தமிழோவியம்
கவிதை : மாற்ற வா!
- சிதம்பரம் அருணாசலம்

ஆழிப் பேரலை தாக்கி
அலைக்கழித்த போது,
உயிருக்குப் போராடியவர்களிடம்
உடமைகளைத் திருடிய,
மனிதத் தன்மை என்பது
மருந்துக்குக் கூட இல்லாதவரும்;

பெண்களைப் பொருளாக்கிக்
கால்நடைச் சந்தைகள்
காட்டுகின்ற வியாபாரமாக
நாடுகளைக் கடந்தும்
நடத்துகின்றவர்களும்;

பச்சைத் தளிர்களை
கொச்சையாய்க் கையாண்டு
இச்சையைத் தீர்த்துக் கொள்ளும்
கேவலப்பட்ட மனத்தைக்
கேளிக்கையாய்க் கொண்டவரும்;

சாதியைக் காரணம் காட்டி,
வீதியிலே, ஆலய வாசலிலே
நிறுத்தப்படும் அவலம்,
முற்றாக அழிந்து போகாமல்
புற்றீசல் போல் ஆங்காங்கே
புறப்படக் காரணமானவர்களும்;

நிறைந்து காணப்படும் - இந்த
நீசத்தனமான சூழ்நிலையை மாற்றி
பாழ்பட்ட சமுதாயம்
பண்பட்டு விளங்கப்
புதுவருடமே, புறப்பட்டு வா!
உடலுக்குப் புதுத்துணியும்,
உள்ளத்தில் புதுத்துணிவும்
வெள்ளமாய் அள்ளித்தர வா !

Copyright © 2005 Tamiloviam.com - Authors