Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கறுப்பு வெள்ளை கனவுகள் - சயன்ஸ் கதை
- சத்யராஜ்குமார்
வேண்டாம். நான் சமூகக் கதை படிக்கிறேன்   க்ரைம் கதை விரும்பிகள் தொடர்ந்து படிக்க  

ஓசை எழுப்பாமல்தான் உள்ளே நுழைய நினைத்தான். பாமரேனியன் இருட்டில் அவனை அடையாளம் தெரியாமல் வள்ளென்று குரைத்து விட்டது.

லைட் வெளிச்சம்.

வெப்பமாக அவனைப் பார்த்த பின் - உள்ளே மறைந்தார் அப்பா. இப்போதெல்லாம் அவர் எதுவும் கேட்பதில்லை. மவுனமாய் உமிழும் அந்த வெறுப்பான பார்வைக்கு பதில் முன்பைப் போல் கத்தி விடலாம்.

இருளின்
இட்டு நிரப்பாத
இடைவெளிகளில்
எல்லையற்று நீளும்
வெள்ளை நிழல்களின்
மவுன சப்தங்களை
மொழிபெயர்த்த பின்புதான்

பின்புதான்... பின்புதான்...

சமயத்தில் அவனுக்குள் புரண்டு வரும் கவிதை அந்தப் பார்வையில் அப்படியே பொசுங்கிப் போய் விடும். சத்தம் கேட்டு - கூந்தலை முடிச்சுப் போட்டபடியே லேகா வநதாள். " அண்ணா, வந்து சாப்பிட்டுப் போய்ப் படு. "

மணி பதினொன்றாகப் போகிறது. அவள் மட்டும் தூங்க மாட்டாள். அவன் சாப்பிடாமல் அவளுக்குத் தூக்கம் வராது. இந்த வீட்டில் அவனைப் புரிந்து கொண்ட ஒரே ஜீவன் அவள் மட்டுமே.

தினமும் அவன் முன்னால் ஐந்து நிமிஷமாவது உட்கார்ந்து, " அண்ணா, இன்னிக்கு நீ எழுதின கவிதையைச் சொல்லு. "

விழிகள் விரிய ஆர்வமாய் அவன் சொல்லும் கவிதையைக் கவனிப்பாள். " இந்த இடத்தில் அழகை-ங்கிற வார்த்தைக்குப் பதிலா எழிலை-ன்னு போட்டா இன்னும் நல்லாருக்குமோ? " நச்சென்று சில சமயம் திருத்தங்கள் சொல்வாள்.

காதல் கவிதைகளை அவன் வாசிக்கும்போது - அவள் கன்னத்து மேடுகள் பிங்க் சாயம் தீற்றிக் கொள்ளும். அதை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டே - " படவா அண்ணா, இப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு வர்ணிக்கறியே. யார் அவ? " என்பாள். " ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நீ மிகப் பெரிய கவிப் பேரரசு ஆகத்தான் போறேண்ணா. " என்று சத்தியம் செய்வாள்.

அவனிடம் ஏதாவது லேசான மாறுதல் என்றாலும் அதைக் கவனிக்கும் முதல் ஆள் அவளாகத்தான் இருக்கும். யோசனையோடு சாதத்தில் கைகளை அளைந்து கொண்டிருக்கும் அவனிடம் என்னவோ பிரச்சனை என்பதை உணர்ந்து கொள்ள அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.

இருந்தாலும் நேரடியாக, " என்ன பிரச்சனை அண்ணா? " என்று கேட்டு விட மாட்டாள். அவனிடம் எதைக் கேட்டால் தானாகவே விஷயம் வரும் என்று அவளுக்குத் தெரியும்.

" அண்ணா, உன்னோட கவிதை நோட்டு எங்கே? புதுசா ஏதாச்சும் எழுதியிருப்பியோன்னு காலைல இருந்து அதைத் தேடிட்டிருக்கேன். "

இந்த மாதிரி ஒரு கேள்விக்காகக் காத்திருந்தது போல உஷ்ணமாய்ப் பீறிட்டான். " கவிதையாவது, மண்ணாவது. இனிமே நான் எழுதப் போறதில்லை. எனக்குள்ள இருந்த சொப்பனாதித்யன்ங்கற கவிஞன் இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணி நாற்பது நிமிஷத்தோட செத்துட்டான். "

லேகா சற்றே திடுக்கிட்டுத்தான் போனாள்.

" என்னாச்சுண்ணா உனக்கு? ஏன் இப்படி வெறுப்பா பேசறே? "

" காதல் இல்லாத உலகத்தில் கவிதை மட்டும் எதுக்கு? மரத்தை போன்சாய் ஆக்கி, டெலிவிஷன் பெட்டிக்கு மேல வளர்க்கிற சிந்த்தெட்டிக் உலகம். இதிலே காதல், கவிதை இந்த மாதிரியான ரோஜாப்பூ உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை. "

கண்களில் கேள்வியோடு அவனைப் பார்த்தாள் லேகா. " அண்ணா, வருத்தமோ, கோபமோ... கொஞ்சம் கவிதை கலக்காம ப்ளெய்ன் வார்த்தைகளில் எனக்குப் புரியும்படி சொல்லு. பிரேமா விஷயத்தில் ஏதாவது பிரச்சனையா? "

" ஆமா. "

" என்ன பிரச்சனை? "

" இனிமே அவ எனக்குக் கிடைக்க மாட்டா. "

அதிர்ச்சியை சின்ன மவுனத்தில் மிதக்க விட்டவள், " புதிர் போடாதே. விஷயத்தைச் சொல்லு. " என்றாள்.

சட்டையின் மேல் பாக்கெட்டிலிருந்து சிகரட் பெட்டி அளவிலான அந்த வஸ்துவை எடுத்து வைத்தான். " பிரேமாவைக் காதலிச்சதுக்கு இதுதான் மிச்சம். "

" என்னண்ணா இது? பிடிஏ மாதிரி இருக்கு? "

" பிடிஏ இல்லை. இதுதான் மொத்தமாய் நான் காதலிச்ச பிரேமா. அந்தப் பச்சைப் பொத்தானை அழுத்து. "

லேகா ஆட்காட்டி விரலை அந்த பட்டனின் மேல் தடவ எல்சிடி செவ்வகம் ஆரஞ்சு நிறத்தில் விழித்துக் கொண்டு, " Converse? " என்று கேட்டது.

" யெஸ்-ஐத் தொடு. "

அவள் தொட்டதுதான் தாமதம், அதனுடன் இணைந்த குட்டி மெட்டாலிக் ஸ்பீக்கர் ஃப்ரீக்வன்சி மாட்யூலேஷன் துல்லியத்தோடு க்ரிஸ்ப்பியாய் பிரேமாவின் குரலை வெளியிட்டது.

" ஆதி, ஒரு கவிதை சொல்லேன். "

கொஞ்ச விநாடிகள் கழித்து, " ப்ளீஸ் ஆதி. ஏன் பேசாமலே இருக்கே? "

இன்னும் சில விநாடிகள் கடந்ததும், " ஏய். இப்ப நீ கவிதை சொல்ல மாட்டே? உன்னோட பிரேமா கேக்கிறேண்டா. " என்று செல்லமாய் ஒரு டா போட்டது.

ஆதி சிவப்பைத் தொட்டு, அந்த செவ்வகத்தின் குரலை நிறுத்தினான். " சொல்ற வரைக்கும் இது கெஞ்சிக்கிட்டேதான் இருக்கும். கவிதை சொன்னா அதை விமர்சிக்கவும் செய்யும். பிடிச்சா பாராட்டும். பிடிக்கலைன்னா திட்டும். ஏன் பிடிக்கலை அல்லது ஏன் பிடிச்சதுன்னு விளக்கம் கூட சொல்லும். "

" எப்படிண்ணா? "

" பிரேமாவோட அப்பா ஒரு நியூரோ சயன்ட்டிஸ்ட்ன்னு உனக்குத்தான் தெரியுமே. அவரோட கைங்கர்யம்தான் இது. இன்னிக்குக் காலைல பிரேமா அவசரமா என்னைக் கூப்பிட்டா. எங்கப்பா எனக்கு ஒரு சுவிட்சர்லாந்து மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வெக்க அவசரப்படறார். நீ உடனே அவரை சந்திச்சுப் பேசுன்னு சொன்னா. சாயந்தரம் எனக்கு அப்பாயின்மென்ட் தந்திருந்தார். லேபில் போய் அவரைப் பார்த்ததும், அந்த டேபிள்ல கொஞ்ச நேரம் படு, உன்னைக் கொஞ்சம் டெஸ்ட் பண்ணணும்ன்னார். நான் படுத்ததும் என் தலையில் சில ஒயர்களை ஒட்ட வெச்சிட்டு, என் மகள் கிட்டே உனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டார். அவளோட க்ரிஸ்ப்பி வாய்ஸ். என்னோட கவிதையை விரும்பிக் கேட்கும் ரசனை. அதை அக்கு வேறா ஆணி வேறா விமர்சிக்கும் இலக்கிய ஆர்வம். இதெல்லாம் பிடிக்கும்ன்னேன். ரொம்ப சந்தோஷம். எங்கே அவ உடம்பின் மேல் உள்ள கவர்ச்சிதான் பிடிக்கும்ன்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன். என்னோட இருபது வருஷ ஆராய்ச்சியே ரிசெப்டர்களை நகலெடுப்பதுதான். நீ கேக்கற பிரேமாவின் க்ரிஸ்ப்பி வாய்ஸ், கவிதா ரசனை எல்லாத்தையும் அவளோட செரிப்ரம் செல்களிலிருந்து நகலெடுத்து சிப்பில் அடைச்சித் தரேன். அதை எடுத்துக்கிட்டு கெட் லாஸ்ட். என் மகள் என்னை மாதிரியே ஒரு ந்யூரோ விஞ்ஞானிக்குத்தான் வாழ்க்கைப்படப் போறா-ன்னு சொல்லி இதைக் கொடுத்து என்னை விரட்டிட்டார். "

" அடப்பாவி. நீ பிரேமாவைப் பார்க்கலியா? "

" பார்க்கறதால என்ன பிரயோஜனம்? அவ கிட்டேயும் இதே மாதிரிக் கேட்டிருக்கார். என் கிட்டே கவிதைதான் பிடிக்கும்ன்னு சொல்லியிருக்கா. என்னை அந்த இயந்திர மேஜையில் படுக்க வெச்சதே அவளுக்கு இதே மாதிரி ஒரு செவ்வகத்தைக் கொடுக்கத்தான். அது என்னோட சிந்தனைகளின் நகல். அவ கேட்ட போதெல்லாம் கவிதை சொல்லும். இந்த யோசனையை அவர் கிட்டே சொன்னவளே அவதானாம். எனக்கு இது மட்டும் கொடுங்க, அந்த சுவிட்சர்லாந்துக்காரனையே கட்டிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாளாம். "

" அப்படின்னு அவர் சொன்னாரா? "

" ஆமா. "

" அதைக் கேட்டுட்டு நீயும் தேவதாஸ் மாதிரி திரும்பி வந்துட்டியா? மட அண்ணா, எனக்கென்னவோ பிரேமா அப்படிச் சொல்லியிருப்பாள்ன்னு தோணலை. நீ அவளோட நேரடியாப் பேசிட்டு எந்த முடிவுக்கும் வா. "

 
ஆதி பிரேமாவுடன் சேர்ந்த கதை இங்கே   ஆதி பிரேமாவைப் பிரிந்த கதை இங்கே  
  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |