தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : இலக்கியவாதி
- சத்யராஜ்குமார்

[ பாகம் 1 ]

உஷ்ணத்தில் உடம்பு கொதித்தது. மூச்சிறைப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது. தெறித்துக் கிழிந்து விடுவதைப் போல் உடலோடு இறுகியிருந்த பனியன் வியர்வை வெள்ளத்தில் நனைந்தது. இனி மேலும் முடியாது என்பதைப் போல நரம்புகள் ஒத்துழைக்க மறுத்துத் தளர்ந்தன.

டம்பெல்ஸை பொத்தென்று கீழே போட்டான். மொட்டை மாடி சுவற்றை இரு கைகளாலும் பிடித்தபடி குனிந்து, வாய் பூராவும் மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான் கந்தசாமி.

மாலை நேரத்துச் சூரிய ஒளியில் அவன் புஜங்கள் பச்சை நரம்புகள் புடைக்க வியர்வை ஈரத்தில் மின்னின.

'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ...'

முணுமுணுவென்ற அந்தக் குரல் எப்போது நின்றது?

பின் வீட்டையும், பக்கத்து வீட்டையும் உற்றுப் பார்த்தான். புகை போக்கி வழியே வெட்கத்தோடு நெளியும் அடுப்படிப் புகையைத் தவிர எந்தச் சலனமும் இல்லை.

கையில் புத்தகத்துடன் மொட்டை மாடியை அளந்து கொண்டிருந்த நைட்டி உஷாவும், மிடி ரமாவும் எப்போது மறைந்தார்கள்?

நரம்புகள் தெறிக்க, சதைகள் உருள உடற்பயிற்சி செய்யும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் வெறும் பிரமையா, சே !

" கந்தசாமி... "

குரல் கேட்ட திசையில் குனிந்து பார்க்க,எதிர் வீட்டிலிருந்து முரளி கையசைத்தான்.

" உன்னோட உதவி வேணும் கந்தசாமி ! "

மெலிதாய் கோடு போட்ட சட்டையை பேன்ட்டுக்குள் நுழைத்து, பெல்ட்டின் பக்கிள்ஸ் பளபளக்க கையில் ஃபைலோடு நின்றிருந்தான்.

" டிராப் பண்ணணுமா? "

" ஆமா. வேலை விஷயமா அம்பிகை டெக்ஸ்டைல்ஸ் மேனேஜரை பார்க்கணும். பஸ்ஸுல போனா லேட் ஆயிடும். "

" இப்பதான் எக்ஸர்சைஸ் பண்ணி முடிச்சேன். குளிக்கணும். பத்து நிமிஷம் ஆகும். பரவாயில்லையா ? "

" பஸ் பிடிச்சு போக எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். நீ பதினஞ்சு நிமிஷத்தில் குளிச்சு ரெடி ஆகி வந்தாலே போதும். "

இறுக்கிப் பிடித்த பனியனைக் கழற்றி வியர்வையைப் பிழிந்து, உடம்பு பூராவும் துடைத்துக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கினான் கந்தசாமி.

பக்கத்து வீட்டிலிருந்து குரல் கேட்டது.

" உஷா, அதுக்குள்ளே படிச்சு முடிச்சிட்டியா? இந்த வருஷம் ப்ளஸ் டூ. ஞாபகத்தில் வெச்சிக்கோ. "

" நிம்மதியா படிக்கறதுக்கு இந்த வீட்டில் ஒரு இடம் இருக்கா? கீழே வந்தா டிவி சீரியல். மேலே போனா... "

" மேலே போனா என்னடி? என்ன முணுமுணுக்கறே? "

" அங்க ஒரு குரங்கு கரணை கரணையா சதையைக் காமிச்சிட்டு உவ்வே.... அதைப் பார்த்தாலே வாந்தியா வருது. "

கந்தசாமிக்குப் பிடரியில் அறைந்த மாதிரி இருந்தது. இவர்களுக்கு என்னதான் பிடிக்கும்? சினிமாவில் கமல்ஹாசனும், விக்ரமும் காண்பித்தால் ரசிக்கிறார்கள். இங்கே ஒருவன் மாங்கு மாங்கென்று பாடுபட்டு பில்டப் செய்வது உவ்வேயா?

வெறுப்போடு தண்ணீரை அள்ளி மேலே கொட்டிக் கொண்டான்.

அன்னை சத்யா பஜார் சென்ட்டை தெளித்துக் கொண்டு தயாராகி வெளியே வந்த போது இன்னமும் வாசலில் காத்துக் கொண்டிருந்தான் முரளி.

எச் பியில் வாங்கின ஹாண்டா ஸ்ப்லெண்டரை உதைத்து வெளியே தள்ளிக் கொண்டு வர, முரளி பில்லியனில் தொற்றிக் கொண்டான்.

" வேலையெல்லாம் எப்படிப் போகுது கந்தசாமி? "

" போகுது. நைட் ஷிஃப்ட் மட்டும்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. உனக்கு என்னடா ஆச்சு? நாலு மாசத்தில் மூணு வேலையை உதறித் தள்ளிட்டே? "

" எதுவுமே ஒத்து வர மாட்டேங்குது சாமி. தினமும் காலைல நீ பைக்ல போறப்ப அப்பாகிட்ட இருந்து எனக்கு ஒரு அர்ச்சனை இருக்கும். உன் கூட படிப்பை முடிச்சவன் ஒழுங்கா வேலைக்குப் போறான். பைக் வாங்கிட்டான். நீ ஒரு இடத்தில் ஒரு மாசத்துக்கு மேல தங்க மாட்டேங்கிறேன்னு ஏத்து விழுது. தலவிதி. "

சில்லென்று குளிர்காத்து முகத்தில் அறைந்ததில் சட்டென மூட் மாறினான் முரளி.

" ஆனா, ஒரு நாள் இந்த உலகத்துக்கு நான் யார்ங்கறது தெரியும் கந்தசாமி. என்னோட இன்னொரு முகம் நம்ம தெருவுல யாருக்குமே தெரியாது. "

" என்னடா பாட்சா மாதிரி என்னமோ புலம்பறே? "

கந்தசாமியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் முரளி சட்டெனக் கத்தினான். " ஒரு நிமிஷம் இங்கே பைக்கை நிறுத்து. "

அது ஒரு பொதுக் கழிப்பறை. அங்கே போய் முரளி செய்த காரியம் கந்தசாமியை திடுக்கிட வைத்தது.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் 2 ]


முரளிக்கு இயற்கை உபாதையோ என்றுதான் முதலில் நினைத்தான் கந்தசாமி.

ஆனால் கிட்டத்தட்ட ஐந்து நிமிஷங்களுக்குப் பிறகு கழிப்பறையை விட்டு அவன் வெளியே வந்த போது, ஆள் அடையாளமே மாறியிருந்தான்.

பழைய எம்ஜியார் படங்களில் பல்லவி முடிந்ததும், அவரும் ஜெயலலிதாவும் (அல்லது லதாவும் அல்லது மஞ்சுளாவும்) ஒரு புதருக்குப் பின்னே மறைந்து விட்டு, சரணத்தின் போது முற்றிலும் வேறு உடையில் வெளியே வருவார்கள். இதெல்லாம் என்ன ஒரு கடைந்தெடுத்த அபத்தம். நிஜத்தில் எங்காவது நடக்குமா என்று நினைத்துக் கொள்வான். நடக்கிறதே ! இதோ கண் முன்னே நடக்கிறதே !

வெள்ளை வெளேரென்று பைஜாமா உடையின் சுருக்கங்களை சரிப்படுத்திக் கொண்டே வெளியே வந்தான் முரளி.

ஏற்கெனவே அணிந்திருந்த பேன்ட், சர்ட்டை பாக்ஸ் ஃபைலுக்குள் திணித்து மூடினான். மவுண்ட் ரோட் தபாலாபீஸருகே ப்ளாட்பாரத்தில் பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் கோழி முட்டை வடிவ கண்ணாடியை வேறு முகத்தில் மாட்டியிருந்தான்.

" டேய் முரளி, என்னடா இது கோலம்? "

" நாம இப்போ அம்பிகை டெக்ஸ்டைல்ஸ் மேனேஜரைப் பார்க்கப் போகலை. "

" பின்னே ? "

" என்னை நீ பிலிம் சேம்பர் ஹால்ல டிராப் பண்ணிடு கந்தசாமி. "

" பிலிம் சேம்பர் ஹாலா ? அது எங்கே இருக்கு? "

" ஜெமினி ஃப்ளைஓவருக்குக் கீழே இருக்கு. பைக்கை ஓட்டு. நான் வழி சொல்றேன். "

நிறைய கேள்விகளோடு ஆக்சலரேட்டரை முறுக்கினான் கந்தசாமி.

" நீ பண்றதெல்லாம் புதிரா இருக்குடா. எதுக்கு இந்த வேஷம்? "

" இது வேஷமில்லை. இதுதான் நிஜம். முன்னால நான் போட்டிருந்தேனே... டக் இன் பண்ணி, பெல்ட் போட்டு, பைலைக் கையில் பிடிச்சிட்டு... அதுதான் வேஷம். "

" குழப்பாதடா. "

" கந்தசாமி, நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கேன். அதோட வெளிப்பாடுதான் இதெல்லாம். "

" என்ன தீர்மானம்? என்ன வெளிப்பாடு? நீ தமிழ்தான் பேசறியா? "

" எனக்குத் தொழில் கவிதைன்னு முண்டாசுக் கவிஞன் நெஞ்சை நிமிர்த்திட்டு சொன்னானே... "

" யாரது முண்டாசுக் கவிஞன்...? "

" பாரதியார்டா. அதே மாதிரி எனக்குத் தொழி்ல் எழுத்துன்னு நான் முடிவு பண்ணியிருக்கேன். "

தட்டென்று பைக்கை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தான் கந்தசாமி.

" முரளி ? "

" என் பேர் முரளி இல்லடா. முப்பாட்டன். அந்தப் பேர்ல நான் எழுதின முதல் கதை போன வாரம் வெளிவந்திருக்கு. "

" என்னது... நீ கதை எழுதி புக்குல வந்திருக்கா? குமுதத்திலயா, இல்லே குங்குமத்திலயா? அம்மா ஒரு கதை விடாம படிப்பாங்கடா. சொன்னா ஆச்சரியப்படுவாங்க. "

முரளி என்கிற முப்பாட்டன் வாய் விட்டுச் சிரித்தான். " ஹ, குமுதமா? அந்த பத்திரிகைக்கெல்லாம் என் கதையை வெளியிடற தகுதி கிடையாது. 'ற' ன்னு ஒரு சிறுபத்திரிகைலதான் என்னோட இலக்கியப் பயணத்தை ஆரம்பிச்சிருக்கேன். "

" ... 'ற' ன்னு ஒரு புக்கா ? நான் கேள்விப்பட்டதே இல்லையே? "

" குமுதத்தையே துணுக்கை மட்டும் படிச்சிட்டு தூக்கிப் போடற உன்னை மாதிரி ஆளுக்கு 'ற' பத்தியெல்லாம் சொன்னா புரியாது. "

" சொன்னா தெரிஞ்சிட்டுப் போறேன். அதென்ன 'ற' ன்னு பேரு? அதுக்கு ஏதாச்சும் அர்த்தம் இருக்கா? "

" அது ஒரு குறியீடு. அந்த வல்லின எழுத்தைப் போல வன்மையான எழுத்துக்களை வெளியிடக் கூடிய அற்புதமான பத்திரிகை அது. "

கந்தசாமி தலையை அழுத்தமாய் சொறிந்து கொண்டான். மேற்கொண்டு இது சம்பந்தமாய் அவனிடம் கேட்டால் தனக்குத்தான் மண்டை சூடாகிப் போகும் என்று புரிந்தது.

அதிர்ச்சியில் நின்று போயிருந்த பைக்கை மறுபடியும் உதைத்து ஸ்டார்ட் பண்ணிய கந்தசாமியால் அமைதியாய் இருக்கவும் முடியவில்லை.

மனசுக்குள் இயல்பாகக் கிளம்பிய அடுத்த கேள்வியை வாய் விட்டுக் கேட்டும் விட்டான். அந்தக் கேள்வி முப்பாட்டனை அந்தளவுக்கு கோபப்படுத்தும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

(தொடரும்) 

oooOOooo
[ பாகம் 3 ]

முப்பாட்டனின் கண்கள் சிவந்து போய் விட்டிருந்ததை ரியர் வியூ கண்ணாடியில் கந்தசாமியால் பார்க்க முடிந்தது.

" ... 'ற'-ல வெளி வந்திருக்கிற அந்தக் கதைக்கு எவ்வளவு பணம் தருவாங்க? " என்ற மிகச் சாதாரணமான கேள்வியைத்தான் கேட்டான்.

" நிறுத்துடா பைக்கை... " என்று சீறி விட்டான் முப்பாட்டன். " இப்படி ஒரு கேவலமான கேள்வியைக் கேப்பேன்னு தெரிஞ்சிருந்தா உன் கூட நான் பைக்ல வந்திருக்க மாட்டேன். என்னை இங்கயே இறக்கி விட்டுட்டு நீ போயிடு. "

முப்பாட்டனின் உடம்பு ஏனோ நடுங்கிக் கொண்டிருந்ததையும், உஷ்ணம் அதிகரித்திருந்ததையும் தோள்ப்பட்டையைப் பிடித்திருந்த அவனது உள்ளங்கையின் மூலமாகக் கந்தசாமியால் உணர முடிந்தது.

அவன் கத்தினான் என்பதற்காக கந்தசாமி உடனடியாய் பைக்கை நிறுத்தி விடவும் இல்லை. ஆனால் கொஞ்சம் திகைத்துப் போயிருந்தான். பதிலுக்குக் கோபம் கொள்ளுவதைக் காட்டிலும், அந்த விநோதமான கோபத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான்.

" நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா முரளி? "

" பொருள் சார்ந்த உலகத்தில் வாழ்ந்துட்டிருக்கிற உன்னைச் சார்ந்து நான் புறப்பட்டேன் பாரு... அதான் தப்பு. லெளகீகத்தை நோக்கிப் போய்ட்டிருக்கிற நீ இதைத் தவிர வேறென்ன கேப்பே... "

காலேஜில் படிக்கிற வரைக்கும் இப்படிப்பட்ட கரடுமுரடான சில வாக்கியங்களை எப்போதாவதுதான் பயன்படுத்துவான் முரளி. ஆனால் இப்போதெல்லாம் பத்து நிமிஷத்தில் ஐந்து முறை அப்படிப் பேசுகிறான்.

இது குறித்தும் சொல்லத்தான் நினைத்தான். ஆனால் அவனுடைய இன்னொரு கோபத்துக்கு பயந்து பழைய விஷயத்தையே இன்னும் கொஞ்சம் விபரமாகக் கேட்டான்.

" எனக்கென்னடா தெரியும். நீதான் எழுத்து எனக்குத் தொழில்... அப்படி இப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீராவேசமா சொன்னே. கதை எழுதினா பணம் கிடைக்கும்ன்னுதான் நான் நினைச்சேன். "

" என்னைப் பொறுத்த வரைக்கும் பணம் ஒரு அற்பமான விஷயம் . நீ மதிப்புக் குடுத்தாத்தாண்டா அது பணம். இல்லைன்னா வெறும் காகிதம். அதுவும் இடத்துக்கு இடம் மாறக் கூடியது. அந்தக் காகிதத்தை வெச்சு இங்கே நீ அஞ்சு கிலோ உளுத்தம்பருப்பு வாங்குவே. இங்கிலாந்துல அதே காகிதத்தைக் காட்டி கடலை மிட்டாய் கூட வாங்க முடியாது. "

கந்தசாமிக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது. நிறையவே புரியாத மாதிரியும் இருந்தது. அவன் சொல்லியதில் அவனுக்கு விளங்காததைக் கேள்வியாய் மாற்றிக் கேட்பதற்குக் கூட தெரியாமல் போகவே, இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்தி விடுவது நல்லது என்று நினைத்து, " பிலிம் சேம்பர் ஹாலுக்கு லெப்ட்ல திரும்பணுமா, இல்லை ரைட்லயா? " என்றான்.

" பாலத்தை ஒட்டி லெப்ட்ல போயி மறுபடி லெப்ட்ல திரும்பணும். விழா ஆறு மணிக்கு ஆரம்பிச்சிருவாங்க. "

" என்ன விழா? "

" புத்தக வெளியீட்டு விழா. "

" என்ன புஸ்தகம்? "

" முன்னிரவில் தொலைந்த பனித்துளிகளும், முற்றத்துக் கட்டிலின் உடைந்த காலும், ஒரு தெருநாயும். "

" என்ன புஸ்தகம்? "

" அதான் சொன்னேனே? "

" புஸ்தகத்தோட பேரைக் கேட்டா உடைஞ்ச கால், தெரு நாய்ன்னு என்னவோ சொல்றே... "

" அதான் புத்தகத்தோட பேரு. "

" யாரு எழுதினது? "

" எட்டாம் புலிகேசி. "

" என்னடா முரளி, புக் பேரு எழுதினவர் பேரு எல்லாமே ஒரு மாதிரி எக்குத்தப்பா இருக்கு. எங்கடா இந்தப் பேரெல்லாம் புடிக்கறிங்க ? "

முப்பாட்டன் கந்தசாமியை லேசாய் முறைத்தான். " என்ன கிண்டலா? பொறுமையா பதில் சொன்னா நீ இதுவும் கேப்பே, இன்னமும் கேப்பே. எட்டாம் புலிகேசி மாந்த்ரீக யதார்த்தவாதத்தில் பின்னு பின்னுன்னு பின்னுவார். "

என்னது, மாந்த்ரீக யதார்த்தவாதமா ? என்று கந்தசாமி கேட்கும் முன்பாகவே முப்பாட்டன் சலிப்புடன் சொல்லி விட்டான்.

" ஹ்ம். இலக்கியம்ன்னா லிட்டர் என்ன விலைன்னு கேக்கற உன் கிட்டே போய் நான் இதையெல்லாம் பேசிட்டிருக்கேன் பாரு. "

பிலிம் சேம்பர் ஹாலின் முன்னால் பைக்கை நிறுத்தினான் கந்தசாமி. பேனர்கள் காற்றில் ஆடின. ஆங்காங்கே திட்டுத் திட்டாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

கந்தசாமிக்கு ஆச்சரியமாய் இருந்தது. விழா என்றால் கல்யாணம், காதுகுத்து மட்டும்தான் அவனுக்குத் தெரியும். இப்படி எல்லாம் கூட சில விழாக்கள் நடைபெறுகிறதா? அதற்கு மனிதர்கள் கூடுகிறார்களா? இது நடைபெறும் என்று எப்படி இவர்களுக்குத் தெரியும்?

" தாங்க்ஸ் கந்தசாமி. பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்துடறேன். நான் இங்கதான் வந்திருக்கேன்னு யார் கிட்டேயும் மூச்சுக் காட்டாதே. " முப்பாட்டனின் குரல் கந்தசாமியின் யோசனையைக் கலைத்தது.

கந்தசாமி பைக்கை ஸ்டாண்ட் போட்டான். ஹாலை நோக்கி நடந்து செல்லும் முப்பாட்டனை அவசரமாய்க் கூப்பிட்டான்.

" முரளி, ஒரு நிமிஷம் நில்லு. நானும் உள்ளே வந்து புஸ்தக வெளியீட்டு விழாவைப் பார்க்கலாமா? "

(தொடரும்)

oooOOooo
[ பாகம் 4 ]

முப்பாட்டன் கந்தசாமியை ஒரு சில விநாடிகளுக்கு உற்றுப் பார்த்தான்.

அது திகைப்பா, ஏளனமா என்று அவன் வாய் விட்டு்க் கேட்கும் வரை புரிந்து கொள்ள முடியவில்லை.

" உன்னால பொறுமையா கூட்டத்துல உக்காந்திருக்க முடியுமா கந்தசாமி? "

" ஏன்? "

" உள்ளே ரெக்கார்ட் டான்ஸெல்லாம் எதுவும் போட மாட்டாங்க. குறைஞ்சது பத்துப் பேச்சாளர்களாவது இருப்பாங்க. பின் நவீனத்துவம், முற்போக்கு இலக்கியவாதம் பத்தியெல்லாம் ஆழமா பேசுவாங்க. "

" உடைஞ்ச கட்டில் கால்ன்னு ஒரு புஸ்தகம் பேரு சொன்னியே... அதை வெளியிடற விழாவில் அதைப் பத்தி மட்டும்தானே பேசணும். அப்படிப் பேச மாட்டாங்களா? "

" பேசுவாங்கடா. அதிலிருக்கிற இலக்கியக் கூறுகளைப் பத்திப் பேசற அதே சமயம், தற்கால இலக்கியத்தின் போக்குகளைப் பத்தியும், உன்னைப் போல பாமர வாசகன்களை உயர்ந்த இலக்கியத்தை நோக்கி நகர்த்தறதைப் பத்தியும் இந்த மாதிரி விழாக்களில்தானே பேச முடியும். "

" கலைஞர், ஜெ எல்லாம் கல்யாணம் பண்ணி வெச்ச கையோட அதே மேடையில் சூடா ஏதாவது அரசியல் பேசிட்டுப் போறாங்களே அது மாதிரியா ? "

" ஏய்... "

" சரி முறைக்காதே. எனக்கு போரடிக்கிற மாதிரி இருந்தா நான் எந்திரிச்சுப் போயிடறேன். ரயில் தண்டவாளம் மாதிரி நீளமா ஒரு தலைப்பை சொன்னியே... அதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் இன்ட்ரஸ்ட் ஆயிருச்சு. அதைப் பத்தி என்னதான் வியாக்கியானம் சொல்லுவாங்கன்னு கேக்க ஆசையா இருக்கு. பொதுவா நானெல்லாம் டைட்டில்ன்னா பாட்சா, அருணாசலம்ன்னு சின்னதா இருக்கும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். "

" ஏய் நீ ரொம்ப அழகா இருக்கேன்னு ஒரு படம் வந்துச்சே தெரியாதா? "

" அதான் ஓடலையே. சரி, சரி. டென்ஷன் ஆவாதே. ஏற்கெனவே லேட் ஆயிரும்ன்னுதானே என்னை டிராப் பண்ணச் சொன்னே."

இருவரும் முகப்பை அடைந்தார்கள்.

அங்கிருந்த வராந்தாவில் வாடகைக்கு எடுத்த டைனிங் டேபிளின் மேல் துணியை விரித்து புத்தகங்களைப் பரப்பி வைத்திருந்தார்கள்.

எல்லாப் புஸ்தகங்களிலும் சொல்லி வைத்தாற்போல் குச்சி குச்சியாய் உருவங்களும், கோடு கோடாய் எழுத்துக்களும் இருந்தன.

அடுக்கி வைத்திருந்த 'முன்னிரவில் தொலைந்த பனித்துளிகளும், முற்றத்துக் கட்டிலின் உடைந்த காலும், ஒரு தெருநாயும்' புஸ்தகம் மட்டும் சரசரவென்று உயரம் குறைந்து கொண்டே வந்தது.

எல்லோரும் அதைக் கையில் வைத்துக் கொண்டு ஆங்காங்கே நின்று கிசுகிசுப்பாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். புத்தகத்தைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பார்களோ என்று கந்தசாமி நினைத்துக் கொண்டான்.

ஆறு மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கவே, முப்பாட்டன் அங்கிருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாய்த் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டு நின்றான். ஓட்டைக் கண்ணாடியும், பால் வெள்ளை ஜிப்பாவும் போட்டிருந்ததால் எல்லோரும் அவனைத் தவறாமல் ஒரு முறை கவனித்துப் பார்த்தார்கள்.

கந்தசாமி அவன் காதுக்கருகில் கிசுகிசுத்தான். " முரளி, நீ லெட்ரின்ல போய் டிரஸ் மாத்தினது வீண் போகலை. எல்லாரும் உன்னையே பார்க்கறாங்க. "

" ஆமாடா. எழுத்தாளன்னா எழுதினா மட்டும் போதாது. அவனுக்குன்னு ஒரு அடையாளம் வேணும். சரி, சரி. நீ சும்மா தொணதொணக்காம இரு. உள்ளே போய் உக்காரலாமா ? "

அப்போது ஒரு வளையல் கை அவன் தோளைத் தட்டியது.

" பாராட்டுக்கள் முப்பாட்டன். உங்க கதையை 'ற' ல படிச்சேன். அற்புதமா பண்ணியிருக்கிங்க. "

திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்த முப்பாட்டன் கண்களில் சட்டென பல்பு எரிய படபடப்போடு கேட்டான்.

" நீங்க... நீங்க... "

" பார்த்திங்களா. முதல் கதை வந்தவுடனே நீங்க யாருன்னு கேக்கறிங்க. "

" இல்லேங்க. உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா சட்ன்னு நினைவுக்கு வரலை. "

" கடற்கரை கவிதைக் கூட்டத்துக்கு வாரம் தவறாம நான் வருவேன். அங்கே நாம பேசியிருக்கோம். நான் கவிஞர் மாங்கனி. "

" மை காட். ஸாரிங்க மாங்கனி. ஐயம் வெரி ஸாரி. "

" ஸாரி இருக்கட்டும். அந்தக் கதையில் இரண்டாவது பத்தியிலும், முடிவுக்கு முந்தைய பத்தியிலும் எனக்குக் கொஞ்சம் முரண்பாடு இருந்தாலும் மொத்தத்தில் ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்க கதை இலக்கிய வட்டத்தில் ஒரு புயலைக் கிளப்பினாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை. அதைப் பத்தி ஒரு அரை மணி நேரமாவது உங்க கிட்டே தனியா விவாதிக்கணும். "

கந்தசாமி மி.க வைக் கண்ட ப.கா மாதிரி அவளை வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்த போது - அவளுக்கருகில் ஏதோ புகையவே, பதட்டமாய், " ஏங்க. ஏதோ புகையற மாதிரி இருக்கு. என்னன்னு பாருங்க. "

மாங்கனி சிரித்துக் கொண்டே, சாவகாசமாய் சிகரட் சாம்பலைத் தட்டினாள்.

" ஏங்க. பொம்பளை கிட்டே இருந்து புகையக் கூடாதா? "

(தொடரும்) 

oooOOooo
[ பாகம் 5 ]

பேயறைந்த மாதிரி நின்றிருந்த கந்தசாமியைப் பார்த்து, " யார் இவர்? " என்றாள் மாங்கனி.

முப்பாட்டன் புன்னகையோடு அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தான். " இவன் என்னோட ப்ரெண்ட் கந்தசாமி. இவனுக்கு தற்கால இலக்கியத்தைப் பத்தியோ, இலக்கியவாதிகளைப் பத்தியோ பரிச்சயம் இல்லை. அதான் உங்களைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டான். "

கந்தசாமியிடம் திரும்பினான். " கந்தசாமி, மாங்கனி நீ சாதாரணமா நம்ம தெருவில் பார்க்கிற பொம்பளைங்க ரகத்தைச் சேர்ந்தவங்க இல்லை. ஆணாதிக்கவாதிகளுக்கு மட்டையடி கொடுக்கிற மாதிரி எழுதறவங்க. எழுதற மாதிரி வாழ்ந்தும் காட்டுவாங்க. அவங்க கவிதைகளை நல்ல புரிதலோட நீ படிச்சின்னா பெண் சமுதாயம் பத்தின உன்னோட மதிப்பீடுகளெல்லாம் தகர்ந்து நொறுங்கிப் போயிடும். "

முப்பாட்டனின் இலக்கிய ஜார்கன்களில் அடிபட்டு, பேந்தப் பேந்த விழிப்பதைக் கேவலம் ஒரு பெண்ணின் முன்னால் எப்படிக் காண்பிப்பது என்று பிற்போக்கு இலக்கியத்தனமாய் யோசித்த கந்தசாமி, வெறுமனே மண்டையை மட்டும் எல்லாம் புரிந்த மாதிரி ஆட்டி வைத்தான்.

ஹாலுக்குள் மைக் சத்தம் கேட்கத் துவங்க, " கூட்டம் தொடங்கிட்டாங்க. வாங்க உள்ளே போலாம். " என்றாள் மாங்கனி.

தப்பித்தோம், பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டபடி, முப்பாட்டனின் பின்னால் பூனைக்குட்டி மாதிரி பதுங்கிச் சென்றான்.

ஒரு குட்டி சினிமா தியேட்டர் போல இருந்த ஹாலின் குஷன் இருக்கைகளில் ஆங்காங்கே மனிதத் தலைகள் தெரிந்தன. பின் வரிசையில் இடத்தைப் பிடித்து உட்கார்ந்தார்கள்.

பின்னாலிருந்த ஒரு கோஷ்டி, " ஹலோ மாங்கனி, இங்க வாங்களேன். " என்று கூப்பிடவே, அவள் அங்கு சென்று விட்டாள்.

மெர்க்குரி வெளிச்சத்தில் பளீரிட்ட விழா மேடையில் யாரோ யாருக்கோ சால்வை போர்த்திக் கொண்டிருந்தார்கள்.

திருவிழாவில் தொலைந்து போன குழந்தையைப் போல கந்தசாமி சுற்றும் முற்றும் பார்த்தான். பெண்களைப் போல ஜடா முடி வளர்த்த ஆண்களையும், ஆண்களைப் போல க்ராப் வெட்டிக் கொண்ட பெண்களையும் ஒரு முறைக்கு இரண்டு முறை குழப்பத்தோடு பார்த்துத் தெளிந்து கொண்டிருந்தான்.

" புக் எழுதின எட்டாம் புலிகேசி யாருடா? " என்றான் கந்தசாமி.

" கறுப்புச் சட்டையோட மேடையில் மய்யமா உக்காந்திருக்காரே... அவர்தான். "

" விருமாண்டி மீசைக்காரரையா சொல்றே? "

" பேரலல் சினிமான்னு ஜல்லியடிச்சுட்டு வந்த அந்த கேவலமான படத்தை இங்க எதுக்கு இழுக்கறே? "

விருட்டென்ற அவனது அனகோண்டா சீறலை கந்தசாமி சற்றும் எதிர்பார்க்கவில்லை. கமல் மெனக்கெட்டு நடித்த ஆஸ்கார் ரேன்ஜ் படம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். எட்டாம் புலிகேசியின் மீசை அப்படி இருந்ததென்றுதானே சொல்ல வந்தான். அதற்கேன் இப்படி ஒரு கோபம்?

" அது வந்து ஒரு அடையாளத்துக்காக... "

" சரி, சரி. இனிமே அந்தப் படத்தைப் பத்திப் பேச்செடுக்காதே. இப்ப அதைப் பத்தி பேச எனக்கு நேரமில்லை. விழாவைக் கவனிக்கணும். இந்த விருமாண்டி விவாதத்தை இன்னொரு நாள் நான் வெச்சிக்கத்தான் போறேன். "

அவன் மட்டும் அந்தப் படத்தின் பேரைச் சொல்கிறானே என்று திகைத்த கந்தசாமி பேச்சை மாற்றினான்.

" எழுதறவனுக்கு அடையாளம் முக்கியம்ன்னு அப்பவே நீ சொன்னப்ப எனக்கு சரியா புரியலை. இந்த ஹாலுக்குள்ளே வந்தப்புறம்தான் புரியுது. அதோ அங்க ஒரு சிவத்த ஆள் போனி டெயிலோட உக்காந்திருக்கார். மாங்கனிக்கு சிகரட். எட்டாம் புலிகேசிக்கு விருமா... " உதட்டைக் கடித்தவன், " பெரிய மீசை. ருத்ராட்சக் கொட்டையோட காவி டிரஸ்சில் பிரேமானந்தா மாதிரிக் கூட ஒருத்தரைப் பார்த்தேன். "

இவனிடம் பைக்கில் அழைத்துப் போ என்றது பெரிய தவறு என நினைத்தபடி முப்பாட்டன் ஏதோ சொல்ல வாயெடுத்த போது, திடீரென அரங்கத்தில் பெரும் சலசலப்பு எழுந்தது.

கூலிங்கிளாஸ் சகிதமாய் சுறுசுறுப்பாய் மேடைப் படிகளில் ஏறி வரும் அந்த இளைஞர்தான் சலசலப்புக்குக் காரணம் என்பதைக் கந்தசாமியால் உணர முடிந்தது.

முப்பாட்டனின் கண்கள் சுருங்கின.

" இந்த ஆளை யாரு இங்க வரச் சொன்னது? " என்றான் கோபமாக.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் 6 ]

அரங்கத்தின் ஒரு பக்கமிருந்து பலத்த கைத்தட்டல் ஒலியும், விசில் சப்தமும் கேட்டது.

முப்பாட்டன் பல்லைக் கடித்துக் கொண்டு முன் நெற்றியை உள்ளங்கையால் அழுத்த்த்திப் பிடித்தான். கடூரமான குரலில், " போச்சு. எல்லாம் போச்சு. " என்று படபடத்தான்.

கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. " என்னடா ஆச்சு ? "

" இந்த விழாவோட கவுரவம், கம்பீரம் எல்லாமே போச்சு. "

" ஏன்? "

" இலக்கியப் பத்திரிகைகளில் வெளியிட்ட அறிவிப்புகளில் இந்த ஆள் பேரைப் போடவே இல்லை. அய்யோ... கூட்டம் சேர்த்தறதுக்காக இப்படி ஒரு கேவலமான காரியத்தைப் பண்ணிட்டாங்களே..."

" யாருடா இவரு ? எங்கயோ இவரு போட்டோவைப் பார்த்த மாதிரியே இருக்கு. "

" இவன் ஒரு வெட்கங்கெட்ட வெகுஜன எழுத்தாளன். ஹ்ம். உனக்கு வெகுஜன எழுத்தும் தெரியாது, இலக்கிய எழுத்தும் தெரியாது. ஏண்டா இப்படி கேள்வி கேட்டு படுத்தறே... ஏற்கெனவே நான் டென்ஷன்ல இருக்கேன். "

கந்தசாமி அப்போதுதான் கவனித்தான். முப்பாட்டனின் முகம் அந்த ஏசி குளிரிலும் முத்து முத்தாக வியர்த்திருந்தது. மூக்கின் நுனி லேசாய் சிவந்திருந்தது. கைகளும், உடம்பும் லேசாய் நடுங்கிக் கொண்டிருந்தது.

இதே மாதிரியான அறிகுறிகளை வரும் வழியில் சற்று நேரம் முன்பு 'கதைக்கு எவ்வளவு பணம் குடுப்பாங்க? ' என்று கேட்டபோது அவனிடம் பார்த்தான். அதற்கப்புறம் கொஞ்ச நேரத்தில் சகஜமாகி விட்டான். இப்போது மறுபடியும்.

இவனுடைய இந்த மாதிரி தோற்றத்தையும், செயல்பாடுகளையும் இத்தனை வருஷத்தில் பார்த்ததே இல்லை. அவனுக்குக் கோபம் வரும் என்பதே கந்தசாமிக்குத் தெரியாது.

அவன் அறிந்த முரளி நன்றாகப் படிக்கும் பையன். அம்மா கூப்பிட்டு கடைக்குப் போய் தக்காளி, பச்சை மிளகாய் வாங்கி வரச் சொன்னால், மறுபேச்சில்லாமல் போகிறவன். இரண்டாம் ஆட்டம் போய் விட்டு வந்து ராத்திரி ஒரு மணிக்குக் கதவைத் தட்டாதவன். கிரிக்கெட் அல்லது கபடி விளையாடப் போய் அடுத்த ஊரின் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தினரிடம் கைகலப்பில் இறங்கி ரத்தச் சிராய்ப்புகளோடு வீடு திரும்பாதவன். அதிர்ந்து பேசாதவன். கந்தசாமியைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்கிற பக்கத்து வீட்டு உஷா கூட அவனிடம்தான் நின்று பேசுவாள். எல்லா அப்பாக்களும் அவனைக் காட்டி ' அந்தப் பையனைப் பார்த்து கத்துக்க. ' என்று தங்கள் வால் பையன்களுக்கு உதாரணம் காட்டுவார்கள்.

பூச்சி மாதிரி தெருவில் வளைய வரும் முரளி, முப்பாட்டன் என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி உரத்துப் பேசுகிறானே, முணுக்கென்றால் கோபப்படுகிறானே, உடல் நடுங்குகிறானே?

இது ஏதாவது வியாதியா? பிளவாளுமை என்று இப்போது எல்லோரும் பரபரப்பாய் பேசிக் கொள்கிறார்களே, அதுவாய் இருக்குமா?

இப்படிப் பலவாறாய் யோசனை புரண்டு கொண்டிருந்தாலும், அவ்வப்போது எழும் கேள்வியை மட்டும் கேட்காமல் இருக்க முடியவில்லை.

" எழுதறவங்க எல்லாருமே எழுத்தாளர்கள் இல்லையா முரளி? என்னமோ வெகுஜனம், சிறுஜனம்ன்னு பிரிச்சு சொல்றியே? "

" ஆமாண்டா. நடிக்கிறவங்க எல்லாருமே நடிகையாயிட முடியுமா? ஷபனா ஆஸ்மிக்கும், ஷகிலாவுக்கும் வித்தியாசமில்லே? "

" ஓ.. இப்ப மேடையில் ஏறினவர் செக்ஸ் கதை எழுதறவரா? "

" ஷிட். ஐ கான்ட் டாலரேட் திஸ் நான்சென்ஸ். ஜஸ்ட் ஐ கான்ட். "

தன்னைத்தான் திட்டுகிறானோ என்று திடுக்கிட்ட கந்தசாமிக்குப் பிறகுதான் புரிந்தது. அவன் மேடையைப் பார்த்துத்தான் திட்டுகிறான். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மைக்கில் அறிவித்த விஷயம்தான் முப்பாட்டனின் பிளவாளுமையை அதிகரித்து ஆங்கிலத்தில் சரளமாய்த் திட்ட வைத்திருக்கிறது.

" நண்பர்களே, ஏராளமான பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கே வந்திருக்கும் எழுத்துப் புயல் ஏக்நாத்குமார் அவர்களுக்கு நேரமின்மையால் நிகழ்ச்சி நிரலில் சிறுமாற்றம் செய்கிறோம். எட்டாம் புலிகேசி அவர்களின் இந்தப் புதிய நாவல் குறி்த்த தனது பாராட்டுரையை அவர் தந்து விட்டுச் செல்வார். அதன்பின் திட்டமிட்டபடி மற்ற நிகழ்ச்சிகள் தொடரும். "

கூட்டத்தில் ஒரு சிலர் முணுமுணுத்தனர். ஆனால் வந்திருந்த ஏக்நாத்குமார் ரசிகர்கள் பலமாய் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். மீண்டும் விசில். முப்பாட்டனின் உடம்பில் உஷ்ணம் தாறுமாறாய் ஏறியது.

" அந்த ஹோல்சேல் எழுத்து வியாபாரி ராத்திரியில் கூட கூலிங்கிளாசைக் கழட்டறானா பாரு. " என்று பல்லைக் கடித்தான்.

" உனக்கு பைஜாமா, பிளாட்பாரம் கண்ணாடி மாதிரி அது அவருக்கு அடையாளம். சத்தமா திட்டாதே முரளி. எல்லாரும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறாங்க. "

" பார்க்கட்டுமே. இலக்கிய வர்க்கத்துக்கே அவமானகரமான இந்த விஷயத்தை இன்னி்க்கு நான் ரெண்டில் ஒரு கை பார்க்கத்தான் போறேன். "

'ற'-வில் எழுதிய ஒரே ஒரு கதையிலேயே இலக்கிய உலகத்தின் ஏகபோக பிரதிநிதியாய் தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறான் என்று தோன்றியது கந்தசாமிக்கு. இருந்தாலும் அவனைத் தடுத்து நிறுத்தும் சக்தியோ, அறிவோ தனக்கு இல்லை என்பது கந்தசாமிக்குப் புரிந்தே இருந்தது.

இதற்குள் ஏக்நாத்குமார் மைக்கின் முன்னால் வந்து நின்றிருந்தார். டெக்னீஷியன் ஓடி வந்து மைக் உயரத்தை சரிப்படுத்தி விட்டுப் போனதும், தொண்டையை செருமினார்.

" இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? ஒரு சுத்தமான இலக்கியகர்த்தாவின் விழாவில் இவனுக்கு என்ன வேலை? அப்படின்னு உங்கள்ல பாதிப் பேர் நினைக்கறிங்க. (சிரிப்பு). ஆனா, எனக்கு இலக்கியமும் தெரியும்ங்கறது பலருக்கும் தெரியாது. நானும், எட்டாம் புலிகேசியும் நெருங்கிய நண்பர்கள்ங்கறதும், அவரோட ஒவ்வொரு கதையையும், என்னோட ஒவ்வொரு கதையையும் ஒருத்தரோடொருத்தர் விவாதிச்சிட்டுத்தான் எழுத ஆரம்பிப்போம்ங்கறதும் இது வரை நாங்க வெளியில் சொல்லாத ரகசியம். நாங்க ரெண்டு பேரும் சமகாலத்தில் எழுத ஆரம்பிச்சோம். சொல்லப் போனா எப்படி எழுதினா இலக்கிய வட்டத்தில் பேர் வாங்கலாம்ன்னு அவருக்கு சொல்லிக் கொடுத்ததே நான்தான். நான் சொல்லிக் கொடுத்ததை கப்ன்னு பிடிச்சிக்கிட்டார். மக்களுக்காக நான் எழுத, மத்தவங்களுக்காக அவர் எழுதினார். இன்னிக்கு உங்க முன்னால இமயம் மாதிரி உயர்ந்து நிக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. "

அவர் பேசியதை முப்பாட்டனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

எழுந்து நின்றான்."ஏக்நாத்குமார், என் பேர் முப்பாட்டன். நான் ஒரு தீவிர இலக்கியவாதி. உங்க கிட்டே சில கேள்விகள் கேக்கணும். என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய தைரியம் உங்களுக்கு இருக்கா? எனக்கு பதில் சொல்லிட்டு, அதுக்கப்புறமா உங்க சொந்தப் பெருமையைப் பேசுங்க. "

அரங்கம் மொத்தமும் திகைத்துப் போய் - ஏக்நாத்குமாரையும், முப்பாட்டனையும் மாறி மாறிப் பார்த்தது.

(தொடரும்) 

oooOOooo
[ பாகம் 7 ]

" ஏய் யாரப்பா நீ ? "

கேள்வி எழுப்பிய முப்பாட்டனைப் பார்த்து மேடையிலிருந்த ஒருவர் ஆத்திரமாய்க் குரல் கொடுக்க முயல - ஏக்நாத்குமார் சட்டென மைக்கை பொத்தி விட்டதால் அந்தக் குரல் மேடையோடே அமுங்கி விட்டது.

அந்த கோபக்காரரை அமைதியாய் இருக்கும்படி சைகை செய்து விட்டு, நிதானமாய் முப்பாட்டனைப் பார்த்தார் ஏக்நாத்குமார்.

" என் கிட்டே என்னப்பா கேக்கணும் ? கேளு. "

" நீ ஒரு போலி எழுத்தாளன். தமிழ் எழுத்துலகுக்கு வந்த சாபக் கேடு. உன் கதைகளைப் படிக்கிறதாலதான் மக்களோட இலக்கியத்தரம் தாழ்ந்துக்கிட்டே போயிட்டிருக்கு. "

" தம்பி பெருங்கிழவனார்... "

" என் பேர் முப்பாட்டன். "

" ஓ ஐயாம் ஸாரி முப்பாட்டன். என்னோட எழுத்து மக்களுக்குப் பிடிச்சிருக்கு. படிக்கிறாங்க. ஏன் பொறாமைப்படறிங்க. "

" உன்னைப் பார்த்து நான் ஏன்யா பொறாமைப்படணும்? மக்களுக்குப் பிடிக்குதுன்னு கள்ளச் சாராயத்தை ஊத்தி ஊத்திக் குடுப்பியா? "

ஏக்நாத்குமார் கடைபிடித்த நிதானத்துக்கு முற்றிலும் எதிராக முப்பாட்டன் பயங்கர படபடப்போடு ஏகவசனத்தில் கத்தியதைப் பார்த்து மிரண்டு போனான் கந்தசாமி.

" ஏய் உக்காருடா. உக்காரு. என்ன கலாட்டா பண்ணலாம்ன்னு வந்திருக்கியா? "

பல திசைகளிலிருந்தும் குரல் கிளம்பி வர, கந்தசாமி முப்பாட்டனின் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்றான். ஆனால் அவன் திமிறிக் கொண்டு நின்றான்.

ஏக்நாத்குமார் அப்போதும் பொறுமையாகவே பதிலளிக்க முயன்றார்.

" தம்பி முப்பாட்டன். இந்த மாதிரி விதண்டாவாதம் பண்ணிட்டிருந்திங்கன்னா கடைசி வரைக்கும் நீங்க அந்த கடைசி வரிசைலதான் உக்காந்திருக்கணும். நான் எழுதறது இலக்கியமோ இலக்கியம் இல்லையோ... நான் சொல்ல வந்த விஷயம் பளிச்ன்னு மக்களுக்குப் புரியும். நீங்க பெருசு பெருசா இலக்கியமே படைங்க. ஆனா மக்களுக்குப் புரியும்படியா எழுதுங்க. "

" யோவ், ஆப்ட்டரால் நீ ஒரு எழுத்து வியாபாரி. உன்னோட அறிவுரை எனக்குத் தேவையில்லை. உன்னோட புத்திசாலித்தனத்தை முட்டாள் வாசகர்கள் கிட்டே காட்டு. என்னை மாதிரி உலக இலக்கியத்தை கரைச்சுக் குடிச்சவங்க கிட்டேயும், எங்களோட எலிட் வாசகர்கள் கிட்டேயும் உன்னோட பம்மாத்து பலிக்காது. "

ஏக்நாத்குமார் இன்னமும் பொறுமையிழக்காமல் அவனுக்கு பதிலளிக்க முயன்ற போது, மேடையில் இருந்தவர்கள் கடும் பரபரப்புக்கு ஆளானார்கள்.

" ஸார், நீங்க அவன் கிட்டே பேச வேண்டாம். அந்த ஆளை நாங்க பார்த்துக்கறோம். "

எட்டாம் புலிகேசி தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

இதற்குள் தடித்தடியாய் இருந்த நாலைந்து பேர் முப்பாட்டனை சூழ்ந்தார்கள். அதில் ஒருவர் போலிஸ் க்ராப் வைத்திருந்தார்.

" மரியாதையா நீ வெளியே போறியா? இல்லேன்னா உள்ளே தள்ளுவோம். "

" என்ன மிரட்டறிங்களா? நான் இலக்கியவாதி. நமனையும் அஞ்சேன் ! நான் வெளியே போக மாட்டேன். என்ன செய்விங்க? "

முப்பாட்டனின் பிடரியில் கையை வைத்து ஒரு தள்ளுத் தள்ளினார் அந்த நபர்களில் ஒருவர்.

முப்பாட்டன் தடுமாறி விழப் போக, கந்தசாமி அவனைத் தாங்கிப் பிடித்தான்.

" ஸார், இவன் என் ஃப்ரெண்ட்தான். தெரியாம பேசிட்டான். அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். விட்டுருங்க. "

முப்பாட்டன் சீறினான். " நீ எதுக்குடா மன்னிப்புக் கேக்கற? "

போலிஸ் க்ராப், " அவனை மன்னிப்புக் கேக்கச் சொல்லு. " என்று சொல்லிக் கொண்டே ஆக்ரோஷமாய்க் கையை ஓங்க, கந்தசாமி அவர் கையை தடுத்துப் பிடித்தான்.

பிடரியைப் பிடித்து அவனை வெளியே தள்ள முடிவு செய்திருக்கிறார்கள் என்று கந்தசாமிக்குப் புரிந்தது. அப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தைத் தவிர்க்கும் முகமாய் அவனை அரவணைத்து நின்றான். " வேணாம் ஸார். வீணா அடிதடி வேணாம். நான் இவனை வெளியே கூட்டிட்டுப் போறேன். "

கந்தசாமியின் ஜிம் பாடிக்கு அவர்களும் கொஞ்சம் மரியாதை கொடுத்தார்கள். " கூட்டிட்டுப் போயிடுங்க. விழா ஸ்மூத்தா நடக்கணும். இல்லேன்னா ஏடாகூடமாயிடும். "

துள்ளுகிற முப்பாட்டனை கஷ்டப்பட்டு அடக்கி, தன் கட்டுப்பாட்டில் மெதுவாய் வெளியே நகர்த்திப் போனான் கந்தசாமி.

இருக்கைகளைக் கடந்த போது, சலசலப்பாய்க் குரல்கள் கேட்டன.

" தண்ணி அடிச்சிட்டு வந்திருப்பான் போலருக்கு. "

" அவரை சாதாரணமா நினைச்சுக்காதிங்க. இந்த வார 'ற'-ல கதை எழுதியிருக்காரு. " என்ற மாங்கனியின் குரலும் கேட்டது.

(தொடரும்)

oooOOooo
[ பாகம் 8 ]

மீண்டும் அந்த பொதுக் கழிப்பறையில் பைக்கை நிறுத்தி உடை மாற்றிக் கொண்டு முரளியானான் முப்பாட்டன்.

சினிமாவில் காட்டும் அம்னீஷியா மாதிரி எல்லாமே மறந்து போய் டிபிகல் முரளியாய்க் கெஞ்சினான்.

" டேய் கந்தசாமி, தயவு செஞ்சு நடந்த விஷயம் எதையும் நம்ம தெருவில் மூச்சு விட்டுராதே. அப்ஸூக்கு தெரிஞ்சதுன்னா பின்னி பெடலெடுத்துருவாரு. "

" சொல்ல மாட்டேண்டா. ஆனா அந்த டிரஸ் போட்டதும் நீ ஏன் அருள் வந்த மாதிரி சாமியாடறேன்னு எனக்குப் புரியலை. "

" ப்ளீஸ்... அதைப் பத்தியெல்லாம் இப்ப பேச வேண்டாம். " என்று கந்தசாமியின் இலக்கிய சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.

oo00oo

மறுநாள் வழக்கம் போல மொட்டை மாடியில் தீவிரமாய் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது - அந்த அதிசயம் நடந்தது.

" கந்தசாமி... "

மெல்லிய குரல் கேட்டது.

பெண் குரல்.

சுற்றும் முற்றும் பார்த்தான்.

" கந்தசாமி, இங்கே! இங்கே பாரு. "

பின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து ரமா.

ஆச்சரியமாய் அவளைப் பார்த்தான்.

வலியப் போய் பேச முற்பட்டாலும், நழுவிப் போய் விடும் ரமாவா கூப்பிடுகிறாள்.

" கந்தசாமி, எக்சர்சைஸ் பண்ணி முடிச்சிட்டு பின்கட்டு சுவருக்கு வாயேன். உன் கிட்ட கொஞ்சம் பேசணும். "

தோ, இப்பவே வரேன் என்று சொல்லலாம் போல மனசு ஒரு துள்ளு துள்ளியது. அடக்கிக் கொண்டான். வீரம் என்பது பயமில்லாததைப் போல நடிப்பது என்று கமல்ஹாசன் குருதிப் புனலில் சொன்னதைப் போல, பெண்களிடம் கம்பீரமாய் இருப்பது என்பது வழியாததைப் போல காட்டிக் கொள்வது என மனசுக்குள் ஒரு எண்ணம் புரண்டது.

சே, ஒரே நாளில் எப்படி இத்தனை இலக்கியத்தனமாய் யோசிக்க ஆரம்பித்து விட்டேன் என்று கொஞ்சம் திடுக்கிட்டான்.

" கந்தசாமி, வருவே இல்லே? "

மீண்டும் ரமா கேட்டதும்தான் அவளுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லை என்பது உறைத்தது.

" வரேன். "

உடற்பயிற்சியை நிறுத்தாமல் லேசாய்த் தலையை மட்டும் ஆட்டி பதில் சொன்னான்.

பயிற்சி முடிந்த பின், அவசர அவசரமாய்க் குளித்து விட்டு, ரமாவுக்கு படிய வாரிய தலை பிடிக்குமா இல்லை ஸ்டைலாக துவட்டிக் கொண்டே பேசினால் பிடிக்குமா... சென்ட் போட்டுக் கொண்டு போய் நிற்போமா இல்லை வெறும் சோப் வாசனையே போதுமா என்கிற மாதிரி சில பட்டி மன்றத் தலைப்புகளின் கீழ் யோசித்து, மூளையைப் பலமாய்க் குழப்பிக் கொண்ட பின் - ஒரு வழியாய் பின் கட்டுச் சுவருக்குப் போய் எட்டிப் பார்த்தான்.

ஏதோ ஒரு பாடப் புத்தகத்தின் இடுக்கில் ஆட்காட்டி விரலை நுழைத்துக் கொண்டு அவள் வீட்டு கொல்லைப் புறத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் ரமா.

" ரமா... "

கந்தசாமி கூப்பிட்டதும், ஒரு சின்ன சிரிப்புடன் சுவரை நோக்கி வந்தாள். கந்தசாமிக்கு உச்சி முதல் பாதம் வரை என்னவோ ஒரு சிலிர்ப்பு மின்னல் மாதிரி ஓடிற்று.

அவளுடைய சிரிப்பிலிருந்த சிநேகத்தை இத்தனை நாளில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. அண்ணாச்சி கடையில் அவள் முட்டை வாங்கிக் கொண்டிருந்த போது, ' டைம் எத்தனை ? ' என்று கூட பேசி்ப் பார்த்திருக்கிறான். ' ம்? என் வாட்ச் ரிப்பேர் ! ' என்று கடுகடுவென்றுதான் பதில் சொல்லி விட்டுப் போயிருக்கிறாள்.

சுவரின் மேல் கைகளைப் படர்த்தி, மோவாயைக் கையின் மேல் தாங்கிக் கொண்டு, " கந்தசாமி, நீ மாடு மாதிரி எக்சர்சைஸ் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சிட்டிருந்தேன். உனக்கு இலக்கியத்தில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இருக்கா? "

நேற்று உஷா குரங்கு என்று சொன்ன போது பின் மண்டையில் விழுந்த அந்த ணங்-கின் வீரியத்துக்கு சற்றும் குறையாமல் இன்னொரு ணங் இப்போது ரமா மாடு என்ற போது விழுந்தது.

" ரமா, எ.. என்ன திடீர்ன்னு இப்படி ஒரு கேள்வி? "

" இன்ட்டர்நெட்ல உன்னோட போட்டோ பார்த்தேன். உன் கூட வெள்ளை ஜிப்பா போட்டு ஓட்டைக் கண்ணாடியோட நிக்கறது முரளியா? " என்றாள்.

(தொடரும்)

oooOOooo
Copyright © 2005 Tamiloviam.com - Authors