தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : புத்தம் சரணம் கச்சாமி
- பாஸ்டன் பாலாஜி

[ பாகம் : 1 ]

கணக்கிட முடியாத நான்கு

எல்லாரும் மகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சிக்கான காரணங்களுடனும் இருத்தல்.
எல்லாரும் துன்பத்திலிருந்தும், துன்பத்தின் ஊற்றுக்களிலிருந்தும் விடுபடுதல்.
எல்லாரும் இன்ப துன்பச் சுழலில் இருந்து மீள்தல்.
எல்லாரும் பற்றற்ற, குரோதங்களற்ற சமத்துவத்தை அடைதல்

புத்தரை குறித்து எனக்கு என்ன தெரியும்? சின்ன வயதில் தொலைக்காட்சி நாடகத்தில் புத்தரை பார்த்த ஞாபகம். பெரிய பெரிய பிருமாண்ட சிலைகளில் பார்த்திருக்கிறேன். ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் 'ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்' என்று தடாலடியாக சொன்னது நினைவுக்கு வருகிறது. கூடவே ஜைனர்களும் புத்தர்களோ என்று குழம்புகிறது. பரசுராமருக்கு பதிலாக புத்தரை தசாவதாரத்தில் பார்த்ததும் வந்து போனது. பெரியார்தாசன் புத்த மதத்தைத் தழுவினது ஏனோ சம்பந்தமில்லாமல் ஊசலாடியது. பெர்னார்டொ பெர்ட்டோலூசியின் 'லிட்டில் புத்தா'வின் தாமரைப் பாதங்களை தமிழ்ப் படமொன்றில் ஹீரோயினுக்கு உல்டா செய்ததையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இரு தலைக் கொள்ளி எறும்பாக இருந்தாலும் வாய் நிறைய சிரிக்கும் தலாய் லாமா கொடுக்கும் ஆச்சரியம், பாஸ்டன் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் புத்தர் மண்டபத்தில் கிடைக்கும் போதையில்லா கிக், தியானத்தை வலியுறுத்தும் அம்சம், அஜந்தா எல்லோராவின் சிற்பங்கள், கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் டாப் வில்லன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த மாதிரி ஏதோ ஒரு சமயத்தில்தான் அவரைக் குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. கூட வேலை செய்யும் சீனாகாரர்கள் முடிந்த அளவு குழப்பினார்கள். படிக்க ஆளுக்கொரு புத்தகத்தைக் கொடுத்தனுப்பினார்கள். இந்தியாவில் புத்தர் பிறந்த கதையை ராமர், கிருஷ்ணரின் பிறப்புக்கு ஈடாக வர்ணித்திருக்கிறார்கள். அவர் நாட்டை விட்டு விட்டு, கலர் மாறாமல் காட்டுக்குப் போக ஆரம்பித்த இடங்களில் தேவதூதர்கள் பூச்சொரிந்திருக்கிறார்கள். இன்னொரு புறம் மேற்கத்திய கலாசாரத்திற்கு ஏற்றவாறு நுகர்வோரின் செல்லப் பிள்ளையாகவும் ஸென்னும், ·பெங்-ஷ¤யும் புத்தக் குறீயீடுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. சீனாவில் கொரியாவில் தாய்லாந்தில் என்று ஒவ்வொரு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காணவைக்கிறார்கள். ரோமாபுரியில் இருந்தால் பாப்பரசராக கூட புத்தரை சித்தரித்திருக்கலாம்.

என்னுடைய இந்த முயற்சி பாராளுமன்ற தேர்தலில் வட்ட செயலாளர் செய்யும் களப்பணிக்கு ஈடானது. நாலா பக்கமும் சென்று வாக்காளர் பட்டியல் வாங்கிவருவது போல் புத்தகங்களில் இருந்து நான் புரிந்து கொண்டவற்றை எடுத்து வைக்கிறேன். குடியிருப்பவர்களை நன்கு அறிந்திருப்பதால், பெர்சனலைஸ்ட் பிரச்சாரம் போல், நண்பர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன். அவருடைய போதனைகளில் இருந்து நான் அறிந்து கொண்டதையும் புரிந்து கொண்டதையும் எடுத்து வைக்கப் போகிறேன். புராண வரலாற்றையும் முன் வைப்பேன்.

நான் கடவுளின் முன் கை கூப்பியும் வேண்டிக் கொள்வேன். கோபம் மிகுந்து விட்டால் நேருக்கு நேராக, நிறையவே உரிமை எடுத்துக் கொண்டு, திட்டுவதும் உண்டு. திடீரென நான்கு மாதங்களுக்கு ஸ்லோகம் எதுவும் சொல்லாமல், கோவில் பக்கம் எட்டிப் பார்க்காமல், குற்ற உணர்வு எதுவும் அடையாமல், 'வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்' என்று இருப்பதும் உண்டு. அது போலவே, என்னுடைய சில பதிவுகள் புத்தரை வானுயர்ந்த மகா தெய்வமாகவும்; தோளில் கை போட்டு அட்வைஸ் செய்யும் நண்பனாகவும்; எங்கோ யாருக்கோ சொல்வது போன்ற மூன்றாவது மனுஷத் தனமையும் கொள்ள நேரிடும்.

பௌத்த மதம் பல தளங்களைக் கொண்டிருக்கிறது. காலை ஆறு மணிக்கு எழுந்து ஒன்பது மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை அலுவலகத்தில் மன்றாடி, வாரயிறுதிகளில் கேளிக்கைகளுக்கு செல்பவனையும் சென்றடைகிறது. அமெரிக்காவில் வேகமாகப் பரவுகிறது. கம்யூனிஸத்துக்கு நடுவே சீனாவில் நிலைத்து நிற்கிறது. இந்தியாவில் தள்ளாடுகிறது. தன் மதத்தில் நம்பிக்கையிழந்து நம்பிக்கையைத் தேடுபவனுக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது. துன்பத்தை ஒழிப்பதற்கான மாயாஜாலத்தைத் தேடுபவனையும் புன்சிரிப்போடு வரவேற்கிறது.

இந்தப் பதிவுகள் புத்தரை குறித்தும் பௌத்த மதத்தை குறித்தும் உங்கள் ஆர்வத்தையும் கூகிள் தேடல்களையும் ஊக்கப்படுத்தினால் எனக்கு மகிழ்ச்சி.

oooOOooo
[ பாகம் : 2 ]


வீடுகொண்ட நல்லறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்
 விளங்கு திங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன்
மோடுகொண்ட வெண்ணுரைக் கருங்கடல் செழுஞ்சுடர்
 முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின்
நாடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான
 ஐந்தொடங்கொர் மூன்றறுத்த நாதனாள் மலர்ந்துணர்ப்
பீடுகொண்ட வார்தளிர்ப் பிறங்குபோதி யானையெம்
 பிரானைறாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே.
(வீரசோழிய உரை)

பௌத்தம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக நம்மிடையே பரவியிருக்கிறது. காவிரியின் ஓட்டம் போல் சில தேசங்களில் ஆடு தாண்டும் காவிரியாகவும், சில இடங்களில் அணைக்கட்டுகளை உடைத்துச் செல்லும் பாவனைகளுடனும் விரிந்திருக்கிறது. அந்தந்த நாடுகளின் கலாசாரத்தையும் தன்னுள்ளே ஏற்றிக் கொண்டு உருமாறுகிறது.

புத்தன் என்பவன் கடவுளா? அல்லது கடவுளின் தூதுவனா? சரித்திர நாயகனா? கதைகளில் வரும் உதாரண புருஷனா? நம்மிடையே உலா வந்த சாதாரண மனிதனா?

கௌதம் சித்தார்த்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது பௌத்த மதத்துக்கு முரணானது என்று சிலர் கூறுகிறார்கள். புத்தர்களின் பார்வையில் எவ்வளவு குணக்குன்றாக இருந்தாலும் தொழக்கூடாது. வணங்கக்கூடாது. தன்னுடைய சீடர்களுக்கு நாற்பது வருடங்களாக புத்தர் பாடம் நடத்துகிறார். கடைசியில் கண்மூடித்தனமாக அந்தப் பாடங்களை கடைபிடிக்காதே என்கிறார். தொடர்ந்து கேள்விகளை தட்டியெழுப்பி, சுயவிசாரணைக்கு உட்படுத்துமாறு வேண்டுகோள் வைக்கிறார். இதனால் காலத்திற்கேற்ப கோட்பாடுகளை இயல்பாக்குதல் புத்த மதத்தில் சாத்தியமாகிறது. எதற்கெடுத்தாலும் 'ஏன்' என்று கேள்வி கேட்கச் சொல்வதாலும் மேற்கத்திய உலகுகளில் பௌத்தம் வரவேற்பைப் பெறுகிறது.

பௌத்தம் அறியாமையை நீக்குவதாக வாக்கு கொடுக்குகிறது. எல்லாவற்றையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வசதி செய்து கொடுப்பதாக சொல்கிறார்கள். அனுபவத்தினால் அனைத்தையும் கற்றுக் கொண்டவர் புத்தர். கடவுள் நேரே வந்து டிக்டேட் செய்யவில்லை. ஞானவழியை கனவில் கண்டடையவில்லை. பணக்கார மனிதனாக வாழ்ந்தவர். கல்யாணமாகி குழந்தை உடையவர். அவருடைய இளமைக்கால வரலாறு முதல் முதுமை வரை, திறந்த புத்தகமாகவே இருக்கிறது.

திடீரென்று தேடல் நிறைந்த வாழ்க்கையாக மாற்றிக் கொள்கிறார். துன்பத்தை மீள்வதற்கு வழிதேடியவர். விவேகத்தைப் பெற தன்னுடைய சுகபோக வாழ்வை வெட்டென மறந்தவர். பல வித ஆசிரியர்களிடம் குருகுலத்தில் கற்றுப் பார்த்தவர். ஏழு வருடங்களாக பல ஆசிரியர்களை மாற்றியும் தேற்ற முடியாமல், சொந்த முயற்சிக்கு மாற்றிக் கொண்டவர். சுய ஆராய்ச்சியில் இறங்கி உண்மையைக் கண்டறிந்திருக்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை மக்களிடம் பிடிவாதமாக வலியுறுத்தவில்லை.

அல்லல்படும் மனித இனத்திற்காக மண்ணில் பிறவி எடுத்த கௌதமர், தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று போற்றிப் புகழப்படுகிறார்.  வணங்கவும் படுகிறார். துன்பத்திலிருந்து விடுபட மனிதனுக்கு போதிக்க அவர் விரும்பினார். புத்தர் எவ்வாறு தவறுகள் அறுத்த, முழுமையான நிறைவு வழியில் வாழ்ந்தார் என்பதை பார்க்க வேண்டும். துசிதா என்னும் பேரின்ப நிலையை அடைந்ததையும், அதன் பிறகு இவ்வுலகில் அவதரித்ததையும், நாம் புராணக்கதைகளின் மூலமும் அறிந்துகொள்ளவேண்டும். கடைசியாம நாமும் 'போதிசத்வர்' ஆவது எப்படி என்றும் தெறிந்து கொள்ளலாம்.புத்தமொழி

இழப்பையும் துயரத்தையும் புத்தம் எவ்வாறு எதிர்கொள்ள சொல்கிறது?

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு நிகழ்வையும் விதவிதமாக எதிர்கொள்கிறார்கள். லாபம் அடையும்போது மகிழ்ச்சியடையாதவர்களும் இருக்கிறார்கள். நஷ்டம் கிடைத்தபோது கவலைப்படாதவர்களும் இருப்பார்கள். மனக்கிலேசங்களை நீக்குவதற்கு மேஜிக் புல்லட் எதுவும் இல்லை

வீடு மாறுவது கூட ஒரு வகையில் இழப்புதான். தெரிந்த சுற்றம், பழக்கமாகிப் போன நட்பு, பொருந்திப் போன சுபாவம் போன்றவற்றை இழத்தல் சோகத்தைத் தரக்கூடியது. புது வீட்டுக்கோ சொந்த வீட்டுக்கோ செல்வது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கலாம். குழந்தைகளுக்கு வருத்தத்தைக் கொடுக்கலாம். வேலை மாறுவது அல்லது ஊர் மாறுவது போன்றவற்றால் பெற்றோர்கள் சோகமாகவும், புது இடத்த்தில் - வீட்டு சொந்தக்காரர்களின் ஏவல்களில் இருந்து விடுதலை கிடைத்தல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு குதூகலமாகவும் மாற்றம் இருக்கலாம். இறந்தவர்களின் நினைவுகளை விட்டுச் செல்லுதல், இளவயதின் அனுபவங்களைத் துறத்தல் என்று வீடு மாறுதலில் பல இழப்புகள்.

மனத்துயரம் என்பது நம்முடைய இருப்பில் திருப்தியின்மையின் வெளிப்பாடு.

இழப்புகளைத் தாங்கிக் கொள்ள பௌத்தர்கள் நிலையாணமையை ஒத்துக் கொள்கிறார்கள். சேணம் கட்டிய குதிரை போன்ற ஒருமுகப் பாதை கொண்ட வழியில் இருந்து வாழ்க்கை விலகலாம் என்பதை அறிந்திருக்கிறார்கள். இன்பம், இளமை, யவனம் போன்றவை மாறிவிடக் கூடியவை என்பதைப் புரிந்தவர்கள். அதே போல், துரதிருஷ்டங்களும் துக்கங்களும் கூட சீக்கிரமே நின்று போய், இன்ப நிகழ்வுகள் தொடரும் என்று நம்புபவர்கள். காலபோக்கில் எல்லாவிதமான துன்பங்களிருந்தும் மீளலாம் என்று நினைப்பவர்கள்.

துயரத்தை அடக்கக்கூடாது. எப்படி இந்த நிகழ்வு ஏற்பட்டது, அதற்கான காரண காரியங்கள் என்னவென்று அலசிப் பார்க்கலாம். துயரத்துக்கொரு தோற்றுவாய் கண்டுபிடிப்பதன் மூலம் மனம் திருப்தியடையக் கூடும்.

துன்பத்திலிருந்து தப்பித்தல் இயலாத காரியம்.  ஆனால், அதனைத் தொடரும் இன்பத்துக்கான வழிவகைகளை ஆராய்தலும் திட்டமிடுதலும் சரியான யுக்தியாக இருக்கும்.

(இந்த வாரப் பதிவுகளுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:

1. The Art of Happiness: A Handbook for Living by Dalai Lama, Howard C. Cutler
2. The Book of the Mind by Stephen Wilson)

oooOOooo
[ பாகம் : 3 ]

'புத்தனை சந்தித்துவிட்டால், புத்தனைக் கொன்றுவிடு'

-லின் சி (Lin Chi - ஒன்பதாம் நூற்றாண்டின் ஸென் புத்தர்)

லின் சி சொல்வதை கௌதமர் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அவருக்கு வன்முறை பிடித்திருக்காது. ஆனாலும், தலைமை பீடங்கள் அருள்பாலிக்கும் கொள்கைகளிலிருந்து தனித்திருப்பதை வாழ்த்தி வரவேற்பார். தனிமனிதத் துதியை எதிர்ப்பது பிடித்திருக்கும். தன்னுடைய வாழ்வையும் குணங்களையும் விட அவரின் தத்துவங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவேண்டும் என்று எண்ணினார். எனினும், அவரின் பூர்வ கதை என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புத்தருக்குப் பிடிக்காததை செய்தாலும் அவருக்கு பிடிக்கும்தானே!?

ஆனால், புத்தரைக் குறித்த பல ஆவணங்கள், புத்தரிடம் நேர்மையைக் கடைபிடிக்கின்றன. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து அரசல் புரசலாகத்தான் விஷயங்கள் கசிகிறது. பௌத்த மதத்தைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டுகள் அசோகர் காலத்தில்தான் கிடைக்கிறது. இருநூறு வருடங்களுக்குப் பிறகுதான் புத்தரைப் பற்றிய முதல் தகவல் அறிக்கை அச்சில் ஏறியிருக்கிறது. கிறிஸ்துவுக்கு முந்தைய வருடங்களான 269 முதல் 232 வரை மௌரிய சாம்ராஜ்யத்தை அசோகர் ஆண்டிருக்கிறார்.

இந்த மாதிரி தாமதமான பதிவுகளால் புத்தரின் நம்பகத்தன்மை சரித்திர ஆராய்ச்சியாளர்களிடம் குறைந்திருக்கிறது. புத்தர் என்பவரே மாயை என்று சொல்லி வருபவர்களும் இருக்கிறார்கள். சாக்கியர்களிடம் பரவலாகக் காணப்பட்ட சூரிய வழிபாட்டின் இன்னொரு பரிணாமமே புத்தர் என்று இவர்கள் எடுத்து வைக்கிறார்கள்.

அறிவியல் கூறு என்று ஒன்று இருக்கும்போதே அதற்கு விதிவிலக்கு என்று சில இருக்கும். அதைப் போலவே இவர்களையும் எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள், புத்தரின் வாழ்வையும் அவரின் நேரடி சிஷ்யர்களின் அனுபவங்களையும் விவரமாகப் பதிந்திருக்கிறார்கள்.

அசோகரின் காலத்துக்கு முன்பு இந்தியாவில் கல்வெட்டுகளோ சுவடிகளோ பரவலாக அறிமுகமாகவில்லை. அதுவரை பெரும்பாலான புத்தரின் போதனைகள் வாய்மொழியாகவே விளங்கிவந்தது. மகத சாம்ராஜ்யத்தின் ஆட்சிமொழியாக இருந்த பாலி மொழியில்தான் இவை முதன் முதலாக எழுதிவைக்கப்பட்டது. அந்த வட்டாரத்தை செர்ந்த புத்தரும் பாலி மொழியையே பேசியிருப்பதாகக் கணிக்கிறார்கள். தேரவாடா பள்ளியைச் சேர்ந்த இவற்றை இன்றும் இலங்கை, மயான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் பாதுக்காக்கிறார்கள்.

புத்தரின் அருள்மொழிகள் முதன் முதலாக எப்படி அச்சேறியது?

நானூற்றி எண்பத்துமூன்றில் புத்தரின் மறைவுக்குப் பின், அவரின் சீடர்கள் நாலாபக்கமும் சென்றிருக்கிறார்கள். நதிக்கரையோரமாக இருக்கும் நாடுகளுக்கு ஷேத்ராடனமாக சென்றவர்கள், புத்தரின் கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். குளிர்காலத்தில் மக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதில்லை. மேலும், ஊர் விட்டு ஊர் செல்வதும் சிரமமாக இருந்தது. இதனால், அந்தக் காலங்களில் மட்டும் சீடர்கள் அனைவரும் ஒன்றுகூடுவது; தங்களின் பிரச்சார அனுபவங்களையும், வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்வது; ஓய்வெடுப்பது என்று கழித்து வந்தார்கள்.

புத்தருடன் நேரடியாகப் பழகியவர்கள் புதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் குருகுலம் மாதிரியும் சொல்லிக் கொடுத்தார்கள். புத்தரின் தத்துவங்களை எளிய முறையில் மனனம் செய்வதற்கு வசதியாக ஸ்லோகம் மாதிரி சில செய்யுள்களைக் கற்பிக்க ஆரம்பித்தார்கள். மந்திரங்களை பாடலாக்கி திரும்பத் திரும்ப பாட வைப்பதால் மனதில் பதிய வைத்தார்கள்.

புத்தரின் நேரடி சொற்பொழிவுகளையும் பலவிதமான கருத்தாக்கங்களையும் அவற்றைக் கடைபிடிப்பதற்கான நியமங்களையும் குருகுலத்தில் இருப்பதற்கான விதிமுறைகளும் இப்படித்தான் ஒழுங்கு பெற்றது.

புத்தமொழி

பிற மதங்களில் பிறந்தவர்கள் ஏன் பௌத்தத்தைத் தழுவ வேண்டும்?

தங்கள் மதத்தின் கொள்கைகளில் தெளிவு கிடைக்காததுதான் முக்கிய காரணம். ஞானத்தையும் அறிவையும் முக்தியையும் தேடுபவர்களுக்கு மதங்கள் முட்டுக்கட்டைப் போடலாம். இதனால் உள்ளத்தின் ஆர்ப்பரிப்பு அதிகரிக்கிறது.

எதிர்க்கேள்வி கேட்பவர்களை மதத்தின் உயர்ந்த போதகர்கள் கட்டுப்படுத்தலாம். அல்லது விளக்கம் தரமுடியாததால் 'பெரியோர்களின் வழிகாட்டல்; கடவுளின் கட்டளை; சாஸ்திரீய விதி' என்று மட்டுப்படுத்தலம். தங்களாலேயே ஒழுங்காக புரிந்து கொள்ளாத ஒன்றை மற்றவர்களுக்கு எப்படி விரித்துரைக்க முடியும்?

இந்தத் தேடல் கொண்டவர்களுக்கு நம்பிக்கையின்மை பிறக்கிறது. தங்கள் நம்பிக்கைகளின் மேல் குழப்பம் எழுகிறது. புத்தரின் எளிய சித்தாந்தங்கள் ஆர்வத்தைக் கொடுக்கும். கலாசார ரீதியிலான வழிமுறைகள் தற்காலத்திற்கு ஏற்றதாக அமைகிறது. நவீன யுகத்திற்கு ஏற்ப பௌத்தம் மாறிக் கொண்டே வருவதும் பௌத்தத்தின் அடிப்படைகளில் ஒன்று.

இந்த வாரப் பதிவுகளுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:

1.  How to Practice : The Way to a Meaningful Life by The Dalai Lama, Jeffrey Hopkins

2. The Dalai Lama's Book of Wisdom by Dalai Lama

 

oooOOooo
[ பாகம் : 4 ]

'ஆசை துறந்த புத்தர் கூட
 துறவியாக ஆசைப்பட்டார்
துறந்தபிறகும் ஆசை
 அவரை விட்டுவைக்கவில்லையே!'
(வைரமுத்து :: கனாக் கண்டேன் - 'அய்யா ராமையா' பாடலில்)

பௌத்தத்தில் பல பிரிவுகள் இருக்கிறது. ஒவ்வொரு பிரிவின் நம்பிக்கைகளிலும் சில வித்தியாசங்கள் உண்டு.

இலங்கை, பர்மா, தாய்லந்து மற்றும் கம்போடியாவில் தெரவாடா புத்தம் பின்பற்றப்ப்படுகிறது. துறவிமடக் கொள்கைகளைக் கொண்டவர்கள் தெரவாடா என்று அழைக்கப்படுகிறார்கள். ஆதிகால பௌத்தத்தை நேரடியாக கடைபிடிப்பதில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். துறவு பூணுவதின் மூலம் முக்தி கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார்கள். கௌதம புத்தரைத் தவிர வெகு சிலரையே புத்தராக எண்ணுகிறார்கள்.

கடுமையான தவங்களின் மூலமும் சுகபோகங்களைத் துறப்பதன் மூலமும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். இதன் அடுத்த படியாக அவரால் அற்புதங்கள் நிகழ்த்த இயலும். பல பிறப்புகளில் இப்படி கடுந்தவம் புரிவதால் ஒருவர் 'புத்த'ராக முடிகிறது. இந்த நிலையை அடைந்தவரால் கடவுளுடன் பேச முடியும். பக்தர்களை சொர்க்கத்துக்கு அனுப்பலாம். சில சீனப் படங்களில் வருவது போல் பறவையாகிப் பறக்கலாம். ரத்தபீஜனைப் போல் எண்ணற்ற அணுப்பிளவுகளின் மூலம் விருத்தி செய்வார். மருத்துவர்களால் குணப் படுத்த இயலாதவர்களின் பிணிகளைப் போக்கமுடியும். கூடு விட்டு கூடு பாயலாம். சுருக்கமாக, கற்பனைக்கு எட்டாத சக்திகளைப் படைத்தவர்.

அவரின் சமாதியான பூதவுடலும் சக்தி வாய்ந்ததே.

சாதாரண மனிதனாகப் பிறந்த கௌதமர், தவ வலிமையினால் அவதார புருஷன் புத்தராக மாறியுள்ளதாக 'தெவராடா' நம்புகிறது. பக்தர்களின் குறைகளைக் கேட்க பெரிய காதுகள், புருஷ லட்சணங்கள், ஜாதகத்தில் உயரியதாக சொல்லப்படும் உடற்குறிகள் என்று புத்தர் சிலை காணக் கிடைக்கிறது. புத்தரின் பாதங்களை மட்டுமே பெரிதாக வடிவமைத்துத் தொழும் வழக்கம் உள்ளவர்கள். புத்தரை சிலைக்குள் அடக்கி வைப்பது கஷ்டம் என்பதால், போதி மரம், தர்மசக்கரம் போன்வற்றையும் புனிதமாகக் கருதி வழிபடுகிறார்கள்.

கிழக்காசியா, சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாமில் இரண்டாவது விதமான பௌத்தம் காணக் கிடைக்கிறது. கத்தோலிக்க கிறித்துவர்கள் யேசுவை உணர்வது போல் இவர்கள் புத்தரைப் பார்க்கிறார்கள். நம்பிக்கையோடு எதிர்நோக்குபவருக்கு துன்பத்தில் இருந்து புத்தர் மீட்பார் என்பது இவர்களின் கருத்து. இவர்களிடையே இருக்கும் புத்தர்களிலேயே பலவகை இருக்கிறார்கள்.

தொழும் அனைவரையும் சம்சார பந்தங்களிலிருந்து விடுவிப்பவர் 'அமிர்த புத்தர்'. வாழ்க்கையை அமிர்தமாக சுவைத்து மகிழ வைக்கும் இவர் சுகவதி என்னும் இடத்தில் வசிப்பவர்.

தீராப்பிணிகளையும் நொடியில் குணமாக்குபவர் 'பைஷஜ்ய குரு' புத்தர்.

அகில உலகங்களுக்கும் ஆதார தெய்வமாக விளங்குபவர் 'வைரோசன' புத்தர்.

Akshobhya Budha தூய்மையான எண்ணங்களை மேலோங்கச் செய்துத் தீமைகளை சுடுபவர் 'அக்ஷோபிய' புத்தர். இன்பத்தின் தோற்றுவாயான அபீரதி என்னும் இடத்தை உறைவிடமாகக் கொண்டவர்.

புத்தரைக் கண்ணால் காண்பது இங்கு கடினம். அகிலமெங்கும் நிறைந்திருப்பவராக புத்தர் கருதப்படுகிறார். ஆதியில் இருந்த புத்தரின் ஜ்வாலைகள் உலகெங்கும் தெறித்து விழுந்து, அவை பல போதிசத்வர்களிடமும் உட்புகுந்திருக்கிறது. அவற்றை உணர வேண்டுமானால், ஆழ்நிலை உணர்தலினாலே மட்டும் முடியும். அவற்றைப் புரிந்துகொள்ளும் அந்த நிலைகளில், இவர்களும் புத்தத்தை அடைவதாக சொல்லப்படுகிறது.

மூன்றாவது புத்தக் கொள்கைகள் திபெத், மங்கோலியா மற்றும் ஜப்பானில் இருக்கிறது. தாந்திரீக பௌத்தம் என்று இதை வகைப்படுத்தலாம். புத்தர் காலச்சக்கரத்தில் சுழன்று இன்றும் நம்மிடையே உலாவுவதாக இவர்கள் நம்புகிறார்கள். ஜகதீஷ் சந்திரபோஸ் சொன்னது போல் தாவரங்களிலும் புத்தர் இருப்பதாக உணர்கிறார்கள். அணுவுக்குள் அணுவாய் தூணிலிருந்து துரும்பு வரை புத்தர் வியாபித்திருக்கிறார்.

'அன்பே சிவம்' படத்தில் வரும் வசனம் போல் 'நீயும் கடவுள்... ஏனென்றால் நானும் கடவும்' என்பது போல் உலகத்து உயிர்கள் அனைவரிலும் புத்தரைப் பார்க்கிறார்கள். தனக்குள்ளே தூங்கிக் கிடக்கும் குண்டலினியைத் தட்டி எழுப்பவர்கள், தாந்திரீக முறைப்படி புத்தத்தை அடைவது குறிக்கோள். திபெத்தில் இந்த யோக சக்தி பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது.

கனவுலோகங்களில் சஞ்சரிப்பது, இறப்பை வெல்வது, சாகாநிலை போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கிருக்கும் புத்தர் சிலைகள் பலவிதமாக வடிவம் கொண்டிருக்கிறது. பல தலை கொண்ட புத்தர்களுடன் மகிஷாசுரமர்த்தினி போன்ற பலகை கால்களுடனும் இருக்கிறார்கள்.

தெரவாடாவில் புத்த நிலையை அடைதல் எளிது. ஆனால், அனைவருக்கும் புத்தத் தன்மையை அடைவது குறிக்கோள் அல்ல. வெகு சிலரால் மட்டுமே ஜென்ம ஜென்மங்களாக தன்னலம் கருதாத அன்பு, தியாகம் போன்ற குணங்களால் கிடைக்க வல்லது. வழிபாடு, நன்றி தெரிவித்தல், அமைதிப்படுத்திக் கொள்ளல், இழப்பீடு செய்தல் என்று பல நிலைகளைக் கடந்தால் புத்தம் சித்திக்கும்.

இரண்டாவதில் மனிதனாக வாழும்போது புத்தனாவது இயலாத காரியம். 'நிர்வாணம்' என்பது வெறுமனே உள்ளத்தின் உயர்வோ அல்லது ஞானநிலையோ அல்ல. புத்தர் என்பவர் தெய்வம். அவரைச் சுற்றி கல்யாண குணங்கள் நிறைந்த போதிசத்வர்கள் இருப்பார்கள். அவர்களை வணங்கி மேம்படுவதே இங்கு செல்வழியாகக் காட்டப்படுகிறது.

கடைசியாக தாந்திரீகத்தில் மற்றவர்களின் துன்பங்களை தனதாகக் கருதி, அவற்றை அகல முற்படுபவன் புத்த நிலையை அடைவான். அவனுக்கு மாயங்கள் எளிதில் கைகூடும். சித்திகளை செய்ய வல்லவன் ஆவான். தீய சக்திகளை அழிப்பதற்காக சூப்பர் ஹீரோ சக்திகளையும் பிரயோகிப்பார்கள். சுருக்கமாக 'நல்லவனுக்கு நல்லவன்'.

புத்தமொழி

வாழ்க்கையில் எனக்கு வேண்டியதையெல்லாம் பௌத்தம் கொடுக்கவல்லதா ?

உங்களுக்கு எது வேண்டும்? எது உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும்? எது மனநிறைவைத் தரும்?

உங்களின் தேவை என்ன என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதியதை ஒரு தடவைக்கு இரு தடவையாக சரி பாருங்கள். வாழ்நாள் முழுக்க திருப்தியைத் தர அவை மட்டுமே போதுமானதாக இருக்க வேண்டும்.

நம்மில் வெகு சிலரே, நமக்கு அவசியமான தேவைகளை தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறோம். நம்முடைய பற்றாக்குறைகளை நம்மால் எளிதில் பட்டியல் போட முடியும். குறைகளை சுளுவாக எண்ணமுடியும். இல்லாதவற்றை சொல்லுதல் அனைவராலும் முடியும்.

'இது இருந்தால் நல்லாருக்கும்; அது கிடைத்தாலும் சௌகரியமே' என்று அலைபாய்வதை விட்டுவிட்டு, குழப்பமில்லாமல் அத்தியாவசியமானவற்றை சொல்லிப் பாருங்கள்.

அது மற்றவருக்கு சொந்தமானதா? நிச்சயமாக அடையமுடியாததா? கிடைக்க இயலாத பொருட்களுக்கு ஆசைப்பட்டால் என்ன செய்வோம்? என்ன வேண்டும் என்றே சரியாகத் தெரியாவிட்டால், அவற்றை எப்படி அடைவது? எதை குறித்தும் ஆசை வைக்காமலிருப்பதுதான் லட்சியமா?

எல்லாவற்றிற்குமான எளிய விடை: உங்களுக்கு எது முக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களின் தேவை எது என்று அறிந்தவுடன் அதற்கான முயற்சியில் இறங்கலாம். குறிக்கோளுக்குக் குறுக்கே நிற்பதையும் அவசியமில்லாதவையும் அப்போது ஒதுங்கிக் கொள்ளும். பயணத்திற்கு உதவும் அனைத்தும் பிடிபடும். மனதுக்குப் பிடித்தமானதை செய்யச் செய்ய உள்ளத்தில் உற்சாகமும் பொங்கும்.

பௌத்தம் நிலையாமையை எடுத்து வைக்கிறது. பொருட்களின் மேல் சார்ந்து இராத வாழ்க்கையை முன்வைக்கிறது. சுயத்தை விட மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புத்தம் புரிந்தால் அனைத்து பாக்கியங்களுடன் சுகவாழ்வு கிடைத்து விடுகிறது.

கிடைத்ததற்கு ஆசைப்படு என்பது இன்னொரு பார்வை.

ஆனால், நமக்குக் கிடைத்த வாழ்க்கையோடு திருப்திப்பட்டுக் கொள்வதைவிட, நமக்கு என்ன விருப்பம் என்ரு அறிந்து வைத்துக் கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

oooOOooo
[ பாகம் : 5 ]

"பவுத்தம் இறப்புக்குப் பின் ஏதும் இருப்பதாகக் கருதவில்லை. அந்தச் சிந்தனை வீண் என்பது எங்கள் முடிவு. பவுத்தம் வாழ்க்கையைக் குறித்துப் பேசுகிற ஒரு தத்துவம். கடவுளோடும் ஆன்மாவோடும் இதற்குத் தொடர்பில்லை. மரணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்து தம்மத்துக்கு உறவில்லை.  புத்த தர்மத்தின் மையம், மனிதன் தான். மனிதன் என்றால் மானிட வாழ்வு. சீரான, சிறப்பான வாழ்வு. ஒழுக்கத்தின் மீது கட்டப்பட்ட நியதிமிக்க வாழ்வு. பிறப்பையும் இறப்பையும் இரு எல்லைக்கோடுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். நாங்கள் இடைப்பட்ட வாழ்க்கையை மட்டுமே பார்க்கிறோம். அதன் விவரிப்புக்கு அப்பாற்பட்ட எழிலைப் பார்க்கிறோம். வாழ்வில் எதிர்ப்படும் அத்தனை துன்பங்களிலிருந்து விடுதலை. இதுதான் தம்மத்தின் பாதை. அறிய முடியாத, அறியவேண்டாத மரணத்தைக் குறித்தும் ன்மாவைக்குறித்தும் சிந்திப்பதைக்காட்டிலும் பிரத்தியட்சமான வாழ்க்கைக்கு இன்னும் கொஞ்சம் அர்த்தம் கூட்டலாம் அல்லவா? புரிந்துகொள்ளுங்கள். பிரத்தியட்சம் தான் சரியான அறிதல் முறை." அலகில்லா விளையாட்டு  - பா ராகவன்

இந்தக் காலத்தில் நண்பர்களிடையே பேராதரவு பெற்ற பெயராக இருப்பது 'சித்தார்த்'. இரண்டாயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பெயர் குழந்தைக்கு சூட்டப் பெற்றிருக்கிறது. கிறித்துவுக்கு முன் 563-ஆம் ஆண்டில் சித்தார்த்த கௌதமர் பிறந்திருக்கிறார்.

இமாலயம் இந்தியாவில் வியாபித்திருந்தாலும், உயரமான எவரெஸ்ட் நேபாளத்தில்தான் இருக்கிறது. புத்தர் அவதரித்த கபிலவஸ்து நகரமும் நேபாளத்தில்தான் இருந்திருக்கிறது. ஆனால், லும்பினியும் கபிலவஸ்துவும் தற்கால ஒரிஸ்ஸாவில் இருந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். அசோகரின் காலம் வரை புத்தரின் பிறப்பை எவரும் ஆவணப்படுத்தவில்லை.

ஹ¥ன் சாங் (Hiuen Tsiang) போன்றவர்கள் புத்தரின் வரலாறை ஆராய வந்தபோது கலிங்கத்தில் சைவர்களின் கை மேலோங்கி இருந்தது. 'புத்தர் இங்குதானே பிறந்தார்? புத்த ஜென்ம பூமியில் கோவிலை இடித்து விட்டு புத்த விஹாரம் நான் அமைக்கவா?' என்று ஹ¥ன் சாங் கேட்டிருந்தால், பயணக் குறிப்புகளை எழுதி முடித்திருக்க மாட்டார்.

இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் (Archeological Survey of India) வெளியிட்ட நூலின் படி 'கபில' முனி ஸ்தாபித்த கபிலேஸ்வர லிங்கத்தை, புத்தரின் தந்தையார் ஆராதித்திருக்கிறார். கபிலேஸ்வர் கோவிலில் அர்ச்சர்களாக இருக்கக் கூடியவர்களாக, கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்த பார்ப்பனர்கள் இருந்தார்கள். புத்தரின் முக்திக்குப் பிறகு, இந்தப் பகுதியில் வசித்த  'மல்லையா'க்கள், கௌதமரின் நினைவாக ஸ்தூபியை எழுப்பினார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் ஸ்தூபி அழிக்கப்பட்டு, சிவன் கோவிலாக மாறியுள்ளது. முன்பு அர்ச்சகர்களாக இருந்த சாக்கியர்கள், மடப்பள்ளியில் சமையற்காரர்களாகிறார்கள்.

புத்தரின் சொற்பொழிவுகள் பாலி மொழியில் இருக்கிறது. ஒரிஸ்ஸாவில் அப்போது பாலி மொழிதான் உபயோகத்தில் இருந்திருக்கிறது. ஆறாவது நூற்றாண்டு வரை நேபாளத்தில் பௌத்தம் பரவ ஆரம்பிக்கவில்லை. என்றாலும், பாடலிபுத்ரம், உருவேலா போன்ற புத்தருக்கு நெருக்கமான இடமாக நேபாளத்தின் கபிலவஸ்து அமைந்திருக்கிறது. சென்னை அசோக் நகரில் இருக்கும் 'அசோக் பில்லர்' போல் அங்கும் தொன்மையான தம்ம சக்கரத்தை நிறுவியுள்ளனர்.

(நேபாளத்திலோ ஒரிஸ்ஸாவிலோ இருக்கும்) கபிலவஸ்து நகரத்தின் பணக்கார ஜமீந்தார் சிம்மஹணு. கலிங்க ராஜாங்கத்துக்கு கப்பம் கட்டும் பகுதியாக கபிலவஸ்து இருந்தது. சிம்மஹணுவுக்கு பெரிய குடும்பம். சுத்தோதனர், சுல்லோதனர், தோதோதனர், அமிதோதனர், மிதோதனர் என்று பஞ்ச பாண்டவர்கள் போல் ஐந்து ஆண்கள். இரண்டு பெண்கள்: அமிதை மற்றும் பிரமிதை.

சிம்மஹணுவின் காலத்திற்குப் பிறகு சுத்தோதனர் கையில் குட்டி ராஜங்கம் வருகிறது. அரசகுல தாராளப்படி இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவியான மஹாமாயா தேவிக்கு சித்தார்த்தன் பிறக்கிறார்.

இரண்டாவது இளைய மனைவி பிரஜாபதி கௌதமிக்கு (தமிழ் ஹீரோயின்களுக்கு நல்ல பெயராகத்தான் சூட்டுகிறார்கள்) நந்தனும் நந்தையும் மகன் மற்றும் மகள்.

யேசு அவதரிப்பதற்கு முன் அறிவிப்புகள் வந்திருக்கிறது. கண்ணன் பிறப்பதற்கு முன் எச்சரிக்கைகள் போயிருக்கிறது. புத்தர் கருத்தரிப்பதற்கு முன்னும் பிறப்பின் போதும் பல்வேறு அற்புதங்களும் நிகழ்வுகளும் நடந்ததாக புராணங்கள் விவரித்திருக்கிறது.

புத்தமொழி

பௌத்தத்தில் பெருந்தன்மைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

பெருந்தன்மை என்பதன் மூலம் புத்தர் என்ன சொல்ல வருகிறார்? நாம் தாராள மனம் கொண்டிருப்பதால் அடுத்தவருக்கு என்ன நன்மை? நமக்கு அதனால் என்ன லாபம்? தயாள குணத்துடன் விளங்குவதற்கு ஏன் முயற்சிக்க வேண்டும்? நாம் ஒன்றும் முற்றும் துறந்த துறவி இல்லையே.

நம்மை விட வசதி குறைந்தவர்களுக்கு ஈகை செய்வது மட்டும் பெருந்தன்மை ஆகாது. அது ஒருவிதமான மனநிலை. கையில் தம்பிடி இல்லாதபோதும் உள்ளத்தில் தாராளமாக பரோபகார நினைவுகளை நிரப்பியிருக்கலாம்.

பிறரை குறித்து காழ்ப்புணர்ச்சி கொள்கிறோம். அவர்களின் ஒவ்வொரு செய்கைக்கும் உள்ளர்த்தத்தை கற்பிக்கிறோம். சுயநலனுக்காகவே வாழ்வதாக ஐயமுறுகிறோம். நின்றால், நடந்தால், உட்கார்ந்தால் குறை கூறி விமர்சனங்களை முன் வைக்கிறோம். மற்றவர்களின் முயற்சியை ஏளனம் செய்து, குறிக்கோள்களை நாசமாக்குகிறோம். எல்லாவற்றிலும் குற்றங்களை மட்டுமே கெக்கலிக்கிறோம்.

இவற்றை நிறுத்தி வைத்து நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள்:

அது உண்மையா?
அது பண்பானதா?
அது தேவையா?

உண்மை என்பதற்காக உரக்க சத்தம் போட்டு பறை போடுவது தேவையற்றது. அப்படி அவசியமானதுதான் என்றாலும், நமது நோக்கங்கள் அப்பழுக்கற்றதாக இருக்கிறதா? அதை விளம்புவதால் என்ன எதிர்வினைகள் கிடைக்கப் போகிறது? யாருக்காவது உதவுமா? கேட்பவர்களையும் பேசுபவர்களையும் பாதிக்காமல் சொல்கிறோமா?

நம் தூண்டுதல்கள் தூய்மையாக இருந்தால் பிறரை நோகடிக்க மாட்டோம்

இந்த வாரப் பதிவுகளுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:

1. Buddhism: Its Essence and Development by Edward Conze

2. The Life of Buddha in Legend and History by EJ Thomas

3. Buddha: The Quest for Serenity by George N Marshall

oooOOooo
[ பாகம் : 6 ]


பருவ காலம் ஆறு :: தமிழாகரர் தே.முருகசாமி

சித்திரைவை காசி என்றால்
சீரிள வேனில் காலம்!
முத்திரை பதித்துக் கொண்டு
முழுமையாய்த் தென்றல் வீசும்!

ஆனியுடன் ஆடி என்றால்
ஆகும்முது வேனில் காலம்!
வேனிலின் உச்சம் காட்ட
உயர்வெய்யில் அடிக்குந் தானே!

ஆவணி புரட்டாசிக்கு,
ஆரம்பம் கார்கா லந்தான்!
தாவிடும் மேகம் மெல்ல
தவழ்ந்திடும் கடல் நீர் கொள்ள!

ஐப்பசி கார்த்திகை என்றால்
அடித்திடும் கூதிர் காலம்!
அஞ்சியே நடுங்கு மாறு
அடைமழை கொட்டுந் தானே!

மார்கழி தைமா தத்தில்
மண்டியிடும் முன்பனிக் காலம்!
மாலையில் தொடங்கும் பனிதான்
காலைவரை நீடிக் கும்மே!

மாசியுடன் பங்குனி மாதம்
மன்னிடும் பின்பனிக் காலம்!
வாசியாய்அதி காலை வேளை
வாட்டிடும் பனிதான் அந்தோ!


கோடை காலம் என்பது குளிர்காலத்தை அனுபவித்தவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியும். அதுவும் பனி பொழிந்து மிரட்டும் வடக்கு இந்தியாவில் கோடை காலத்தை ஆர்வத்துடன் வரவேற்பார்கள். உடம்பை சுற்றி நான்கைந்து சுற்று ஆடைகள் தரிக்க வேண்டாம். பனிக்கட்டிகள் காலை வழுக்கி இடுப்பை ஒடிக்காது. கடற்கரை நீரிலும் ஏரிகளிலும் குளித்து மகிழலாம்.

கபிலவஸ்து நகரத்தில் ஆண்டுதோறும் ஆஷாட விழா என்னும் பெயரில் வேனிற்காலத்தை வரவேற்றார்கள். ஆறு நாட்களுக்கு ஊரே அன்றாட அலுவல்களை மூட்டை கட்டிவிட்டு, கொண்டாட்டங்களில் திளைக்கும். சிறப்பு தள்ளுபடி விற்பனைகளில் பொருட்களையும் புத்தாடைகளையும் வாங்கி, வித்தியாசமான உணவு வகைகளை உட்கொண்டு, விடுமுறைகளைக் கழித்திருக்கிறார்கள். சுத்தோதன அரசரும் அரசவையிலே புதிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். சர்க்கஸ், கழைக்கூத்தாடிகள், பொம்மலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை அரசவையிலே அமைச்சர், சேனைத் தலைவர்கள் புடை சூழ மக்களும் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

கடைசி நாளான ஏழாவது தினத்தன்று ஆஷாட பௌர்ணமி. அரசரும் மாயாதேவி அரசியாரும் மகிழ்ந்து இன்புற்றிருந்ததில் சித்தார்த்தன் கருவானான். உடமபையும் உள்ளத்தையும் தூய்மையாக்கும் அஷ்டாங்க சீலம் நோன்பின் இறுதி நாள் இதுதான்.

யமம் (நீதி நெறிகள்), நியமம் (ஆத்ம சுத்தி), ஆசனங்கள், பிரணாயமம் (ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள்), ப்ரத்யாஹரம் (புலன்களை அடக்கியாளுதல்), தாரணம் (ஒருமுனைப் படுத்தல்), தியானம், சமாதி (தீர்க்கமான சிந்தனை) ஆகிய எட்டு யோகங்களை உள்ளடக்கியது அஷ்டாங்க சீல பூஜை.

முதல் நான்கின் மூலம் உடலுக்கும் பின் பாதி நான்கின் மூலம் உள்ளத்தையும் தூய்மையாக்கும் நோன்பை அரசியார் நோற்றார். விடியற்காலையில் கனவொன்றைக் கண்டார்.

இந்திரனுக்கு திருதராட்டிரன், விரூபாக்கண், விரூளாஷன், வைசிரவணன் என்று நான்கு திக்பாலர்கள். அவர்கள் நால்வரும் மாயாதேவியைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு போகிறார்கள். இமாலயத்தில் இருக்கும் மனோசிலை (arsenic disulfide) என்னும் பெரிய பாறையின் மேலே வைக்கிறார்கள். இந்த இடம் தற்போதைய காம்ஸ் பகுதியை சார்ந்தது. கிழக்கு திபெத்தில் ஆரம்பித்து மேற்கு சைனாவின் சிஷ¤வான் (Sichuan) மாகாணம் வரை அமைந்திருக்கும் நிலப்பரப்பை குறிக்கிறது.

சால மரத்தின் (Shorea robusta) கீழ் வைத்து விட்டு திக்பாலர்கள் சென்று விடுகிறார்கள். திருமாலுக்கு உகந்ததாகவும் விஷ்ணுவின் வடிவமாகவும் சொல்லப்படும் சாலிகிராமம் இந்த மரத்தினால் கிடைக்கிறது. 'ஷாலி' என்றால் தலைவனைக் குறிக்கும். பிரும்ம புராணத்திலும் வராஹ புராணத்திலும் விஷ்ணு புராணங்களிலும் சால மரம் இடம்பிடிக்கிறது. சால மரத்தின் கீழ் தவம் புரிந்த விஸ்வாமித்திரருக்கு வரம் கொடுக்க வந்த பெருமாள், சால மரமே தன்னைக் குறிப்பதாக சொல்லியிருக்கிறார்.

நான்கு திக்பாலர்களின் மனைவிகள் மாயாதேவியை அநுவதப்தம் ஏரியில் குளிக்க அழைத்துச் செல்கிறார்கள். புத்தாடைகள், வாசனாதி திரவியங்கள், நறுமலர்மாலைகள் அணிவிக்கிறார்கள்.

அங்கிருந்து வெள்ளிப் பாறைக்கு அழைத்துச் சென்று, பொன்னால் கட்டப்பட்ட மாளிகையில் விடுகிறார்கள். அங்கிருக்கும் கட்டிலில் மேற்கு நோக்கி தலையை வைத்துப் படுக்க வைக்கிறார்கள்.

பொன் பாறை என்று அருகில் தெரிந்த வேறொரு இடத்தில் வெள்ளை யானையின் குட்டி ஒன்று உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த யானைக்குட்டி வடப்புறமாக மாயாதேவி தூங்கிக் கொண்டிருக்கும் வெள்ளிப் பாறையை வந்தடைகிறது. தும்பிக்கையிலே வெண்தாமரைப் பூவைக் வைத்திருக்கிறது. பிளிறிக்கொண்டே மாயாதேவியின் கட்டிலை நோக்கி வந்து விட்டது. மூன்று முறை அரசியை சுற்றிவிட்டு, வலப்பக்கத்தில் இருந்து அவரின் வயிற்றுக்குள் புகுந்திருக்கிறது.

யானை வயிற்றுக்குள் போன அதிர்ச்சியில் கண் விழிக்கிறார் மாயாதேவி. சுத்தோதன அரசரிடம் கனவைப் பகிர்ந்து கொள்கிறார். சான்றோர்களையும் மருத்துவர்களையும் வேதவிற்பனர்களையும் கொண்ட அறுபத்து நால்வரை அரசர் அழைக்கிறார்.

போதி சத்துவர் தான் இருந்த துடிதலோகத்தை விட்டு இறங்கி வந்து அரசியின் வயிற்றில் கருவாக ஆனதை அறிஞர்கள் சொல்கிறார்கள். புத்த ஞானம் பெற்று புத்தராக ஆகப் போவதையும் துறவறத்தை மேற்கொள்ளப் போவதையும் கணிக்கிறார்கள்.

புத்தர் பிறந்ததும் வித்தியாசமான இடத்தில்தான். அந்த இடத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.


புத்தமொழி

புத்தர் மாதிரியே ஞானத்தை அடைவது எப்படி?

முக்தியை அடையத்தான் புத்தரை பின்பற்றுகிறோம். புத்தரைப் போலவே ஞானம் அடைவது அனைவரின் வேட்கையாக இருக்கும்.

கற்க வேண்டிய ஸ்லோகங்களை மனனம் செய்தல், யாராலும் முடியும். எவராலும் புத்தர் சொன்ன எட்டுவழிப் பாதையை வேதமாகக் கொள்ள இயலும். ஏது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாதது என்பதை அறிந்து, கடமையென அவற்றை பின்பற்றுவது அனைவராலும் முடியும்.

அறியாமையை அகற்றுவது என்றால் என்ன?

வாழ்வையும் மரணத்தையும் பற்றிய ஆதாரமான அடிப்படைகளை புறத்தே நின்று பார்க்கும் பார்வையாளரைப் போன்று நோக்காது, அவைகளைப் பற்றிய தீர்வுகளைக் காணும் பொறுப்போடு எண்ணுவது எனக் கொள்ளலாம்.

எதிர்காலத்திற்காக நாம் தேர்ந்தெடுப்பதைக் கொண்டு நாம் நம்மை நேரடியாக உருவாக்கிக் கொள்கிறோம். எப்பொழுதெல்லாம் நாம் சுதந்திரமாக வாழ்க்கைப் பாதையை வழிவகுக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் ஆதிக்கத்தை வெற்றி கொண்டு நம்முள் இருக்கும் நிலைப்பேருணமையை உறுதி செய்கிறோம். புறச்சார்பற்றுத் தன்னுரிமையோடு தேர்ந்தெடுத்தல், அடிமைத்தளையினின்று விடுதலை பெறுதலாகும்.

அது கடந்த காலத்தோடு கொண்டிருக்கும் தொடர்ச்சியல்ல. கூட்டத்தை விட்டு வெளியே நின்றுகொண்டு, தனக்காக தானிருந்து, ஆக்கபூர்வமான செயல் நோக்கமும் கொண்டு, தன்னைத் தானே மேலும் வளர்த்துக் கொள்ளுதல் - அறியாமையை அகற்றுவதாகும்.

ழான் பால் சார்டரைப் (Jean-Paul Sartre) பொருத்தவரையில், பொருளுலகில் இருந்து மானுடம் துல்லிதமாக வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. தனக்குள்ளே அடங்கிப் போகும் (en-soi) பொருட்களுக்கும், தனக்காக இருக்கும் மனித இனத்திற்கும் (pour-soi) வேறுபாடுகள் இருக்கிறது.

வாழ்வு முன்வைக்கும் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு, இன்னல்களுக்கான மாற்றுப்பதைகளைத் திறம்பட தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஏதோ வாழ்ந்தேன் என்பதற்கு பதிலாக, உயிரின் பயனை உலகுக்கு வழங்க முடியும்.

என்ன படிப்பு படிக்கலாம் என்று முடிவெடுத்தல், காதல் போராட்டத்தில் சோர்வடையாதிருத்தல், சமூகத்தில் திடீரென்று நிகழும் பேரழிவுகளை எதிர்கொள்ளுதல், தன்னுடைய மரணம் ஆகிய வாழ்க்கை மாற்றங்கள் நிகழும்போது, தனிப்பட்ட மனிதன் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் மனப்பான்மை உளதாயிருத்தலாகும். வாழ்வென்பது இறப்பில் முடிந்து விடுகிறது. ஆனால், அறியாமையை அகற்றும் உளதாயிருத்தல் (existence) என்றுமே மரணிக்காமல் தொடர் பயணமாகிறது.

பெரியாரின் கொள்கைகளும், சாய்பாபாவின் பிரச்சாரங்களும் பின் தெடர்ந்து செல்லப்படுகிறது; சிலருக்கு அவை நேர்மை தவறி மறக்கடிக்கப்பட்டதாக தோன்றலாம்.

அறிந்து கொள்வதால் மட்டுமே அறியாமை அகன்று விடாது. அது எண்ணங்களின் கோர்வை. அது அறிவோடு மாத்திரம் தொடர்புடையதாக இல்லாமல், தனி மனிதப் பண்பியல்களோடுத் தொடர்புடையது. மனிதன் அந்த நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு, தனதாக ஏற்றுக் கொள்கிறான்.


(இந்த வாரப் பதிவுகளுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:
1. Recovery of Faith "World Perspecitives" by Radhakrishnan. )


 

oooOOooo
[ பாகம் : 7 ]

வணக்கம் இறைவா - சுஜாதா

ஷிந்தோ (ஷிண்டோ என்றும் சொல்வார்கள்) என்பது புராதனமான ஜப்பானிய மதம். இதன் பெயர் ‘ஷின், தூ’ என்னும் சீனமொழிச் சொற்கள் இரண்டிலிருந்து உருவானது. ‘கடவுள்களின் வழிகள்’ என்பது இதன் பொருள். மற்ற மதங்களைப் போல ஷிந்தோவை யாரும் நிறுவவில்லை. இந்த விதத்தில் இது இந்து மதம் போல என்று சொல்லலாம். திருக்குர்ஆன், பைபிள் போல புத்தகங்கள் எதுவும் இதற்குச் சொல்லப்படவில்லை.

Ise Jingu is Shinto's most sacred shrine.ஷிந்தோ பல கடவுள்களைப் பேசுகிறது. அந்தக் கடவுள்களை "காமி" என்கிறார்கள். ஜப்பானில் 84 சதவிகிதத்தினர் ஷிந்தோ, பௌத்தம் ஆகிய இரண்டு மதங்களையும் கடைப்பிடிக்கிறார்கள். புத்தரை ஒரு காமி என்று வர்ணிக்கிறது ஷிந்தோ மதம். நான்கு விஷயங்கள் ஷிந்தோவுக்கு முக்கியம்.

 

1. சம்பிரதாயங்களையும் குடும்பத்தையும் பாராட்டுவது,
2. இயற்கையை நேசிப்பது,
3. அந்தரங்க சுத்தி,
4. "காமி"க்களுக்கும், முன்னோர்களின் ஆவிகளுக்கும் மரியாதை செலுத்துவது.


'புத்தா' என்றால் என்ன அர்த்தம்? புத்தா என்றால் 'விழிப்புணர்வு கூடிய மதிநுட்பம்'. புத்தி இருக்கிறதா என்று கோபத்தில் எரிந்து விழுகிறோம். புத்தா உனக்குள் இருக்கிறதா என்று கேட்டால், திட்டப்படுகிறவரும் அமைதியாகி புன்சிரிப்பை உதிர்க்கலாம்.

மூலவார்த்தையான 'புத்' என்பதற்கு பல பரிமாணங்கள் இருக்கிறது. அது ஒரு கவித்துவமான சம்ஸ்கிருத வார்த்தை. குறைந்தபட்சமாக ஐந்து பொருள்களையாவது 'புத்' என்னும் சொல்லுக்கு உணரலாம்.

முதலாவதாக தன்னைத் தானே விழித்தெழ செய்வது; தூங்காமல் இருந்தால் விழிப்புணர்வை அடைந்து விட்டதாக எண்ணும் கற்பனையை உடைத்தெறிவது என்று கொள்ளலாம். பதினேழு வயதில் என்னிடம் ஒருவர் 'உனக்கு மெட்சூரிடி போதாது' என்றபோது கோபம் வந்தது. இன்று யாராவது சொன்னால், பரிபக்குவம் இன்னும் எய்தவில்லை போலிருக்கிறது என்பதை அறிந்து வைத்திருப்பது 'புத்'.

நான் கண்களை திறந்து வைத்துக் கொண்டு, பரந்த மனதுடன் அனைத்தையும் பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டாலும், அவ்வாறுதான் விழிப்புணர்வுடன் இருக்கிறேன் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. காலையில் வேலைக்காக எழுந்துவிட்டு, குளித்து, உடைமாற்றி, நடக்கும்போது புத்தி விழித்துதான் இருப்பது போல் தோன்றுகிறது. புத்தரை பொருத்தமட்டிலும் இல்லை.

மனத்திற்குள் ஆயிரக்கணக்கான கணக்குகளையும் கனவுகளையும் எண்ணிக்கொண்டிருக்கும் வரை நான் விழிப்படையவில்லை.

எதிர் ப்ளாட்·பாரமில் ரயிலுக்காக நிற்பவள் கிடைத்தால் எப்படியிருக்கும்? இன்று மேனேஜர் என்னுடைய வேலையை பாராட்டினால் நன்றாக இருக்குமே! அடுத்த வாரம் எழுதப்போகும் பரீட்சையில் தெரிந்த கேள்விகளாக வரவேண்டுமே?

கண்கள் திறந்திருக்கிறது. உள்ளளியோ தூக்கத்தில் புதைந்திருக்கிறது. மனக்கண் திறந்திருக்கவில்லை. தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவன் போல் நடந்து கொள்கிறேன் என்கிறார் புத்தர்.

'நான் யார்' என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. மெய்ம்மை நிலையை தரிசிக்க முடியவில்லை. சிந்தனைகள் நிறைந்த புத்தி எவ்வாறு நிர்மலமாக விழிப்புணர்வை அடையமுடியும் என்று வினா எழுப்புகிறார்.

மேகமூட்டம் நிறைந்திருந்தால் சூரியனின் வெப்பத்தை உணர முடியாது. கடுங்குளிரில் கூட மேகமூட்டமான தினம் என்றால் குளிர் மிதமாக இருப்பதை உணரலாம். மூளையில் சூழ்ந்திருக்கும் கருத்துக்களையும் நினைவுகளையும் விலக்கினால்தான் சூரியன் தெரிந்து சுட ஆரம்பிப்பார். நிகழ்வதை உணர்வதே புத்திகூர்மை. கடந்தகாலத்தின் சுவாரசியங்களில் உலாவுவதும், எதிர்காலங்களின் பயங்களைத் துழாவுவதுமே என்னுடைய எண்ணங்களை ரொப்பியிருக்கக் கூடாது.

இறந்தகாலங்களிலும், எதிர் கால நிகழ்வுகளிலும் திளைப்பவன் 'புத்' ஆக முடியாது. இங்கே, இப்பொழுது, இந்த நிமிடத்தை உணர்பவனே யதார்த்தவாதி.

சன் செய்திகளை இரவு ஒன்பது மணிக்கு வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அணைக்க மறந்த அடுப்பு, பற்றிக் கொண்டு வீடு தீப்பிடிக்கிறது. மகளுக்கு ஆபத்து. அனைவரும் வெளியேற வேண்டும். தீயணைப்புப் படையை கூப்பிட வேண்டும்.

நான் முழுவதுமாக விழித்திருக்கிறேன்.

அந்த ஷணத்தில் பழைய திண்ணை அனுபவங்கள் மறந்து போகிறது. முதன் முதலாக காரோட்ட கற்றுக் கொடுத்தபோது 'என்ன வண்டி ஓட்டுகிறாய்' என்று மனைவியை செல்லமாய் சலித்துக் கொண்டது, ஹ¥டர்ஸ் உணவகத்தில் நண்டுகளை விண்டு சுவைக்க கிட்டத்தட்ட மடியில் உட்கார்ந்து கொண்டு கற்றுக் கொடுத்த பரிமாறுபவளையும் மனம் நினைக்க மறுக்கிறது.

வீடு பற்றிக் கொண்டு எரியும்போது, வேறு கனவுகள் இடையூறு செய்வதில்லை. அடுத்த நாள் கொடுக்க வேண்டிய டி.பி.ஆர். ரிபோர்ட், மதிய உணவுக்கு செல்லப்போகும் சைனீஸ் உணவகம் என்பதெல்லாம் பொருட்டாகவே தெரியவில்லை. இந்த விநாடி செய்யவேண்டியவை மட்டுமே முக்கியமாகிப் போனது.

'புத்' என்பதன் முதல் அர்த்தம் இதுதான்.

ஒவ்வொரு மணித்துளியையும் பேராபத்தில் கழிக்கும் தருணமாகக் கருவது. துயிலைக் கலைத்துக் கொள்வது. யதார்த்தத்தை அறிவது.

நெருப்பின் பிடியில் சிக்கியிருப்பதை போல், உத்வேகத்துடன் உண்மைநிலையை நோக்கவேண்டும். விழிப்புடன் நோக்குவதால் நுட்பம் விளங்கும். நுண்ணிய பார்வை விடுதலையை நல்கிறது. நுண்ணிய தரிசனம் பொய்யாபிரஞ்ஞையை புத்தனுக்கு தருகிறது.

மீதம் இருக்கும் நான்கு பொருள்களையும் அடுத்த பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

(இந்த வாரப் பதிவுகளுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:
1. Buddha :: His Life & Teachings by Osho
2. Buddha :: Karen Armstrong. )

oooOOooo
[ பாகம் : 8 ]

மனுஷ்ய வித்யா :: பி.ஏ.கிருஷ்ணன் - பௌத்தத்தின் கொள்கைகளை கீதையை எழுதியவர்கள் அறிந்திருக்கலாம் என்பதற்கு கீதையிலேயே ஆதாரம் இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் உபநிடதங்களில் பிரகதாரண்யக உபநிடதம், சாந்தோக்கிய உபநிடதம் போன்றவை (உரைநடை உபநிடதங்கள்) புத்தர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்டவை. உதாரணமாக ஆன்ட்ரூ ஸ்கில்டன் என்ற புத்த மதத்தைத் தழுவிய ஆங்கிலேயர் தன்னுடைய A Concise History of Buddhism என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: Shortly before the time of Buddha himself, the earliest prose Upanishads were compiled. புத்தர் மூலமே இல்லாமல் முளைத்தெழுந்த முதற் கிழங்கு அல்ல. ரோமிலா தாபர் தன்னுடைய Early India என்ன்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: The Buddha's teaching was partially a response to the discourse of the early Upanishads, agreeing with some ideas and disagreeing with others.


புத்தர் பிறக்கப்போகும் வித்தியாசமான  இடத்தை குறியீடுகளால் சொல்லும் புத்த சரித்திரத்தை பார்ப்போம்.

Buddhaமாயாதேவி குழந்தைப்பேறுக்காக பிறந்த வீட்டுக்கு கிளம்பினார். கபிலவஸ்து நகரத்தில் இருந்து மாமனார் வீடு இருக்கும் தேவதகா நகரம் வரையில் புது சாலைகள் போடப்பட்டது. வழியெங்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்காக பேனர் கட்டப்படுவது போல் அலங்காரம் செய்தார்கள். முதலமைச்சரின் முன்னும் பின்னும் கறுப்பு பூனை, சக அமைச்சர்கள், காரியதரிசிகள், வட்டார செயலாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், எம்.எல்.சி.க்கள் என்று புடைசூழ வருவது போல், ராணியின் தோழியரும் ஏவல் மகளிரும் பரிவாரங்களும் மெய்க்காப்பாளர்களும் அமைச்சரும் அணிவகுத்து உடன் சென்றனர்.

குதிரைகளுக்கு சோர்வு ஏற்பட, தூக்கியவர்களும் சிரம பரிகாரம் செய்து கொள்ள உலும்பினிவனம் சோலையில் இளைப்பாறினார்கள்.

வைசாகப் பௌர்ணமி தினம். ராஜாவும் கூட இல்லாத சுதந்திரம். தோட்டத்தை மாயாதேவி சுற்றிப்பார்த்தார். கடைசியாக சாலமரத்தின் அழகை ரசிப்பதற்காக வந்தார். பூக்களைத் தானே பறிக்க விரும்பி கிளையை எட்டிப் பிடித்தார். அந்தப் பூங்கிளையே அவருக்காக தாழ்ந்து கொடுத்தது.

வேலையே செய்யாத உடம்பு, பூக்காம்பை ஓடித்த வேலையை செய்தவுடன் பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது. குடம் உடைந்து கர்மஜ வாயு சலித்தது. சாலமரத்தின் பூங்கிளையை கையினால் பிடித்துக் கொண்டிருக்க, கிழக்கு திசையை நோக்கி போதிசத்துவர் பிறந்தார்.

போதிசத்வர் அவதாரம் புரிந்தவுடன் 'அநாகாமிக பிரமதேவர்கள்' என்றழைக்கப்படும் நிர்மலமான மனமுடைய நான்கு பேர் சோலையின் கீழே பச்சிளங் குழந்தை விழாமல் பொன் வலைக் கொண்டு பாலகன் புத்தனை ஏந்த உதவினார்கள். வழிப்போக்கர்களாக இவர்களைக் கொள்ளலாம். ராணி என்று நினைத்து ஒதுங்காமலும், உரிய உதவிகளை உவந்து செய்ததாலும் 'அநாகாமிக' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்கள். திருதராட்டிரன், விருபாக்கன், விருளாஷன், வைசிரவணன் என்ற சதுர் மகாராஜிக தேவர்கள் என்று சொல்லப்படும் நான்கு திக்பாலர்களும் அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொண்டு அமைச்சர்களிடத்தில் ஒப்படைத்தார்கள்.


புத்தமொழி

'புத்' என்னும் சொலின் அடுத்த பொருள் கவனித்தல், தெரிந்து கொள்ளுதல், அறிந்ததை அடையாளம் காணுதல். பொய்யை பொய் என்று கண்டு கொண்டவன் புத்தர். அகத்தில் இருந்து சொல்வதை உண்மை என்றும் பகுத்து அறிபவன். பொய்யை கட்டுடைத்து, கண்டுபிடிப்பதன் மூலமே, உண்மைப்பொருளை அறியமுடியும்.

எனது நம்பிக்கைகளுடனேயே கண்மூடியாக வாழ்வை கடத்தக் கூடாது. என்னுடைய மாயை சூழலிலேயே ரசித்து லயித்து விடக்கூடாது. முன்முடிவுகளைத் தீர்மானித்தபின் பற்றற்ற தீர்ப்புகளுக்கான பயணங்களில் ஈடுபடக் கூடாது.

இதுதான் 'புத்' என்னும் வார்த்தைக்கான இரண்டாவது அர்த்தம். போலிகளை கண்டு ஏமாறாமலும், உண்மையானதை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வதும் 'புத்'.

புறத்தே இருக்கும் மெய்ம்மை எளிதில் உணரப்படுகிறது. உண்மையில், இப்பொருளிலேயே தற்போது இதை நான் பயன்படுத்துகிறேன். இரண்டும் இரண்டும் நான்கு என்று எனக்குத் தெரியுமானால், இவ்வறிவு எல்லா தருணங்களிலும் பொருத்தமானதாக இருக்கிறது. ஒரு முறை நான் அறிந்துவிட்டால், அதை நான் மூளையின் ஆழத்தில் போட்டு வைத்திருக்கிறேன். மீண்டும் இந்தக் கணக்குகளை போட்டுப் பார்த்து நேரத்தை வீணடிக்க முயற்சிப்பதில்லை. மனதில் அது ஒரு நம்பத்தக்க பொருளாகிறது. எப்பொழுது தேவையோ, அப்பொழுதெல்லாம் அதை எடுத்து நான் கையாளலாம்.

ஆனால் சமயம் சார்ந்த மெய்ப்பொருள் அத்தகையது அல்ல. மெய்ஞானத்தை ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கைக்கேற்ப புதிப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. என்னுடைய அனுபவங்களை ஊடுருவி சென்று மனப்போராட்டங்களை மீறி உண்மை நிலைநாட்ட வேண்டும்.

ஒரு கற்றறிந்த இறைமையியல் வல்லுநர், அறிவு சார்ந்த இறைமையியலில் உள்ள மெய்ம்மைகல் எனக் கூறப்படும் அமைத்தையும் அறிந்திருக்கலாம். இருப்பினும் இறைவன் அவருள்ளே இறந்து விட்டிருக்கலாம் அல்லது என்றுமே வாழ்ந்திராது இருக்கலாம். ஆனால் பொதுவான இறைமையியலைப் பற்றி ஒன்றுமே தெரியாத கல்வி அறிவற்ற ஒரு குடியானவர், தன்னுடைய கோட்பாடுகளின் தத்துவக் கூறுகளைப் பற்றி கோர்வையாக வாதிட முடியாதவராக, விளக்க முடியாதவராக இருக்கலாம். இருப்பினும் தான் சமயப்பற்றுடன் இருப்பதில் வெற்றி பெற்றவராக இருக்கலாம்.

தனிப்பட்ட மனிதனுக்கு, இறுதியில், மார்க்கம் என்பது சமயத்தோடு ஒன்றி இருத்தலே ஆகும். அவன் மெய்ம்மையில் வாழ்கிறான். மெய்ம்மை காண்பது அடிப்படையில் அறிவோடு தொடர்புடையது அல்ல என்பதாய் இருப்பதால், நடைமுறைகளினாலும், வாழ்க்கைமுறைகளினாலும், ஞானம் அடைந்திருக்கிறானா இல்லையா என்பதைக் காணலாம். சூத்திரங்களைப் பற்றி சாமர்த்தியமாக வாதிப்பதால் அறிவின்பாற்பட்ட மெய்ம்மை மட்டுமே அறியமுடியும்.

'உண்மை என்பது என்ன?' இந்தக் கேள்வி முதல் முறையாக புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டது. இன்றுவரையில் இதற்கு பதில் இல்லை. நாம் காணும் அனைத்தும் உண்மை. ஆனால், 'கண்ணால் காண்பது பொய்' போல் எதுவுமே திட்டவட்டமானதல்ல.

நிகழ்காலம் என்பது மிகமிகத் துல்லியமான ஒரு புள்ளி. அதன் மீது கடந்த காலமும், எதிர்காலமும் முட்டுகிறது. பிறக்காதவரையில் ஒருவருடைய வாழ்க்கை குறைவற்றதாகவும், நிரம்பியும் முழுமையாகவும் இருக்கிறது. வாழ்நாள் என்னும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டவுடன் குறைந்து போகத் தொடங்குகிறது.

எது உண்மை? 'அவர் உயிரோடிருக்கும் மனிதர்' அல்லது 'அவர் இறந்து கொண்டிருக்கும் மனிதர்'?

மனிதனின் புலன்களாலும் அறிவாலும் அடையும் முன்னேற்றத்தைப் பொருத்தே உண்மை அமைந்திருக்கிறது. உண்மை என்று மாறாமல் இருக்கும்... இறைவனைப் போலவே! மாறுவது நாம்தான்.

அறிவின் அடிப்படை புலன் என்பதை ப்ளாட்டோ ஒதுக்கினார். உண்மையின் அடிப்படையாக அறிவை முன்வைத்தார். அதனை ஒப்புக்கொண்ட அரிஸ்டாட்டிலும் தர்க்கவாதத்தை முன்னுக்குக் கொண்டு வந்தார்.

இரண்டு மெய்க்கோள்கள். ஒரு வாத முடிவு. மூன்று கூறுகள். அறிவின் வாதமுடிவுகள் நிச்சயமற்றவைகளாக இருக்கின்றன. அறிவு மனிதனை உண்மைக்கு இட்டுச் செல்லும் என்பது ஐயத்திற்குரியது. தெளிந்த அறிவின் திட்டவட்டத் தன்மையை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார் டெஸ்கார்டஸ்.

என்றும் நிலைத்திருக்கும் எங்கும் வியாபித்திருக்கும் பரவலாக பயன்பாட்டுக்குரிய செயல்பாடுகளே உண்மையாகும். என்றும், எப்பொழுதும், எங்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய, உபயோகப்படுத்தக்கூடிய ஐடியா என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அறுதியிட்டு நிச்சயமாக சொல்லமுடியாது. முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால், உண்மை என்பது நிகழக்கூடிய ஒன்று.

சமூகம் கொண்டிருந்த நம்பிக்கையினால் 'அந்தக் காலத்தில்' உண்மையாக இருந்தது என்று சொல்வது கற்றறிந்த அபத்தமாகும். அது பயனுள்ள தவறு. உண்மை அல்ல.

நாம் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மையானது, நமக்குத் தெரிந்தவற்றுள் எல்லாம் 'மிகப் பயனுடைய தவறுகளின் வடிவம்' என்கிறார் நீட்ஷே.

கடந்த கால தீர்ப்புகளை முன்னுதாரனமாகக் கொண்டு நீதிபதிகள் தங்களின் நியாயங்களை தீர்ப்பெழுதுவார்கள். ஆனால், எல்லா வழக்குகளிலும் இவ்வாறே பின்பற்றாமல், முதல்முறையாக மாற்றியும் எழுதுவார்கள். இறந்த காலத்தில் ஒழுங்கு முறையாக நடந்தவை எதிர்காலத்திலும் அப்படியே தொடரும் என்ற சாத்தியக்கூறை நான் நம்பி இடர்ப்பாட்டில் நம்மை சிக்க வைத்துக் கொள்ள முடியாது.

உலகம் முழுக்கு பல்வேறு தரப்புகளையும் பல்சுவை மனிதர்களையும் கொண்டது. நதியின் ஓட்டம் போல் நொடிப்பொழுதில் மாற்றங்களை நிகழ்த்துகிறது. உண்மை மாறுபடும் தன்மையுடையதல்ல. இதனால், நம்முடைய தீர்மானிக்கப்பட்ட உண்மைகள் ஒருதலைபட்சமாகவும் நிலையுறுதியற்றதாகவும் இருக்கும்.

புத்தன் உண்மையானவன். மனிதன் சூழ்நிலைக்கைதியாகவும், காலத்திற்கு அடிமையாகவும் இருப்பான். காலத்திற்கு அப்பாற்பட்ட time-travelக்கோ, வெளிக்கும் அப்பாற்பட்ட அண்டநிலைக்கோ இன்னும் மனிதனால் பயணிக்க முடியவில்லை. எல்லைகளுக்கு அப்பால் உண்மை இருக்கிறது.

உருப்படியான பிழைகளைக் கொண்டு அவன் மனநிறைவு கொள்ள வேண்டும். காலம், வெளி, உணர்வு, புலன், அறிவு ஆகியவைகளைக் கடந்த இறைவன் என்னும் இயல் கடந்த மெய்ம்மையை புத்தன் அறிவான்.


இந்த வாரப் பதிவுகளுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:

1. The Pleasures of Philosophy - Will Durant
2. The Age of Reason - Thomas Paine
3. Theories of Knowledge - Robert Ackermann
4. Religions - HD Lewis
5. Religion within the limits of Reason Alone - Immanuel Kant
6. Irrational Man - William Barett.

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors