Tamiloviam
டிசம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : காதலர்கள் பாரடைஸாக மாறும் மெரினா கடற்கரை
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

Merina Beachஉலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்ற பெருமை சென்னை மெரினா கடற்கரைக்கு உண்டு. தென்னிந்தியாவின் காலச்சார நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் இக்கடற்கரை இருப்பது கூடுதல் சிறப்பு. நகர மக்களுக்கும், சென்னையை சுற்றிப் பார்க்க வரும் பிற மக்களுக்கும் இக்கடற்கரை ஓர் வேடந்தாங்கல். இந்தக் கடற்கரையில் தான் காதலர்கள்  தனித் தனி குரூப்பாக அமர்ந்து கொண்டு பிறர் முகம் சுழிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். இது பற்றி அவ்வப் பொழுது விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் காலத்து காதல் மேல் எனக்கு நம்பிக்கையில்லை என்று பெப்சி உமா ஒரு முறை சொல்லி இருக்கிறார். அது உண்மை தான் என்பதை நிரூபிக்க, மெரினா கடற்கரையை சாட்சியாக வைக்கலாம். இந்தக் கடற்கரை ஓர் அற்புதமான இடம். தனியாக இங்கு வந்து அமர்ந்தால் வாழ்க்கையில் ஏதோ ஓர் நிம்மதியை இந்த கடலும், மணலும், கடற்கரையும் நமக்கு கொடுக்கும்.

அதனால் தான் இக்கடற்கரை சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக கலந்து விட்டது. இந்தக் கடற்கரையில் காதலர்கள், காதலர்கள் என்ற போர்வையில் சிலர், கள்ளத் தொடர்புகள் வைத்திருப்பவர்கள் என்று பலர் வந்து அக்கப்போர் செய்து கொண்டு இருக்கிறார்கள். காதலர்கள் என்றால் தனித்தனியே அமர்ந்து பேசி விட்டு செல்வது தான் முறை. ஆனால் இங்கு நடப்பதோ வெளியே சொல்ல முடியாத வகையில் இருக்கிறது. பெரும்பாலும் ஆண்கள் பெண்களை தங்கள் மடியில் படுக்க வைத்தோ, அல்லது பெண்களை கட்டி அனைத்தோ தங்களின் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். குடும்பத்தோடு கடற்கரைக்கு வருவோரின் கண் முன்னே இது போன்று நடக்கிறது. அதனால் பலர் கடற்கரைக்கு வருவதையே தவிர்க்கிறார்கள்.

வெளியூரில் இருந்து வருபவர்கள் இங்கு காதலர்கள் செய்யும் சேட்டைகளைப் பார்த்து விட்டு முகம் சுழித்து விட்டுப் போகிறார்கள். இது பற்றி தமிழக சட்டசபையில் பல முறை விவாதிக்கப்பட்டது. காவல் துறையினர் பலவித நடவடிக்கைகள் எடுத்தாலும் இந்தக் காதலர்கள் செய்யும் சேட்டைகளுக்கு பஞ்சமே கிடையாது. இதற்கு ஒரே தீர்வு மெரினாவில் காதலர்கள் கூடுவதை தடை செய்வது தான் என்கிறார் கடற்கரையில் நடைப் பயிற்சி செய்யும் ரிசர்வ் வங்கியில் வேலை பார்க்கும் சந்திரசேகர்.
 
என் பெயர் ப்ரியா. நான் ஒரு பிரபலக் கல்லூரியில் பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கிறேன். இவர் பெயர் செந்தில்குமார். இவரும் கல்லூரியில் எம்.எஸ்.சி படிக்கிறார். 29சி பேருந்தில் போகும் பொழுது ஆரம்பமான காதல் மூன்று வருஷமா மெரினா கடற்கரையில் தொடர்கிறது. இங்கு  காதலர்கள் அதிகம் வருகிறார்கள். தவறான செயல்கள் செய்கிறார்கள். இது உண்மை தான். ஆனால் ஒட்டு மொத்த காதலர்களையும் குறை சொல்வது தவறு. இன்றைய காலக்கட்டத்தில் அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள் ஆகியோரிடம் பேசும் பொழுதும், அவர்களோடு சேர்ந்து ஒரு காபி குடிக்கும் பொழுதும் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி எனது காதலருடன் சேர்ந்து அதனை செய்யும் பொழுது எனக்கு ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தையால் சொல்ல முடியாது. அதை நீங்கள் உணர்ந்து தான் பார்க்கணும். மற்றபடி தவறு நடக்காத இடங்கள் என்று எதுவுமே கிடையாது. புனிதமாக கருதப்படும் கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில்  எல்லாம் பாலியல் பலாத்காரம் நடப்பதாக செய்திகள் வருகிறது. மெரினாவும் அது போலத் தான் இது ஒரு சமத்துவபுரம் மாதிரி. யார் வேண்டுமானாலும் தன்னை நம்புபவரோடு வரலாம், உட்காரலாம், போகலாம். யாரும் யாருடைய விஷயத்தில் தலையிட மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை மெரினா கடற்கரைக்கு காதலர்களால் கெட்டபெயர் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார். இது குடும்ப உறவை, காதல் உறவை, மனிதர்களின் உறவை வளர்க்கும் ஓர் பள்ளி என்று மெரினாவை சொல்வேன் என்கிறார் ப்ரியா.

கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் மெரினாவில் வந்து காதலித்து, திருமணம் செய்தும், செய்யாமலும் இருந்தவர்கள் தான். அவர்களுக்கும், இன்றைய மெரினா கடற்கரை காதலுக்கும் என்ன வித்தியாசம் என்றால் அன்றைய காதலில் அன்பு மட்டுமே இருந்தது. இன்றைய காதலில் காமம் மட்டுமே இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரை மணலை வெளிநாட்டு இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்த பொழுது 1000க்கும் மேற்பட்ட ஆணுறைகள் கண்டு எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. பொதுவாக காதல் என்பதே பெண்ணை, ஓர் ஆண் ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் வார்த்தை. கண்டெடுக்கப்பட்ட ஆணுறைகளால் எந்த ஆணும் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டான். ஆனால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பார்கள். தன்னை விட வயது குறைந்த ஒரு பெண்ணை ஏன் ஒரு ஆண் விரும்புகிறான். அறிவுத் தேவைக்கா? மூளை வளர்ச்சிக்கா?  மெரினா கடற்கரையில் காதலர்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம் அனைவருமே வெளியூர்க்காரர்கள் தான். வெளியே இருந்து சென்னைக்கு வந்து படிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் காதலிக்கும் பொழுது எந்த எதிர்ப்பும் வராது. அதனால் கடற்கரையில் மகிழ்ச்சியாக இருக்கிறாhகள். இதனால் காவல் துறை முதல் லோக்கல் ரவுடிகள், வியாபாரிகள் வரை வருமானம் பார்க்கிறார்கள்.

அதனால் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் சமூக சீர்கேடுகள், கலாச்சார விதி முறை மீறல்கள் இங்கு அதிகரித்து வருகிறது என்கிறார் மெரினா கடற்கரைக்கு எதிரே இருக்கும் மாநிலக் கல்லூரி பேராசிரியர் ஒருவர்.
          
மெரினா கடற்கரையில் காதலர்கள், ஜோடிகள் வந்து அமர்ந்து விரும்பாத செயல்களில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் 1990களில் கோரிக்கை வைத்து விவாதிக்கப்பட்டது. அதனை தடை செய்ய முயற்சித்த பொழுது தான் அரசுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது சென்னையில் பெரும்பாலும் கீழ்த்தர மக்கள், நடுத்தர மக்கள் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். அப்படி ஒரு வீட்டில் இருக்கும் கணவனோ, மனைவியோ, தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ள அவ்வீட்டில் இடப் பற்றாக்குறை. அவர்களை போன்ற தம்பதிகளுக்கு பீச் தான் பொருத்தமான இடம். அதே போல இரண்டு அறைகள் மட்டும் இருக்கும் ஒரு வீட்டில் ஒரு திருமணம் நடந்து அந்த தம்பதிகள் சுதந்திரமாக பேச வாய்ப்பு அங்கு இல்லை என்றும் அதற்காக அவர்கள் கடற்கரையை நாடி வருவதாக தகவல்கள் வந்தன. அதனால் தான் அரசு மெரினாவில் காதலர்கள் சேர்வரை தடை செய்ய வில்லை. சமூகத்திற்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது. சென்னை வாழ் மக்களுக்கு குறிப்பாக நடுத்தர, கீழ்த்தர வாழ்க்கை வாழும் மக்களுக்கு கடற்கரை தேவையான ஒன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருப்பவர்களை அழைத்து காவல் துறை கண்டித்து அனுப்புகிறது. கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளாக இருந்தால் பெற்றோரை, ஆசிரியர்களை அழைத்து கண்டிக்கச் சொல்கிறோம். என்கிறார் கடற்கரையில் ரோந்து பணி செய்யும் முக்கிய அதிகாரி ஒருவர்.

குறிப்பு :  தனி மனிதரின் சுதந்திரத்தில் தலையிடுதல் கூடாது என்பதற்காக காதலர்களை தெளிவாக படங்கள் எடுக்க வில்லை.

|
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |