தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி

[ பாகம் : 1 ]

"தே, ராக்கம்மா, லெச்சுமி மக ஆளாயிருக்காமே! தெரியுமா?" கள்ளிக்கட்டைக் கீழே போட்டுவிட்டு முந்தானையால் முகம், பின்கழுத்து எல்லாம் துடைத்தபடியே கேட்டாள் மாரியம்மா.

"அப்பிடியா! ஒரே மக... சடங்கு பெரிசாத்தான் செய்வா... போய் கேட்டுட்டு வரலாம் வர்றியா?"

"தோ... சேலையை மாத்திட்டு முகம் கழுவிட்டு வர்ரேன்..."

"இவர்கள் போகும்போது அங்கே ஏக கசமுசா. ஒரே பெண்கள் கூட்டம். அளுக்கொரு கேலி. ஜாடைப் பேச்சுக்கள்.

கலியாணமாகி அறு வருஷம் கழித்து தவமிருந்து பெற்ற குழந்தை பொன்னி. பின்னாலும் போட்டிக்கு ஆளில்லை. சீராட்டலுக்குக் கேட்க வேண்டுமா?

பதினாறு நாளும் உறவு முறை போட்டி போட்டுக் கொண்டு பலகாரம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

O

"அட, பொன்னி! பள்ளிக்கூடத்திலிருந்து எப்ப வந்தேம்மா? கடலை அவிச்சு வைச்சிருக்கேன்... குழாய்ப்புட்டு செஞ்சிருக்கேன். சாப்பிட வாம்மா..."

புத்தகப்பை ஒரு பக்கமாய் அனாதையாய் கிடந்தது. அருமை மகள் பொன்னி எங்கோ வெறித்துப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

"ஏம் பொன்னி, ஒரு மாதிரி இருக்கே...? யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா? அட, கண்ணுலே தண்ணி கட்டிக் கிடக்கு!" லட்சுமி ஆதரவாய் மகளின் தலையைக் கோதினாள்.

"ஏம்மா, சடங்கெல்லாம் வேணான்னா கேட்டீங்களா?" பொன்னிக்குப் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.

"ஏன்? அதுக்கென்ன இப்போ?" லட்சுமி திகைத்தாள்.

"அதுக்கென்னவா? கண்ட கண்ட சினிமா பாட்டெல்லாம் பாடி கேலி பண்றாங்கம்மா!"

"எவன்டீ கேலி பண்ணினவன்?" ஆக்ரோஷமான குரலைக் கேட்டதும்தான் கணவன் வந்து விட்டதை உணர்ந்தாள் லட்சுமி.

"ஆமாம், சொல்லிட்டா உடனே சண்டைக்குப் போயிருவீங்க! அப்புறம் எங்க வெளியே போனாலும் முதுகுக்குப் பின்னால 'இவதான், இவதான்'னு ஆணும், பொண்ணும் கிசுகிசுப்பாங்க... எதுக்கு வம்பு!" பொன்னி சலிப்பாக பேசினாள்.

"ஏண்டீ, கேட்கவும் கூடாதுங்கறே! இப்படியே விட்டா திமிராப் போகாதா!" லட்சுமி அங்கலாய்த்தாள்.

"அப்பா, பட்டாசுலே நெருப்பு வெச்சா தீவாளி, பட்டாசு கடைக்குத் தீ வைச்சா நஷ்டம்பா! உங்களுக்கு நைச்சியமா கண்டிக்க வராது. ஆர்ப்பாட்டம் பண்ணி ஆ, ஊம்பீங்க! விளையாட்டு வினையாகும்... விடுங்க..."

"அதுக்கும், சடங்குக்கும் என்ன தொடுப்பு!?" லட்சுமியின் கேள்வி பொன்னியை சீற வைத்தது.

"என்னம்மா, புரியாதவளா இருக்கியே! பதினெட்டு நாள் முன்னே இருந்த அதே பொன்னிதான் நான்! கொம்பா முளைச்சிப் போச்சு. நான் பெரிய மனுஷியானதை சடங்குங்கற பேரிலே நீங்க தம்பட்டமடிக்காம இருந்திருந்தா ஊர் விடலைப் பசங்களுக்குத் தெரிஞ்சிருக்குமா?"

"இது என்னாடி கூத்து! இன்னக்கி இல்லாட்டிப் போனாலும் ஆறு மாசம், ஒரு வருஷம் பொறுத்து மதமதன்னு வளர்றப்ப தெரியாமலாப் போகும்!"

"அதுவா தெரியறப்ப தெரிஞ்சிட்டுப் போவுது... நாமா ஏன் டமாரம் அடிக்கணும்? அதுவரைக்கும் நிம்மதியா ஸ்கூலுக்குப் போவேனில்லே?"

"என்னடி நீ புரியாத்தனமாப் பேசிக்கிட்டு... நாளைக்கு சொந்தபந்தம் என்ன சொல்லுவாங்க. ஒரு மக... சடங்கு சுத்தக்கூட வக்கில்லே... கஞ்சக்கருமின்னு பேசமாட்டாங்களா?"

"அம்மா, அதெல்லாம் அந்தக் காலத்திலே நாலு பேர் பொண்ணு கேட்டு வரணும், நம்ம பொண்ணு ஆளானது நாலு உறவுக்காரங்களுக்குத் தெரியணுமின்னு செஞ்ச ஏற்பாடு, இப்போ படிச்சு, நல்லா அறிவு தெரிஞ்சு, பதினெட்டு வயசுக்கு மேலே கல்யாணம் பண்ணறப்புவுமா இந்த பத்தாம்பசலித்தனம்! அப்போ படிப்பு, பாடம் ஒண்ணும் இல்லே... வீட்டை விட்டுப் பொண்ணு வெளியே போக வேண்டாம்..."

அதுவரை மௌனமாயிருந்த ராமையா மகளை இடைமறித்துப் பேசினார்.

"நடந்தது நடந்து போச்சு. இப்போ என்னாங்கறே?"

"நாளையிலிருந்து நான் ஸ்கூலுக்குப் போகலே! போட்டோ , கச்சேரின்னு அத்தனை கூத்தடிச்சுட்டு எனக்குத் தெருவோட போக கூச்சமா இருக்கு... எல்லாரும் என்னையே பார்க்கறாப் போல இருக்கு..." பொன்னி தீர்மானமாகச் சொன்னாள்.

"அடங்கொப்புரானே!" ராமையா ஆச்சரியப்பட.

"நீதான் படிப்பு, படிப்புன்னு அலைஞ்சே! ரொம்ப நல்லதாப் போச்சு... வயணமா ஆக்க, அரியக் கத்துக்க... கட்டினவன் வயிறு வாழ்த்தும்" லட்சுமி முடித்தாள்.

O

"நீயே கஷ்டப்படுறே... அதிலே விருந்தென்ன?"

"சொல்லுங்கண்ணே... அண்ணி ஏன் இப்படிப் பேசுறாங்க... இல்லாமப் போனாலும் ஆசை விடுதா... என்னமோ, அவுங்கண்ணன் வீட்டுலே பால் பாயசமா ஊத்தினாலும் நான் கேப்பைக் களியாவது எம் மருமகளுக்குக் கிண்டித் தர மாட்டேனா?" ராமையாவின் தங்கை சிவகாமிக்கு ஏகமாய் ஆற்றாமை.

"லட்சுமி, சிவகாமு ஆசைப்படறா... அறுவடை நேரம். என்னாலே அசைய முடியாது. பொன்னிய கூட்டிகிட்டு பத்து நாளு இருந்திட்டு வா... சிவகாமு, சந்தோசம் தானே!" சிவகாமி மகிழ்ச்சியுடன் தலை அசைக்க, கணவனுக்கும், நாத்திக்கும் தெரியாமல் நொடித்துக் கொண்டே உள்ளே போனாள் லட்சுமி. இதைப் பார்த்த பொன்னிக்கு சிரிப்பு வந்தது.

O

முன் நிலாக் காலம். கயிற்றுக் கட்டிலில் உட்கர்ந்திருந்தார் ராமையா. கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.

"தே, அப்ப நீ தெரிஞ்சு சொல்றியா? தெரியாம சொல்றியா?"

"ஏய், நீ எங்க வரே? எதைப்பத்தி சொல்றே..?"

"ஒண்ணுந்தெரியாத மாதிரிதான்! ஒந்தங்கச்சி வூட்டுக்கு மகளை சீராட்ட கூட்டிட்டுப் போகச் சொல்றியே... அதைப் பத்தித்தான்! வெளக்கமா சொன்னப்புறமாவது புரிஞ்சா சரி..."

"அதுக்கா! அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கென்னவா! நாலு ஆம்புளைப் பசங்க இருக்கற எடத்துலே சமைஞ்ச பொண்ணை வெச்சுக் காப்பாத்தறது... பஞ்சும் நெருப்பும் போல... ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் கையைப் பிசைஞ்சா சரியாகிடுமா?"

ராமையா கடகடவென்று சிரித்தார்.

"லட்சுமி நீ கோபத்துலே கூட அழகா இருக்கேடீ. மத்தவங்க முன்னால மரியாதையா வாங்க, போங்கங்கறதைவிட தனியாக இருக்கறப்போ வா, போன்னு பேசறதிலே தனி சொகம் இருக்கும்".

லட்சுமி நாணத்தில் சிறிதே குரல் தணிய,

"ஏன் பேச்சை மாத்தறீங்க? கருவாட்டுக் குழம்பை ஊத்தினாலும் காரியத்தை மறக்கமாட்டா இந்த லட்சுமி! கேட்டதுக்கு பதில் எங்கே?"

"ஆமா, பொன்னியும், சிவகாமியும் எங்கே?"

லட்சுமிக்கு முகம் கடுகடுவென்றாகியது.

"போஸ்ட் ஆபீஸ் ஐயா மருமக ஊரிலேயிருந்து வந்திருக்கில்லே! என்னாமோ, கூடை போடுதாம்... கத்துக்கப் போயிருக்காங்க! சரி, விஷயத்துக்கு வாங்க!"

"ஒங்கண்ணன் வீட்டுக்குப் போன மாசம் பொன்னியைக் கூட்டிட்டுப் போனியே! ஒங்கண்ணன் புள்ளைங்க சாமியாரா?"

லட்சுமி எரித்துவிடுவதைப் போல் கணவனை முறைத்தாள்.

"அவங்க கட்டிக்கப் போற முறை மாப்பிள்ளை!"

"இவனுகளுக்கும் முறை இருக்கே?"

"முறை இருக்கலாம்... பவிஷு வேண்டாம்? தனக்கே சோத்துக்கு அல்லாடறவன், கோழிக்குக் குஞ்சலம் வேணுமின்னாம். உங்க தங்கச்சி அந்தக் குடும்பத்துலே போய் கஷ்டப்படறது போதும். மகளுக்கும் அந்த வெனை வேண்டாம்!"

"அது பொன்னி இஷ்டம். அவ யாரைக் கட்டிக்கறேன்னாலும் எனக்கு சம்மதம்".

"எம்மக நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டா!"

"அப்ப ஏன் சந்தேகம்... நிம்மதியாக் கூட்டிட்டுப் போ. ஒம்மகளை எவனும் கையைப் பிடிச்சு இழுத்துர மாட்டான்". ராமையா துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடந்து விட்டார். இனி ஒரு மணி நேரம் வயல் வரை காலார நடந்து விட்டுத்தான் வருவார். லட்சுமி பெருமூச்சு விட்டாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 2 ]

பொன்னிக்கு அத்தையின் ஊரான தாமரைக் குளம் மிகவும் பிடிக்கும். பெயருக்கேற்றபடி ஊரின் எல்லையில் அம்மன் கோவிலருகே அழகிய தாமரைக்குளம். எந்தக் கோடையிலும் வற்றியதில்லை. பெரிய ஏரி, தவிர இரண்டு குளம் இருப்பதால் பயிர் செழிப்பு. எல்லாவற்றையும் விட கோவில் திருவிழா. கடை கன்னிகளில், வளையலும், மாலையுமாக அத்தை மகள் ஆண்டாளுவும், வாங்கிக் குவிப்பார்கள். ரங்கராடினத்தில் ஏறி கமர்கட் ஒழுக ஒழுக சுற்றுவார்கள். பதினைந்து நாள் திருவிழாவும் பொன்னிக்கு படுகுஷிதான். அதுவும் போன வருஷமே லட்சுமி ஆளாக இருக்கிற பெண் என்று தடுத்து நிறுத்தி விட்டதால் இப்போது சொல்ல முடியாத சந்தோஷம்.

ஆண்டாளு இவளைப் பார்த்ததுமே கட்டிப் பிடித்துக் கொண்டு கூத்தாடினாள்.

"நாளைக்காடி காப்பு கட்டறாங்க?"

"ஆமாம்" என்று தலையசைத்தாள் ஆண்டாளு.

சிவகாமுவின் குடும்பம் பெரியது. நான்கு பிள்ளைகளுக்கும் பண்ணையில்தான் வேலை. மூத்த பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் மனைவிகளுக்கும் அங்குதான் வேலை.

"வாங்க அத்தை! எப்போ வந்தீங்க? ஊரிலே மாமா சௌக்கியமா?"

குரல் கேட்டு பளிச்சென்று திரும்பினாள் பொன்னி. மனசுக்குள் விளக்குப் போட்டால் போல் ஒரு வெளிச்சம். ஒரு விநாடி இருவரின் பார்வையே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டன.

முதலில் சுயநிலைக்கு வந்தவன் செல்வம்.

"ஆண்டாளு, அத்தைக்கு காபி கொடுத்தியா? அவுங்க காபி சாப்பிட்டு பழக்கமானவுங்க!"

"எல்லாம் சௌக்கியந்தான்! ஒங்க ஊர் திருவிழாவுக்கு வந்தாத்தான் ஆச்சின்னு அம்மா ஒத்தைக்காலிலே நின்னு கூட்டிட்டு வந்திருக்காங்க... ஊரிலே அறுப்பு சமயம். மாமா தனியா இருக்காங்க..."

"அதென்ன அப்படி சொல்லிட்டீங்க?" என்று செல்வமும்,

"இந்தாங்கத்தே, காபி" என்று ஆண்டாளும்,

"குளிக்க குளத்துக்குப் போகலாமா?" என்று சிவகாமியின் மூத்த மருமகள் ராஜாத்தியும் வர அந்த இடம் கலகலப்பானது.

இரண்டு உள்ளங்கள் மட்டும் தனிப்பட்டுப் போயின.

'அடேயப்பா, இடையிலே ஒரு வருசம்தானே வரலை... என்னமாய் வளர்ந்து விட்டாள்!' என்று செல்வமும்,

'சே, பாண்டியும், தாயமும் விளையாடிய செல்வம் அத்தானா இப்படி! என்ன அழகான மீசை... சட்டை போடாம, இந்த ஆம்பிளைங்களுக்குத் துளிக்கூட வெக்கமே இல்லை' இந்த ரீதியில் பொன்னியும் ஒருவரைப் பற்றி ஒருவர் அசை போட்டனர். அந்த அசை ருசியாக இருந்தது.

O

"ஆரு வீட்டிலே, ஆண்டாளு, அண்ணி, யாராச்சும் ஒரு டம்ளர் சுடுதண்ணி கொண்டு வாங்க". அந்தக் குரல் பொன்னியின் மனதில் ஒரே சமயத்தில் பயத்தையும், ஆவலையும் தூண்டின.

டம்ளரை நீட்டிய கையைக் கண்டு திடுக்கிட்டான் செல்வம்.

"நீ... நீ... வேற யாரும் இல்லே?"

"இன்னிக்குத் தீமிதி ஆச்சே. எல்லாரும் போயிருக்காங்க". பொன்னியின் நாக்கு தாளம் போட்டது.

"நீ போகலே?"

"நா... நா... உடம்பு சுத்தமில்லே... போகக் கூடாதுன்னு..."

"சுத்தமில்லேன்னா... குளிக்கலையா?" குறும்பாகக் கேட்டபடி டம்ளரை வாங்கினான் செல்வம்.

"ஆங்..." சடாரென்று தலைநிமிர்ந்த பொன்னி மெதுவாக சகஜ நிலைக்கு வந்தாள்.

"நீங்க போகலே?"

இல்லையென்று தலையாட்டினான் செல்வம்.

"ஏன்?"

"உன்னைப் பார்க்கத்தான்"

"நான் தனியா இருப்பேன்னு எப்படித் தெரியும்?"

"கௌளி சொல்லிச்சு"

"என்னன்னு?"

"பொன்னி விலக்காயி இன்னிக்கு இரண்டாம் நாள். திருவிழாவில் வரமாட்டா. நீ போய் அவ மனசைத் தெரிஞ்சுக்கன்னு..."

"சொல்லும்... சொல்லும்! ஊமை போல இருந்துக்கிட்டு என்னைப் பத்தி தெரிஞ்சு வெச்சிட்டிருக்கீங்களே!"

"பொன்னி... என்னதான் நடிச்சாலும் மனசு வேணுங்கறவங்களைச் சுத்திதான் வலை பின்னுது. உம்... நான் ஆசை வைச்சு என்ன பண்ண?! எங்களது ஏழைப்பட்ட குடும்பம். நீ ஒரே பொண்ணு... மாமா உன்னை எனக்குக் கொடுப்பாரா? உம் மாமன் மகன் பலவேசம், செந்தில் ரெண்டு பேரிலே ஒருத்தரைக் கட்டிக்குவே! ஏன்... உள்ளே போறே?"

கோபத்தோடு உள்ளே போகத் திரும்பிய பொன்னியின் கையை வெடுக்கென்று பற்றி நிறுத்தினன் செல்வம்.

"அட, ஆம்பிளைத்தனமா கையைப் பிடிச்சிட்டீங்களே! ஐயோ, என்னத்தான் சுடுது..."

"வென்னீர் கேட்டப்பவே கேட்டிருக்க வேண்டிய கேள்வி.. காய்ச்சலாயிருந்ததாலேதான் பாதி வேலையைப் போட்டுட்டு வந்தேன்".

"அய்யோ!"

"சே, விடு... அதான் மருந்து கிடைச்சுடுச்சே! காய்ச்சல் பறந்துடும்... பொன்னி! நிசமாவே என்னைக் கட்டிக்குவியா? ஏமாத்தாம பதில் சொல்லு".

பொன்னி லேசாக சிரித்தாள்.

"வாசல்லே யாரோ வர்ற சத்தம் கேட்குது. நீங்க படுத்துக்குங்க... பதிலை ரெண்டு நாள் பொறுத்து அம்மன் மஞ்ச நீராட்டு விழா இராத்திரி தென்னந்தோப்பில் சொல்றேன்".

பொன்னி ஓடி விட்டாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 3 ]

"அட, செல்வம் எப்ப வந்தே? ஏன் படுத்திருக்கே..." சிவகாமி மகனைத் தொட்டுப் பார்த்தாள்.

"ஐயோ, காய்ச்சல் அடிக்குதே! பொன்னி, அத்தான் எப்ப வந்ததும்மா?" பின்கட்டிற்குப் போய்க் கொண்டே கேட்டாள் சிவகாமி.

"அத்தானா! வந்திருக்காங்களா? காச்சலா? எந்த அத்தான்?"

பொன்னியின் கேள்விகள் செல்வத்துக்கு சிரிப்பை வரவழைத்தன.

O

பொன்னியின் கைவிரல்களைப் பிரிப்பதும், மூடுவதுமாக இருந்தான், செல்வம். எத்தனை அழகான விரல்கள். பட்டுப் போல் மெத்தென்று இருக்கிறதே! அதில் மருதாணிச் சிவப்பு மனசைச் சுண்டுகிறதே. இதைப் பிடிக்கும் பாக்கியம் அவனுக்கு உண்டா?

"ஐயே! என்ன பேசாமயே இருக்கே"?

பேச்சா...இப்படியே யுகம் யுகமாய் இருக்கலாம் போல இருந்தது. வானத்தில் பௌர்ணமி நிலா குளிர்ச்சியாய் ஒளி வீசியது. அழகான தோப்புக் காற்று. மணல் மேடு.

"நீங்க ஏன் படிப்பை நிறுத்திட்டீங்க?"

"பத்தாம் கிளாஸ் வரை படிச்சதே பெரும்பாடு. அதுவே எசமான்கிட்டே கடன் ஏறிப் போச்சு" பெருமூச்சு விட்டான் செல்வம்.

"இதென்ன எல்லாரும் பண்ணையிலே உழைக்கிறது நேர்த்திக் கடனா? மதுரைக்கோ, திருச்சிக்கோ வேலை தேடி போறதானே?"

"புரியாமப் பேசாதே பொன்னி! தாத்தாவோட தாத்தா பட்ட கடன் வட்டியும், வட்டிக்கு வட்டியுமா குட்டி போட்டு இன்னக்கி எண்பதாயிரத்துச் சொச்சத்துலே இருக்கு. மேல மேல கடன் வாங்கறோம்..."

"ஆத்தாடீ, எம்பதாயிரமா?"

"பொன்னி, கிடைச்சிருக்கிற நேரமே கொஞ்சம். அதிலேயும் பழங்கதை பேசிக்கிட்டு! இனிப்பா ஏதாச்சும் பேசேன்..."

பொன்னி மெல்ல சிரித்தாள்.

"வேப்பங்காயை வெல்லத்திலே பொதிஞ்சு கொடுத்தா மாதிரி இனிப்பா பேசிட்டாப் போதுமா? நிலைமையைப் புரிஞ்சுக்க. அதைப் பத்தி நினைக்கவே ஏன் எல்லாரும் பயப்படறீங்க? ஒதுங்கிப் போறதாலே விமோசனம் கிடைச்சுடுமா?"

"அடேங்கப்பா, வாயாடி பொன்னி சாதுவாயிட்டாளேன்னு நினைச்சேன். நெருங்கிப் பார்த்தால்ல புரியுது!"

"ஏண்டா இவளைக் கட்டிக்கணுமின்னு நினைச்சோமின்னா? நேருக்கு நேர் நியாயத்தைப் பேசினா வாயாடியா?"

"அது போகட்டும்... மஞ்ச நீராட்டன்னிக்கு தோப்புக்கு வரேன்னு எந்த தைரியத்துலே சொன்னே?"

"என் அத்தானுக்கு அம்புட்டு துணிச்சல் கிடையாதுங்கற தைரியம்தான்"

"சே, ஒரு பொண்ணோட மானத்தைக் காப்பாத்தற விஷயத்துலே கோழைன்னு பேர் வாங்கினா குத்தமில்லே! உரிமையோட ஒரு பொருளை அனுபவிக்கறதுதான் தர்மம். எல்லாரும் உன்னைத் தேட மாட்டாங்களா?"

"ஆமாம். தேடுவாங்க... நான் போறேன்" போலியாக எழுந்து பொன்னி மணலை உதற, வெடுக்கென்று அவள் கையை அவன் இழுக்க மலர் மூட்டையாய் அவன் மேல் சரிந்தாள் பொன்னி.

ஒருவரை ஒருவர் விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

"பாரமாயிருக்கா?" அவனது சுருட்டை முடியை அளைந்தபடியே கேட்டாள் அவள்.

"ஆயுசு பூராவும் சுமக்க நான் தயார்" அவள் நெற்றி, மூக்கு, உதடுகள், கழுத்து என் அவன் விரல்கள் ஊர்ந்தன.

"ஊம்... எல்லை தாண்டக் கூடாது" பொன்னி எழுந்திருக்க முயல, முன்னிலும் வேகமாய் இழுத்து சாய்த்துக் கொண்டான் செல்வம்.

"அப்பா, என்ன முரட்டுத்தனம்! வலிக்குது" அது பொய் முனகல் என்பது அவனுக்குத் தெரியாதா? உல்லாசமாய் சிரித்தான்.

"பொன்னி ரெண்டு நாள்லே ஊருக்குப் போகணுமின்னு அத்தை சொன்னாங்களே! மறுபடி எப்போ?" ஏக்கமாக ஒலித்தது அவன் குரல்.

"அதைப் பத்தி இப்பவே நினைச்சு இருக்கற சொகத்தையும் நாசப் படுத்திக்கணுமா? அம்மா கோடங்கி கேட்கப் போயிருக்காங்க... திருவிளாவுக்கு திருவிளாதானே பெரிய கோடங்கி வருவாராம். வர நடுச்சாமம் ஆகும். அத்தைகிட்டே ஆண்டாளோட கூத்துப் பார்க்கப் போறதா சொல்லிட்டேன். நாலு இடத்திலே கூத்தா... பக்கத்து வீட்டு ராமாயி கூட கொஞ்சம், கோடி விட்டு கோகிலா கூட கொஞ்சம், எதிர்வூட்டு பேச்சி கூட கொஞ்சம் இப்படி நாலு இடத்திலேயும் போக்குக் காட்டிட்டு இங்க வந்திருக்கேன்... ஒவ்வொருத்தியும் இன்னொரு இடத்திலே இருப்பேன்னு சமாதானமா இருப்பா... அவ அவ முழிச்சுட்டு தேட ஆரம்பிக்கிறதுக்குள்ளே போவணும்... நாம போவலாம். நான் உனக்குத்தான். உறுதியா அடிச்சுப் பேசு... அத்தைகிட்டே சொல்லி பரிசம் போட வரச் சொல்லு. மசமசன்னு இருக்காதே!" பொன்னி உறுதியாக எழுந்து கொண்டாள்.

"நாளைக்கும் எப்படியாவது ஏமாத்திட்டு வாயேன்" செல்வம் கெஞ்சலாகப் பார்த்தான்.

"அது தப்பு... மாட்டிக்குவோம். திருட்டு மாங்காய் அடிக்கிறதிலேயும் அளவிருக்கு! அம்மா கோடங்கி பத்தி ஒரு வாரமாச் சொல்லிட்டிருந்ததாலே வசதியாப் போச்சு. பக்கத்திலே படுத்திருக்குமா... அசைஞ்சாக் கண்டு பிடிச்சுடும். கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டு போகுது..." பேசிக் கொண்டே நடந்தவள் திருவிழா கூட்டத்தில் கலந்து விட்டாள்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 4 ]

"இதென்னடீ இவ... நாலெழுத்துப் படிக்க வைச்சது தப்பாப் போச்சே... எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசறா. நாளைக்குப் போற எடத்துலே பொண்ணு வளர்த்துருக்கா பாருன்னு எம் முகரையிலே இல்லே காறித் துப்புவாங்க!" லட்சுமி எழுந்து வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தாள்.

"நல்லாத் துப்புவாளே! நம்ம வாய் மட்டும் சும்மா இருக்குமா? அவ வெறும் எச்சலைத் துப்பினா நீ வெத்தலை போட்டுத் துப்பு... ஏன் அத்தை, வசதியுள்ளவங்க சடங்குங்கற பேரிலே மேளம், பந்தல், சமையல்னு நாலு தொழிலாளிங்க பிழைக்க செலவழிக்கச் செஞ்ச ஏற்பாட்டை... இல்லாதவங்க, கடன் வாங்கியாவது செய்யணுமா? ஏற்கனவே கடன் ஏறிக் கிடக்கு... அப்புறம் என்னை மாதிரியே ஆண்டாளு படிப்பும் கெடும்".

"பொன்னி! நீயே எட்டு கிளாசோட நிறுத்திட்டே... அவளுக்கேம்மா படிப்பு. படிச்சா அதுக்கு மேல மாப்புள்ளை தேடணும். ஊரு கெட்டுக் கெடக்கு. வயசுப் பொண்ணு... நேரா நேரத்துலே வரலேன்னா அது வேற கவலை!"

பொன்னியின் பேச்சை அங்கு மதிப்பாரே இல்லை.

"ஒரு பொண்ணு உட்கார்ந்தா ஒம்பது உக்காரும்பாங்க... பொன்னி வந்த நேரம் ஆண்டாளும் வயசுக்கு வந்துட்டா"

"அதான் புறப்பட்ட பயணம் தடைப்பட்டுச்சே... உங்கண்ணன் வரேன்னிருக்காரே. நீ சடங்கை முடி. ஒரேயடியாப் பார்த்துட்டே போறோம்..."

ஆண்டாளும், பொன்னியும் மௌனமாகப் பெரியவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

O

"ஐயா கும்புடறமுங்க..."

"வா, பழனி... சின்னம்மாவுக்குக் கலியாணம் நிச்சயமாவப் போவுது... மாப்புள்ளை வீட்டுக்காரங்க சம்மதம் தெரிவிச்சு லெட்டர் போட்டிருக்காங்க... சும்மா தேனீ மாதிரி சுறுசுறுப்பா வேலை பார்க்கணும்... என்ன புரியுதா?" மடக்கு நாற்காலியில் சாய்ந்தபடி மீசையை நீவிவிட்டுக் கொண்டு கேட்டார் பண்ணையார் பரமசிவம்.

"ஆவட்டுமுங்க"

"மீனாட்சி, பழனி வந்திருக்கான் பாரு... அவன்கிட்ட என்ன சொல்லணுமோ சொல்லு..." உள்ளே பார்த்து உரக்கக் குரல் கொடுத்தார்.

இரட்டை நாடி சரீரத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்த மீனாட்சி, "பழனியா, வா... என்னாலே வரவரத் தள்ளலேப்பா. ஒம் பொஞ்சாதி, மருமகளை வரச் சொல்லு. சும்மா வீடு வீடுன்னு ஓடாம... மாவு இடிக்கணும், சாமானெல்லாம் நோம்பணும், நெல்லு அவிக்கணும்... ஏகப்பட்ட வேலை கிடக்கு... இங்கியே சாப்பிட்டுக்கலாம்", சொல்லி முடிப்பதற்குள் மூச்சிரைத்தது.

"சரிங்க"

O

"அதிகப்படி வேலை செஞ்சா கூலி எதுவும் கிடையாதா மாமா?" சாணியில் உமி, கரித்தூள் கலந்து கொண்டே கேட்டாள் பொன்னி.

"கூலி என்னம்மா கூலி... அந்தச் செந்தில் பவலாட்டும் வாக்குவாதம் பண்றே. அவசரம் ஆத்திரமுன்னா சுணங்காம பணம் கொடுக்கறாங்களே! அது எதிலே சேர்த்தி? செந்திலைப் படிக்க வைக்க, அவங்கண்ணன் ரெண்டு பேரு கலியாணம் முடிக்க, உங்கத்தை பேறுகாலம் எல்லாத்துக்கும் பணம் கொடுத்தது ஆராம்?"

"ஏம் மாமா, நீங்க ராப்பகல் பாக்காம உடம்பைச் செருப்பாத் தைச்சுப் போடறீங்க... அதுக்குக் கூலின்னு பார்த்தாக்கூட எவ்வளவோ மிஞ்சுமே..."

பொன்னி உருண்டை பிடிக்க ஆண்டாள் சுவற்றில் வறட்டி தட்டிக் கொண்டிருந்தாள்.

"சாப்பாடு போடறாங்களே"

"பெரிய்ய சாப்பாடு! நாலு மாட்டை வாங்கிக் கட்டியிருந்தீங்கன்னா அது போடும். வேலை நிறுத்தம் பண்ணாது. லாபத்துலே பங்கு கேட்காது. நேரம் காலம் பார்க்காது. பண்ணையிலே மாடும், நீங்களும் ஒண்ணுதான்... இப்படி எத்தனை குடும்பம் இருக்கீங்க?"

"நாற்பது குடும்பம் இருக்கோம்..."

"சௌகரியமாப் போச்சு. நம்ம குடும்பத்திலேயே களை எடுக்க, அறுப்பு, நாத்து நடன்னா நீங்க, அத்தை, அத்தான் மூணு, அண்ணி ரெண்டு... ஏழு பேராச்சு. இன்னம் சோமு அத்தான் படிச்சிட்டு வந்தா எட்டாச்சு. வீட்டுக்கு அஞ்சு பேருன்னாக் கூட இருநூறு பேராச்சே..."

"சே, என்னம்மா நீ... நாற்பது குடும்பத்துக்கும் சாப்பாட்டுக்கு அளக்கிறாங்களே!"

"ஆமாமா... அப்பப்போ பத்துபடி நெல்லு... சோளம்.. கம்பு, கேழ்வரகு"

ஆண்டாள் மெல்ல கிசுகிசுத்தாள், "எல்லாம் மச்சுப் போனது".

"தே, செருப்பாலடி... வாயைப் பாரு..." பழனி எழுந்து வந்தான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 5 ]

அடக்கிவைத்த கோபத்தையும், பதில் சொல்ல முடியாத கையாலாகத்தனத்தையும் மகள் மேல் காட்ட வந்த பழனியை வழிமறித்தாள் பொன்னி. "ஏன் மாமா, அவளைக் கோவிக்கறீங்க? நான் கேட்கலையா? அப்ப என்னை வித்தியாசமாத்தானே நினைக்கறீங்க?" என்றபடி சாணிக் கையை கழுவினாள்.

"அப்படி அடக்கி அடக்கித்தானே எல்லாரும் வாயடைச்சுக் கிடக்கோம்! நான் சரி... ஆண்டாளு என் வயத்துலே பொறந்த பாவத்துக்கு இதுவரை போனது சரி. இனிமே அனுப்ப முடியுமா? மருமகப் பொண்ணுகளையும் அனுப்புனு கூசாமச் சொல்றாளே பாவி...!"

"அதானே அத்தே வழக்கமா நடந்துகிட்டிருக்கு. யாரோ என்னிக்கோ பட்ட கடனுக்கு நாம புணையா? சரி அப்படியே வைச்சுக்கிட்டாலும் இவ்வளவு சம்பளம், இவ்வளவு கடன், இவ்வளவு வட்டின்னு தெளிவா எழுதி வைச்சுக் காமிக்கறதில்லே?" பொன்னி ஆக்ரோஷமாகக் கேட்டாள்.

"மெதுவாப் பேசு புள்ளே! சுவத்துக்கும் காது உண்டு. பக்கத்து வூட்டுக் கோவாலுக்கு ஏற்கனவே எம்மேல கடுப்பு. போய் வத்தி வெச்சுருவான்"

"போய் சொல்லட்டும் மாமா... கலகம் பொறந்தாத்தான் நியாயம் கிடைக்கும். ஓடறவரைதான் வெரட்டுவாங்க", பொன்னி குமுறினாள்.

"செல்வம் வேணது சண்டை போடாச்சு பொன்னி! அவுங்க வூட்டிலே விருந்தாளி வராங்கன்னு ஏகப்பட்டது சமைக்கச் சொல்வாங்க. சூடா ருசியா ஒரு உருண்டை தரமாட்டாங்க... அப்புறம் ஆறி மிஞ்சி அகாலத்துலே, ராத்திரி பதினோரு மணிக்கு கொப்பரை, அடுக்கு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போன்னு கொடுப்பாங்க. அப்ப தூக்க மயக்கம். ஒருத்தருக்கும் வேண்டி இருக்காது. மிஞ்சி சாப்பிட்டா வாந்தி எடுக்கும். காலையிலே ஊச ஆரம்பிச்சுடும்... பேரு அள்ளிக் கொடுத்ததா? கல்லும் மண்ணுமா நொய், இடிச்ச கப்பி, புளிச்சுப் போன மாவு, சொத்தைக் கடலை இப்படிக் கழிஞ்சு கட்டியெல்லாம் வீட்டுக் கொருநாள் கிடைக்கும்". சிவகாமி பொறிந்தாள்.

"அடப்பாவமே, இந்த அக்குருமத்தைக் கேக்க நாதியில்லையா?"

"ஒருத்தருக்கும் முதுகெலும்பில்லே! அப்புறம் பண்ணையார் ஓட ஓட விரட்ட மாட்டார்! சமயத்துக்குப் பணம் கிடைக்காது. ஊரிலே அவருக்குப் பயந்துக்கிட்டு பேறுகாலம்னா மருத்துவச்சி கூட வரமாட்டா! நாமாவது செல்வத்தையும், சோமுவையும் படிக்க வைக்கிறோமின்னு பண்ணையார் கையைக் காலைப் புடிச்சுக் கேட்டோ ம். பெரிய மனசு பண்ணி ஒத்துக்கிட்டாரு. முக்கால்வாசி குடும்பத்துலே எட்டு வயசுப் புள்ளையெல்லாம் அவரு பாக்டரிலே வேலை செய்யுது. கடலைக்காய் ஒடைக்குது. புளி பிரிக்குது... கண்றாவி!"

"இதுக்குப் பேர்தான் கொத்தடிமைத்தனங்கறது! மனுசன் தன்னைத்தானே வித்துக்கறது. ஏன் மாமா... அவுங்க துணி எடுத்துத் தரதா சொன்னீங்களே... பட்டா எடுத்துத் தராங்க? சுத்த மோட்டாத் துணி... அதுவும் வருசத்துக்கு இரண்டு தடவை... இடையிலே வேணுமின்னா பல்லைக்காட்டி, பரக்க முழிச்சு 'அதுக்குள்ள எப்படிடா கிழியும்! கவனமா இருக்க வேண்டாம். நாலுநாள் போவட்டும்'ன்னு ஆயிரம் கேள்வி, சால்ஜாப்பு..."

"இதெல்லாம் உனக்கு யார் சொன்னாங்க? உங்கத்தையா, ஆண்டாளா?"

"யாரோ சொன்னாங்க... எப்படியோ தெரிஞ்சுது... நடக்கறது அப்படித்தானே?"

"பொன்னி! இளரத்தம்... துடுக்காப் பேசறே. உன் வயசைக் கடந்து வந்தவன்தான் நான். ஏழை பாழைங்களுக்கு நிரந்தரமா வேலை கிடைக்கறதில்லே. அப்படியே கிடைச்சாலும் வயத்திலே அடிக்கிறானுக. நிலத்துலேயும் வருசம் முச்சூடும் வரும்படி கெடையாது... அரைப்பட்டினியும், குறைப் பட்டினியுமாக் கிடக்கறதுக்கு இப்படி ஒரு ஏற்பாடு தேவலாம்... இல்லியா? இரு வரேன்... எங்க தாத்தா அப்படியும் ரெண்டு மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணினாராம். ரெண்டும் நோய் வந்து செத்துப் போச்சு... அவங்கப்பாவுக்கு அவரு பதினோராவது புள்ளை. நான் அடிமை வேலை செய்ய மாட்டேன்னு மீசையை முறுக்கிக்கிட்டுப் போனவரு ஒரு வருசத்துலே ஒடுங்கிப் போயி வந்து சேர்ந்தாராம். இதுக்கென்ன சொல்றே? நம்ம சுழி நல்லாயிருந்தா நல்ல காலம் வரும்மா!"

"சுழியாவது, முழியாவது... முயற்சியும் உழைப்பும் இருந்தா முன்னுக்கு வரலாம், மாமா! ஒரு தரம் விழுந்த குழந்தை அப்படியே கிடந்தா அது நடக்கவே நடக்காது. குளவி கலைக்கக் கலைக்க கூடு கட்டுது... மனுசன்தான் இல்லாத வியாக்ஞானம் படிச்சுக்கிட்டு சோம்பேறியா செக்குமாடு கணக்கா குண்டு சட்டிக்குள்ளியே குதிரை ஓட்டறான்..."

"என்னம்மா பண்றது! ஒங்க தாத்தா கையிலே ஓட்டமில்லாததாலே உங்கத்தையை எனக்கிக் கட்டி வைச்சாரு... அதுவே உங்கப்பா சிவகாமியை இபாடி வெசாரிக்காம கொடுக்கப் போச்சேன்னு மாய்ஞ்சு மாய்ஞ்சு படறாரு... எங்களை உறவுன்னு சொல்லிக்க யாருக்கும் வெக்கமாத்தானிருக்கும்!" பழனி நொந்த குரலில் பேசினான.

"என்ன மாமா நீங்க... நான் ஒண்ணு சொன்னா நீங்க வேற அர்த்தம் பண்ணிக்கிட்டு... நான் என்ன சொல்ல வரேன்னா, செல்வம் அத்தானையும், சோமு அத்தானையும் வேலைக்கு டவுனுக்கு அனுப்புங்க... அவுங்க தலைமுறையாவது சுதந்திரமா சம்பாரிச்சு வாழ்க்கை நடத்தட்டும்..."


(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 6 ]

மாகாணிக்கிழங்கைக் கொண்டு வைத்த சிவகாமி, "ஆண்டாளு, இன்னொரு அருவாமனை ராமாயி வூட்டிலேயிருந்து வாங்கிட்டுவா... நரம்பெடுத்துக்கிட்டே பேசலாம்... வேலைக்கு வேலையும் ஆகும்" என்றபடி தோல் சுரண்ட ஆரம்பித்தாள்.

"செல்வத்தையும் சோமுவையும் இங்கிருந்து அனுப்ப முடியாது... முடியாதும்மா... அப்படிப் போறதுன்னா கடனை அடைச்சுட்டுப் போங்கங்கறாரு பண்ணையார்..."

"ஆங், அப்படி வாங்க வழிக்கு. நாலு புள்ளை பொறந்தா நாலு புள்ளையும் அடமானமா? புள்ளையே பொறக்கலேன்னா கடனை எவன் அடைப்பான்? ஆக கடன் அடையணுமின்னா வமிசம் அழியணும். அப்படித்தானே? இப்பவாவது புரியுதா... பண்ணையாருக்கு எதிலே கண்ணுன்னு. என்னக்கி மாமா நாம ஆசைப்பட்டதை சூடா, ருசியா ஆக்கித் தின்னு, பிடிச்ச துணியை நம்ம பணத்துலேருந்து எடுத்துக் கட்டறது? உழைக்கிறது நாம... இதிலென்ன பிச்சை கேட்கிறது! தயவாம் தயவு".

ஆண்டாளு அரிவாள் மனையுடன் வர அதை வாங்கி பொன்னி கிழங்கை நறுக்கினாள்.

"இந்தக் கிழங்கை எம்புட்டுக் கஷ்டப்பட்டு சீவி, நரம்பெடுத்து, நறுக்கி கொண்டு போய் கொடுத்து, அப்பாலே காரம் அரைச்சு, அத்தை ஊறுகாய் போட்டுத் தராங்க. இதுக்குப் பட்டணத்திலே இருவத்தஞ்சு ரூவா கூலி... இப்படி ஒவ்வொண்ணுக்கும் கணக்குப் போட்டுப் பாருங்க. அப்பத் தெரியும். ஒரு நாள் விருந்துச் சமையல் சமைச்சா நூறு ரூபா... வீட்டோ ட இருந்து நேரமும் சமைச்சா இருநூறு ரூவா... வருசத்துக்கு ரெண்டு புடவை! ஆதாயமில்லாம மச்சான் ஆத்தோட போகமாட்டாரு".

"ஆண்டாளு சடங்குக்கு வந்து அம்பது ரூவா மொய் எழுதிட்டுப் போயிட்டதாலே உங்க மாமாவுக்கு உச்சி குளுந்து போச்சு. அவுங்க வூட்டுக்கு நாயா உழைக்கணும்பாரு. அவருக்குத் தலை தேய்ச்சு விட்டு, முதுகு பிடிச்சு... உம்... வெளியே தெரிஞ்சா வெக்கக்கேடு... அடியாளா உழைக்கறாரு... கலியாணம் முடியற மட்டும் வண்டி மாட்டோ ட வண்டி மாடா டேசனுக்கும், ஐயா வூட்டுக்குமா தேய்வாரு. என்னிக்கு விடியுமோ? ஏ, ஆண்டாளு, நீ நறுக்கு; எனக்கு உள்ளே வேலை இருக்கு". சிவகாமி எழுந்து போனாள்.

"நம்ம கண்ணைத் துணியிலே கட்டிகிட்டு விடியலேன்னா எப்படி? கோகிலா அம்மா சொல்லிச்சு... அவுங்களுக்கு ஆம்பிளைப் புள்ளை பொறக்கலேன்னு பண்ணையார் கோகிலா அப்பாவுக்கு இரண்டாந்தாரம் கட்டி வைச்சாராமே! எலி நனையுதேன்னு பூனை அழுததாம். குலம் தழைக்கிறதுலே பண்ணையாருக்கு அம்புட்டு அக்கறைன்னாங்க... எனக்கு அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியலே! கூட்டுப் பண்ணைன்னு வெச்சுக்கிட்டாக் கூட சாப்பாடு, துணிமணி சரியாப் போச்சு... அதிகப்படி உழைப்பு, ஆனா கூலி இல்லே... போனாப் போவுதுன்னா கடனாளிங்கற பட்டம் வேறே. தைரியமா செல்வம் அத்தானையும், சோமு அத்தானையும் வேலைக்கு அனுப்புவேன்னு எதிர்த்து நில்லுங்க மாமா!"

"முடியுமாம்மா?"

"முடிஞ்சாத்தான் சுபீட்சம்", பொன்னி தொடர்வதற்குள்...

"அட, வந்துட்டாங்களே. அண்ணி அண்ணே குளிச்சிட்டு வாங்க. இலை போடறேன்" என்று சிவகாமி உள்வாசற்படியில் நின்றபடி வரவேற்றாள்.

"ஐயோ, ஊருக்குப் போகணுமின்னா ஒண்ணு ஒண்ணா வந்து சேருதே! போன எடத்திலே விடறாங்களா? பிச்சுக்கிட்டு வரவேண்டியதாப் போச்சு" அலுத்தபடி உள்ளே நுழைந்தாள் லட்சுமி.

"பின்னே? வராதவுக வந்திருக்கீங்க... விடுவாங்களா? ஏய், பொன்னி, ஆண்டாளு, நீங்களுந்தான் எல்லாரும் ஒண்ணா உக்காந்துருங்க. சோத்துக்கடை முடிஞ்சிரும்" சிவகாமியை எல்லாரும் பின் தொடர்ந்தார்கள்.

O

"அட அப்பிடியா?" பரமசிவம் கொஞ்சம் நெளிந்து கொடுத்தார்.

"டே, டேய் மெல்லடா... ஆங், அங்கதான்! ஆடு சதையைக் கவ்வுது... ஆ, அப்பா... இதம இருக்குடா! பெரமா... போறச்சே நம்ம கோபாலுக்கு அந்த திண்டுக்கல் புகையிலையிலே ஒரு பொட்டலம் கொண்டு வந்து கொடுடா... அப்புறம், அதான் அந்தப் பய பழனி, செல்வமும், சோமுவும் டவுனுக்கு வேலைக்குப் போகணுமின்னு பிடிவாதமா நிக்கிறானேடா!"

"ஆமாங்கறேன். நெதம் அந்தக் குட்டி வூட்டிலே சண்டை போடுது. அடேங்கப்பா... என்னா பேச்சுப் பேசுது. 'அந்தப் பண்ணையார் என்ன
கொம்பனா ? தலையை சீவிடுவானா ?' என்ன அப்படி பார்க்கறீங்க! மெய்யாலும் அந்தப் பொண்ணு சொன்ன பேச்சுங்க. போலீசு, மந்திரி
வரை போகலாங்குது".

"ஏண்டா அந்தப் பொண்ணு பழனிக்கு என்ன வேணும்?"

"பொஞ்சாதிக்கு அண்ணன் மக. மச்சினன் மகங்க"

"பேரு.."

"பொன்னிங்க!"

"வயசு...?"

"பதினாறு, பதினைஞ்சு இருக்கும்"

"என்ன படிச்சுருக்கு தெரியுமா?"

"எட்டாங்கிளாசு"

"எத்தனை நாளாச்சு இங்கே வந்து?"

"ஆறு மாசமாச்சுங்க... பழனி மக சடங்குக்கு முன்னே வந்தது... அப்பாலே ஆண்டாளு கூட இருப்பேன்னு அடம்புடிச்சி, இவங்களும் வற்புறுத்தவே விட்டுட்டுப் போயிருக்காங்க..."

"ஆக, இதைக் கிளப்பினா நிலைமை சரியாயிடுங்கறே"

"ஆமாங்க"

"பொண்ணு அழகா?"

"லட்டுங்க... கெண்டை மீனாட்டம் கண்ணு பேசுங்க... தளதள உடம்பு... வரிசை மாறாம அரிசிப் பல்லு; தக்காளியாட்டம் கன்னம்..."

"டேய், டேட்... போதுண்டா... வயசை நினைவுபடித்திக்கோ... ஆமாம்! பழனி மகன் மேல ஏதாவது..."

"ஆமாங்க.. செல்வம் மேலே கண்ணுங்க. இரண்டு பேரையும் குளத்திலே சேர்த்துப் பார்த்ததா வூட்டிலே கூட சொன்னாங்க"

"ஒண்ணும், ஒண்ணும் ரெண்டு. சரி... நீ போ. பெரமா...!" உள்ளே பார்த்து உரக்கக் குரல் கொடுத்தார்.

பிரமன் புகையிலைப் பொட்டலத்தை கோபாலுவிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 7 ]

"என்ன பொன்னி, திடீர்னு ?"

சிவகாமிக்கும், பழனிக்கும் ரொம்ப ஆச்சரியம். அதோடு அதிர்ச்சி.

"நேத்தைக்கு சினிமா கொட்டகையிலே நடந்ததை நினைச்சு பயந்துட்டியா ?" என்றான் பழனி.

"இல்லே மாமா... நான் வந்தும் ஏழெட்டு மாசமாச்சு... அம்மாவும் சொல்லிவிட்டுக்கிட்டே இருக்காங்க. அதான்" பொன்னி பிடிவாதமாக இருந்தாள்.

"சின்ன பொண்ணுதானே! சரிம்மா... சிவகாமி, நீயே கொண்டு விட்டுட்டு வா..." பழனி எழுந்து கொண்டான்.

பொன்னி புளிப்பானையை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். கொட்டை வேறு, கோது வேறு என்று கைகள் பிரித்தாலும் மனம் இரண்டு மாதமாய் நடந்த விஷயங்களை அசை போட்டது. ஆறுமாதம் முன்பு வரை தாமரைக்குளம் அமைதியாகவே இருந்தது. இரண்டு மாதமாகத்தான் ரகளை எல்லாம்.

நேற்று சினிமா கொட்டகையில் அப்பப்பா... அவள் உதடுகள் தீயாய் எரிந்தன.

ஒரு காதல் காட்சி. ஆய், ஊய் என்று சீட்டி ஒலிகள். திடீரென்று ஒருவன் பெண்கள் பக்கம் எகிறிக் குதித்துவிட்டான். அந்தப் பெண்ணின் அலறல். இதுதான் சாக்கு என்று வாலிபர்களின் அட்டகாசம். ஆண்டாளு அண்ணிகளிடம் ஒதுங்க, இவளும் ஒருவன் கையில் சிக்கி -- அவன் எவனென்று பார்க்குமுன்னரே உதட்டை தோலுரிய வைத்துப் போய்விட்டான்.

இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதை பொன்னி உணர்ந்துகொண்டாள். பண்ணையாரின் சதிவேலை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. பணபலம், ஆட்பலம் அவளால் என்ன செய்ய முடியும்?

அன்றைக்கு அம்மன் பூச்சொரிதலில் கூத்து நடந்தது. திரௌபதி மானபங்கம்; புடவையைச் சுற்றி முக்காடு போட்டுக் கொண்டு வயசுப் பெண்கள் நடுவில் ஆங்காங்கே விடலைப் பசங்கள் உட்கார்ந்து சில்விஷமம் செய்ய, ஒரே அமளி. தப்பித்தது தம்பிரான் புண்ணியமாகிவிட்டது.

செல்வத்துக்கும், சோமுவுக்கும் ·பாக்டரியில் வேலை கொடுத்துவிட்டார் பண்ணையார். அவள் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றதே போதும். அவள் முடிவுக்கு வந்து விட்டாள்.

"ஏம்பா, பழனி பிள்ளைகளுக்கு ·பாக்டரியிலே வேலை கொடுத்திருக்கறீங்க? இதே போல ஒவ்வொருத்தனும் கேட்க மாட்டன்னு என்ன நிச்சயம்?"

"சும்மாயிருடா நாகு.. குலைக்கிற நாய்க்கு கவுச்சி போடாட்டா மேல விழுந்து பிடுங்கிடும்... ஒங்கப்பன் சுபாவம் நீ தெரிஞ்சுக்கலே. அந்தப் புள்ளைங்களை படிக்க அனுமதிச்சது முதல் குத்தம். ஓசிப் படிப்புதானேன்னு நினைச்சேன்..."

"தலையைச் சுத்தி மூக்கைத் தொடற மாதிரி துளியூண்டு தாவணி... அதை கலாட்டா பண்ணச் சொல்லி..."

"யானையைக் கொல்ல அதுங்காதுலே புகுந்த எறும்பு போதுண்டா... பெரிய வில்லாலே ஒண்ணும் அகாது. அம்பு முனையிலே வைக்கிற இரும்புத் துண்டுக்குத்தான் மதிப்பு. உனக்கு அனுபவம் பத்தாது !"

"நிஜமாகவே பொன்னி அல்வா கணக்கா இருக்கா..."

"டேய், நீ மூணு பிள்ளைக்குத் தகப்பன்..."

"ஆனாலும் அடங்கலியே..."

"பொறுமையா இரு... பொன்னி உனக்குத்தான் !" புலியின் வெறி நாகலிங்கத்தின் கண்களில் மின்னியது.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 8 ]

"இதென்ன இவ போக்குக்கே விட்டுட்டிருந்தா? இவருக்கென்ன நல்லது கெட்டது தெரியும்?" லட்சுமி சீறிக் கொண்டிருந்தாள்.

"நான்தான் முதல்லேயே சொன்னேனே! கலியாணம் அவ இஷ்டமுன்னு".

"அப்பனும் மகளும் திட்டம் போட்டு சதி பண்றீங்க... ஏண்டீ? செந்திலுக்கென்ன குறைச்சல்? இதுக்குத்தான் ஏழெட்டு மாசமா அத்தை வீட்டுலே சீராடிட்டு வந்தியா?"

"அம்மா, எனக்கு இப்போ கலியாணத்துக்கு அவசரமில்லே... ரெண்டு, மூணு வருசம் போகட்டும். அதுவும் நான் செல்வம் அத்தானைத்தான் கட்டிக்குவேன். ஏகப்பட்ட சொத்தோட உட்கார்ந்திருந்து சாப்புடற ஒங்கண்ணன் மகளைவிட ஓடியாடி சம்பாரிக்கற அவரு எவ்வளவோ மேல்.."

"அவகிட்டே என்னங்க பேச்சு... நீங்க போயி முகூர்த்தம் வையுங்க... எங்க துள்ளிடுவான்னு பார்ப்பம்!"

"ஓடிகீடி போக மாட்டேம்மா... அத்தான் வூட்டுலே மண்ணெண்ணையும், தீப்பெட்டியும் கூடவா கிடைக்காது?"

"அடிப்பாவி! கூசாமச் சொல்றாளே... இவளை... இவளை... என்ன செய்தாத் தேவலை!" பற்களை நறநறவென்று கடித்தாள்.

"ஐயர்வூட்டு வேலைக்குப் போறேன்னிட்டு கண்ட கண்ட பொஸ்தகங்களை படிச்சு நல்லா வெவகாரம் பண்ணத் தெரிஞ்சு வெச்சிருக்கா... என்ன, குத்துக்கல்லு கணக்கா பேசாம இருந்தா என்ன அர்த்தம்?"

"லட்சுமி, விஷப்பரிட்சை செய்ய எனக்கு இஷ்டமில்லை. இருக்கறது ஒருத்தி, அவளுக்குப் பிடிக்காத ஒண்ணைப் பண்ணிட்டு அப்புறம் லபோ, திபோன்னு அடிச்சுக்கறதிலே லாபமில்லே... செல்வமும் இளம் வயசு. பத்து கிளாஸ் படிச்சிருக்கான். ஃபாக்டரியிலே வேலை பார்க்கிறான். இந்த வேலை இல்லாட்டாலும் மூட்டை தூக்கியாவது காப்பாத்துவான். சிவகாமியும் கண்ணுக்குள்ளே பொத்தி வைச்சுக்குவா... அப்புறம் ஒம் பிரியம். ஏதாவது லாப நஷ்டமின்னா எங்கிட்ட புலம்பக்கூடாது..." கண்டிப்பாகப் பேசிவிட்டு எழுந்து போய்விட்டார் ராமையா.

"இப்படி இடம் கொடுத்ததினாலேதான் இவ அண்ணன் பரிசம் போட வந்தன்னிக்கு அழிச்சாட்டியம் பண்ணினா. ஆனாலும், பொட்டச்சிக்கு இத்தனை அழும்பு ஆவாது. அப்பனும் மவனும் எக்கேடும் கெட்டுப் போங்க..." தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் லட்சுமி.

O

"என்னப்பாது... நீங்க போட்ட திட்டத்திலே பொன்னி ஊருக்குப் போயிருச்சு... என்னமோ பொன்னி உனக்குத்தானீங்க?"

"பதறாதேடா... பதறாத காரியம் சிதறாது. கிளி தானே வலையில் சிக்கும், பாரு!"

பரமசிவம் மீசையைத் தடவிக் கொண்டால் அற்புதமான திட்டம் உருவாகிவிட்டது என்று அர்த்தம்.

ஃபாக்டரியில் சங்கூதும் சப்தம்.

"என்னப்பாது! மணி பன்னண்டாகலியே? அதுக்குள்ள சங்கூதுது? யாருக்கு என்ன ஆபத்தோ?"

"வா... போய் பார்க்கலாம்..."

அங்கவஸ்திரத்தையும், கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மகனுடம் புறப்பட்டான் பரமசிவம்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 9 ]

வீடே சோகமயமாக இருந்தது. எத்தனை பெரிய துன்பமென்றாலும் பாழும் வயிறு நேரத்துக்குப் பசிக்கிறதே! வியர்வை நாற்றம் குளிக்க வேண்டும் என்று முறையிடுகிறதே! அழுக்குத் துணியை அணிந்து கொள்ள மனசு மறுக்கிறதே! இவ்வளவு தேவைகளை வைத்துக் கொண்டு மனிதன் சும்மா உட்கார்ந்து சோகம் கொண்டாட முடியுமா? அவரவர் அலுவலைக் கவனிக்கப் போய்விட்டிருந்தனர். தந்தி வந்ததும் அடம்பிடித்து பெற்றோருடன் கிளம்பி வந்துவிட்ட பொன்னி, பதினைந்து நாட்கள் கழிந்து பெற்றோர் புறப்பட்டபோது கிளம்ப மறுத்துத் தங்கிவிட்டாள்.

இப்போது ராமையாவுக்கே மகளின் பிடிவாதம் வெறுப்பாய் இருந்தது. சிவகாமியும், பழனியும் எத்தனையோ சொல்லிப் பார்த்தனர். பொன்னியின் மனம் உடும்பாய் இருந்தது.

பண்ணையார் மனசு தங்கம் என்று அத்தையும், மாமாவும் உருகிப் போனார்கள். ஏழெட்டு மாசம் செல்வத்துக்கு சம்பளம் கொடுத்ததைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள். விபத்து நடந்தவுடன் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பணம் கட்டி வைத்தியம் பண்ணிய அறையைக் கொண்டாடினார்கள்.

பொன்னி ஒரே ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அவரை சந்திக்கும்படி ஆயிற்று. பசுத்தோல் போர்த்திய புலி, எல்லாம் வேஷம் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அவள் சொன்னால் யார் நம்புவார்கள்! காமாலைக் கண் என்று கண்டிப்பார்கள். ஏரில் உழுத காளையைக் கொன்று செருப்புத்தானம் செய்கிற வள்ளலை இனம் கண்டுகொள்ள முடியாத கருத்துக் குருடர்களைத் திருத்துவது எப்படி?

இதிலே ஒழுங்காக வயல்வேலைக்குப் போன செல்வத்தை ·பாக்டரியில் சேர்க்கவைத்தது இவளால்தானே என்பது போன்ற மறைமுகக் குற்றச்சாட்டு வேறே! எப்படி இருந்தால் என்ன... ஒரு கை மணிக்கட்டோடும், ஒரு கை முழங்கையோடும் துண்டாகிவிட்டது. அவள் அத்தான் இனி ஊனமுற்றவன். இதை நினைத்து விம்மி விம்மி அழுதாள் பொன்னி.

"அட பொன்னி எப்ப வந்தே? தைரியமா சாட்டையாலே அடிக்கிற மாதிரிப் பேசற பொன்னியா அழுவறது? உன் கண்ணீரைத் துடைக்க எனக்குக் கையில்லே... உன்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சி விளையாட எனக்குக் கையில்லே... உங்கம்மா, அப்பா சொல்றபடி செந்திலைக் கட்டிக்க... பந்தானமா வாழலாம்... இந்த முடவனைக் கட்டிக்கிட்டா என்ன சொகம்? அம்மா சொல்றாப் போல அவளுக்குத் தீராது! உனக்கேன் தலைவிதி?"

செல்வத்தின் வாயைத் தன் தளிர் விரல்களால் பொத்தினாள் பொன்னி.

"இன்னொரு வாட்டி இந்த மாதிரிப் பேசினீங்க தாமரைக் குளத்திலே விழுந்துடுவேன்... அதுக்குக் கையில்லாட்டாலும் என்னைக் கட்டிக்கும். கையாலே தள்ளியிருந்தா ஒதுங்கி இருப்பேன்... நீங்க சொல்லாலே தள்ளறீங்க! பரிசம் போட வந்தவங்க முன்னாலே உங்களைத்தான் கட்டிப்பேன்னு அடம் பிடிச்சுட்டு, இப்படித் தனியா நானே கஞ்சி கொடுத்து ராப்பகலா உங்க கூடவே இருந்தவளை எவன் கட்டிக்குவான்! அப்படிக் கட்டிக்க நோங்கி இருந்தா நான் ஏன் ஊருக்குப் போகலை... என்ன கேவலமா நினைச்சுப்பிட்டீங்க...? நீங்க வேணா எனக்கு அப்படி ஆயிருந்தா வேறே, வேறே..." பொன்னி தேம்ப,

"பொன்னி, பொன்னி, தே... யாராவது பார்த்தா...! கண்ணைத் தொடச்சிட்டாதான்.... இல்லாப்போனா நான் இன்னக்கி சாப்பிடவே மாட்டேன்" என்று செல்வம் கெஞ்ச,

மழையின் இடை வெயிலைப் போல் வெண்பற்கள் பளிச்சிடச் சிரித்தாள் பொன்னி.

"தோ, பாரு... கொஞ்சக் கை வேண்டாம்... வாயிருக்கே! நீதான் கட்டிப் பிடிக்கணுமா? நானா கட்டினாப் பிடிக்காதா? உனக்குக் கைகளா நானிருக்கேன்... இன்னொருத்தனைக் கட்டிக்கறது இந்த சென்மத்திலே இல்லே! மனசாலே உங்கிட்டே தாலி கட்டிக்கிட்டேன். இன்னொருத்தனுக்கு முந்தி போடமாட்டேன். தோப்பிலே உம்மடியிலே படுத்துப் புரண்டவ இன்னொருத்தன் கூடவா...?"

"சரி, அந்தப் பேச்சு இனி இல்லை... சரியா... அம்மாடி... இன்னம் கோவம் தணியலையா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை.. நீ வாயைத் திற... இந்த ஆரஞ்சியைச் சாப்புடு. நான் கிளம்பணும்".

"அதெல்லாம் முடியாது... ஒண்ணு தந்தாதான்..."

"சே, இது ஆஸ்பத்திரி... நர்ஸம்மா வர நேரம். அததுக்கு இடம், நேரம் இல்லே?" பொன்னி மறுக்க, செல்வம் முரண்ட சுற்றும் முற்றும் பார்த்த பொன்னித் தோற்றுப் போனாள். அங்கே நடந்த காட்சியை இரண்டு கொள்ளிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 10 ]


"வாப்பா, செல்வம்... வா, பழனி! எப்படி இருக்கே செல்வம்! கை புண்ணெல்லாம் ஆறிப் போச்சா? ·பாக்டரியிலேயே கணக்கெழுதற வேலை போ

ட்டுத்தரச் சொல்லி இருக்கேன்.. என்ன சொல்றே?"

ஒரு பக்கம் பரமசிவமும், இன்னொரு பக்கம் நாகலிங்கமும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். பரமசிவத்தின் காலடியில் கோபாலு வழக்கமான சேவை

செய்து கொண்டிருந்தான். துண்டை இடுப்பில் கட்டி கூனி வளைந்து நின்றிருந்தான் பழனி.

"ஐயா கேலி பண்றீங்களா? அவனாலே எப்படி எழுத முடியும்?"

"மரக்கை ஒண்ணு செஞ்சு பொருத்தி பயிற்சி கொடுத்தா எழுத முடியும்பா... அதுக்கான ஆளுங்களுக்கு லெட்டர் போட்டிருக்கேன். அதாரு... ஒன்

மருமக இல்லே?"

"ஆமாங்க, மச்சினன் பொண்ணு. செல்வத்தைக் கட்டிக்கப் போறவ..."

'பார்த்தியா ஐயா மனசை' என்பது போல் பழனி பார்க்க, 'எல்லாம் போலி' என்று கண்களால் பதில் தந்தாள் பொன்னி.

"ரொம்ப சந்தோசமுங்க... இந்த ஊரே பொன்னிக்குப் பிடிக்கலையாம். வெளியூர் போயிடலாங்கறா", என்றான் செல்வம்.

"ஏன், ஏன், ஏம்மா பிடிக்கலை? பிடாரித்தாயி பொன்னாக் கொடுக்கிறா... முப்போகம் விளைகிற பூமி!"

"அதெல்லாம் உண்டானப் பட்டவங்களுக்கு. ஏழை பாழைங்களுக்கு எல்லாம் ஒரே இடம்தான்."

பொன்னியின் பேச்சு பரமசிவத்தை உள்ளூரத் தாக்கியது.

"சரிம்மா... கடனைக் கட்டினாப் போகலாம்".

"கடனா, நீங்க அடிபட்டதுக்கு நஷ்டஈடு கொடுக்கணுமே!"

'அட சட்டமும் தெரிஞ்சிருக்கே!' மனசின் இரண்டாவது அதிர்ச்சி.

"ஆமாம், நஷ்டஈட்டுப் பணம் இருபதாயிரம் போக ஒரு லட்சம் பாக்கி நிற்குதே!"

இப்போது பழனிச்சாமி மனசுக்குள் பொன்னியைப் பாராட்டினார். 'அட, ஒரு லட்சத்தை ஏமாந்திருப்போமே. பொன்னி விஷயம் தெரிஞ்சவதான்'!

"எப்படீங்க? கணக்குப் பார்க்கலாமா?"

"தாராளமா. இப்படி என்னிக்காவது, யாராவது கேட்க வருவாங்கன்னு தெரியும். எல்லார் கணக்கும் துல்லிதமா இருக்கு... இரு, வரேன்..." அவரே

போய் பருமனான கணக்குப் புத்தகத்தோடு வந்தார்.

"ஏம்மா, நீ படிச்சிருக்கியா?"

"இந்தக் கணக்குப் பார்க்கிற அளவு படிச்சிருக்கேங்க".

இந்த சமயம் நாகலிங்கம் எழுந்து வந்தான்.

"நம்மகிட்டே வேலை செய்கிற நாய். நம்ம தின்ன மிச்சத்தைத் திங்கிற பன்னி! அவங்ககிட்ட என்னப்பா பேச்சு. ஒரு லட்சம் என்ன... இரண்டு லட்

சம் பாக்கி! என்னடி செய்யப் போறே? ஏ, பேமானி! நொண்டிப்பயலுக்கு பக்காலத்து வேற..." நோட்டைப் பிடுங்கிக் கொண்டான்.

(தொடரும்)

 

oooOOooo
[ பாகம் : 11 ]

பரமசிவமும், கோபாலும், பழனியும் தடுக்காதிருந்தால் பொன்னிக்கு நிச்சயம் அடி விழுந்திருக்கும். செல்வம் புழுவெனத் துடித்தான்.

"வா, பொன்னி போவோம்.."

"இருங்க... கோவாலு மாமா, உங்களையும் சேர்த்துத்தான் அவர் பன்னி, நாயின்னு திட்டுறார். நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான். மாமா என்னை வரவேண்டான்னுதான் சொன்னாரு. ஆனாலும் மரியாதை தவறும்னு நான் நினைக்கலை! ஐயா, செய்த வேலைக்குக் கூலி கொடுங்க... வாங்கின பணத்துக்கு வட்டி கழிச்சுக்குங்க... வயத்துலே அடிக்காதீங்க! நாளைக்கு எட்டு மணி நேர வேலை. உழைப்புக்குத் தகுந்த கூலி. அதிகப்படி வேலை செய்தா அதிகப்படி கூலி. அதுதாங்க ரெண்டு பேத்துக்கும் நல்லது. அவரு கை ஒடிஞ்ச பாவம் உங்களை சும்மா விடாது. நீங்களும் புள்ளை குட்டிக்காரங்க. அடிமையா அடக்கி வைச்சிருக்கறது சட்டப்படி குற்றம்... வாங்க மாமா..."

"இரும்மா" புறப்பட இருந்தவளை தடுத்து நிறுத்தியது பரமசிவத்தின் குரல்.

"நீ செல்வத்தைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா எங்கே வேணாலும் இரு. உன் புருஷன் இங்க வேலை செய்ய பிரியமிலேன்னா உன் இஷ்டம்..."

பழனிக்கு ஒரே வியப்பு. 'என்னடா, இந்தப் பெண் இப்படி பேசிவிட்டாளே' என்று மனசில் குழம்பிய குழப்பம், பரமசிவத்தின் சலுகைகளைக் கேட்டு பொன்னியின் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டது.

"நான் போறச்சே சோமு அத்தானையும், ஆண்டாளையும் கூடக் கூட்டிட்டுப் போறேங்க... மாமாவும் பெரிய அத்தான் ரெண்டு பேரும் இங்கே இருப்பாங்க..."

"எங்கே இருந்தா என்னம்மா! வேலை செஞ்சாக் கூலி. வேஷம் போட்டாக் காசு. ஒண்ணு நினைப்பிலே வைச்சுக்க. சோத்துக்கும், துணிக்கும் கஷ்டப்பட்டா இங்கே ஓடி வந்துடுங்க. இந்தப் பரமசிவம் என்னிக்கும் உதற மாட்டான்".

"வரேங்க... ஐயாவுக்குப் பெரிய மனசு".

பழனி, செல்வம், பொன்னி வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்த பரமசிவம், "கோவாலு, நீயும் போயிட்டு சாயங்காலமா வா... கொஞ்சம் தூங்கணும்". ஆவ் என்று கொட்டாவி விட்டபடி கைகளை நெட்டி முறித்தார்.

"என்னப்பா... இந்தத் துக்குணூண்டுக்குட்டிக்கா பயந்துட்டீங்க?" என்றான் நாகலிங்கம்.

"முட்டாள்! கோபாலைப் பார்த்தியா... நீ பன்னி, நாய்ன்னதும் என் காலை விட்டு எழுந்துட்டான். இவனுகளை புறத்தாலே திட்டலாம். நேரிலே திட்டக் கூடாதுடா. பகையாளி குடியை உறவாடிக் கெடுக்கணும். பொன்னிக்கு முள்வாங்கி போதாது. அரிவாளைத் தூக்கணும். இல்லே, ஊரிலே எல்லாப் பயலும் ஒண்ணாச் சேர்ந்துருவானுக. உன் பொண்டாட்டி புள்ளைங்களை குற்றாலம் அனுப்பு. தோட்டத்து வீட்டுக்கு ஒரு நாள் ராத்திரி பொன்னி வருவா... காரியத்தை முடிச்சுடு. உங்கப்பன் சொன்ன சொல் தவற மாட்டான்". மீசையை முறுக்கிக் கொண்டார் பரமசிவம்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 12 ]

கலியாண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. 'கலியாணம் ஆனபிறகு அத்தானுக்கு இப்படி ஆயிருந்தா என்ன பண்ணுவோம். இல்லே, எனக்குத்தான் அப்படி ஆயிருந்தா அத்தான் வேண்டாமின்னா உங்க மனசு என்ன பாடுபடும்', இப்படி ஆயிரம் கேள்வி கேட்டு தந்தையை சம்மதிக்கச் செய்து விட்டாள் பொன்னி. செல்வத்துக்கு ஒரே பெருமை. ஆண்டாளுக்கும், சோமுவுக்கும், எல்லையற்ற மகிழ்ச்சி. திருமணம் முடிந்து எந்த ஊர் போகப் போகிறோம் என்பதே புதிராக இருந்தது. எவரிடமும் போகும் ஊர் தெரிவிக்கப்படாமல் மர்ம்மாக இருந்தது. வெகுதூரம் போய்விட வேண்டும் என்று நினைத்தாள்.

போகுமிடம் தெரிந்தால் பரமசிவத்தின் தொல்லை தொடரும் என்று ரகசியமாய் வைத்திருந்தாள் பொன்னி.

"நம்ம ஆனந்தத்தின் புருஷன் பஞ்சாயத்து போர்டு தலைவரும்மா. அந்த ஊருக்கு அவர்தான் ராசா. ஒரு பய அசைச்சுக்க முடியாது. கடுதாசி போட்டிருக்கேன். பெரியவன் பி.ஏ. பாஸ் பண்ணிட்டு ஏதோ சர்க்கார் வேலை பார்க்கறான். சின்னவள் வெவசாயம். சிங்கக்குட்டிங்க புள்ளைங்க ரெண்டு பேரும். அந்த எல்லையிலே ஒரு பய வாலாட்ட முடியாது. பாங்க் கடனுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லி இருக்கேன். எல்லா உதவியும் செய்வாங்க. ஆனந்தத்துக்கு தங்கமான மனசு. உன்னை லட்சுமியைப் போல பார்த்துக்குவா". மண்டையைக் குழப்பிக் கொண்டதில் ராமையாவின் இந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

O  

அறுவடை முடிந்தபிறகு கலியாண முகூர்த்தம் வைத்திருந்தார்கள். பொன்னி தாமரைக் குளத்தில் கொஞ்ச நாள் இருந்தபோது பிடாரிக்கு நேர்ந்து கொண்டிருந்தாள். தடையின்றி கலியாணம் நிச்சயமானால் மாவிளக்குப் போடுவதாக. பிரார்த்தனை நிறைவேற்ற வந்திருந்தாள். ஆயிற்று. பிரார்த்தனையும் முடிந்தது. தெரிந்தவர்களிடம் பார்த்துப் பார்த்து சொல்லிக் கொண்டாள்.

தாமரைக் குளத்தில் ஆசை தீரக் குளித்து மடி நிறைய பூக்களோடு ஈரப் புடவை சரசரக்க வரும்போது அந்தப் பெண் கூடவே குளித்தவள் -- பெயர் ராணியாம்.

"நீங்கதான் பொன்னியா? பண்ணையார் கிட்டே சவடாலாப் பேசினீங்களாமே -- அம்மா உங்களைப் பார்க்கணுமின்னு ஆசைப்பட்டது... எங்க வீட்டுக்கு வாங்களேன்!" என்று தழைந்து கூப்பிட்ட போது,

"இப்படியேவா..." எனத் தயங்க,

"ரெண்டு நிமிஷம். அதிகம் காக்க வைக்க மாட்டேன். என் அதிர்ஷ்டம். ஊரைவிட்டே போறீங்க... கொஞ்சம் மருதாணியும், கனகாம்பரமும் கொடுக்கலாமின்னு ஆசை..."

அதர்குப் பிறகு மறுக்க முடியவில்லை, பொன்னியால். குறுக்கே மணல் மேடு ஏறியதும் ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டோமோ என்று பொன்னி தயங்க, "அதோ" என்று தோட்டத்துக்கு நடுவில் ஒரு சின்ன ஓட்டு வீட்டைக் காண்பித்தாள் ராணி.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 13 ]

அழகிய முல்லைப் பந்தல். வெள்ளை, சிவப்பு ரோஜாக்கள். தங்க அரளிச் செடிகள், மலர்களின் மனம் ரொம்ப ரம்மியமாக இருந்தது.

"இந்தத் தோட்டம் உங்களுக்குச் சொந்தமா?" பொன்னி கேட்க, 'உம்' என்று தலையசைத்தாள் ராணி. முன்னால் போய் கதவைத் தள்ளியவள், "அம்மா, நீ சொன்னியே பொன்னி, அவங்களை அழைச்சிட்டு வந்துருக்கேன்... டீ போடு. சீக்கிரம் போகணுமாம்!" என்று உரக்கக் கூறியவள், "உள்ளே போங்க, பூஜைக்கு நாலுபூ பறிச்சிட்டு வந்துடறேன்", என்று புன்னகைத்தாள்.

தாழ்வான நிலை. குனிந்து உள்ளே போனாள் பொன்னி. குறுக்கே தட்டி மறைப்புக்கு அந்தப்புரம் யாரோ நடமாடுவது தெரிந்தது. வெளிச்சத்திலிருந்து வந்த கண்கள் உள் இருட்டுக்குப் பழகவில்லை.

'தடார்' வாசற்கதவு சார்த்திக் கொண்டது. திகைத்தாள். ஓடிப் போய் கதவை இழுத்துப் பார்த்தாள். 'சிக்'கென்றிருந்தது. 'ராணி, ராணி' என்று கத்தினாள். காற்றில் மூடிக் கொண்டதோ எனக் கலங்கிய நேரம் இரு முரட்டுக் கரங்கள் அவளைப் பின்னாலிருந்து வளைத்தன.

"நீதான் இங்கே ராணி!"

திரும்பிப் பார்த்தாள். நாகலிங்கம்!

"அடப்பாவி... நீயா?"

"ஏன் வீணா அவஸ்தைப் படறே! அனுபவிச்சுடு... உன்னை மாதிரியே அந்தக் கதவு 'சிக்'குனு இருக்கு. சட்டம் பேசின வாய்க்கு ஒரு பரிசு கொடுக்கறேன். அன்னைக்கி சினிமாக் கொட்டகையிலே அரைகுறை. இப்போ முழுசு..."

"அட சண்டாளா! அதுவும் நீதானா? விடு...விடு..."

"இதானே வேண்டாங்கறது. பிராண்டறே... அடேயப்ப எதுக்கு இவ்வளவு நகம் வெச்சுருக்கறே? அப்பா... ஈரப்புடவையிலே என்னமாத்தான் இருக்கறே!"

"ஐயோ, ஓடி வாங்களேன்... யாராச்சும் வந்து காப்பாத்துங்களேன்..."

"நீ என்ன கத்தினாலும் காது கேட்காது; சுத்தி கண்ணாடிக் கதவு. ஆள் அதிகம் நடமாடாத இடம். போதாதற்கு வெளியே காவல். அவனுக்கு பொழுதுபோக டேப்ரிகார்டர் பாடிக்கிட்டிருக்கு. போதுமா? உன் தொண்டைத் தண்ணி வத்தறதுதான் மிச்சம்".

'அவ்வளவுதானா... அவ்வளவேதானா! தெய்வத்துக்கென்று அவள் போற்றி வந்த நிவேதனம் இந்தத் தெரு நாய்க்கு அர்ப்பணமா?'

ஈர உடைகள் அவன் துரோகத்துக்கு ஒத்தாசையாகப் போய்விட்டது. அவள் பிறந்த மேனியாக நின்றாள்.

"என்னை விட்டுடு, என் கூடப் பிறந்தவனா நினைச்சுக் கேட்கறேன்..." கையெடுத்துக் கும்பிட்டாள் பொன்னி.

"நீ கடிச்சுப் பிராண்டினதில் உடம்பெல்லாம் எரியுதடி... பழி தீர்க்காம விடமாட்டேன். கையை ஒடிச்ச பிறகும் உன் அத்தான் மேலே ஆசை போகலியா?"

"ஆசையும், அன்பும் உருவத்தைப் பார்த்து மட்டும் ஏற்படறதில்லே... என்னை விடு".

"உன்னை விட்டா பேசிக்கிட்டே இருப்பே..."

அவன் எதையோ அவள் வாயில் திணிக்க பொன்னி மெல்ல மெல்ல சுய நினைவை இழந்தாள்.

O   

மறுபடி விழிப்பு வந்தபொழுது ஒரே தலைசுற்றலாக இருந்தது. மெல்ல எழுந்து தன்னைப் பார்த்தாள். ஏகப்பட்ட சேதம். வேதனை தீருமட்டும் அழுதாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். மெல்ல எழுந்து கொண்டாள். நடந்தாள். இரண்டாகத் தடுக்கப்பட்ட ஒரே ஒரு அறை. பின்வாசல் கிடையாது. கண்ணாடி அடைப்புகள். அவளது ஈர உடைகளையும் காணோம். தப்பி விடுவாளென்று மறைத்துவிட்டார்கள் பாவிகள். இதென்ன ஆதிவாசிக் கோலம்.

ப்ளைவுட் தடுப்பில் மேல் ஒரு லுங்கி. அதைத் தொடவே அருவருப்பாய் இருந்தாலும் இப்போதைய நிலைக்கு அதுவே மேல் என்று அதை எடுத்து சுற்றிக் கொண்டாள். முகத்தைப் பார்க்கலாம் என்றால் ஒரு துண்டுக் கண்ணாடியுமில்லை. மூலையில் ஒரு மண்பானையும், கண்ணாடிக் கிளாசும் இருந்தது.

ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தாள். கொஞ்சம் தெம்பு வந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

கதவு தானாகத் திறக்கும்வரை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தது. பெண்ணுக்குப் பெண்ணெ எமன் என்று கொஞ்ச நேரம் மனம் போனபடி வாய்விட்டு அந்த ராணியைத் திட்டினாள்.

கதவு திறந்தது. ஆடிக் கொண்டே வந்தான் நாகலிங்கம். "எழுந்துட்டியா? அட, என் லுங்கியைச் சுத்திக்கிட்டு ஓடிடலாம்னு இருக்கியா! அடி என் கண்ணாட்டி... அயுசுக்கும் ஒன்னை வெச்சுக் காப்பாத்துவேண்டி". உளறிக் கொண்டே வந்து கட்டிலில் விழுந்தான்.

"சரி, கையைக் காலை அமுக்கு... புடிவாதம் பிடிக்காதடி!"

"எனக்கு வெளியே போகணும்!"

"அனுப்பறதுக்கா இத்தனை கஷ்டப்பட்டேன்! அதெல்லாம் முடியாது".

"சே, அதில்லை...", ஒரு விரலைக் காட்டினாள்.

"பெரமா..." பெரமன் ஓடி வந்தான்.

"இவளுக்கு ஒதுங்கணுமாம். கூடவே இருந்து கூட்டிட்டு வா..." பெரமன் முன்னால் நடக்க பின்னால் நடந்தாள் பொன்னி.

"சே, அந்த வாதாமரத்தடியிலே நில்லு...", பிரமன் வாதாமரத்தடிக்குப் போக, கீழே பார்த்தாள்.

ஒரு மண்வெட்டி. ஆடிக் கொண்டிருந்ததைச் செப்பனிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். தொளதொளவென்றிருந்தது. இவள் இரும்பை உருவிவிட்டு கட்டையைத் தூக்கிக் கொண்டு பின்பக்கமாக வாதாமரத்தடிக்குப் போனாள்.

பிரமன் பீடி குடித்துக் கொண்டிருந்தான். 'பிடாரியம்மா, எனக்குத் துணை செய்'.

கட்டையை பலம் கொண்ட மட்டும் தூக்கினாள். பிரமன் சத்தமின்றிச் சாய்ந்தான்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 14 ]

ராணியோடு வந்த பாதையை மனதில் கொண்டு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள் பொன்னி. ஆந்தையும் அசந்திருந்த நேரம். அதோ சரிவு. தாமரைக் குளம். அவளுக்கு அதைப் பார்க்க அழுகையாக வந்தது.

நீந்தக்கூடாது என்று முடிவோடு பாயப் போனவளை தடுத்து நிறுத்தியது அந்தக் குரல்.

"லுங்கியோட விழுந்தா ஊர் கேவலமாகப் பேசும். மேலும் பண்ணையாரைக் கண்டு பயப்படறவங்கதான் அதிகமாவாங்க... இதிலே இருக்கிற புடவையைக் கட்டிக்கிட்டு விழு."

திடுக்கிட்டுத் திரும்பினாள். செல்வம் கையில் அவள் பெட்டி.

"நீ... நீங்களா? நான்..." அவளுக்குப் பேச்சே வரவில்லை.

"அத்தான் என் நிலைமை. நான் கற்பழிஞ்சவ... அந்த நாகலிங்கம் என்னைப் பழி வாங்கிட்டான்".

செல்வம் அமைதியாக இருந்தான்.

"அப்படி ஏதாவது நடந்திருக்குமுன்னு எதிர்பார்த்ததுதான். குளத்துக்குப் போனவளைக் காணோமின்னா பின்னே என்ன நினைக்கிறது?"

"இனிமே நான் உயிரோடு இருக்கணுமா?", பொன்னி விசித்தாள்.

"முதல்லே சேலையைக் கட்டு, யாராவது வந்தாலும், அப்புறம் மெல்ல நடந்துக்கிட்டே பேசலாம்". பெட்டியைத் திறந்து ஒரு புடைவை, ரவிக்கையை எடுத்துக் கொடுத்துவிட்டு செல்வம் திரும்பிக் கொண்டான்.

"ஆமாம், ஏதோ வெறி நாய் முன்னாலே அம்மணமா நின்னாச்சு... இனிமே என்ன கௌரவம்!" பொன்னியின் சலிப்பு அவன் காதுகளில் விழுந்தது.

"பொன்னி, தோட்டத்துலே இருக்கறப்போ காக்கா எச்சம் போட்டதேன்னு எச்சலை துப்பியா பழத்தை சுவாமிக்கு நைவேத்யம் பண்றோம்? திருடன் வந்து சிலையைத் திருடறான். சிலையைக் கண்டுபிடிச்சதும் கோவில்லே பாதுகாக்கறதில்லையா? திரும்பலாமா?"

"திரும்புங்க"

"உன்னைக் காப்பாத்தக் கையில்லேன்னுதானே குளத்துலே விழப்போனே?"

"அத்தான்" அருகில் ஓடிவந்த பொன்னி தயங்கினாள்.

"ஏன் அங்கியே நிற்கிறே? நீ என்னைக்கும் என் பொன்னிதான். கையில்லாத எனக்கு கையாயிருப்பேன்னியே! வாக்கு தவறலாமா? எனக்கு ஆறுதலா என்ன சொன்னே! மறந்து போச்சா... பகையாளி எந்த நோக்கத்தோட திட்டம் போடறானோ அதுபடியே நடந்தா வெற்றியடைஞ்சவன் அவனேதான். உங்க கையை ஒடிச்சா நான் உங்களைக் கலியாணம் பண்ணிக்க மாட்டேன். நீங்க வேற வேலைக்கு போக முடியாதுங்கறது அவன் திட்டம். அதைத் தூளடிக்கணும். அவன் முன்னே சீரும், சிறப்புமா வாழ்ந்து காட்டணுமின்னு சவால் விட்ட என் பொன்னியா கோழை மாதிரி சாகத் துணிஞ்சா?"

பொன்னி விசித்தாள்.

"பாரம் குறையுமட்டும் அழுதுடு. பண்ணையாரோட இரண்டாவது குறி நீ! என் பலமான உன்னை நாசப்படுத்திட்டா ஒண்ணு தற்கொலை பண்ணிப்பே! இல்லே... அவங்ககிட்டேயே சிறையிருப்பேன்னு அவங்க கணக்கு போட்டு வெச்சிருக்காங்க. நீ செத்துட்டா நானும் ஏகாங்கியா அவங்க காலடியிலே கிடப்பேன். அது உனக்கு சம்மதம்தானா? பிறக்கும்போதே இருந்த கைகள் போச்சு. ஆனாலும் நான் வாழலியா?

நீ மனசார அவனைக் கட்டி அணைச்சாயா? அவனுக்கு உடன்பட்டாயா? சோரம் போனயா? இல்லையே. எப்புறம் ஏன் மனசிலே உறுத்தல்? குறிப்பிட்ட தேதியிலே கலியாணம் நடக்கலேன்னா ஊர் என்னைக் கெக்கலி பேசாதா? உன் தற்கொலைக்கு விதவிதமாக காரணம் சொல்ல மாட்டார்களா?"

பொன்னி சுமைதாங்கிக் கல்லின் மேல் சோகமாக உட்கார்ந்திருந்தாள்.

"நீங்க என்ன சொன்னாலும் அது எனக்குச் சரிப்படலை. உங்களைத் தொடவே நான் லாயக்கில்லாதவன்னு மனசு சொல்லுது. இதோட நான் எப்படி மணவறையில் உட்கார்ந்து தாலிக் கட்டிக்கறது, தூய்மையா எப்படி குழந்தைப் பெத்துக்கறது? உங்களுக்கு என்கிட்டே வரும்போதெல்லாம் நான் கறைபட்டவ என்கிற எண்ணம் இல்லாமையா போகும்?"

"தூத்தெறி... என்ன பேச்சு பேசிட்டே? நொண்டிங்கற அனுதாபத்திலேதான் எனக்கு மாலையிடறேன்னியா? இதோ பார்... உனக்கு சரின்னு படறவரை நமக்குள்ளே கணவன் மனைவி உறவு வேண்டாம். முன்னேயே நாம் பேசி வச்சிருந்தபடி நாம வாழ்க்கையிலே காலை ஊனிக்கறவரை, தலை நிமிர்கிறவரை, உனக்கு இருபது வயசாகிறவரை புள்ளை பெத்துக்க வேண்டாம். காலம் எப்படிப்பட்ட புண்ணையும் ஆற வெச்சுடும்.

ஏம் பொன்னி... தவறி சாக்கடையிலே விழுந்தவன் அதிலேயேவா கிடக்கான்? அப்புறம் செண்ட், சோப்பு, பூ எதுவும் உபயோகிக்கறதில்லையா? அவன் வாசனைக்கே அருகதையில்லாதவன்னு நீ சொல்ற மாதிரி இருக்கு. மலம் காலிலே ஒட்டிட்டா காலையா வெட்டறோம்? வயித்திலே கட்டி வந்துட்டா கட்டியை ஆபரேஷன் பண்ணிக்கறமே தவிர சாப்பிடாமயே இருக்கறதில்லே. இது ஒரு விபத்து... இதுலேயிருந்து குணமாக்கிக்கறதுதான் புத்திசாலித்தனம். தற்கொலை செஞ்சுக்கறதில்லே!

மகாத்மா காந்தி என்ன சொல்லி இருக்கார்! நீ எத்தனை படிச்சிருக்கே... விதவைகளையும், பலாத்காரம் செய்யப்பட்டவங்களையும் நெஞ்சிலே துணிவோட வாலிபர்கள் ஏத்துக்கணும்னு சொல்லலை? நான் தியாகமா நினைச்சு ஏத்துக்கலை. உன் மேலே நான் வைச்ச அன்பு அத்தனை குறுகினதில்லை. என் முன்னாலே வைச்சு அந்த நாகலிங்கம் உன்னைக் கெடுத்திருந்தாலும் நான் இதே முடிவைத்தான் எடுப்பேன்... சீ பைத்தியம்... ஏன் அழறே? கண்ணைத் தொடச்சிக்கோ".

"அத்தான்" அருகில் ஓடிவந்த பொன்னி, "இருங்க... குளத்திலே குளிச்சிடறேன்..."

புடைவையைக் களைந்துவிட்டு, பெட்டியைத் திறந்து ஒரு சின்னத் துண்டோடு முங்கி முங்கி எழுந்தாள். பிடாரி அம்மனை வணங்கினார்கள் இருவரும்.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் : 15 ]

"ஆமாம், வீட்டுலே எங்கே போனேன்னு கேட்க மாட்டாங்களா?" பொன்னி தலையைத் துவட்டிக் கொண்டே கேட்டாள்.

"உங்க அம்மா வீட்டு உறவு செங்கணாம்பட்டியிலே இருக்காங்க இல்லையா... அவங்களோடு போயிட்டதா சொல்லி இருக்கேன்".

"ஈரப்புடவையோடயா?"

"நீ ஈரச்சேலையோட வந்துக்கிட்டிருந்ததாகவும், அவங்க வண்டிக்கு நேரமாச்சுன்னு மாத்துச் சேலை கொடுத்துக் கூட்டிட்டுப் போயிட்டதாகவும், பொட்டியிலே அவ சாமான், துணிமணியோட நான் அடுத்த பஸ்ஸிலே வரதா சொல்லியிருக்கேன்னும் வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு ஒன் சாமானோட இங்கதான் சுத்திட்டிருக்கேன்..."

பொன்னி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

"நன் இங்கதான் வருவேன்னு எப்படித் தெரியும்?"

"தாமரைக்குளத்திலே காணாமப் போனவ, அந்த இடத்துலேதான் அசம்பாவிதம் நடந்து போச்சுன்னு புரிஞ்சு போச்சு. தப்புதண்டா நடந்திருந்தா தற்கொலை பண்ணிக்க இங்கதானே வரணும். ஏற்கனவே என்னைச் சுட்டிக்காட்டி மண்ணென்ணையும், தீப்பெட்டியும் துணைன்னு சொன்னவ எந்த முடிவுக்கு வருவேன்னு தெரியாதா?"

"நேத்துலேருந்து சாப்பிடாம இங்கேயாவா சுத்திக்கிடிருக்கீங்க?"

"பசியா பெரிசு! உன்னைக் கொலை பண்ணிட்டாங்களோன்னு துடிச்சிக்கிட்டிருந்தேன். கவுச்சிக்கு அலைஞ்ச வெறிநாய். சட்டியை உடைக்காமப் போச்சேன்னு சந்தோஷமா இருக்கேன். பொன்னி, இப்ப நாம நேரா பஸ் ஏறி அந்த சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறோம். கொஞ்ச நேரம் அங்க தங்கிட்டு சத்திரப்பட்டி போவோம். அவுங்க கலியாணத்துக்கு வந்தா 'பொன்னியை நாங்க அழைச்சிட்டு வரலியே'ன்னு ஏதாச்சும் உளறினா மாட்டிக்குவோம்.

இந்த விஷயம் நமக்குள்ளே இருக்க வேண்டிய அந்தரங்கம். உங்கம்மாகிட்ட கூட மூச்சு விடாதே! இப்ப பரிதாபப்பட்டாலும் பின்னாடி 'நீ ரொம்ப யோக்கியம்'னு பேச்சு வந்திருச்சுன்னா 'சுருக்'குனு தைக்கும்".

பொன்னி ஓடி வந்து செல்வத்தை இறுக அணைத்துக் கொண்டு அவனது பரந்த மார்பில் சாய்ந்து அழுது தீர்த்தாள்.

"அசடு, தே, என்னது... வெரசா வா... வெள்ளி புறப்படப் போகுது... கண்ணைத் துடை".

செல்வம் சொன்னபடியே ஊரெல்லாம் சுற்றிவிட்டு கண்டபடி குழப்பிவிட்டு இரண்டு நாளில் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

"நல்லாத்தான் சுத்தினீங்க... காப்புகட்டுமுன்னே, இப்படி அலைஞ்சா உறவு மொறை ஏசமாட்டாங்க? ஏ... பொன்னி நாளைக்கு நீ, ஆண்டாளு, மருமக எல்லாம் ஊர் போய் சேருங்க. நாங்க ஒரு வாரம் கழிச்சு வரோம்... ஏண்டீ, நாங்க எம்புட்டுக் கவலைப்பட்டு ஊரெல்லாம் தேடி... நல்லாத்தான் இருக்கு. ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகமாட்டே? ஈரச்சேலை கூட மாத்தாம! கூத்துதான்... போ". சிவகாமி படபடவென்று பொரிந்தாள்.

செல்வத்தை நன்றியோடு பார்த்தன பொன்னியின் கண்கள். செல்வம் அவளைக் குறும்பாக பார்த்தான். அந்த மொழி அவர்களுக்கு மட்டுமே புரியும்.

பக்கத்தில் வந்த பழனி மெதுவான குரலில்,

"செல்வம், ஒரு சமாசாரம் தெரியுமா? நீ போன மறுநாள் தோட்ட வீட்டுலே சின்ன பண்ணையை பாம்பு கொத்திருச்சு. ஊமைப்பிரமன் சைகை ஒருத்தருக்கும் புரியலை. மகன் செத்ததை கேட்டதும் பெரியவர் அலறி விழுந்தவர்தான்! ஒரு கையும் காலும் வெளங்கலை... நாக்கும் இழுத்துகிச்சு. கண்ணாலே தண்ணி ஊத்தறார். ஆரு போனாலும் கையைப் புடிச்சிக்கிட்டு! ரொம்ப கண்றாவிப்பா... எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரப்படாது!" என்றதும்

"வினை விதைச்சவன் வினை அறுக்க பயந்தா ஆகுமா?" என்றான் செல்வம்.

"மருமகப் பிள்ளை வந்திருக்காரு. அவரு ரொம்ப பயந்துட்டாரு... படிச்சவரா... இவங்களைக் கூட்டிகிட்டு சொத்துக்களை வித்துட்டு டவுனுக்குப் போயிடப் போறாங்களாம். நம்ம கடன் பத்திரமெல்லாம் கிழிச்சுப் போட்டுடப் போறாங்களாம். கோபாலு சொன்னான்" என்றான் மூத்த அண்ணன்.

"அப்போ நீயும் இங்கேயே இருந்துடேன் செல்வம்." என்றான் இரண்டாமவன்.

"இல்லே, பொன்னிக்கு இந்த ஊர் பிடிக்கலே... நாங்க தாமிரபரணி நதித் தண்ணியைக் கொஞ்ச நாள் குடிச்சு அங்க தொழில் செய்யப் போறோம்... எங்கே போறோம்! நல்லது, கெட்டதுன்னா கூடறோம்... எப்படியோ விடுதலை கிடைச்சா சரி." முடிவாகச் சொன்னான் செல்வம்.

ooo0O0ooo

"டே, படுவா... கில்லாடிடா நீ!" மூடிய பாத்திரத்தோடு தப்பைக் கதவைத் தள்ளிக் கொண்டு வந்தாள் ஆனந்தநாயகி.

"பாத்திரத்திலே என்ன? கமகமக்குது..." மூக்கை இழுத்து வாசனை பிடித்தான் செல்வம்.

"அது உனக்கில்லே... எம் மருமக வயத்திலே இருக்கிற குட்டிப் பையனுக்கு!" திகைத்தான்.

"என்னடா திருதிருன்னு முழிக்கறே. இந்த செட்டிகுளத்து மண்ணோட மகிமைடா. காத்தடிச்சா தாழை பூத்துடும். வந்ததுலேயிருந்து முழுகலையே. நேத்து வாந்தி எடுத்தாளா... புடிச்சுக்கிட்டேன். என்னாடீன்னா... சின்ன வயசா... பயம்! 'ஓ'ன்னு அழுவறா."

அத்தை உள்ளே போய்விட்டாள். செல்வம் கல்லாய் சமைந்திருந்தான்.

(அடுத்த வாரத்துடன் முடியும்)

oooOOooo
[ பாகம் : 16 ]

இரவு நேரம். நிலா பால்போல் காய்ந்து கொண்டிருந்தது. செல்வத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் பொன்னி.

"பொன்னி, இருந்துட்டுப் போகட்டுமே! நான் வேத்துமையா நினைப்பேன்னு பயப்படறியா?"

"இல்லீங்க... இது வேணாங்க... நெல்லோட இருந்தாலும் அரிசியைத் தாங்க ஏத்துக்கறோம். உமியை ஒதுக்கிடறோம். களை எடுத்துத்தாங்க பயிர் செழிக்கும். நான் சுத்தமாக என் வயிறு காலியாகணுங்க".

"சரி, அப்ப நாளைக்கு ஆஸ்பத்திரிக்குப் போகலாம். பின்ன ஏன் அழறே?"

"அத்தை, மாமால்லாம் முதல் பிள்ளைன்னு திட்டுவாங்களே!"

"பூ, இம்புட்டுத்தானா... நான் சமாளிச்சுக்கறேன்... ஏய், என்ன இது... வழக்கம் போல தந்துட்டுத் தூங்கு. ஒண்ணுதானா!"

O

"அது வந்து அத்தை... பதினெட்டு வயசானப்புறம்தான் கலியாணமே பண்ணிக்கனுமின்னு நம்ம அரசாங்கம் சொல்லுது... அதுக்குள்ளே கலியாணம் பண்ணிட்டாங்க பெரியவுங்க. புள்ளையாவது பத்தொம்பதுலே பெத்துக்கலாமுன்னு நினைக்கறேன். அதான் அவ பயந்து அழுதிருக்கா. நீங்க ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயி கலைச்சிருங்க."

ஆனந்தநாயகி செல்வத்தை தீர்க்கமாக ஊடுருவினாள்.

"வந்தது இருந்துடட்டும். அடுத்தது பத்து வருசம் போயி பெத்துக்க..."

"வேணாம் அத்தை. உங்களால முடிஞ்சா கூட்டிட்டுப் போங்க. இல்லே நானே கூடப் போறேன். பாங்கிலே லோன் போட்டு மாட்டை வாங்கி பால் வியாபாரம் பண்றோம். இந்த லெட்சணுத்துலே இவ வயத்தைச் சரிச்சிக்கிட்டு மசக்கைன்னு இருந்தா யாரு பாலு கறக்கறது? வாடிக்கைக்கு ஊத்தறது... சாணி தட்டறது... பெரிசா திட்டம் போட்டு கோழிப் பண்ணைன்னா... கோழி பெருகறதுக்குள்ளே புள்ளைப் பெத்து ரொப்பிட்டா? அதெல்லாம் கையில நாலு காசு செழிச்சப்புறம்தான்..."

"ஏண்டா வெட்டிப்பேச்சு... நானே கூட்டிட்டுப் போறேன்." அத்தை உள்ளே போனாள்.

O

"ஏம்மா, வெண்டைக்காயிலே எறும்பு வந்துருக்கு... அவரைச்செடியிலே கம்பளிப் பூச்சி ஏறுது... பூச்சி மருந்து அடிக்க வேண்டாமா?"

"வாங்க அத்தை... மொளகாய் பறிச்சுக்கிட்டிருந்தேனா... நீங்க வந்ததையே பார்க்கலே. மருந்தடிக்கணும் அத்தை. உள்ளே வாங்க. நல்ல வெயிலு. மோர் தரட்டா?"

பொன்னியும் அத்தையும் உள்ளே போனார்கள்.

"செல்வம் எங்கே? சந்தைக்குப் போயிருக்கா?"

"ஆமாம் அத்தை."

"மாப்புள்ளைக்குக் கையில்லேன்னுதானே காயப் போட்டிருக்கே! கையிருக்கற ஆம்பிளைன்னா இப்படித் தளதளன்னு பொண்டாட்டியை சும்மாவிட்டு வெச்சிருப்பானா?"

"அத்தை!" திகைப்போடு பார்த்தாள் பொன்னி.

"என்ன பார்க்கறே? இவளுக்கு எம்புட்டு தூரம் தெரியுமுன்னா? வருஷம் அஞ்சாச்சு... நீயும் வாயைத் திறப்பேன்னு பார்த்தேன். ரெண்டு பேரும் மகா அழுத்தம். அதான் அசிங்கத்தைக் கழுவியாச்சே!"

"அவுங்க சொன்னாங்களா?" மூக்கு விடைத்தது பொன்னிக்கு.

"அடியே, அடியே! அவன் உன்னைக் காட்டிலும் கெட்டி. அஞ்சு வருசம் முன்னே ஒரு நாள் உங்க மாமா பிரியாணி போடச் சொன்னாரு... ஆராச்சும் வந்தாக் குடுத்துனுப்பலாமுன்னு பார்த்தா ஒரு பயலையும் காணோம்... சரி நாமே ஒரு நடையைப் பார்க்காம குடுத்துட்டு வரலாமுன்னு வந்தா, கதவு மூடியாச்சு... தட்டலாமுன்னு யோசிச்சேன். அழுகையும், பேச்சுமா இருக்கவே சந்தேகப்பட்டு நின்னேன். நேரம் சரியிலேன்னு அப்படியே திரும்பிட்டேன்.

பொன்னி, இதைப்பத்தி அஞ்சு வருசமா மூச்சு விட்டுருக்கேனா? உங்கம்மாவுக்கு நீ ஒரே பொண்ணு... காய்க்கலையே, பூக்கலையேன்னு கவலைப்படறாங்க... நொண்டிப் பையனாச்சே, பிள்ளை பொறாக்காதோன்னு! என்ன மொறைக்கிறே? நீ வெறும் மரமா நின்னா அப்படித்தான் நெனைப்பாங்க.. ரோசம் வந்தாப் போதுமா? காரியத்துலே காட்டு.

நெலமை உசரணுமுன்னான் செல்வம். குருவி சேர்க்கறாப் போல சேர்த்து, நெத்தி வேர்வை சிந்தப் பாடுபட்டு தோட்டத்தை வாங்கிட்டீங்க... நாலு மாடு கறக்குது. இருபது கோழி இருக்குது. நீயும் கொஞ்சம் கூட ஓய்வில்லாம காய்கறி பறிக்கறதும், சந்தைக்குப் போறதுமா தேனீ மாதிரி உழைக்கிறே. பொய்க்கையைப் பொருத்திக்கிட்டு செல்வமும் உழைக்குது.

ஆண்டாளை நல்ல எடத்துலே கட்டிக் கொடுத்தாச்சு. சோமுவுக்கும் கலியாணமாயி ஒரு பொண்ணு பொறந்தாச்சு! சிவகாமுவும், நிலமும் நீச்சுமா வசதியா இருக்காங்க... உன் குறைதான் பெரிய குறை. நீ நினைச்சா தீர்க்க முடியாதா?

இதோ பாரு! காக்கா போற போக்குலே எச்சம் போட்டுட்டா கழுவறதில்லே? என் சங்கிலியை பாப்பம்மா மக விளையாடிட்டிருந்தது சட்டுனு வீசிப் போட்டுச்சி. எங்கே விழுந்தது தெரியுமா? காவாயிலே. ஒரே நாத்தம். கொஞ்சம் தாமசிச்சாலும் அடிச்சுட்டுப் போயிடுமே. தங்க நகையாச்சே... விட்டுட முடியுதா? கையைப் போட்டுத்தான் துளாவினேன். கையையா வெட்டினோம். நான் உன்னைப் போல அதிகம் படிச்சவ இல்லே!

அகலிகையை இந்திரன் ஏமாத்தியிருக்கான். அவ கொஞ்ச காலம் கல்லா இருந்த மாதிரி நீயும் கல்லா இருந்துட்டே. கர்ணனைப் பெத்து ஆத்தங்கரையிலே விட்ட குந்திதான் பஞ்சபாண்டவர்களையும் பெத்தா... பெருமாள் கோயில்லே தராங்களே துளசி... அவகதை தெரியுமா? அவ புருஷன் வேஷத்துலே வந்து பெருமாள் ஏமாத்தி இருக்கார். அசுரனை அழிக்கப் பாவம் பண்ணி சாபம் வாங்கி சாளிக்கிராமக் கல்லா இருக்கார்.

உத்தமியான உனக்கு இழைச்ச துரோகம்தான் விஷ நாகமா வந்து நாகலிங்கத்தைக் கொன்னு, பரமசிவத்தை பயனில்லாம படுக்க வெச்சு ஊருக்கே விடுதலை வாங்கித் தந்தது. அவங்க வெற்றியா நினைச்சது தோத்துப் போச்சு. நீ துறவியா வாழ்ந்தா அது எப்படி முழு வெற்றியாகும்? இந்த வூட்டிலே வெச்சது வெச்ச எடத்திலே இருக்காம விஷமம் பண்ண புள்ளை நடமாடணும்.

புராணத்துலே அந்தக் கதையெல்லாம் ஏன் எழுதி வெச்சிருக்காங்க தெரியுமா? தெரிஞ்சு செஞ்சாதான் குத்தம். தப்பு செய்யாதவன் லோகத்திலே கிடையாது. தப்பை உணர்ந்து வருந்தினா மன்னிப்பு உண்டு. அட, செல்வம் வந்துடுச்சே... எல்லாம் வித்துப் போச்சா? பொன்னி, கண்ணைத் துடை!" மெதுவாக சொல்லிக் கொண்டே அத்தை எழுந்தாள்.

ooo0O0ooo

"என்ன பொன்னி! சமையல் ஒரே அமர்க்களம் இன்னிக்கு?"

"என்னமோ தோணிச்சு"

பொன்னியும் சாப்பிட்டு முடித்தாள்.

"பொன்னி தூங்கலே?"

"தூக்கம் வரலீங்க!"

"ஏன்?"

"உங்க தம்பிக்குக் கூட குழந்தை பிறந்துடுச்சி."

"நான் கையாலாகாதவன்"

"சே, இன்னொரு வாட்டி அப்படிச் சொல்லாதீங்க!"

"ஆசை இருந்தாப் போதுமா?"

"ஆசை இருந்தாப் போதுங்க"

அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்... அவள் பேச விட்டால்தானே!

O

"அப்பா நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வரேன்."

"பார்த்து ஓரமாப் போடா."

"நானும் அண்ணன் கூடப் போவேன்."

"அடுத்த வருஷம் போகலாம். இங்க வருவியாம். அப்பாவுக்கு ஒரு முத்தா தருவியாம். அழக்கூடாது. சமர்த்தில்லே.."

மெல்லத் திண்ணையில் ஏறி செல்வத்தின் கன்னத்தில் தன் மூக்கைத் தேய்த்தான் அந்த மழலை.

பொன்னி தண்ணீர் குடத்தோடு வந்தவள்,

"தினகர் ஸ்கூலுக்குப் போயிட்டானா? டிபன் எடுத்துட்டுப் போனானா... டேய் பிரபு, என்னடா இது மூக்குச்சளியெல்லாம் அப்பா மேல... கீழே இறங்கு... என்னங்க இது! அசிங்கம் பண்ணிக்கிட்டு... எல்லாம் நீங்க கொடுக்கற இடம்." என்றபடி குடத்தை இறக்கிவிட்டு ஒரு துணியை எடுத்து வந்து செல்வத்தின் முகத்தைத் துடைத்தாள்.

"பிரபு, கொஞ்சறதிலே அசல் உன்னைப் போல..." செல்வம் கிசுகிசுக்க,

"சே, போங்க.. ரொம்பத்தான்!" என்றபடி முகம் சிவக்க குழந்தையுடன் உள்ளே போய்விட்டாள் பொன்னி.

"அப்பா, என்ன வெயில், என்ன வெயில்!" என்றபடி உள்ளே நுழைந்த அனந்த நாயகி,

"பொன்னி, செல்வம்! நீங்க கேட்டபடி செட்டியார் அந்தத் தொகைக்கு சம்மதிச்சுட்டார். மாமா பேசி முடிச்சு முன்பணம் கொடுத்துட்டாங்க... வர்ற வெள்ளிக்கிழமை கடையை ஆரம்பிச்சுடலாம். கொஞ்சம் மோர் கொண்டாம்மா... டேய், பயலே இங்கே வாடா..." என்றபடி பிரபுவை வாரி அணைத்தாள்.

"பிடாரித்தாயே! எல்லாம் உன் அருள்" என்று கைகுவித்தாள் பொன்னி.

செல்வம் பெருமையோடு மனைவியைப் பார்த்தான்.

(முடிந்தது)

 

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors