டிசம்பர் 29 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : நான் நன்றி சொல்வேன்
- ஷைலஜா [shylaja01@yahoo.com]
| Printable version | URL |
""ஏசுவைக்கூட சிலுவையில் அறைந்தார்கள்; மெக்காவிலிருந்து மெதினா வரைக்கும் நபிகள்நாயகத்தைக் கல்லால் அடித்தார்கள். நல்லவர்களின் சரித்திரமே அப்படித்தான்..""

"புத்தாண்டுவாழ்த்துக்கள் ப்ரதீபா! நினைத்ததை சாதித்து இன்று நீ சட்டத்தை கையிலெடுத்து நகரின் பிரபல வழக்கறிஞர் என்ற பெயரோடு இருப்பதில் எனக்கு ரொம்பப் பெருமையாய் இருக்கிறது!" 
ஜனவரி 2006 காலையில் முதல் தொலைபேசி அழைப்பாக இப்படி ஒருகுரல் வந்தது ப்ரதீபாவிற்கு.

மீனாதான்.

அவளுக்குத்தான் ப்ரதீபாவின் அசாத்திய திறமையில் உண்மையான மதிப்பும் பெருமையும் அதிகம். மனம் திறந்து பாராட்டவும் நல்ல மனம் எல்லாருக்குமா இருக்கிறது?
 
"தாங்க்ஸ் மீனா! ஆனா இதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்குத்தான் தெரியும். வாழ்க்கையில சாலஞ்ச் செய்வது சுலபம் , ஆனா அதை நிறைவேற்ற நிறைய போராடவேண்டும். ஆ·ப்கோர்ஸ் கடின உழைப்பின்றி வாழ்க்கையில் எதிலுமே வெற்றியை எட்டிப்பிடிக்க முடியாதுதான். மின்னும் பொன், கொல்லன் பட்டறையில் வாங்காத அடியா தீக்காயங்களா? ஆனாலும் மீனா, அன்னிக்கு என் மனசுல பட்ட காயம் இன்னும் ஆறவில்லைதான்" என்ற ப்ரதிபா பெருமூச்சுவிட்டாள்.

"கமான் ப்ரதீபா! உன்னைமாதிரி புத்திசாலிகள் எல்லாம் இன்னமும் பழசையே நினைத்து மனசை வருத்திக்கொள்ளலாமா? பி சியர்·புல் மை டியர் ஃப்ரண்ட்!"

"அப்படித்தான் இருக்கிறேன் பத்துவருஷமா ..ஆனாலும்  எனக்கு ஏற்பட்ட வடு, நாவினால் சுடப்பட்டது அல்லவா அதனால்தான் அவ்வப்போது நினைக்கும்போதே நெருடுகிறது...."

"அந்த மோகனை நீ இன்னமும் மறக்கவில்லை, அப்படித்தானே?"

"மறக்கமுடியாது மீனா. சில உறவுகள், சில நட்புகள் விலகினாலும் அதன் நினைவுகள் நெஞ்சிலேயே சிலந்திவலைகட்டிகொண்டு இருக்கும். சவால் விட்டவனிடம் ,'பார்திதயா நான் ஜெயித்துவிட்டேன்' என்று சொல்லிக்காட்டுகிறவரைக்கும்  மனசுக்குள் புயல் ஓயாது போலிருக்கிறது மீனா. "

'இங்கேதான் நீ சராசரிப்பெண் ஆகிறாய் ப்ரதீபா. அறிவாளிகளிடம் தர்க்கம் செய்யலாம் முட்டாள்களிடம் பேசவும் முடியாது என்பது உனக்குத் தெரியாதா என்ன? உன்னைப்புரிந்து கொள்ளாமல் விலகினவனை, நீ இன்னமும் நினைத்துக்கொண்டிருப்பது வினோதமாய் இருக்கிறது! எனிவே...உணர்ச்சிகள் அவரவர்க்கென்று உள்ள பிரத்தியேகங்கள்.. என்னதான் உன் உயிர்த்தோழின்னாலும் நான் அதில் அதிகமாய் தலையிட்டு  அட்வைஸ் செய்யக்கூடாது.. நீயே வழக்கம்போல சுதாரித்துக்கொள்வாய்., மறுபடியும்  புத்தாண்டுவாழ்த்து சொல்லி நான் போனை வைக்கிறேன்..பை ப்ரதீபா.."

"தாங்க்ஸ் அண்ட் விஷ் யூ தி சேம் மீனா பை"

பிரதீபாவிற்கு புத்தாண்டுபிறக்கும் தினத்தில் மோகனின் நினைவு வந்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. பத்துவருடம் முன்பு இதே நாளில் தானே அவளுக்கு மோகனின் எதிர்பார்ப்பு என்ன என்பது புரிந்துபோனது?

மோகன் ப்ரதீபாவின் மாமா மகன் தான்...ஒரே ஊரில் அடுத்தடுத்த தெருவில்  இருவரின் குடும்பங்களும் வசிக்க, பல வருஷங்கள் பிரச்னை இல்லாமல்தான் சென்றது, பணம் என்னும் பகைவன் வந்து  பந்தங்களையும் உறவுகளையும் பிரிக்கும் வரை.

அதுவரைக்கும் ப்ரதீபா தான் மோகனுக்கு என்று சொல்லிக்கொண்டிருந்த அவன் அம்மா சட்டென மனம் மாறிப்போனவளாய்,"என் மகனுக்குப் பெரிய இடத்து சம்மந்தம் வரபோகிறது. அவன் பீஈ சிவில் படிச்சதுக்கு பெரிய பெரிய பணக்கார இடம் தானாய் வந்து நிக்குது. ஏதாவது ஒண்ணை முடிச்சிடபோறேன்" என்றது காற்று வாக்கில் ப்ரதீபாவின் காதிற்கு எட்டியது.

மாமியின் சுபாவம் ப்ரதீபா அறிந்ததுதான் அதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளக் கூடாது. மோகனை அவளுக்கு நன்கு தெரியும் இருபது வருஷத்துப்பழக்கம். அவளைவிட மூன்று வயதுதான் மூத்தவன், ஆனாலும் சிறுவயதுமுதலே ப்ரதீபாவோடுதான் அவன் நெருங்கிப் பழகுவான், கல்லூரி படிப்பு நண்பர்கள் என்று பலவிஷயங்களைக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வான். எந்தபொழுதிலும் மோகன் அவளிடம் தனது வருங்கால மனைவிதானே என்று எல்லை மீறாமல் பழகியதில், 'கிணற்று நீர்தானே ஆற்றுவெள்ளமா அடித்துக் கொண்டு போய்விடும்?' என்னும் நினைப்பில் அவன் அப்படி இருப்பதாக  பெருமையுடன் நினைத்துக் கொள்வாள் ப்ரதீபா.

"ப்ரதீபா! உன் மாமி வரவர பணப்பேயாய் மாறிவராம்மா... யாருமே தான் ஆரம்பத்தில் எப்படி இருந்தோம் என்று நினைத்துபார்ப்பதில்லை. வாழ்க்கைப் புத்தகத்தை இப்படி மனம் போனபடி புரட்டுவதால்தான் அதனுடைய ஆன்மா எங்கோ சிக்கிக் கொண்டுதவிக்கிறது... மோகனை அவன் அம்மா மாற்றி இருப்பாள். சிவில் இஞ்சினீயர் வேலை கிடைத்தது முதல் அவன் இங்கே நம் வீட்டிற்குவருவதும் குறைந்து போய்விட்டது. நான் தான் தாயில்லாப்பெண் என்று உனக்கு ஏதேதோ ஆசை காட்டி வளர்த்துவிட்டேன். எல்லாம் கைமீறிவிட்டது.  இனி எனக்கு நம்பிக்கை இல்லையம்மா.." தனது வழக்கறிஞர் அப்பா  வருத்தத்துடன் கைவிரிக்கையில் ப்ரதீபாவிற்கு சிரிப்பாய் வந்தது. வாய்ப் பேச்செல்லாம் அப்பாவிற்குக் கோர்ட்டில்தான், வாழ்க்கைவழக்கை எதிர்கொள்ள தைரியம் வேண்டாமோ முதலில்? அவருடைய தொழிலில் பெரும்பாலும் வழக்குகள் தாமாகவே காலாவதியாகிவிடும், அல்லது வாபஸ் பெற்றுவிடும்.

"காலம் என்பது பெரிய சக்தி..அதன் தீர்ப்புக்கு விட்டுவிடுவதே புத்திசாலித்தனம், அது எந்த ரணத்தையும் ஆற்ற வல்லது" என்கிற சித்தாந்தம் அவருடையது.அந்த காலமே நம் கையில்தான் என்பது மகளின் கொள்கை.

கீழ்கோர்ட்டில் தனது முறையீடு செல்லாது என்று அவள் தனதுவழக்கை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய நினைத்தாள்.

ஹைகோர்ட் என அவள் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது அவளது மாமா-மோகனின் அப்பாவைத்தான்.

ப்ரதீபாவைக் கண்டதும், "நானே உன்னைத் தேடிவர நினைச்சேன் ப்ரதீபா! உன் மாமி செய்வது எனக்கும் பிடிக்கலதான் ஆனா....ஆனா..." என்று மென்று முழுங்கினார். மனைவிக்குப் பயப்படுவதை சொல் கட்டிவிட்டது.

ஓ, கீழ்கோர்ட் ஹைகோர்ட் எதுவும் சரி இல்லை பேசாமல் சுப்ரிம் கோர்ட்டிற்கே வழக்கோடு போய் நின்றால் என்ன?

ப்ரதீபா தனது அறைக்குள் வந்ததும் ஒருக்கணம் திடுக்கிட்ட மோகன், "வா ப்ரதீபா. ஹாப்பி நியூ இயர்! நேரில் வந்து வாழ்த்தலாம்னா. நானும் வேலைல பிஸி அதனாலதான். ஒருமாசமாய் உன்னை வந்துபார்க்கவே முடியவில்லை." என்றான்.

"பரவாயில்லை மோகன். கண்டதற்கெல்லாம் சில்லியா கோவிச்சிட்டு முகத்தைத் திருப்பிப் போக எனக்கும் தெரியாது அதான் நேரிலேயே  பார்த்துப் பேசிப்போகவந்தேன். உனக்கும் எனது புத்தாண்டுவாழ்த்துகள்"

"எப்படி இருக்கு உன்  வக்கீல் ப்ராக்டீஸ்? சகஜமாய்தான் முதலில் கேட்டான் மோகன், ஆனால் ப்ரதீபா,

"அது வழக்கம் போல இருக்கு இதில் நல்ல  பெயர் எடுத்து புகழ் பெறுவது அவ்வளவு சுலபமல்ல நிறைய உழைக்கணும்" என்றதும்

"வாதாடி வாதாடி உனக்கு  வயதாகிவிடும் ப்ரதீபா. இப்போதைக்கு நம் ஊரில் கிழங்கள்தான் வக்கீல் தொழிலில் பிரபலமாகி நாலுகாசு பண்ணி வருகிறார்கள்."  கிண்டலாகச் சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தான்.

ப்ரதீபா அவனை ஆழமாய் பார்த்துவிட்டு,"நான் வயதில் சின்னவள்தான் ஆனால் சட்ட நுட்பம் எனக்குள் முதிர்ந்த நிலையில் பதிந்துவருகிறது  அதனால்  பிரபலமாக வயதாகிறவரைக்கும் காத்திருக்கத் தேவைஇல்லை" என்று வெடுக்கென்று சொன்னாள்

"என்னவோ போ, கம்பூட்டர் சயின்ஸ், இஞ்சினீயரிங் மெடிசன்  என்றெல்லாம் படிக்காமல் இந்த 1995ல இப்படி சட்டம் எடுத்துப் படித்த அதிசியப்பிறவி நீதான்! உன் அப்பாவோ கேஸ் அதிகம் காணாத ஏழை வக்கீல். சங்கீதம்  தெரிந்தும் சான்ஸ் கிடைக்காத  தேங்காய் மூடி பாகவதர் மாதிரி ! அப்பாவைப்பார்த்தாவது உனக்கு புத்தி வந்திருக்கணும்?"

"மோகன் என்ன ஆச்சு உனக்கு நீ இப்படியெல்லம் பேசினதே இல்லையே? "

"ப்ரதீபா..உன் மேல் உள்ள அனுதாபத்துலதான் கேக்கறேன் இப்படி. வக்கீல் தொழில்ல வரட் வரட்னு கத்தறது உனக்கே அசிங்கமா இல்லயா?"

"செய்யும் தொழிலே தெய்வம். மோகன் உனக்கு நீ படித்த சிவில் இஞ்சினீயரிங் மாதிரி எனக்கு நான் படித்த சட்டம் தான் பிடித்தவிஷயம்"

"எனக்கு வக்கீல் தொழிலே அலர்ஜி"

"ஏன் அப்படி?"

"ஆமாம் எந்த வக்கீல் கோர்ட்டுல போயி நியாயத்துக்கு வாதாடறாங்க? வக்கில்னாலே பொய்சாட்சி குதர்க்கவாதம்தான். பட்டப்பகலில் பலர்முன் கொலை செய்தவனை இந்த வக்கீல்கள் தங்களது வாததிறமையினால் விடுதலை செய்துவிடுகிரார்கள். இன்றைக்கு நாட்டில் லஞ்சமும் ஊழலும் பெருகக் காரணம், தப்பு செய்தால் எப்படியும் தப்பிக்கவைத்துவிடுகிற வக்கீல்களின் துணிச்சலினால்தான்"

மோகன் பேசப்பேச ப்ரதீபாவிற்கு எரிச்சல் பற்றிக்கொண்டுவந்தது.

"உன் கருத்து தவறு மோகன். காலங்காலமாய் தர்ம அதர்மப் போராட்டங்கள் நடந்துதான் வருகின்றன. ராமன் காலத்திலேயும் ஒரு ராவணன் இருந்தான் ஆனா ராவணன் ஜெயிச்சதா சரித்திரம் இல்லை. நமது நாட்டில் விடுதலைபோராட்டத்தில் தார்மீக உணர்வையும் இறைபக்தியையும் வைத்து முன்னின்று நடத்திய மகாத்மா காந்தி ஒரு பாரிஸ்டர் என்பதை நீ மறந்ததால் இப்படிப்பேசுவதாய் நினைக்கிறேன்" என்றாள் உஷ்ணமான குரலில்

"ஆனால் காந்தியையும் ஒருத்தன் சுட்டுகொன்றானே ப்ரதீபா?'

"ஏசுவைக்கூட சிலுவையில் அறைந்தார்கள்; மெக்காவிலிருந்து  மெதினா வரைக்கும் நபிகள்நாயகத்தைக் கல்லால் அடித்தார்கள். நல்லவர்களின் சரித்திரமே அப்படித்தான்.."

"என்னுடைய தொழில்ல மணலும் சிமெண்ட்டும்கலந்து கோட்டையே கட்டுவேன் உன் தொழில்ல நீங்கள்லாம் மனக்கோட்டைதான் கட்டமுடியும்?"

சிரிப்பு பீறிட்டது மோகனுக்கு

"ஆமாம் நான் கட்டுகிற மனக்கோட்டை கூட சட்டத்திற்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் உட்பட்டதா தான் இருக்கும் "

ப்ரதீபா தன் நிலைதடுமாறாமல் உறுதியுடனும் கனல்தெறிக்கும் கண்களுடன் பேசிமுடிக்கையில் மோகனின் தாய்  எங்கேயே போயிருந்தவள் உள்ளேவந்தாள்.

இவளைக்கண்டதும்,"ப்ரதீபாவா? வாசலில் பழைய லூனாவைப் பாக்கற போதே வந்திருக்கிறது நீதான்னு நினைச்சேன். ஏன்மா, உன்  தொழில்ல இன்னும் உனக்கு வசதி வரலயா? ஒரு நல்ல கைனடிக் ஹோண்டா வாங்கும் அளவு காசு வரலயாக்கும் பாவம்?" என்று  பரிகாசமாய்கேட்டாள்.

மோகன் தனக்குப்பரிந்து பேசுவான் என்று ப்ரதீபா எதிர்பார்க்க அவனோ இவளது தொழிலை அம்மாவுடன் சேர்ந்து இன்னமும் கிண்டல் செய்ய அப்போது எடுத்த முடிவுதான் அவன் எதிரிலேயே தனது துறையில் வாழ்ந்துகாட்ட வேண்டுமென்ற சவாலாகிபோனது, ப்ரதீபாவிற்கு.

மோகனுக்கு அவன் அம்மா விரும்பிய பணக்கார இடத்தில் கல்யாணமாகியது. ப்ரதிபாவிற்கும் அடுத்த சிலநாட்களில் திருமணம் முடிந்தது.

அவளுடைய தொழிலுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் அவள் கணவர் நடந்துகொண்டார். புரிந்து இதமாய் நடக்கிறவர்  கணவராக  அமைந்துவிட்டால் அந்த மனைவிக்கு வாழ்க்கை ஒரு வரம்தான் ப்ரதீபா அந்த வரம் பெற்றிருந்தாள். காலத்தை அவள் கையில் ஏந்திக்கொண்டு செயல்பட்டதில் புகழும்பணமும் பெருகியது. நான்கு ஜூனியர்கள் வைத்துக்கொண்டும் சமாளிக்க இயலவில்லை.

"ப்ரதீபா, புது வருடமும் அதுவுமா தனியா என்னம்மா யோசனை?"

கணவரின்  கனிவான குரல் கேட்டு நிமிர்ந்தாள்

"வாசலில் யாரோ உன்னைபார்க்க வந்திருக்கார் ப்ரதீபா. உன்னைத் தெரியும் என்கிறார். போய் அழைத்துவந்து பேசும்மா. நான் கொஞ்சம் ஆபீஸ் வேலையா வெளியே போயிட்டு அரைமணில வரேன்" என்றபடி வெளியேறினார்.

ப்ரதீபா அவரைத்தொடர்ந்து  போர்ட்டிகோவிற்கு  வந்தாள்.

அங்கே நின்றவனை ஏறிட்டாள்.

மோகன்?

மோகன் தானா? முகமே  மாறிப் போயிருக்க தளர்ந்த நடையுடன் அவளை நோக்கி  வந்தான்.

"ப்ரதீபா.. நா.... நான் மோகன்" என்றான் தயக்கமாய். குரலில்கூட பழைய துடிப்போ ஜீவனோ இல்லை.

"மறக்கவில்லை மோகன்.. யாரையும் எதையும்" என்ற ப்ரதீபா,"வா உட்கார்" என்று  உள்ளே அழைத்துச் சென்று சோபாவைக் கை  காட்டினாள்.

ப் ப்ரதீபா...தேம்பினான்  மோகன்

"சொல்லு மோகன்! பத்துவருஷம் கழிச்சி என்னை நீ பார்க்கவந்த காரணம் என்னவோ?"

"ப்ரதீபா! நீ பேப்பரே படிக்கவில்லையா?" குழப்பமும் வேதனையுமாய் கேட்டான் மோகன்

"எங்கே அதற்கெல்லாம் நேரம்? வேலை அதிகம்.. அதுசரி, மோகன் என்ன விஷயம்  பேப்பரில் நீதான் சொல்லேன்?"

"நா நான் கட்டிடப்பணி ஒன்றின் லஞ்ச ஊழலில் மாட்டிகொண்டிருப்பதை போட்டோ போட்டு பிரசுரிச்சட்ட்டாங்க  ப்ரதீபா?"

"அப்படியா என்ன தப்பு செய்தாய்?"

"ஐய்யோ நான் எதுவுமே செய்யல. ப்ரதிபா.. ஒரு பெரிய இடத்துடன்  மோதியதுல அவன் என்னை இப்படிமாட்டி  விட்டுப் பழி வாங்கறான். நான் நிரபராதி ப்ரதீபா,.." என்று ஆரம்பித்தவன் எல்லாவற்றையும் விவரித்தான்.

கேட்டுவிட்டு பெருமூச்சுவிட்டாள் ப்ரதீபா

"கவலைப்படாதே, நியாயம் தோற்காது. தர்மம் தவறு செய்யாது. நேர்மை சாகாது. உன்னை என்னால் காப்பாற்றமுடியும். அன்று அரக்கு மாளிகையில் பாண்டவர்களைத் தீயிட்டுக் கொளுத்தமுயன்றானே துரியோதனன் அப்படிச் செய்ய அவனால் முடிந்ததா? கர்ணனும்  துரியோதன்மனைவியும் சொக்கட்டான் விளையாடியபோது "எடுக்கவோ கோர்க்கவோ" என்றானே கர்ணன்.. துரியோதனன்  அதைத் தவறாக நினைத்திருந்தால் டைவர்ஸ் வரை போயிருக்கக் கூடும். எதற்கு சொல்கிறேன் என்றால் நமது புராண இதிகாசங்களைவிட சிறந்த சட்டப்புத்தகம் எதுவும் கிடையாது, என்பதை உனக்கு ஆணித்தரமாய் பதியவைக்கத்தான். அந்த ஆதார நம்பிக்கையில்தான் எங்கள் வக்கில்தொழிலே சிறப்பா நடக்கிறது என்பதை உனக்குப் புரியவைக்கத்தான்.."

ப்ரதீபா...அன்னிக்கு உன் தொழிலைப்பத்திக் கேவலமாய்  பேசின என் மேல் உனக்கு இன்னிக்குக் கோபம் வரவில்லையா?" மன்னிப்பு கேட்கும் பாவனையில் கேட்ட மோகனை அனுதாபமய் ஏறிட்டாள் ப்ரதீபா.

மனசுக்குள் இத்தனை நாட்களாய் அடித்த புயல் சின்னப்புன்னகையில் வெளியேறிச்செல்ல ப்ரதீபா அவனை நோக்கி தெளிவான  மென்மையானகுரலில் இப்படிச்சொன்னாள்.

"இல்லை மோகன். உன் பேச்சுதான் எனக்கு ஒரு திருப்புமுனை. அன்னிக்கு எடுத்த சவால்தான் என்னை இந்த அளவு இந்த தொழிலை நேசிக்க வைத்து, என்னை இந்த உயர்ந்த நிலைக்குக் கொண்டும் விட்டிருக்கு. அதுக்கு நான்தான் உனக்கு நன்றி சொல்லணும்..."

oooOooo
ஷைலஜா அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |