டிசம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
சமையல்
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : பாண்டியனின் கோபம்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 73

  பாண்டியனின் கோபம் சாதாரணமான விஷயமில்லை - அவனுடைய கண்கள் கோபத்தில் சிவந்துவிட்டால், அந்தச் சிவப்புக்கு இணையாக போர்க்களத்தில் ரத்தம் சிந்தும்.

  போரில் ஒவ்வொரு பகை மன்னரை வீழ்த்தும்போதும், அவனுடைய கண்களின் சிவப்பு குறைவதில்லை. மாறாக, மேலும் மேலும் அதிகரிக்கும்.

  அப்படியானால், பாண்டியனின் சிவந்த கண்கள் எப்போதுதான் பழைய நிலைக்குத் திரும்பும் ?

  அதற்கு ஒரு விசேஷ மருந்து இருக்கிறது - அதை இந்தப் பாடலில் விவரிக்கிறார் முத்தொள்ளாயிரப் புலவர்.

  போர் முடிந்தபிறகு, எதிரி மன்னர்கள் எல்லோரையும் முடித்தபிறகு, இன்னும் ஆத்திரம் குறையாத, சிவந்த கண்களுடன் பாசறையில் அமர்ந்திருக்கிறான் பாண்டியன்.

  அவனால் கொல்லப்பட்ட எதிரி நாட்டு மன்னர்களின் வாரிசுகள், அவனைப் பார்த்து, மன்னிப்புக் கேட்பதற்கு வருகிறார்கள்.

  முதலில் வருவது, அந்த மன்னர்களின் விதவை மனைவிகள் - கணவனை இழந்த அவர்கள், பேரரசன் பாண்டியனுக்கு முன்னால் நேரடியாக வந்து நிற்பதற்குத் தயங்குகிறார்கள் - ஆகவே, அவர்கள் தங்களின் மகன்களை முன்னால் அனுப்பி, அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து நிற்கிறார்கள்.

  அந்த மகன்கள் எல்லோரும், சிறு குழந்தைகள்தான் - அவர்களுக்கு போர்த் தொழிலும் தெரியாது, ஆட்சி செய்வது எப்படி என்றும் தெரியாது - ஆனாலும், இறந்துபோன மன்னர்களுக்கு அவர்கள்தானே வாரிசுகள் !

  ஆகவே, அவர்களை முன்னால் நிறுத்திக்கொண்டு, 'மஹாராஜா, இந்தப் பச்சிளம் பிள்ளையின் முகத்தைப் பாருங்கள், எங்கள்மீது இரக்கம் காட்டுங்கள், கோபம் தணிந்து, தாங்கள் கைப்பற்றியுள்ள எங்கள் நாட்டை எங்களுக்கே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.', என்று அந்தப் பெண்கள் கெஞ்சுகிறார்கள். 'கழல்' ஆபரணம் அணிந்த பாண்டியனின் கால்களில் விழுந்து கதறுகிறார்கள்.

  பரிதாபத்துக்குரிய அவர்களின் தோற்றத்தையும், சோகத்தையும், கெஞ்சுதலையும் பார்க்கப் பார்க்க, பாண்டியனின் சிவந்த கண்கள், ஆத்திரம் தணிந்து பழையபடி மாறுகின்றன.


  தொழில்தேற்றா பாலகனை முன்நிறீஇப் பின்நின்று
  அழல்இலைவேல் காய்த்தினர் பெண்டிர் கழல்அடைந்து
  மண்இரத்தல் என்ப வயங்குதார் மாமாறன்
  கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து.

  (தேற்றா - தெளிவில்லாத / தெரியாத
  முன்நிறீஇ - முன்னால் நிறுத்தி
  அழல் - கோபம்
  காய்த்தினர் - கோபம் மூட்டியவர்கள்
  கழல் - காலில் அணியும் ஒரு வகை ஆபரணம்
  இரத்தல் - கெஞ்சுதல்
  வயங்கு - ஒளி மிகுந்த / விளங்கும்
  தார் - மாலை
  கண்ணிரத்தம் - சிவந்த கண்கள்)


  பாடல் 74


  நள்ளிரவு. படுக்கையில் மலங்க மலங்க விழித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள் ஒரு அழகி.

  என்ன ஆயிற்று அவளுக்கு ? அவளே சொல்கிறாள் -

  'மதம் பிடித்த யானைகளை அடக்கியாளும் அரசன் பாண்டியன், என் கனவில் வந்தான்.'

  சரி, நல்ல விஷயம்தானே, அதற்கு ஏன் இந்தப் பெண் திகைத்துப்போய் உட்கார்ந்திருக்கிறாள் ?

  'அதுமட்டுமில்லை, அவன் என்மேல் அன்போடு நடந்துகொண்டான், என்னிடம் காதல் மொழிகள் பேசி, அன்போடு அணைத்து முத்தமிட்டான்.'

  ஆஹா, ரொம்ப சந்தோஷம்., உங்கள் காதல் நூறாண்டு காலம் வாழட்டும். ஆனால், பாண்டியன் உன் கனவில் வந்து, உன்னிடம் காதலோடு பழகியதற்கும், நீ இப்போது பிரம்மை பிடித்ததுபோல் அமர்ந்திருப்பதற்கும் என்னம்மா சம்பந்தம் ?

  'சம்பந்தம் இருக்கிறது.', இன்னும் திகைப்பு விலகாத கண்களோடு அந்தப் பெண் தொடர்ந்து சொல்கிறாள், 'அவன் என்னைத் தழுவியதும், நானும் அவனைத் தழுவுவதாக நினைத்துக்கொண்டு, சிவந்த காந்தள் மலர்களைப்போன்ற என்னுடைய மெல்லிய விரல்களால் அவனைத் தொட்டேன், ஆனால், அடுத்த விநாடி, கனவு கலைந்துவிட்டது., என்னோடு இருந்த பாண்டியனைக் காணவில்லை - நான்மட்டும் இப்போது தனிமைத் துயரில் தவித்துக்கொண்டிருக்கிறேன் !'


  களியானைத் தென்னன் கனவில் வந்துஎன்னை
  அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே
  செங்காந்தள் மெல்விரலால் சேக்கை தடவந்தேன்
  என்காண்பேன் என்அலால் யான்.

  (களி - மதம்
  அளி - அன்பு / அருள்
  சேக்கை - படுக்கை
  தடவந்தேன் - தடவினேன்
  என்அலால் - நான் அல்லாமல் / என்னைத்தவிர)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |