தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஷியான் பயணம்
- ராசுகுட்டி

[ பாகம் : 1 ]

பயணங்கள் எப்போதுமே எனக்கு ஈர்ப்பு தரக்கூடியதாகவே இருந்திருக்கிறது. எனக்கு முற்பிறப்பு என்று ஒன்று இருந்திருந்தால், நான் ஒரு நாடோடியாகத்தான் இருந்திருப்பேன், அதற்கான அடையாளங்கள் என்னில் எப்போதும் உண்டு. மேலும் எனக்கு புதிய இடங்களின் அழகு, அமைப்பு, வசதி, உணவு ஆகியவற்றை விட அந்த இடங்களைப் பற்றிய கதைகளைத் தேடியே என்னுடைய பயணங்கள் அமைந்திருக்கும். இருப்பினும் நான் அதிகம் பயணிப்பவனல்ல அதற்கு முக்கியமான காரணங்களாக நான் கருதும் மூன்று அம்சங்கள்,

1. சோம்பேறித்தனம், ஒரு பயணம் நிறைய முன்னேற்பாடுகளையும், பத்து நாட்களுக்கு முன்பே உறுதிசெய்ய வேண்டிய நிர்பந்தங்களையும் உள்ளடக்கி இருந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நான் அந்த பயணத்தில் இருந்திருக்க மாட்டேன் அல்லது சீக்கிரமே விலகி விடுவேன்.

2. குழு, நான் ஒரு குழுவில் இருப்பது எனது வசதிக்காக மட்டுமே எனவே என்னேரத்திலும் நான் தனியனாக மாறுகின்ற வசதியை எதிர்பார்ப்பேன். இதை நான் பகிரங்கமாக அறிவிப்பதில்லை எனினும் நான் பயணங்களில் இருந்து ரகசியமாக எதிர் பார்க்கும் ஒரு விடயம் இது.

3. மொழி, பாஷை புரியாத இடங்களில் இயல்பாகவே சுருங்கிவிடும் குணம் எனக்கு உள்ளதை நான் கவனித்திருக்கிறேன். இந்த குணம் நான் சிங்கை வந்ததும் இன்னும் உறுதி/அதிகமாயிற்று

ஆச்சரியகரமான விஷயம் என்னவெனில் இந்த மூன்று முக்கிய தடைகளை தகர்த்த என் முதல் பயணமாக ஷியான் அமைந்ததுதான்.

20 நாட்களுக்கு முன் ஏற்பாடு செய்யப் பட்ட பயணம். பிரயாணத்திற்கான ஏற்பாடுகள், தங்கும் வசதி குறித்த தேர்வு மற்றும் முன்பதிவுகள், பார்வையிட வேண்டிய இடங்களின் தேர்வு மற்றும் நுழைவுச்சீட்டுகளுக்கான முன்பதிவுகள் என்று முதல் இலக்கணத்தை மீற வேண்டியதாயிற்று, ஆனால் சாத்தியமானது நினா வூ என்னும் அலுவலகத்தோழியின் உதவிகளால் மட்டுமே!

நானும் எனது நண்பன் மோகனும் மட்டுமே பயணிகள், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஓர் குழுவில் சேர்ந்து பயணிக்கப் போகிறோம் மேலும் என்னுடைய அழைப்பின் பேரிலேயே அவன் வருவதால் தனியனாக மாறும் வாய்ப்பு முற்றிலும் மறுக்கப் பட்ட பயணமாகிப் போனது.

சீன மொழியில் எனக்கு தெரிந்த வார்த்தைகள் நான்கே நான்கு அவற்றையும் ஆறேழு முறை சொல்லி அபிநயித்தால் மட்டுமே புரிகின்ற அளவு என்னுடைய உச்சரிப்புத்திறன்

இது போக சுமார் 20-30 பேர் இருந்த எனது அலுவலகத்தில் அந்த இடத்தை பார்வையிட்டோர் என்னிக்கை 0 ஆம் பூஜ்யம், எனவே அந்த பயணத்திலிருந்து என்ன எதிர்பார்ப்பது என்று என் நண்பனுக்கு சொல்ல ஒன்றுமேயில்லாமல் போனது

இவை அனைத்தையும் மீறி என்னை அந்த பயணத்திற்கு தூண்டியது அந்த இடத்தை சுற்றி பின்னப்பட்ட கதைகளே!

பயணம் குறித்த விடயங்களுக்கு போவதற்கு முன் நான் கேள்விப்பட்ட செவிவழிக் கதையொன்றை இங்கே சொல்லியிருக்கிறேன், ஒரு நடை படித்து விட்டு வந்து விடுங்களேன்.

QinShiHuangயின் ஷி ஹுவாங் (Qinshihuang) என்ற (இந்த) மன்னன் ஆண்டது வெறும் 16 ஆண்டுகள் மட்டுமே, அதிலேயே மிகப்பெரிய வெற்றிகளை பெற்றது மட்டுமல்லாது சீனப் பெருஞ்சுவருக்கும் இவன் காலத்தில்தான் உருவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தன் மறுமையில் வாழப்போகும் பாதாள அரண்மனையை (சமாதி) நிர்மாணிக்க 7,00,000 பேரை வேலையில் அமர்த்தியிருந்தான். மேலும் இதற்கு முந்தைய அரசர்கள் இறந்தவுடன் அவன் உடலுடன் பல வீரர்களையும் மனைவிகளையும் உயிருடன் புதைத்து விடுவர். இந்த மன்னனின் சமாதியிலோ 6000-10,000 களிமண் பொம்மைகள் புதைந்து கிடந்திருக்கிறது. அந்த களிமண் பொம்மைகளைத்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் கண்டிப்பாக அவைகளைப் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்து விட்டேன்.

அந்த அனுபவங்கள் தொடரும் ...

oooOOooo
[ பாகம் : 2 ]

ஷாங்காய் நகரிலிருந்து ஷியான் நகரை அடைய ரயிலில் சுமார் 18 மணி நேரங்கள் பயணிக்க வேண்டும். 18 மணி நேரப்பயணம் கொஞ்சம் அதிகப்படி என்று நினைப்போர் விமான சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். செலவு விஷயத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது, எனினும் இந்தியாவை விட பெரிய நாடு சீனா எனவே சீனாவில் பயணித்த திருப்தி வேண்டுமெனில் ரயில் பயணமே உகந்தது என்பது என் கருத்து.

விமான நிலையத்தில் நடப்பது போன்று நமது உடமைகள் சோதனை செய்யப்பட்ட பிறகே ரயிலில் ஏற்ற அனுமதிக்கப் படுகிறது.  (தற்போதைய குண்டு வெடிப்புகளை பார்க்கும்போது சீக்கிரமே இந்நிலை இந்தியாவிலும் வந்துவிடும் என்று தோன்றுகிறது) இந்தியாவில் இருப்பதை விட அகலக்குறைவான ரயில் பெட்டிகள்தான் நாங்கள் பயணித்தவை எனினும் மிக சுத்தமாக இருந்தது. சீனர்களின் உணவு பெரும்பாலும் நூடுல்ஸ் வகையறா என்பதால் சுடுநீர் வசதியுடன் கூடிய தண்ணீர் பெட்டிகள்! இருக்கும், ஒவ்வொரு பெட்டிகளின் இடையில். மற்றபடி சுத்தமான ஓய்வறைகள், பல்துலக்க முகம் கழுவ விசாலமான தனிஇடம் அனைத்திலும் சுத்தம் சுத்தம்!

நான்கு பேர் அமருமிடத்தில் ஒரு குப்பைத்தொட்டியும் இருக்கும். இருந்தும் ஒழுக்கத்தில் நமக்கு குறைந்தவர்களல்ல சீனர்கள், எனவே ரயிலில் குப்பை கொட்டுவது அங்கங்கே நடக்கும் ஆனால் உடனேயே ரயிலில் வேலை செய்யும் பணிப்பெண்கள் சுத்தப்படுத்தி விடுவர். பயணச்சீட்டு பரிசோதகர் வேலையை பெரும்பாலும் பெண்களே செய்கிறார்கள். பெட்டியுடனே இணைக்கப்பட்ட சிறு தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கிறது நான்கு பேருக்கு ஒன்று என்ற கணக்கில். சீட்டு விளையாட்டுதான் கனஜோராக நடக்கும், நம்மிடமிருந்து கொஞ்சம் வித்தியாசப்படும் விளையாட்டின் விதிமுறைகள். காசு வைத்துதான் விளையாடிக் கொண்டிருந்தனர், நான் பார்த்தவரை ஒரு பெண்மணிதான் வென்று கொண்டிருந்தார் எனினும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பைசா பைசல் செய்யப்பட்டது.

எங்கள் எதிர் இருக்கைகளை ஆஸ்திரேலியப் பையன் ஒருவனும் ஒரு சீன யுவதியும் ஆக்ரமித்து இருந்தனர். விசாரித்ததில் அவர்களிருவரும் காதல் ஜோடிகள் என்று தெரிய வந்தது. அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறாளாம், அந்தப் பையன் தண்ணீர் குழாய்கள் இணைக்கும் (ப்ளம்பிங்) வேலை செய்பவனாம். சந்தித்த உடனே எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் அவர்களிடையே எப்படி காதல் மலர்ந்தது என்பதை கேட்டறிய முடியவில்லை எனினும் பயணம் நெடுக அவர்களிடைய செல்லச் சண்டைகளை பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தது!

காடு மலைகளூடே வெகுவேகமாய் தங்கு தடையின்றி ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. பசுமையான வயல்வெளிகளும், மிகப் பெரிய தூம்புகள் அமையப்பெற்ற தொழிற்சாலைகளும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தன ஜன்னல் வெளியே. புரியாத மொழியில் ஏதோ ஒரு நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. சுத்தமான படுக்கையும் விரிப்புகளும் இரண்டாவது யோசனைக்கு இடமளிக்கவில்லை நாளைய பொழுதை எண்ணியபடியே தூங்கிப்போனேன் படுத்ததும்.

சீக்கிரமே விழித்துவிட்டேன் மறுநாள் விடிகாலை, பல்துளக்கி முடித்ததும் சீன தேநீரொன்றை அருந்தினேன் (சீன தேநீரைப்பற்றி தனியொரு பதிவிட வேண்டும்) அதற்குள் எதிர் இருக்கை ஆஸ்திரேலிய இளைஞனும் எழுந்திருந்தான். இன்று இறுக்கங்கள் கொஞ்சம் தளர்ந்து மிக இயல்பாக பேச ஆரம்பித்தோம். அவன் வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது சீனாவில் வெளியே தெரியும்படி மின்சார கம்பிகளும், தண்ணீர் குழாய்களும் இணைத்திருப்பது பற்றி ஆதங்கப்பட ஆரம்பித்தான் அவை அவ்வப்போது ஒழுகுவது பற்றி நிறைய குறைபட்டுக் கொண்டான். இந்தியாவில் இதை விட மோசம் என்று நினைத்துக்கொண்டேன், சொல்லவில்லை என்ன இருந்தாலும் ஒரு குறையுடனா என் இந்தியாவை அவனுக்கு அறிமுகப்படுத்துவது.

காலை பத்து மணியளவில் ஷியான் நகரை அடைந்தோம். நேரே எங்களை ஹுவாச்சிங் சுடுநீர் ஊற்று இருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார்கள். மொழி தெரியாதென்பதால் எங்களுக்கு சிறப்பு கவனம் கிடைத்தது. எங்கள் வழிகாட்டியாக வந்த சீனப் பெண்மணி மிகுந்த சிறமப்பட்டு அந்த சுடுநீர் ஊற்றைப் பற்றியும் அது இருக்கும் அரண்மனை பற்றியும் அங்கு வசித்து வந்த பாவோ சி என்ற அரசி பற்றியும் கதை சொன்னார்கள். நம்ம ஊர் புலி வருது புலி வருது... கதையை ஒத்திருந்தது அது. இப்போதைக்கு அதை படித்து வையுங்கள், நாளை செல்வோம் டெரக்கோட்டா வீரர்களை சந்திக்க.

oooOOooo
[ பாகம் : 3 ]

சுடுநீர் ஊற்றையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் பொறுமையாக பார்த்து முடித்தோம். ராஜா ராணி நீச்சல்குளங்கள் என்று பாழடைந்த இடங்களை காட்டினார்கள். ஒரு பிரமிப்பும் தோன்றவில்லை. ஒரு மனிதன் படுத்துக் கொள்ளும் அளவில் ஒரு கல்தொட்டியை காட்டி இதுதான் ராஜவம்சத்தின் குளியல் தொட்டி என்றார்கள். என் நண்பன் என்னை கொலை வெறியோடு பார்த்தான். ரகசியமாய் என் காதருகே வந்து, "எங்க ஊர்ல மாடு குடிக்கிற கழனிதொட்டி கூட இதை விட பெருசா இருக்கும்" என்றான். நான் தலையாட்டிக்கொண்டே மையமாய் புன்னகைத்து வைத்தேன். இது முடிந்ததும் களிமண் (டெரக்கோட்டா) வீரர்களை பார்ப்பதாக திட்டம், "அங்கனயும் எதுனா கிளியாஞ்சிட்டி பொம்மைங்கள வச்சு ஏமாத்தப் போறானுங்க... நான் உன்ன கொல்லப்போறேன்"னு என் நண்பன் வேறு மிரட்டிக் கொண்டே வந்தான்.

உண்மையில், 18 மணி நேர பிரயாணத்தையும் பொறுத்து, ஆயிரக்கணக்கில் காசையும் செலவழித்து, என் நண்பர்கள் யாரும் கூட சென்றிராத இடத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்.

* யின் வம்சத்தை நிறுவி சீனா என்ற பேரரசு உருவாக காரணமாயிருந்த மன்னனின் தலைநகரை நேரில் பார்ப்பதற்காகவா?

* 13 அதிமுக்கிய சீன வம்சங்களின் ஆட்சியின் போது ஷியான் நகரம்தான் தலைநகராக இருந்திருக்கிறது எனவே ஷியானைப் பார்த்தால் சீன வரலாற்றில் வெகுதூரம் பயணித்த திருப்தி கிடைக்குமே அதற்காகவா?

* யுவான் சுவாங் என்ற புத்த துறவி இந்தியா சென்றுவந்து நிறுவிய 'பகோடா'க்கள் எனப்படும் புத்த தளங்களை பார்வையிடவா. (இங்குதான் அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப் படுகின்றன)

* இல்லை இவையனைத்தையும் விட, உண்மைதான் என்று உறுதி செய்யப் படாத ஒரு நாடோடிக் கதைக்காக! ஆம் கதைகள்தான் பல சமயங்களில் என் பாதையை நிர்ணயிக்கிறது. எனக்கு தேவதைக்கதைகளில் இன்றளவும் நம்பிக்கை உண்டு... ஓ விலகிச் செல்கிறேனோ சரி டெரக்கோட்டா வீரர்களை பார்த்துவிடுவோம் இன்னும் ஓரிரு நொடிகளில்.
 
1974-ம் வருடம் ஒரு வயலில் கிணறு தோண்டும்போது தற்செயலாக வெளிப்பட்டிருக்கின்றனர் டெரக்கோட்டா வீரர்கள். அவர்களுடன் சேர்ந்து சீன வரலாற்றைப் பற்றிய பல அறிய தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. ஷியானை சுற்றி மட்டுமே பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. மேலும் பல இடங்களிலும் தற்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன அவை இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படவில்லை. இதுவரை கண்டுபிடித்தவையெல்லாவற்றையும் ஒரு மிகப் பெரிய மண்டபம் போல் அமைத்து மூன்று குழிகளில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் இருக்கும் இக்களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. எல்லாமே ஆளுயர பொம்மைகள் அதுவும் அன்றைய கால கட்டத்தில் எந்த வகையான வீரர்கள் இருந்தார்களோ அவர்களை, தோற்றம், உடை, ஆயுதம் முதற்கொண்டு முகங்களில் பிரத்யேகமான உணர்ச்சிகள் வரை தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. நின்ற நிலைகளில், அமர்ந்த நிலைகளில், ஆயுதமேந்தி, கைகளை கட்டி என அனைத்தும் அசத்தல். சரி குழிவாரியாக பார்த்துவிடுவோமா?

குழி 1

14000 சதுர அடிக்கும் அதிகமான இதுதான் ஆகப்பெரிய குழி. போர்ப்படை போலவே சுமார் 6000 களிமண் வீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் கையில் உண்மையான ஆயுதங்களோடு காட்சியளிக்கின்றனர். முன்வரிசையில் வில்லாளிகளும் பின்வரிசைகளில் நீண்ட ஈட்டி தரித்த வீரர்களுமாய்  (கிளேடியேட்டர், அலெக்ஸாண்டர் போன்ற படங்களில் வரும் போர்க்காட்சிகளை நினைவுபடுத்தின) உண்மையிலேயே மிகப்பெரிய படை ஒன்று நம் ஆணைக்கு காத்திருப்பது போல் இருக்கும். 50க்கும் மேற்பட்ட ரதங்களும் உண்டு அந்த வரிசையில்.

குழி 2

ஏறக்குறைய 12000 சதுர அடியில் அமைந்துள்ள இந்தக் குழியில், 300க்கும் மேற்பட்ட வில்வீரர்கள் (cross bow archers) நின்று கொண்டும், முழங்காலிட்டு அமர்ந்துகொண்டும் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். நான்கு நான்கு குதிரைகளாய் இழுக்கும் சுமார் 60 ரதங்களும் உண்டு. மேலும் பல்வேறு ஆய்தமேந்திய காலாட்படையும் பல்வேறு குழுக்களாய் ரதங்களோடு நிறுத்திவைக்கப் பட்டுள்ளன.

குழி 3

500 சதுர அடியில் அமைந்துள்ள மிகச்சிறிய இடம் இது. சுமார் 60 காலாட்படை வீரர்கள், ஒரே ஒரு ரதம் நான்கு குதிரைகளோடு இருக்கும் இந்த இடத்தை போர் நடக்கும் இடங்களில் இருக்கும் தளபதிகளின் ஆலோசனை மையமாக பார்க்கிறார்கள்.


நான் கேள்விப் பட்ட கதை மட்டும் உண்மையாக இருந்து அமைச்சன் மகளின் திட்டம் மட்டும் தவிடுபொடியாயிருப்பின் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளையல்லவா இப்படி கண்டெடுத்திருப்போம் என்று நினைக்கையில் என் முதுகுத் தண்டு ஜில்லிட்டுத்தான் போனது ஒரு நொடி ஒரே ஒரு நொடி.

தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் பாதரசத்தை கலந்து துருப் பிடிக்காத உலோகத்தில் ஆயுதங்கள், ரதங்கள் எல்லாம் கண்டுபிடிப்புகள் வரிசையில் இருக்கின்றன. 2500 வருடங்கள் கழித்தும் களிமண் பொம்மைகள் கூட இன்றளவும் உறுதியாக இருக்கின்றன. இந்த களிமண் பொம்மைகள் 900-1000 செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் சுடப்பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. வெறும் மரம் அல்லது கரி கொண்டு அவ்வளவு அதிக வெப்பத்தை உண்டாக்கியிருப்பதை நினைக்கும்போது அந்தக் காலத்திலேயே நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்களை எண்ணி வியப்புறமுடிகிறது. ஆனாலும் என்ன செய்வது மனிதகுலம் ஒவ்வொரு போரின்போதும் வரலாற்றை அழித்து முதல் பக்கத்திலிருந்தல்லவா எழுத ஆரம்பிக்கிறது.

(தொடரும்)

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors