தமிழோவியம்
அரும்பு : உஷாவின் அரும்பு
-

'அரும்பு'

மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.
அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.

தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)
முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த  போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?

இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.

இந்த  வாரத்தில்..


ராமசந்திர உஷா

Usha2002ல் முரசு எடிட்டரில்  தமிழ் தட்டச்சு செய்ய கற்றுக் கொண்டு என் தோழி சொன்ன ஒரு சம்பவத்தை கதையாய் மாற்றி திண்ணை இணைய இதழுக்கு அனுப்பினேன். பிறகு நாலைந்துநாள் கழித்து, தளத்தைப் பார்த்தால் என் கதை - 'பரிசு'
 
அந்த கதையை என் ஆரூயிர் கணவரைத் தவிர வேறு யாரும் படித்தார்களா என்பது எனக்கு தெரிய வரவில்லை.  என் கணவர் கூட படித்தாரா அல்லது என் நச்சரிப்பு தாங்காமல் படித்ததாய் கதை விட்டாரா என்பது இன்றுவரை எனக்கு சந்தேகமே! அப்பொழுது யாஹூ குழு எதிலும் நான் உறுப்பினர் இல்லாததால் அக்கதையைப் பற்றி பெரியதாய் எந்த சுவாரசியமும் இல்லை.
 
உடனே அடுத்த கதையை - வாய் சொல்லில் வீரரடி- எழுதி அதே இணைய தளத்துக்கு அனுப்பினேன். கதையும் வெளியானது. என்ன அப்பொழுது நான் அமீரகத்தில் வசித்ததால் வீட்டுக்கு "தானி" எதுவும் வரவில்லை.  நன்கு அர்ச்சித்து மூன்று நான்கு தனி மடல்கள், இணைய தளத்தில் அன்று இருந்த கருத்து பெட்டியில் எப்படி இப்படி எழுதலாம் என்று கேள்விகள். அக்கேள்விகளுக்கு என்ன பதில் அளித்தேன் என்றுக்கூட நினைவில்லை. சமாளித்தேன் அவ்வளவே!
 
இதை வீட்டில் சொன்னால், நீ கதை எழுதி கிழிச்சது போதும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று வெளியே சொல்லவும் பயந்து நடுநடுங்கி கொண்டு இருந்தேன் என்றால் மிகையில்லை ஒரு புதுமுக எழுத்தாளருக்கு இந்த அனுபவம் எதிர்பாராதது.
 
பிறகு வெகு நாட்களுக்கு பிறகு இரண்டொருவர், அந்த கதை அருமை, மிக தைரியமாய் எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டாய் சொன்னப்பொழுது, இது அப்பொழுது சொல்லியிருந்தால் என் நடுக்கம் கொஞ்சம் குறைந்து இருக்குமே என்று மனதுக்குள் அங்கலாய்த்துக் கொண்டேன். ஆம், கதை வெளியானப்பொழுது யாருமே நன்றாக இருக்கிறது என்று சொல்லவேயில்லை :-)
 
இது இப்படி அது திகில்  அனுபவமாய் போக, அடுத்து அச்சில் என் முதல் சிறுக்கதை ஆனந்தவிகடனில் வந்தது. மிக சரியாய் எழுத ஆரம்பித்த ஓரே வருடத்தில்! கதையை அவர்கள் எடிட் செய்யவில்லை. முழுவதும் ரீ ரைட் செய்து இருந்தார்கள். நான் கொடுத்த தலைப்பு  காதலின் தோல்வி, அவர்கள் வைத்தது எங்கே என் காதலி.  பலவரிகளை மாற்றி எழுதியதைப் படிக்க அது என் கதையா என்ற சந்தேகமே வந்தது. இப்படி இது சோகக் கதையாய் மாறிப்போனது.
 
இக்கதை வெளியான இரண்டே மாதத்தில் கணையாழியில் என் சிறுக்கதை தெய்வம் வெளியானது, எந்த வித திருத்தங்கள்- பிழைத்திருத்தம் கூட செய்யப்படாமல் வந்தது.  இக்கதையைக் குறித்து  பல ஆரோக்கியமான கிடைத்ததால் ஒரு நிறைவையும் மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும் தந்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors