Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கறுப்பு வெள்ளை கனவுகள் - சமூகக் கதை
- சத்யராஜ்குமார்
வேண்டாம். நான் க்ரைம் படிக்கிறேன்   இல்லை, இல்லை. சயன்ஸ் கதை வேண்டும்.  

ஓசை எழுப்பாமல்தான் உள்ளே நுழைய நினைத்தான். பாமரேனியன் இருட்டில் அவனை அடையாளம் தெரியாமல் வள்ளென்று குரைத்து விட்டது.

லைட் வெளிச்சம்.

வெப்பமாக அவனைப் பார்த்த பின் - உள்ளே மறைந்தார் அப்பா. இப்போதெல்லாம் அவர் எதுவும் கேட்பதில்லை. மவுனமாய் உமிழும் அந்த வெறுப்பான பார்வைக்கு பதில் முன்பைப் போல் கத்தி விடலாம்.

இருளின்
இட்டு நிரப்பாத
இடைவெளிகளில்
எல்லையற்று நீளும்
வெள்ளை நிழல்களின்
மவுன சப்தங்களை
மொழிபெயர்த்த பின்புதான்

பின்புதான்... பின்புதான்...

சமயத்தில் அவனுக்குள் புரண்டு வரும் கவிதை அந்தப் பார்வையில் அப்படியே பொசுங்கிப் போய் விடும். சத்தம் கேட்டு - கூந்தலை முடிச்சுப் போட்டபடியே லேகா வநதாள். " அண்ணா, வந்து சாப்பிட்டுப் போய்ப் படு. "

மணி பதினொன்றாகப் போகிறது. அவள் மட்டும் தூங்க மாட்டாள். அவன் சாப்பிடாமல் அவளுக்குத் தூக்கம் வராது. இந்த வீட்டில் அவனைப் புரிந்து கொண்ட ஒரே ஜீவன் அவள் மட்டுமே.

தினமும் அவன் முன்னால் ஐந்து நிமிஷமாவது உட்கார்ந்து, " அண்ணா, இன்னிக்கு நீ எழுதின கவிதையைச் சொல்லு. "

விழிகள் விரிய ஆர்வமாய் அவன் சொல்லும் கவிதையைக் கவனிப்பாள். " இந்த இடத்தில் அழகை-ங்கிற வார்த்தைக்குப் பதிலா எழிலை-ன்னு போட்டா இன்னும் நல்லாருக்குமோ? " நச்சென்று சில சமயம் திருத்தங்கள் சொல்வாள்.

காதல் கவிதைகளை அவன் வாசிக்கும்போது - அவள் கன்னத்து மேடுகள் பிங்க் சாயம் தீற்றிக் கொள்ளும். அதை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டே - " படவா அண்ணா, இப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு வர்ணிக்கறியே. யார் அவ? " என்பாள். " ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நீ மிகப் பெரிய கவிப் பேரரசு ஆகத்தான் போறேண்ணா. " என்று சத்தியம் செய்வாள்.

அவனிடம் ஏதாவது லேசான மாறுதல் என்றாலும் அதைக் கவனிக்கும் முதல் ஆள் அவளாகத்தான் இருக்கும். யோசனையோடு சாதத்தில் கைகளை அளைந்து கொண்டிருக்கும் அவனிடம் என்னவோ பிரச்சனை என்பதை உணர்ந்து கொள்ள அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.

இருந்தாலும் நேரடியாக, " என்ன பிரச்சனை அண்ணா? " என்று கேட்டு விட மாட்டாள். அவனிடம் எதைக் கேட்டால் தானாகவே விஷயம் வரும் என்று அவளுக்குத் தெரியும்.

" அண்ணா, உன்னோட கவிதை நோட்டு எங்கே? புதுசா ஏதாச்சும் எழுதியிருப்பியோன்னு காலைல இருந்து அதைத் தேடிட்டிருக்கேன். "

இந்த மாதிரி ஒரு கேள்விக்காகக் காத்திருந்தது போல உஷ்ணமாய்ப் பீறிட்டான். " கவிதையாவது, மண்ணாவது. இனிமே நான் எழுதப் போறதில்லை. எனக்குள்ள இருந்த சொப்பனாதித்யன்ங்கற கவிஞன் இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணி நாற்பது நிமிஷத்தோட செத்துட்டான். "

லேகா சற்றே திடுக்கிட்டுத்தான் போனாள்.

அவனுடைய கோபமான நிமிஷங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறாள். கவிதை எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்று மொழி பிறழ்ந்து கூட எந்தக் கட்டத்திலும் அவன் சொன்னதில்லை.

அவனுக்கு அதுதானே ஆக்சிஜன்.

" அண்ணா, மெதுவாப் பேசு. அப்பா காதில் விழப் போகிறது. "

" விழட்டும். அதான் கத்திப் பேசறேன். கவிதை, இலக்கியம்ன்னு தரையில் கால் பதிக்காம கனவில் வாழ்ந்திட்டிருந்தது போதும். "

" ஷ். மொதல்ல கவிதை எழுத மாட்டேன்னு சொன்ன உன் வாயைக் கழுவிட்டு வா. நீ பிறந்ததே கவிதை எழுதத்தான். அதை யாராலும் மாத்த முடியாது. "

அவன் சற்றே இளக்காரமாய் லேகாவைப் பார்த்தான்.

" நரம்பில்லாத நாக்கு எப்படி வேணா பேசும். இன்னிக்கு வரைக்கும் இப்படிச் சொல்ற நீ ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் - போதும்ண்ணா. கொஞ்சம் நடைமுறை உலகத்துக்கு வா - அப்படின்னு சொல்றதுக்கு ரொம்ப நேரமாயிடாது. அது வரைக்கும் நான் காத்திட்டிருக்க விரும்பலை. "

" அண்ணா, ஊர் உறவு எல்லாம் நீ கவிதை எழுதறதைப் பத்தி கரிச்சுக் கொட்டிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் உனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசறேனே? ஏன்னா நீ சாதிக்கப் போறேன்னு எனக்கு நல்லா தெரியும். அந்த நம்பிக்கையை கெடுக்கிற மாதிரி பேசாதே. "

அவளின் பதட்டமான பேச்சு அவனிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

" எனக்குள்ளே இருந்த கவிதைத் தீ அணையாம இருந்ததுக்கு வீட்டுக்குள்ளே நீ காரணமா இருந்தேன்னா, வெளியில் பிரேமா இருந்தா. என்னோட கவிதைகளுக்காகவே என்னைக் காதலிக்கிறதா சொல்லிட்டிருந்த பிரேமா... அவ... அவளே இன்னிக்கு சொல்லிட்டா. " அவனுக்குப் பாதியில் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

லேகா அவனையே பார்த்தாள். " பிரேமா என்ன சொன்னா? "

" எப்போ ஜெயிக்கப் போறேன்னு தெரியாம காத்திட்டிருக்கிறது எனக்கு போரடிச்சிருச்சு. உனக்கும் ஒரு நாள் போரடிச்சிரும். அதுக்கு முன்னால உன்னோட கற்பனைகளுக்கு முழுக்குப் போட்டுட்டு நிஜத்துக்கு வா-ன்னு சொல்லிட்டா. அது மட்டுமில்லே. "

பொன்னிற பார்டருடன் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த திருமண அழைப்பிதழை முன்னால் தூக்கிப் போட்டான்.

" அடுத்த மாசம் பதினெட்டாம் தேதி அவளுக்குக் கல்யாணம். இலக்கியத்தைக் கட்டிட்டு அழறவனுக்கு இந்த உலகத்தில் எதுவுமே கிடைக்கப் போறதில்லைன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. "

தட்டில் கையைக் கழுவின போது - அப்பா புன்னகையோடு அங்கே நின்றிருந்தார். " கஷ்டப்பட்டு உன்னை ஆட்டோமொபைல் படிக்க வெச்சேன். கையில் ஸ்பானருக்கு பதிலா நீ பேனாவைத் தூக்கிட்டு அலைஞ்சதை நினைச்சு இவ்வளவு நாளா எத்தனை கவலைப்பட்டிருப்பேன். "

சற்றே கலங்கிய கண்களோடு அவரைப் பார்த்தான். " அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. சில விஷயங்கள் சொல்லும்போது புரியறதில்லை. பட்டால்தான் புரியுது. சந்திரா மோட்டார்ஸ்ல வேகன்சி இருக்குன்னு சொல்லிட்டிருந்திங்களே... இன்னும் அந்த வேலை காலியா இருக்கா? "

" இருக்கு. ஆனா மேனேஜர் படு ஸ்ட்ரிக்ட். யாரோட சிபாரிசும் அவர் கிட்டே எடுபடாது. நீ ரிட்டன் டெஸ்ட்டில் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணணும். இன்ட்டர்வியூவில் அவர் கேக்கற டெக்னிகல் கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லணும். "

" பண்றேம்ப்பா. அவரை அசத்தற மாதிரி இன்ட்டர்வியூ நல்லாப் பண்றேன். "

லேகா கன்னத்தில் கை வைத்து, கவலையோடு அவனைப் பார்த்துக் கொண்டிருக்க - அவன் ஆத்மநாம், கல்யாண்ஜி, வைரமுத்து, அப்துல்ரகுமான் எல்லோரையும் மூட்டை கட்டி பரணில் தூக்கி வீசி விட்டு - ஆட்டோமொபைல் என்ஜினீரிங் என்று அட்டை போட்டிருந்த கார்க்கி பெல், ஜேம்ஸ் குக் ஆகியோரை தூசி தட்ட ஆரம்பித்தான்.

 
சந்தோஷ முடிவு விரும்புவோர் இங்கே தொடரலாம்   சோக முடிவு விரும்புவோர் இங்கே தொடரலாம்  
  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |