கச் செல்கிறான். அவன் விதைக்கும் விதைகளில் சில பாதையோரம் வீழ்ந்தன பறவைகள் அவற்றை தின்றுவிட்டன. சில பாறைகள் நிறைந்த நிலத்தின்மேல் விழுந்தன, அங்கே மண் அதிகம் இல்லாததால் அவை எளிதில் முளைவிட்டன ஆயினும் சூரியன் வந்ததும் வேரூன்றியில்லாததால் அவை சுட்டெரிக்கப்பட்டு உதிர்ந்தன. சில முட்புதர்களின் நடுவே வீழ்ந்தன. அவை வளர்ந்ததும் முட் புதர்களால் நெரிக்கப்பட்டு அழிந்தன. இன்னும் சில நல்ல நிலத்தில் விழுந்தன, பயிர்களாகி நூறு, அறுபது அல்லது முப்பது மடங்கு பலனளித்தன1.

இந்தக் கதையை சொல்லிவிட்டு இயேசு "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

மிகவும் எளிமையான ஒரு கதை. இதை இயேசுவே விளக்குகிறார்.

விதைப்பவன் விதைத்த விதைகள் இறைவார்த்தைகள். பாதையோரம் விழுந்த விதைகளை பறவைகள் வந்து தின்றதைப்போல சிலர் மனதில் விழும் வார்த்தைகளை சாத்தான் வந்து அள்ளிப்போகிறது. பாறை நிலத்தில் விழுந்தவையோ இறைவார்த்தைகளைக் கேட்டு தற்காலிகமாக மனமகிழ்ந்து செல்பவரைப்போல, அங்கே அந்த விதைகள் சொற்ப காலமே வாழ்கின்றன. முட்புதர்களில் வீழ்ந்த விதைகளைப்போல சிலர் மனதில் இறைவார்த்தைகள் முளைவிட்டு செடியாகின்றன ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பணம், சுகம் என உலகத் தேடல்கள் செடிகளை நெரிப்பதால் அவை பயிராவதில்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ கடவுளின் வார்த்தையை கேட்டு மனதில் சுமப்பவர்களைப்போல. பயிராகி பலனளிப்பவர்கள் இவர்களே.

கேட்பது அல்லது கற்பது பற்றிய எனக்குப் பிடித்த ஜென் கதை.

ஒரு குருவிடம் ஒருவன் போய் "எனக்கு உலகில் எல்லாம் தெரியும் உங்களுக்குத் தெரிந்ததையும் எனக்கு கற்றுத் தாருங்கள்", என்றான். குருவோ, "முதலில் தேனீர் அருந்துவோம் என்றார்". தேனீர் வந்ததும் கோப்பைகளை நிரப்ப ஆரம்பித்தார் குரு. கோப்பை நிறைந்த பின்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார். வந்தவன் குழம்பினான். இன்னும் ஊற்றிக்கொண்டேயிருந்தார் குரு. வந்தவன்,"என்ன செய்கிறீர் அந்தக் கோப்பை நிறைந்திருக்கிறது இனியும் ஊற்றினால் கீழே கொட்டும் என்பது உமக்குத் தெரியாதா?" என்றான். குருவோ,"போய் உன்னை காலி செய்து கொண்டு வா. பிறகே என்னால் உன்னில் ஊற்ற இயலும்." என்றார்.

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்".


1 மத்தேயு 13:1-9 அல்லது மார்க்கு 4:2-20 அல்லது லூக்கா 8:4-15
2 மத்தேயு 13:9

| |
oooOooo
                         
 
சிறில் அலெக்ஸ் அவர்களின் இதர படைப்புகள்.   இயேசு சொன்ன கதைகள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |