தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : 'அப்பச்சி'
- மீனா முத்து

[ பாகம் : 1 ]

'அப்பச்சி'யை (அப்பா) மறக்க முடியவில்லை

முந்தா நாள், நேத்து,இன்னைக்கோட மூணு நாளாச்சு இன்னொம் மூணுநா போச்சுன்னா அதுக்கடுத்தனா காலைல அப்பச்சியை பாத்துறலாம் இல்ல ஆத்தா (அம்மா) ? ஆவலுடன் கேட்டேன்.

அப்பச்சியை சரியா ஞாபகம் கூட இல்லை சிரிச்சுக்கிட்டு செவப்பா நல்ல உயரமா கம்பீரமா வேட்டியை மாப்பிள்ளைக் கட்டுகட்டிக்கிட்டு.. (ஆமா அப்பச்சி எப்பவுமே அப்படித்தான் வேட்டிய கட்டுவாகலாம் எல்லாரும் கட்டுற மாதிரி கட்டமாட்டகளாம் ஆத்தா சொல்ல கேட்டிருக்கேன்) ஏதோ லேசா மொகம் நெனப்புக்கு வருது போட்டோவில பாத்து பாத்து அதே மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டிருக்கேனோ என்னவோ ஆனா ஒன்னுமட்டும் நல்லா நெனவிருக்கு, நா அப்பச்சி மடியில ஒக்காந்துகிட்டுருப்பேன் அப்போ இந்த ஓட்ஸ் இல்ல ஓட்ஸ அதை பால்ல போட்டு காய்ச்சி ஆத்தா அப்பச்சிக்கு கொடுப்பாக அதை பால மட்டும் குடிச்சிட்டு அடியிலே இருக்குமே ஓட்ஸ் அதை எனக்குத் தருவாக (எனக்கு பால் பிடிக்காது ஆன அதில வெந்த ஓட்ஸ் ரொம்ப புடிக்கும்). தெனமும் ராத்திரி இதுக்காக காத்துகிட்டிருப்பேன் அது மட்டும் இன்னும் மறக்கல்ல.

எனக்கு அஞ்சு வயசிருக்கும்போது அப்பச்சி (மலேயா) மெலேசியாவுக்கு கொண்டுவிக்க (மணிலெண்டிங்) போகும் போது (ஏற்கனவே அங்குதான் இருந்தார்கள் ஒவ்வொரு மூன்று வருஷம் நான்கு வருஷத்திற்கொரு முறை வந்து வந்து போவார்கள் அப்படித்தான் இந்த முறையும் வந்திருந்தார்கள்) இப்போ அஞ்சு வருஷமோ ஆறு வருஷோமோ ஆச்சு அப்ப போனவுக அப்பச்சி திரும்ப இன்னும் வரலை அதுக்கப்புறம் இதோ இப்போ எங்களை மலேசியாவுக்கு வரச்சொல்லி நானும் ஆத்தாவும் போய்க் கிட்டிருக்கோம்.

(எங்கள் இருவருக்குமே அதுதான் முதல் வெளிநாட்டுப்பயணம் அப்பொழுதெல்லாம் பிளேனில் போவதில்லை கப்பல்தான் கப்பல் பயணம் என்றால் ஏழு நாட்கள்!)

எனக்கு ஒரே அதிசயம் எதைப்பார்த்தாலும் (கப்பலே) அதிசயம், அதிலும் கப்பல்ல உள்ள (லைப்ரரி) படிக்கும் இடம் ,சாப்பிடும் இடம், தியேட்டர்,   நீச்சல் குளம், விளையாடும் இடம், ஓய்வெடுக்கும் அந்த நீஈஈஈஈண்ட வரண்டா எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச இடம் இதுதான்!

ஆனாகடல் பக்கம் லேசாக்கூட திரும்ப மாட்டேன் அந்த கரு ஊதா கலர்ல கடல் தண்ணியப் பாக்கும்போது ரொம்ப பயம் ஏன்னே தெரியாது, ஆனா சாப்பாடு மட்டும் 'உவ்வே .. (அப்ப அப்படித்தான் இருந்தது! இப்போ நினைத்துப் பார்த்தால் என்ன அருமையான சாப்பாடு! அன்று கப்பலில் ஒருவித அசைவு, மிக மிக மெதுவானதாயிருந்தாலும் அது நிறையப்பேருக்கு தலை சுத்தல் வாந்தியை உண்டு பண்ணியது அதுவும் சாப்பாடு பிடிக்காமல் போனதற்கு ஒரு காரணமாயிருக்கும்.) கப்பல்ல ஒவ்வொரு சாப்பாட்டு நேரமும் ஒரு ஆள் வந்து எல்லா ரூம் வாசலிலும் மணி அடித்து அறிவிப்பார் வர வர அந்த மணி சத்தம் கேட்டாலே என் ஆத்தாவிற்கு குமட்ட ஆரம்பித்துவிடும் எனக்கும்தான்!.

காலையில் டிபன் என்னன்னா.. ரொட்டியில வெண்ணையை அப்பி (தடவி அந்த ப்ரெட்டின் கனத்திற்கு) அதை பார்க்கும் போதே எனக்கு வேண்டவே வேண்டாம் என்று ஓடிவந்து விடுவேன்(ஆஹா எவ்வளவு ருசியா இருந்திருக்கும்! மண்டு ஒண்ணும் தெரியலை சாப்பாடு மட்டுமல்ல இப்படி சிறு வயதில் எவ்வளவு சின்ன சின்ன விஷயங்கள் அறியாமையினால் இழந்திருக்கிறோம்.)

அப்பாடி ஒரு வழியா ஆறு நாளு ஓடிருச்சு! நாளைக்கு அதிகாலைல அஞ்சு மணிக்கெல்லாம் தூரத்தில் பினாங்கு கரை தெரியும் காலையிலன்னு ஆத்தாவும் கூட வந்த மற்றவர்களும் சொல்லிக்கிட்டு (ரெம்ப மகிழ்ச்சி ஒவ்வோர் முகத்திலும்!!) அங்கயும் இங்கயுமா சந்தோஷமாக போய்க்கிட்டும் வந்துகிட்டும் இருந்தார்கள்!

நாளைக்கு இன்னேரம் அப்பச்சியை பாத்து பேசிக்கினு இருப்போம்! (என்னைக் கட்டிப் பிடித்து சொல்லும் போதே ஆத்தாவுக்கு சந்தோஷம் தாங்க முடியலை அது முகத்திலேயே தெரிந்தது!!)

(தொடர்வேன்...)

நன்றி : தோழியர்.
March 21st, 2004

oooOOooo
[ பாகம் : 2 ]

நாளைக்குக் காலையில அப்பச்சியை பார்க்கப் போகும் ஆவல்,ஆத்தாவுக்கு மட்டுமா எனக்கும்தான்! அப்பச்சி எப்படி இருப்பார்கள் எனக்கு என்னல்லாம் வாங்கித்தருவார்கள் நிச்சயம் அழகான சட்டை(இந்த பாவாடை சட்டை போட்டு போட்டு சலிச்சு போச்சு ) வாங்கித்தரச் சொல்லி கேக்கணும் எங்கெல்லாம் கூட்டிபோவார்கள் என்னல்லாம் வாங்கித்தருவார்கள் ? இப்படி இன்னும் நெறைய்ய கேள்வி மனசுக்குள்.

காலையில சீக்கிரமா எந்திருச்சு பாஸ்போட்டெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு தயாரா இருக்கணும, இமிகிரேஷன் அதிகாரிங்கல்லாம் வெள்ளனவே வந்திருவாக ஒம்போது மணிக்கெல்லாம் சோதனை ஆரமிச்சுருவாக முன்னாடியே போய் வரிசையா நிக்கணும் அந்தா இந்தான்னு மத்தியானம் ஒருமணி ரெண்டுமணியாயிரும் கரையெறங்குறதுக்கு என்று  ஒரு த்தர்(அவர் நெறையத்தடவை கப்பலில் போய்  வந்துகிட்டு இருக்காராம் ) எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

(முன்பெல்லாம் கப்பல் பினாங்குத்தீவை அடைந்தபிறகு கரையைவிட்டு இரண்டு மூன்று மைல்கள்    தள்ளி கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி விடுவார்கள் . இமிகிரேஷன் அதிகாரிகள் தனி படகில் கப்பலுக்குள் வருவார்கள் . பிறகு முதல் வகுப்பில் , தொடங்கி முறையே இரண்டாம் வகுப்பு மூன்றாம்  வகுப்பு   என அவரவர்கள் பிரயாணம் செய்யும் வரிசைப்படி எல்லா சோதனை  யு ம்    முடிந்த ஒரு மணி   நேரத்தில் அதிகாரிகளுடன் கப்பல்    கரையை அடையும் அதன் பிறகுதான் பிரயாணிகள் கரையிறங்க அனுமதிக்கப் படுவார்கள்.)

ராத்திரி ரொம்ப நேரம் அப்பச்சிய பத்தியே பேசிக் கொண்டிருந்தார்கள் ஆத்தா . ' அப்பச்சி ஒன்னயப் பாத்தவுடன் சந்தோஷப்படுவாக எப்பவும் கடுதாசியில ஒன்னப் பத்தித்தான் கேட்டுகிட்டே இருப்பாக இப்ப நேரபாக்க போறோம்னு எவ்வளவு சந்தோஷமா இருப்பாக தெரியுமா ?' அப்படீன்னு இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தார்கள் நானும் அந்த நெனப்பிலயே தூங்கிப்போயிட்டேன்.

அன்று அதிகாலையில் ஆத்தா என்னை எழுப்பும் போது அஞ்சு மணி இருக்கும் (ஆத்தா எப்பவும் சொல்வார்கள்   சாமானி யத்தில் இவளை எழுப்ப முடியாதுன்னு)சாதாரண நாளுன்னா வழக்கம் போல்  எந்திருக்க மாட்டேனோ என்னவோ அன்று வாரிசுருட்டி எழுந்து உக்காந்துகொண்டு என்ன ஆத்தா  பினாங்கு வந்துருச்சா கரை தெரியுதா ..? கண்ணை சரியாத் திறக்க முடியலை கசக்கியபடி தூக்கக் கலக்கத்தோடு கேட்டேன்.

'பினாங்கு வந்துருச்சு எந்திரி எந்திருச்சு சன்னவழிய வெளிய பாரு கரை தெரியுது என்றார்கள். அவ்வளவுதான் ஒரே குதி குதிச்சு ஆத்தாவின் படுக்கையில் ஏறி அங்குதான் வட்டமாக குட்டி ஜன்னல் அதற்கு தகுந்தார்ப் போல் சின்னதிரை போட்டு அழகா இருக்கும் நானும் ஆத்தாவும் ரூமில் இருக்கும் போது எப்பவும் பெட்டில் காலை பின்புறமாக மடித்து வைத்துக் கொண்டு அதன் வழியே வெளியில் வேடிக்கை பார்க்கறதுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஜன்னல் வழியே வெளியில் அந்த நீண்ட வராண்டா தெரியும் வராண்டாவின் தடுப்புக் கம்பிக்கப்புறம் கரு நீலக்  கடல் தெரியும் அதான் எனக்கு பயமா இருக்கும். ஆனாலும் ஜன்னல் வெளியே பாக்கறதுனால அதுவும் வரண்டா  முழுக்க நிறையப்பேர் ஓய்வெடுத்துக் கிட்டு , நின்னுகிட்டு , நடந்துகிட்டு இருப்பதால வேடிக்கை பார்க்கும் ஆசையில அதுவும் உள்ள ருந்து பார்கறதுனால பயமாவே இருக்காது) கரை தெரிகிறதான்னு பார்த்தால் !   அப்பாடி..! என்ன அழகு ! ஜிகு ஜிகுன்னு லைட்டெல்லாம் போட்டு! இதுவரை நான் பார்த்தறியாத புதிய உலகம் ! எனக்கிருந்த சந்தோஷம் ஐ… .. ஆத்தா இதான் பினாங்கா ? கண்கள் விரிய திரும்பிப் பாக்காமலே ஆத்தாவைக் கேட்டேன் 'அழகுபோல இருக்குல்ல? அப்படியே என்னை மறந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். சரி சரி   எறங்கி வா என ஆத்தா சொல்றது காதில் விழவேயில்லை… ..

காலையில வெள்ளனவே 'ரெடியா இருந்தாதான் மொதல்ல போயி வரிசையில் நிக்கமுடியும் இல்லன்னா கூட்டம் வந்துரும் அப்பறம் ரெம்ப நேரம் காத்து நிக்கணும்' அப்படீன்னு என்னை குளிக்கச் சொல்லி அவர்களும் குளித்து, புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது மணி ஆறு இருக்கும் எங்களின் ரூம்   கதவை யாரோ வேகமா  தட்டினாங்க!

oooOOooo
[ பாகம் : 3 ]

ஊரில் (மெட்றாஸில்) இருந்து புறப்படும் அன்று ஹார்பருக்கு ஆச்சி (அக்கா ), அண்ணன் இருவரும் வழியனுப்புவதற்கு வந்திருந்தார்கள் அக்காவும் அவளின் மூன்றாவது குழந்தையையும் ( பிறந்து நாலு மாதம் தான் கொழு கொழுன்னு அழகோ அழகு ) தூக்கிக் கொண்டு வந்திருந்தாள் அவளுக்கு அப்பச்சியிடம் குழந்தையை காண்பிக்கணும்னு ரெம்ப ஆச ..

அப்பச்சியிடம் சொணங்காம சீக்கிரமா வந்து ஓம்மகள பாக்கச்சொல்லி சொல்லணும் அவுக இவளைப் பாத்தாகன்னா பொருக்கமாட்டாம( பெருமையா) சந்தோஷப் படுவாகன்னு ஆத்தா சொல்ல .. ஆச்சியும் ஆமா சீக்கிரம் வரச்சொல்லி சொல்லுங்க நாங்கள்ளாம் பாத்து வெகு நாளாச்சு , அப்பறம் நல்லபடியா போய் சேந்ததுக்கு எறங்கினவொடனே அப்பச்சியிட்ட சொல்லி தந்தி கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு நெனப்பெல்லாம் அங்கதான் இருக்கும் என்றாள் ,

அவளுக்கு நம்மளும் போக முடியவில்லையேன்னு ஏக்கம் . அண்ணன் அப்படியில்லை அண்ணன் ஸ்கூல் படிச்சதெல்லாம் மலேசியாவிலதான் அப்புறமா காலேஜில படிக்கி றதுக்குதான் ஊருக்கு வந்தாங்க அதனால அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம் .

நாங்களும் ஏழெட்டு மாதம் முன்னாடியே புறப்பட்ருக்க வேண்டியது ஆத்தாவும் ஆச்சிக்கு புள்ளை பொறந்ததுக்கப்புறம் வாரோம்னு சொல்லி.. இப்பத்தான் போக முடிந்தது பாஸ்போட் எடுத்து ஒரு வருஷமாச்சு, போனா எப்பவோ போயிருக்கலாம் இப்பத்தான் தண்ணிபகச்சிருக்கு ( ஆத்தா எப்பவும் சொல்வார்கள்  நாம எங்க இருக்கோமோ அங்க தண்ணி பகையானாத்தான் அந்த எடத்தவிட்டு வேறு எடத்துக்கு போறாப்ல வரும் அது  வரை நாம என்னதான் முயற்சிச்சாலும் முடியாதுன்னு).

அன்னைக்கு ஹார்பரில் அழுதுகிட்டே ஆச்சி கீழே நின்னுக்கிட்டு கையை ஆட்டிக்கிட்டு டாட்டா சொல்ல நானும் ஆத்தாவும் மேலே கப்பலின் தளத்தில் நின்னு கையை அசைக்க எவ்…வளவு நேரம் !அப்பத்தான் மெது மெதுவா கப்பல் அசைய ஆரம்பிச்சது அட! கப்பல் பொறப்ட்ருச்சு !  அவ்வளவுதான் எனக்கு ஒரே அதிசயம்! கையை ஆட்டவும் மறந்து  நெஞ்சுவரைக்கும் இருக்கும் கைப்பிடியில் எக்கி கீழே   தண்ணியை தள்ளிக் கொண்டு கப்பல் நகந்து போவதை! வேடிக்கை  பார்க்க ஆரம்பித்து..  திடீருன்னு நினைவு வந்து திரும்பி பார்த்தா .. கையை ஆட்டி ஆட்டி காண்பித்துக்கொண்டிருக்கும் ஆச்சி ,அண்ணன் இன்னும் அங்கு சொந்தக்காரங்களை வழியனுப்ப வந்தவங்க எல்லாரும் சின்ன சின்ன உருவமா ! அதிசயமாப்   பார்த்துக் கொண்டே இருக்கும் போது  சின்ன சி ன்ன புள்ளியா ..! ஆத்தா... ன்னு ஏதோ சொல்ல திரும்புரேன் ஆத்தா கேவி கேவி அழுது கிட்டு மூக்கை சிந்திகிட்டு எனக்கு அழுகை அழுகையா வருது..

oooOOooo
[ பாகம் : 4 ]

ரூம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஆத்தா… யாரோ கூப்பிடுகிறாங்க கதவத் தெறக்கவா..? கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஆத்தாவே வந்து கதவைத் திறக்க வெளியில் எங்கள் உறவினர் (ஆத்தாவின் தாய் மாமாவின் மாப்பிள்ளை அவர் பினாங்கிலேயே இருக்கிறார் ) கப்பலில் உள்ள மேலும் இரு அதிகாரிகளுடன் நின்று கொண்டிருந்தார்!

'ஆச்சி வாங்க எப்படியிருக்கீங்க என்றவரை வாங்க 'தம்பி' என்ன நீங்க...!இங்கே? ஆத்தாவுக்கு ஒண்ணும் புரியல்லை அவர் எப்படி இங்கு வந்தார் என்று,

ஒங்களை கூட்டி போறதுக்கு வந்தேன் , அண்ணே கூட்டிட்டு வரச்சொன்னாக சொன்னவர் 'சீக்கிரம் பாஸ்போட்டை எடுத்துக்கிட்டு வாங்காச்சி இவங்களோட போகணும்' என்றார்.
ஆத்தாவும் பாஸ்போட்டை எடுத்துக் கொண்டு என்னையும் கூட்டிக் கொண்டு போனா...ல்! அங்கே அந்த கால நேரத்தில அத்தனை பேரும் புறப்பட்டு வந்து எவ்வ்வ்வளவு பெரிய க்யூ ! வரிசையில் நின்னுகிட்டு இருந்தார்கள். இன்னும் சோதனை ஆரம்பிக்கவில்லை. இமிகிரேஷன் ஆபிஸர்கள் ஏழெட்டுப் பேரு அங்குள்ள ஹாலில் உக்காந்திருந்தாங்க, எங்கள கூட்டிகிட்டு போனவர் அங்கேருந்த ஆபிஸர் ஒருத்தர்ட்ட கூட்டிபோய் பாஸ்போட்டை வாங்கி அவருகிட்ட கொடுத்தார்.

அவர் எல்லாத்தயும் சரி பாத்து முடித்து கொடுக்கிறதுக்கு கொஞ்ச நேரமாகிவிட்டது அங்கே காத்திருந்தவங்க எல்லாரும் எங்களையே அதிசயமா பார்த்து கிட்டுருக்க எனக்கோ நேத்து ஆத்தா சொன்னார்கள் வரிசையில் காத்திருக்கணும்னு ஆனா மத்தவங்களெல்லாம் காத்திருக்கறாங்க நம்மளை மட்டும் மொதல்ல கூட்டிட்டு போய் பாக்கிறாங்கன்னு யோசனையா இருந்துச்சு.. ஆத்தாவையும் கேக்க முடியலை ஆனா இன்னொரு பக்கம் ரெம்ப சந்தோசமா இருந்துச்சு நமக்குத்தான் மொதல்ல பாக்குறாங்க வரிசையில் நிக்கவேயில்லை அப்படின்னு..

சோதனை முடிஞ்சதும் எங்களை கூட்டிக்கிட்டு மறுபடி எங்க ரூமுக்கு வந்து எங்க பொருள்களை எல்லாம் எடுத்துக்கிட்டு எங்களை அழைச்சிகிட்டு போக தயாரா இருந்த போட்டிற்கு கூட்டி வந்தாங்க, கப்பலின் தளத்தில இருந்து ஏணி மாதிரியே கயிறால் ஆன ( நடுவில் பலகை) படி ஒன்னு கப்பலோட சேத்து கட்டி தொங்கிகிட்டு இருந்துச்சு ! அதில எறங்கித்தான் படகுக்குள்ள வரணும் அதுவோ ஆடிக்கிட்டே இருந்துச்சு.. அதுல காலவச்சு எறங்குறதுக்குள்ள தண்ணிக்குள்ளதான் விழப்போறம்னு ரொம் ..ப ரொம்..ப பயந்து போய்ட்டேன் அப்பாடி !! ஆத்தாவும் அதுல எறங்க கஷ்டப்பட்ட மாதிரி இருந்திச்சு..படகில ஏறி உக்காந்ததுக்கு அப்பறம்தான் எனக்கு ஆத்தாகிட்டே பேச முடிஞ்சுச்சு , ஆனா அதுகுள்ள ஆத்தா அந்த அண்ணங்கிட்டே பத்தாவது தடவையா… எத்தனை தடவைன்னு தெரியலை 'அண்ணே' வரலையா? ஏ..(ன்) இவ்வளவு அவசரமா முக்கியமா எங்களை மட்டும் கூட்டிபோறிய சொல்லப்பச்சி?ன்னு கப்பல்ல கேட்டதையே கேட்டுக்கிட்டு இருந்தாங்க.. (ஆத்தாவின் கேள்விக்கு) அந்த அண்ணன் கர்சிஃபை எடுத்து முகத்தை துடைச்சு க்கிட்டு சிரிச்சுக்கிட்டே என்னமோ சொல்லிக் கிட்டுருந்தாங்க, நான் அடுத்த அதிசயத்தில மூழ்கி போயிட்டேன் அதான் போட் !

'அட என்ன வேகமா போகுது ரெண்டு பக்கமும் தண்ணியைத் தள்ளிகிட்டுல ! அது வள..ஞ்சு திரும்பி போகும் போது ஒரு பக்கம் சந்தோசமா (குதூகலமா) இருந்தாலும் அவ்வளவு பக்கத்தில தண்ணியை பாக்கும் போது வழக்கம் போல மனசுக்குள்ள பயத்தோட பார்த்துக் கிட்டிருந்தேன் தூரத்தில கரை தெரிஞ்சுச்சு! இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க போயிருவோம் அப்பச்சி அங்கே எங்களுக்காக காத்திருப்பாங்களோ ?

oooOOooo
[ பாகம் : 5 ]

நாங்க போன போட் சின்னதா வெயில் படாம மேல மூடியிருந்துச்சு உள்ளே எதிர் எதிரே பெஞ்ச் மாதிரி போட்டிருந்துச்சு அதில் நானும் ஆத்தாவும் ஒரு பக்கமும் எதிரே அந்த அண்ணனும் கூடவந்த ரெண்டு இமிகிரேஷன் ஆஃபீஸர்களும் உக்காந்திருந்தாங்க.

காலையில் கப்பலில் மொத தடவையா இவங்களையெல்லாம் பாத்தவுடன் என்ன இப்படி இருக்காங்க! மூக்கெல்லாம் சப்பையா கண்ணெல்லாம் சின்..னதா அவ்வளோ செகப்பா! அப்ப எனக்கு வந்த சந்தேகத்த ஆத்தாகிட்டே கேட்டேன் 'இவங்கள்ளாம் சீனாக்காரங்க இப்படித்தான் இருப்பாங்களாம் அப்பச்சி சொல்லியிருக்காங்க 'ன்னு ஆத்தா சொன்னாங்க நான் அவங்களையே பாத்துக்கிட்டிருந்தேன்.

இப்போ.. இங்கேயும் எனக்கு இடது பக்கத்தில வெளியில் நின்னுகிட்டு பார்க்கிறதுக்கு  அவங்க  மாதிரியே ஒரு ஆள் 'போட்' ஓட்டிக்கொண்டிருந்தார்! ஓ..இவ..ரும் சீனாக்காரர்தான்!  ஆனா பாத்தா எல்லாரும்(கண்ணு மூக்கு) ஒரே மாதிரி இருக்காங்க யாருன்னு எப்படி கண்டு பிடிக்கிறது! எனக்கு ஒண்ணும் புரியலை அதிசயமா இருந்துச்சு!

வேகமா போய்க்கிட்டு இருந்த போட் இப்போ மெதுவா போக ஆரம்பிச்சுருச்சு என்னன்னு பாத்தா...கரை கிட்டத்தில வந்துருச்சு! எனக்கு பர பரன்னு இருந்துச்சு. 'போட் 'டும் மெது மெதுவா கரையை தொட்டது, ஓட்டிக் கொண்டிருந்த அந்த ஆள் போட்' டில இருந்த பெரீய கயிறை எடுத்து கரைமேல் தூக்கிப் போட்டார் அப்போ அங்கே நின்னுகிட்டு இருந்த ஆள்.. (அட! இவரும் சப்பை மூக்கு சின்ன கண்ணு! அவரைப்போலவே!!)அதை எடுத்து அங்கருந்த கருப்பா குட்டையா ஏதோ தூண் போல இருந்ததில் மாட்டி விட்டார்.

அதுக்கப்புறம் தான் எங்களை ஒவ்வொருத்தரா இறக்கி விட்டாங்க இப்பவும் அதே பயம் எப்படி தண்ணிக்குள்ள விழாம எறங்கப் போறோம்னு , அங்கருந்து இறங்கும் போதும் அத விட்டு நடந்து வரும் போதும் எனக்கு லேசா தலை கிறு கிறுன்னு சுத்திக் கொண்டு வந்துச்சு 'ஆத்தா.. தலை சுத்துது' ன்னேன் 'இந்தா வந்தாச்சு அவ்வளவுதான் சத்த பொறுத்துக்க ' ன்னு சொல்லி என்னைய கூட்டிக் கிட்டு ஆத்தாவும் அவங்க பின்னாடியே அங்கருந்து கொஞ்ச தூரம் நடந்து எல்லாரும் வெளியில வந்தோம்.

அங்க நெறைய்..ய பேர் வந்திருந்தாங்க! என்னோட அம்மான்(அத்தையின் கணவர்), அப்புறம் ஒன்றுவிட்ட சித்தப்பா ,பங்காளிவீட்டு அய்யா இன்னும் மத்தவங்களும்.. அவங்களை எனக்குத் தெரியலை இப்படி நிறைய எங்களுக்காக காத்திருந்தாங்க! ஆனா அப்பச்சிய மட்..டும் காணும்.

அங்கருந்தவங்க எல்லாரும் ஆத்தாவை பார்த்ததும் வாங்க வாங்க எப்படி பிரயாணம் எல்லாம் எப்படி சௌகரியமாக இருந்ததான்னு கேட்டு என்னைப் பார்த்து வாங்காத்தா எப்படி இருக்கீய ? அப்டின்னு கேட்டுகிட்டு இருக்கையில ஆத்தா அவங்கள்ள ஒருத்தர் கிட்ட' ஏன் அவுக வரலை வராம இருக்க மாட்டாகளே எனக்கு எழுதுன கடுதாசையில கூட மொதநாளே பினாங்குக்கு வந்தர்ரேன்னு எழுதியிருந்தாக இங்க நிக்கிறாகன்னு இருந்தேன் இங்கயும் இல்ல அவுக தைப்பிங்க்ல இருந்தே வல்லையா '?ன்னு கேட்டதுக்கு அம்மான் (மாமா அத்தையின் கணவர்) சொன்னாங்க ' வாரதாத்தான் இருந்தாக காலயில லேசா உடம்பு சரியா இல்லை, சரி நா இவ்வளவு தூரம் போயி அப்பறம் அவங்களை கூட்டிகிட்டு தைப்பிங்குக்கு உடனே திரும்பனும் அதனால நீங்களும் பினாங்குல அந்த தம்பியுமா போயி  கூட்டிக் கிட்டு வந்துருங்கன்னு அனுப்பிச்சாங்க அதனாலதான் நாங்க வந்தோம் 'ன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போது..

அப்பத்தான் அங்கு வந்த ஒருத்தர் ஆத்தாவை பாத்து " ஆ.. ச்சி..." அப்படின்னு சத்தமா கூப்பிட்டு கிட்டு ஆத்தாகிட்ட ஏதோ சொல்ல வேகமா வந்தவரை அங்கிருந்தவங்க ஓடிவந்து 'அண்ணே அண்ணே இங்க வாங்க 'ன்னு அவர் கையை பிடிச்சு இழுத்து கூட்டிகிட்டு போக நானும் ஆத்தாவும் ஒண்ணும் விளங்காம பார்த்துக் கிட்டிருக்க 'சரி சரி நேரமாகுது வாங்க சொணங்காம புறப்படலாம்னு அம்மான் சொல்ல அங்கேருந்து எல்லாரும் புறப்பட ..

oooOOooo
[ பாகம் : 6 ]

ஆத்தாவுக்கு என்னது …ஏதோ சொல்லவந்தவுகள சொல்ல விடாமே கூட போயிட்டாங்களே அப்படின்னுசந்தேகம் வந்துருச்சு. அம்மானிடம்   'ரெம்ப முடியலையா லேசா முடியலைன்னா அதுக்காக வராம இருக்கமாட்டாக சொல்லுங்க என்னன்னு , பயப்படற மாதிரி ஒன்னுமில்லையே?' ன்னு கேட்ட ஆத்தாவின் குரல் தொண்டை கட்டிய மாதிரி இருந்துச்சு அம்மான் உடனே 'நீங்க என்ன? என்னன்னமோ நெனைச்சுக்கிட்டு அதெல்லாம் ஒன்னுமில்லே ஒங்களுக்குத்தான் தெரியுமே ஐத்தான்(மைத்துனர்)லேசா ஒன்னுன்னாலும் ஜாக்றதையா இருப்பாங்கள்ள ? அதனாலதான் வரல்ல, வேறொன்னுமில்ல' அப்டீன்னு சொல்லி சிரிச்சாங்க.
 
ஆனாலும் ஆத்தாவுக்கு கவலையா இருந்துருக்கும்னு நெனைக்கிறேன் நேத்து இருந்த மாதிரி இல்லை என்னமோ போல இருந்தாங்க.பேசிக்கிட்டே எல்லோரும் கார் நிக்கிற இடத்துக்கு வந்துட்டோம்.
 
(எனக்கு அப்பச்சிய இன்னும் பாக்கலையேங்கறது ஒரு பக்கமிருந்தாலும் அதற்குமேல் அங்குள்ளவர்களையும் அந்த இடங்களையும் அவர்கள் பேசுவதையும் பார்க்க பார்க்க அதிலேயே மூழ்கிவிட்டேன்)காருக்கு பக்கத்துல வந்ததும் எங்களோட பெட்டிகளை எல்லாம் தூக்கி வந்த ஆளிடம் அண்ணன் சொன்னார்கள் 'பொட்டிகள ரெண்டு காடி இருக்கு ரெண்டுலையுமா சரி பண்ணி ஏத்துங்கப்பா' என்றார்கள், 'காடியா ?என்னது!' ன்னு கேட்ட என்கிட்ட 'காரு' தான் இங்கேயெல்லாம் அப்படித்தான் சொல்லுவோம் மலாய் மொழியில காடின்னு சொல்லுறது' அப்ப்டின்னாங்க  ஒ…….! காருதான் ' காடி'யா இனிமே நானும் காடின்னுதான் சொல்லனும்னு நினைச்சுக்கிட்டேன்.
 
அந்த ரெண்டு காரையும் ஓட்டிய டிரைவர்கள் அட! இவங்க அந்த சீனாக்காரங்க மாதிரியே இல்லை வேற மாதிரி! அதே சப்பைமூக்கு ஆனா செவப்பில்லே ஆத்தா சொல்வாங்களே செகப்புமில்லாம கருப்புமில்லாம இருந்தா ' மா நெறம்'ன்னு அந்த மாதிரி! கண்ணும் வேறமாதிரி ஒடனே கேக்காம இருக்க முடியலை மெதுவா கேட்டேன் 'இவங்களும் சீனாக்காரங்கதானா ?' அண்ணனுக்கு கேட்டுருச்சு'என்ன..?என்ன கேக்குதுன்னாங்க' ஆத்தா சொன்னாங்க ' ஒன்னுமில்லே காரோட்டறவங்க சீனர்களான்னு கேக்குறா' அம்மான் சொன்னாங்க 'இல்லெல்லை இவங்க இந்த நாட்டுக்காரங்க மலாய்க்காரங்க அப்டின்னாங்க'! எல்லாமே அதிசயம் எனக்கு!.
 
அதுக்கப்புறம் நானு ,ஆத்தா, அம்மான்,அண்ணன் ஒரு காடியிலும் மத்தவங்க இன்னொரு காடியிலும் ஏறிக்கிட்டு அங்கருந்து புறப்பட்டோம் ,
 
கொஞ்ச நேரத்தில் ஹார்பர் மாதிரி உள்ள இன்னொரு இடம் , அங்கே எங்களுக்கு முன்னாலேயே வரிசை வரிசையா நிறையக் கார்(காடி) நின்னுகிட்டு இருந்துச்சு! எங்க காடியையும் அந்த வரிசையில் போய் நிறுத்தினார் எங்கள் டிரைவர்.

காருக்குள்ள காத்திருக்கும் போது சொன்னாங்க இதுதான் 'ஃபெரி ' இதில தான் நாம அக்கரைக்குப் போயி அதுக்கப் புறம் தான் தைப்பிங் போகணும் ஃபெரி அக்கரைக்குப் போக அரைமணி நேரமாகும்னு சொன்னாங்க !அக்கரையா ? அப்படீன்னா மறுபடியும் கப்பலா ?!

அரை மணி நேரத்திற்குமேல காத்திருந்தோம் , " ஃபெரி வந்துருச்சு!போலருக்கு நல்ல வேளை சீக்கிரம் வந்துருச்சு"ன்னு அம்மான் சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு எதித்தாப்பில வரிசை வரிசையா ஃபெரிக்குள்ளயிருந்து காடிகள் வருது! ஒவ்வொரு காடி வரும் போதும் டமார் டமார்ன்னு சத்தம்! 'என்ன சத்தம் இப்படி கேக்குது' ன்னேன் அது ஃபெரிக்குள்ளேயிருந்து காடிகள் வரும்போது அங்க போட்டுருக்க இரும்பு பலகையில் ஏறி ஏறி வாரதாலே அந்த சத்தம் வருது" ன்னாங்க.

எல்லாக் காடிகளும் போயி அதுக்கடுத்து சர் சர்ன்னு உள்ளேயிருந்து 'மோட்டர்பைக்' குகள்!நிறைய வந்துச்சு! இப்படி எல்லாம் போனதுக்கப்புறம் எங்களுக்கு முன்னடி நின்னுகிட்டிருந்த காடிகள் மெதுவாக நகர.. எங்க காடியும் அதுக்குப் பின்னாலே 'ஃபெரி'க்குள்ள போக..

ஆத்தா கேட்டாங்க 'எவ்வளவு நேரமாகும் தைப்பிங் போய்ச்சேர?' ன்னு அதுக்கு அண்ணன் ' ரெண்டரை மணி நேரமாகும் இங்கருந்து அக்கரை போயி அங்கருந்து போக ' ன்னாங்க .

oooOOooo
[ பாகம் : 7 ]

அப்போ...? இங்கேயிருந்து அக்கரை போவதற்கே அரை மணி நேரமாகும்அதுக்கப்புறம் அங்கேயிருந்து ரெண்டரை மணி நேரம் என்றால் மூணு மணிநேரத்துக்குமேல ஆகுமே '?ஆத்தா குரல் என்னமோ மாதிரி..

(என் கவனம் பூராவும் காடி ஃபெரியுனுள் நுழைவதை வேடிக்கை பார்க்க திரும்பியது) ஃபெரிக்குள்ளே ரெண்டு மூணு பேரு நடுவுல நின்னுகிட்டு (உள் நுழையும்) கார் எல்லாத்தையும் இந்த கார(ரை)குடியில மதுரையில எல்லாம் ரோடுக்கு நடுவுல போலீஸ்காரர் ஒருத்தர் நின்னுகிட்டு கார் பஸ் எல்லாம் கையை காட்டி காட்டி போக சொல்வாரே அது மாதிரி கயை ஆட்டி ஆட்டி இடது பக்கமும் வலது பக்கமுமா வரச்சொல்லி அப்பறம் விலகிக்கிட்டு நடுவிலேயுமா மூணு வரிசையா நிறுத்தச் சொன்னாங்க என்னதுது ! நம்ம மட்டும் போகாம காடியையும் சேத்து உள்ள ஏத்த முடியுமா! ஒண்ணு ரெண்டுல்லே நெறையக்காடி மோட்டார்பைக்கெல்லாம் ஏத்தறாங்க!!

எங்க காடிக்குப் பின்னாடி ரெண்டு காடி மட்டும் உள்ள விட்டாங்க அதுக்கப்புறம் பெரி … .ய இரும்பு சங்கிலிய குறுக்கே போட்டு கட்டி அதுக்கப்புறமா மோட்டார்பைக், சைக்கிள் எல்லாம் உள்ள விட்டாங்க!

எல்லாம் வந்து நின்னதுக்கப்புறம், உள்ள வரும்போது டொம் டொம்மென்று சத்தம் வந்துச்சே.. அதான் காடியெல்லாம் உள்ள வரதுக்கு போட்டிருந்த (ஃபெரியையும் கரையையும் இணைத்திருந்த) இரும்பு ' பலகை'. அது மேல ஏறித்தான் காடிகள் எல்லாம் வந்துச்சு அந்த இரும்பு பலகையை அப்படியே மேலே தூக்கி... 'அட! அதுதான் கதவா! பாதையை அடச்சு இரண்டு பக்கத்துலேயும் இருந்த  பெரி … . ய கொக்கியை போட்டுட்டாங்க!.

எங்க காடி உள்ளுக்குள்ளே வந்து நின்ன ஒடனே அண்ணனும் அம்மானும் எங்க கிட்டே சொன்னாங்க ' காருக்குள்ளேயே கா(ல்) மணி நேரம் அரமணி நேரம் இருக்குறது செரமம் அதனாலே கீழ எறங்கி நிக்கிறதுன்னா நில்லுங்க ' ன்னு 'ஐ.. எறங்கி நிக்கலாமா'!? ஒடனே நான் எறங்கிட்டேன். அதனாலதான் என்னால எல்லாத்தையும் பார்க்க முடிஞ்சுச்சு , ஆத்தாதான்

நான் எறங்கலை காருக்குள்ளேயே இருக்கிறேன்னுட்டாங்களே.

ஃபெரி மெதுவாக புறப்பட்டுருச்சு, வா வா அங்க முன்னாடிப் போய் நின்னு பாக்கலாம் என்று அண்ணன் கையை பிடித்து முன் பக்கம் கூட்டி போனார்கள் எனக்கு பயம் ,ஃபெரியின் சத்தம் காது அடைச்சுச்சு, முன்னாடி போனா! காத்து! அள்ளிக்கிட்டு போச்சு! பக்கத்தில் போனதும் ஒரே சாரல்! "கொஞ்சம் தள்ளி நின்னுக்க சாரல் மேல படாது "  நான் அசையவே இல்லை எனக்குத்தான் இந்த மாதிரி சாரலில் தலையை நீட்டிமுகம்பூரா சாரல் பட்டு நனையறது ரொம்ம்ப புடிக்குமே! அப்படியே நின்னுகிட்டு எல்லாத்தையும் பாத்துக்கிட்டேயிருந்தேன்.

தூரத்தில கப்பல் ஒண்ணு நின்னுகிட்டு இருந்துச்சு அதான் நாங்க வந்த கப்பலோ ? அதுக்கு அந்தப் பக்கம் ஒண்ணு அதை விட கொஞ்சம் சின்ன கப்பல் , அங்கங்கே குட்டி குட்டியாக நிறய படகுகள்! அப்பறம் நடு நடுவில்

அங்கொண்ணும் இங்கொண்ணுமாக என்னவோ கறுப்பா இரும்பு கோபுரமாட்டம் கடல்ல மெதந்து கிட்டு இருந்துச்சு! ' அது என்ன' ன்னு கேட்டேன் ' அதுவா அது மிதக்குற இடத்துல தண்ணி ஆழமில்லாம இருக்கும் அத பாத்துட்டு அந்தபக்கம் கப்பல் படகு இதெல்லாம் போகாது அந்த அடையாளத்துக்குத்தான் அது இருக்கு ' அப்படின்னு சொல்லிட்டு 'சரி 'வா' த்தா கரை வரப்போகுது போய் காடியில ஏறி ரெடியா இருக்கணும் வா 'ன்னு.. எனக்கு போக மனசே இல்ல என்னை நிக்கவிடாம கூட்டிகிட்டு போயி.. திரும்ப காடிக்குள்ள ஏறினோம் எங்களைப் போலவே மத்த காடியில இருந்து எறங்கி நின்னவங்களும் வந்து அவங்கவங்க காடியில உக்காந்து எல்லாரும் புறப்பட ரெடியாக காடிய ஸ்டாட் பண்ண...

வேகமா போயிகிட்டுருந்த ஃபெரி மெதுவா போயி கரைய அணைஞ்சு எல்லாரும் புறப்பட ரெடியா மோட்டர்பைக்கை ஸ்டாட் செய்து ட்ர்று ட்ர்றுன்னு எல்லாம் சேந்து சரியான சத்தம் , பினாங்கில உள்ளது போல இங்கயும் கரைய தொட்டதும் ரெண்டு மூணு ஆளுங்க உள்ள வந்தாங்க அந்த இரும்புப் பலகையில மாட்டியிருந்த பெரிய கொக்கியை திறந்து அதை அப்படியே கிழே சாச்சு பாதையாக்கி நடுவில உள்ள காடிகளை முதல்ல வெளியில ஒவ்வொண்ணா போகச் சொன்னாங்க எங்க காடியும் ஃபெரியை விட்டு வந்துச்சு ,அங்கயும் இமிகிரேஷன்!அதை முடிச்சுகிட்டு அங்கருந்து வெளியில வந்தோம், இந்த ஊர் பேரு என்னன்னு கேட்டதுக்கு ' பட்டர்வொர்த் 'ன்னாங்க அம்மான்.

அங்கிருந்து புறப்படுவதற்கு முன் " காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடலையே பினாங்கில் கேட்டதுக்கு பசிக்கலை அப்புறம் பாக்கலாம்னீங்க இப்ப இங்கு ஏதாவது சாப்பிடுறியளா ?"என்று அண்ணன் கேட்டாங்க ஆத்தா ' இல்ல வேண்டாம் போயிரலாம்னு சொல்லிட்டாங்க ஆத்தா

இன்னும் வரும் ..

oooOOooo
[ பாகம் : 8 ]

வழி பூரா அண்ணன் சிரிக்க சிரிக்க ஏதேதோ பேசிக்கிட்டே வந்தாங்க ஆத்தா எதுக்குமே சரியாப் பேசலை அவுக கேட்டதுக்கு மட்டும் என்னமோ சொல்லிக் கிட்டிருந்தாங்க...

அம்மானும் , அண்ணனும் என்கிட்டேயும் நடு நடுவே படிக்கிறதப் பத்தியெல்லாம் கேட்டாக எனக்குப் புடிக்கவேயில்லை பள்ளிகூடம் என்றாலே கொண்டையெல்லாம் போட்டுக்குணு இருக்குற அந்த ஒண்ணாப்பு வாத்தியாரோட (அவருக்கு பெயர் என்று ஒன்று இருந்தாலும் படிக்கும் பிள்ளைகள் , அவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் அவரைக் குறிப்பிடுவது இப்படித்தான் ) நெனப்புத்தான் வரும் அவரைக் கண்டாலே( நினைத்தாலே)பயம் . அத மறந்துட்டு இருக்கும் போது இவங்க ஏன் அதயே கேக்குறாங்கன்னு மனசுக்குள்ள தோணுச்சு அழுது வடிஞ்சுகிட்டு பதில் சொன்னேன்.

'அவுக சும்மாதானே இருக்காக ரெம்ப ஒண்ணுமில்லையே '? ஆத்தா சொல்லும் போதே அவங்க தொண்டை அடச்ச மாதிரி பேசுனாங்க, திரும்ப திரும்ப அப்பச்சிய பத்தியே கேட்டுக் கிட்டு இருந்தங்க வருத்தமா இருந்திச்சு அவங்கள பாக்க பாவமாகவும் இருந்துச்சு ,அம்மான் சொன்னாங்க ' ஐத்தான்(அப்பச்சியை அப்படித்தான் அம்மான் கூப்பிடுவார்கள் ) ஏங்கிட்டக் கூட முந்தாநாள் சொன்னாக ஒங்களை கூட்டப் போறேன்னு, அப்பறந்தான் உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்டே போயி காட்டிகிட்டு வருவோம்னு போயிருக்காக அவரு கிட்ட இந்த மாதிரி மனைவியும் மகளும் நாளைக்கு மறுநா ஊரிலிருந்து வாராங்க நான் பினாங்கு போயி கூட்டிவரணும் நாளைக்கி சாயந்திரம் போரதா இருக்கேன்னு சொல்லியிருக்காக அவரு இதோடு நீங்க போக வேண்டாம்னு சொன்னாராம் அதுக்கப்புறம் தான் நேத்து ஏங்கிட்ட விவரத்தைச் சொல்லிக் கேட்டாக போய்ட்டு வரமுடியுமான்னு சரின்னு நேத்து சாயந்தரம் பொறப்பட்டு வந்தேன், வேற பயப்படுற மாதிரி ஏதும் இல்லைன்னு சொன்னாலும் ஆத்தா வருத்தமாத்தான் இருந்தாங்க.

வழியில் ஓரு இடத்தில் அண்ணன் காடியை நிறுத்த சொன்னாங்க அங்க ஒரு ஹோட்டல் (ரெஸ்டாரண்ட்) இருந்துச்சு, 'இன்னும் ஒண்ணரை மணி நேரமாகும் தைப்பிங் போறதுக்கு அதுவரை எவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்குறது இங்கே பலகாரம் (டிபன்) சாப்பிட்டுட்டு போகலாம் இதுவும் சின்னபுள்ள என்னேரத்துக்கு சாப்பிடாம இருக்கும் வாங்க "ன்னு கூப்பிட்டாங்க, ஆத்தாவோ 'எனக்கு ஒண்ணும் வேண்டாம்'னு ஏங்கிட்டே நீ போயி சாப்பிட்டுட்டுவான்னு சொல்லிட்டு அண்ணங்கிட்ட 'இவளக் கூட்டி போயி நீங்களும் சாப்பிட்டு வாங்க நா காருக்குள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டாங்க அண்ணன் விடல்லை இல்ல நீங்களும் வாங்க வேணும்கிறத கொஞ்சம் சாப்பிட்டுக் கெளம்பலாம்ன்னு மறுபடியும் கூப்பிட்டாங்க ஆத்தா மறுக்க சரி 'கோப்பி 'யாவது சாப்பிடலாம் வாங்கன்னாங்க, "கோப்பியா "?!அப்பறந்தான் தெரிஞ்சுச்சு காப்பியத்தான் அப்படி சொன்னாங்கன்னு அதே மாதிரிதான் வர வழியில எங்களை முந்திகிட்டு போன லாரியை காட்டி சொன்னாங்க இந்த 'லோ' ரி க்காரனைப் பாருங்க எப்படிப் போறான் அப்படீன்னு!

எனக்கு பாத்ரூம் போகணும்னு ஆத்தாகிட்டே சொன்னேன் சரி வான்னு அவங்களும் என்கூட எறங்கி வந்துட்டாங்க உள்ளே போனோம்

அங்க இருந்தவங்க எல்லாரும் சீனர்கள்தான் எனக்கு அவங்கள, அவங்கபேசுனத எல்லாம் பாக்க பாக்க வேடிக்கையா இருந்துச்சு

அண்ணன் அவங்ககிட்ட என்னவோ சொன்னாங்க எனக்கு ஒண்ணூமே புரியலே அப்புறம் நா மட்டும்தான் சாப்பிட்டேன் அவங்கள்ளாம் ' காப்பி' இல்லல்ல' கோப்பி' சாப்பிட்டாங்க, 'சாப்பிடு பிராக்குப் பாக்காம சீக்கிரம் போகணும் அப்படின்னு அவசரப் படுத்தினாங்க ஆத்தா, 'ஆமாத்தா சீக்கிரம் சாப்பிட்டு வா நேரமாச்சுல்ல' அம்மான் சொல்ல நான் அவசர அவசரமா சாப்பிட்டு முடிச்சேன்.

' என்ன தண்ணி சாப்பிடுறே?' ன்னாங்க தண்ணி குடுச்சுட்டேன்னேன் 'அது இல்ல ஜூஸ் ஏதாவது குடிக்கிறியா?'ன்னு கேட்டேன்னாங்க அங்க எல்லாத்தையும் தண்ணின்னுதான் சொல்வாங்களாம்! எல்லாரும் திரும்ப காடியில் ஏறி புறப்பட்டோம் அதுவரை ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பேசிக் கொண்டே வந்தவங்க அதுக்கப்புறம் யாருமே பேசல்ல எல்லாரும் அமைதியா இருந்தாங்க.

நா வெளியில வேடிக்கை பார்த்துக் கிட்டே வந்தேன் போறவழியெல்லாம் மரங்களுக்கு நடுவில நடுவில வீடு! அந்த வீடெல்லாம் தரையில இல்லாம நாக்காலி மாதிரி எல்லாப் பக்கமும் கால் காலா இருக்கு அதுக்கு மேல வீடு ! வீட்டச்சுத்தி பூச்செடி தெரிஞ்சுச்சு ! 'இதென்ன வீடெல்லாம் இப்படி இருக்கு ' னேன் ' இது " பலகைவீடு" மலாய்க்காரங்கவீடு இங்கல்லாம் இப்படித்தான் இருக்கும் ' என்றார்கள் எனக்கு அந்தவீடுகளை ரெம்ப புடிச்சுது பாக்குறதுக்கு அழகா இருந்துச்சு

நான் எப்ப தூங்கினேன்னு தெரியல நல்லா தூங்கிட்டேன் திடீர்னு ஆத்தா எழுப்பினாங்க ' எந்திரி தைப்பிங் வந்திருச்சாம் இன்னம் கொஞ்ச நேரத்தில போயிருவோம்ன்னாங்க' எனக்கு ஒரே ஆவல் தைப்பிங் வந்துருச்சா! கேட்டுகிட்டே ரெடியா எந்திருச்சு உக்காந்துட்டு வெளியில பார்த்தேன்.

மனதிற்குள் அப்பாடி இன்னும் கொஞ்ச நேரத்தில அப்பச்சிய பாத்துருவோம் நினைக்கும் போதே ஒருவித பரபரப்பு வந்தது கூடவே அப்பச்சிக்கு சீக்கிரம் உடம்பு தேவலையாகிரணும் கடவுளே அப்படீன்னு நெனச்சுக்கிட்டே ஆத்தாவை பாத்தேன் ஆத்தாவும் என்னப் போலதான் வேண்டிக் கிட்டிருப்பாங்கன்னு தோணுச்சு ஏன்னா ஆத்தா கண்ணை மூடிக்கிட்டு இருந்தாங்க திரும்பவும் வெளியில் பார்த்தேன் இதுதான் தைப்பிங்கா!

காடி ஊருக்குள் நுழைந்தது...
 

வருகிறேன்..

oooOOooo
[ பாகம் : 9 ]

' தைப்பிங்' மிகவும் அழகான ஊர்!
 
(அங்கு பார்க்கவேண்டிய இடங்களில் முக்கியமா லேக் காடன் இது நடுவில் லேக் அதை சுற்றிலுமாக பெரிய பூங்கா ! பச்சை பசேல் என்று மிக அழகாக இருக்கும் . அப்புறம்' பூமலை' என்று அழகான ஒரு மலை இருக்கிறது அங்கு மேலே போய் சுற்றி பார்க்க வேண்டும் என்றால் ஜீப்பில்த்தான் செல்லலாம் அங்கு  மலையின் அடிவாரத்தில் அதற்கான ஜீப்  நாலைந்து இருக்கும் . சுற்றுபயணிகள் அதற்கான டிக்கெட்களை வாங்கி கொண்டு அதில்  சென்றால் அவர்களை கூட்டிக்கொண்டுபோய் மேலே இறக்கி விட்டு , அங்கு ஏற்கனவே சுற்றி பார்த்து காத்திருப்பவர்களை ஏற்றி கொண்டு கீழே வரும். இப்படி காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை சேவையில் இருக்கும்,  இரவில் எந்த போக்குவரத்தும் இருக்காது  மழை பெய்யும் நேரத்தில்  பாதுகாப்பு கருதி சேவை நிறுத்தப்படும். அங்கு சென்று தங்க விரும்பினாலும் அழகான ஹோட்டல்கள் இருக்கிறது. விடுமுறை காலங்களில் முன் கூட்டியே பதிவு செய்யலாம்.)

தைப்பிங்கில் அப்பச்சியை எல்லாருக்கும் ந ல்லாத் தெரியும் ரெம்ப நல்லவுகன்னு எல்லாரும் சொல்லுவாங்களாம் அங்கே கிட்டங்கி இருக்கு அங்கதான் அப்பச்சி மணிலெண்டிங் பண்ணிக்கிட்டுருக்காங்க …..
 

(அந்தக்கடை என் பெரியத்தா (அம்மாவின் மூத்த சகோதரி) வீட்டுக் கடை அதை பெரியப்பச்சி இறந்தபிறகு அப்பச்சிதான் அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.பெரியத்தாவின் மகன்களான என் பெரிய அண்ணனும், சின்ன அண்ணனும் பெரும்பாலும் ஊரில் தான் இருப்பார்கள் அப்பப்ப மலேசியாவிற்கு வந்து போவார்கள். அப்பச்சிதான் எல்லாம் பார்த்து வந்தார்கள், அவர்கள்தான் (ரப்பர்)தோட்டம் தொறவு வரவு செலவு எல்லாம் பார்த்து வந்தார்கள் ,அப்பச்சிக்கு உதவியாக இரண்டு கணக்குப் பிள்ளைகளும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் சமயல் செய்ய என்று ஒருவர் . அவரும் ஊரில் இருந்து வந்தவர்தான்.
 
அப்பச்சி எல்லோரிடமும் மிகவும் அன்பாக பிரியமாக இருப்பாங்களாம் . அடிக்கடி சிங்கப்பூர்,ஜோஹுர் ,மூவார், மலாக்கா, சிரம்பான், கோலாலம்பூர், தாப்பா, ஈப்போ, என எல்லா ஊரிலிருந்தும் பினாங்கிற்கு வேலையாக செல்பவர்கள் வழியில் தைப்பிங் வந்து கிட்டங்கியில் இரவு தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் செல்வார்களாம், அதுபோல் பினாங்கு ,சுங்குரும்பை, கூலிம்,அலோர்ஸ்டார் என இந்தபக்கம் இருந்து கோலாலம்பூருக்கு வேலையாக செல்பவர்களும் தைப்பிங் வந்து தங்கி செல்பவர்களும் உண்டு!. எப்பவும் விருந்தாளிகள் வந்து கொண்டேயிருப்பார்களாம்.  வருபவர்கள்  எல்லோருக்கும் என்னென்ன தேவைப் படுமென்று தெரிந்து ,அவர்களை பூமலைக்கு கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து மற்ற இடங்களையும் சுற்றி காண்பித்து இப்படி அங்கு வருபவர்களுக்கு எந்த ஒரு குறைவும் வைக்காமல் செய்வார்களாம் அப்பச்சி. 
 
அந்த சமையல்காரருக்கு அப்பச்சி மேல் அவ்வளவு பிரியமாம் எங்கசெட்டியார் எங்கசெட்டியார் என்று எந்த நேரமும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து வருகிறவர்களுக்கு அப்பச்சி என்ன சாப்பாடு செய்யச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுத்து அப்பச்சிக்கேத்த சமையல்காரர்! கணக்குப் பிள்ளைகளும் சொல்லவே வேண்டாம் அதைவிட பிரியமாம், அங்குள்ள சீனர்கள் கூட அப்பச்சியை பார்த்தால் அத்தனை மரியாதையோடும் அன்போடும் நடந்து கொள்வார்களாம் அது எப்படி? அப்பச்சி இப்படி எல்லோரிடமும் எந்த நேரமும் புன்சிரிப்புடனும் பிரியமுடனும் குரலில் கனிவுடனும் இருந்ததனால்தானோ ?)
 
இதோ அப்பச்சியை இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்க்கப் போறோம். அப்பச்சி என்னைப் பாத்தவுடனே எ ங்கிட்டே என்ன பேசுவாங்க என்ன கேப்பாங்க எப்டி இருப்பாங்க அண்ணனிடம் கேட்கலாம் என திரும்பி அவர்களைப் பார்த்து 'இதுதான் தைப்பிங்கா ? நான் கேட்டது அவங்களுக்கு கேட்டுச்சோ என்னவோ தெரியலை ஒண்ணுமே சொல்லலை காடி வேகமாக அடுத்த ரோடில் திரும்பிச்சு  அங்க .....

oooOOooo
[ பாகம் : 10 ]


எங்க காடி   அந்த ரோடுல  நேரே  போயி  வளஞ்சு  திரும்பி  எதித்த பக்கத்தில  வரிசையா  இருந்த ஒரு (கிட்டங்கி) வீட்டுக்கு முன்னால நின்னுச்சு. அம்மாடி வந்தாச்சு! ' இந்த வீடா ?'ன்னு கேட்டேன், ஆமான்னாங்க அம்மான். வரிசையா ஏழெட்டு ! எல்லா கிட்டங்கியும் ஒரே மாதிரி இருந்துச்சு! 'ஓ இங்கதான் அப்பச்சி இருக்காங்களா!  இப்பவே ஓடிபோயி அப்பச்சிய பாக்கணும் சந்தோஷமா இருந்துச்சு !

அங்க அந்த வீட்டுக்கு வெளியில நெறைய்யப்பேரு நின்னுகிட்டு இருந்தாங்க!  அதை பாத்த ஆத்தா 'என்னப்பச்சி இது  இவ்வளவு பேரு நிக்கிறாக என்னன்னு தெரியலியே'ன்னு பதறிபோயி கேட்டுகிட்டு இருக்கும் போது எங்களை பாத்த அங்கருந்த வங்க  'இந்தா   வந்துட்டாங்கன்னு சொல்லிகிட்டே  காடிக்கு பக்கத்துல  வேகமா  வந்தாங்க. நானும் ஆத்தாவும் இறங்குவதற்குள் அவசரமா  முதலில் காடியை விட்டிறங்கிய அண்ணன் பின் பக்கமாக வந்து காடி கதவை     திறந்துவிட்டார்கள். அங்க வெளியில உள்ளுக்குள்ள  இருந்தவங்க  கிட்டேயும் எங்களை நோக்கி வந்துகிட்டு இருந்தவங்க              கிட்டேயும் ஒரே பதட்டம்.

ஆத்தாவை பாத்தேன் இந்த மாதிரி ஆத்தா முகத்தை இதுக்கு முன்னாடி நா பாத்ததே இல்லை பாவமா இருந்துச்சு ஏன் ? எனக்கு அவங்களை எல்லாம் பார்க்கும் போதும் , அந்த சூழ் நிலையும் எல்லாம சேர்ந்து என்னவோ  ரெம்ப பயமா இருந்துச்சு அண்ணனும் மற்றவர்களும் எங்கள் இருவரையும் உள்ளே கூட்டிச் செல்ல அங்கிருந்த அத்தனை  பேரும் எழுந்து நின்று    எங்களுக்கு  வழி விட எல்லாரும்  ஏன் இப்படி பேசாமயிருக்காங்க "எங்கே அப்பச்சி?"
                 
நான் கூட வருகிறேனா இல்லையான்னு கூடப் பார்க்கலை ஆத்தா , வேகமாக உள்ளே போ( ஓடி)னார்கள் நான் பின்னாடியே                போனேன் முதலில் உள்ள ஹாலைக் கடந்து அடுத்த கட்டுக்குள் கூட்டி போனார்கள் உள்ளே நுழையவே முடியாமல் சரியான  கூட்டம்! எல்லாரும் விலகிக் கொண்டு ஆத்தாவுக்கு இடம் கொடுத்தாங்க உள்ளே நுழைந்த ஆத்தா .....

" கதறிய கதறல் " (இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது)  அங்கே .. என் அப்பச்சி அழகாக அமைதியாக புன்னகை  மாறாமல் மல்லாந்து  படுத்து மீளாத் தூக்கத்தில் இருந்தார்கள்.

(முதல் நாள் காலையிலேயே பினாங்கிற்கு புறப்பட ஆயத்தமாகி குளிக்க சென்றவர்கள் திடீரென்று ஏற்பட்ட மாரைடைப்பினால்             எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள்).

" அப்படி அன்று என் கனவுகளை எல்லாம் தன்னோடு எடுத்து சென்ற  என் அப்பச்சியை இன்று வரை என்னால் மறக்க  முடியவில்லை".


 
(முடிந்தது)

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors