தமிழோவியம்
தராசு : லஞ்சம் வாங்கிய எம்.பிக்கள்
- மீனா

பார்லிமெண்டில் கேள்வி கேட்க எம்.பிக்கள் 10 பேர் லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. எம்.பிக்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இதையடுத்து இவர்களை பதவியிலிருந்து நீக்க சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்திரவிட்டார். இதை எதிர்த்து அந்த 10 பேரும்  சபாநாயகருக்கு எதிராக தொடுத்த வழக்கில்தான் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

மக்கள் பிரச்சனைகளைப் பற்றி மக்கள் பிரதிநிதிகளாகிய எம்.பிக்கள் ஆளும் அரசுடன் விவாதிக்க உள்ள இடம் தான் பாராளுமன்றம் - அங்கே தங்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசத்தான் மக்கள் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் அங்கே போய் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யவே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய அயோக்கியர்கள் தான் இந்த 10 எம்.பிக்களும். தெரிந்தது இந்த 10 பேரின் லட்சணம். இன்னும் எத்தனை பேர் இப்படி நாட்டில் உலவுகிறார்களோ தெரியாது.

எம்.பிக்களாக இவர்கள் செய்யும் சேவைக்குத் தான் மக்கள் வரிப்பணத்திலிருந்து இவர்களுக்கு சம்பளம், பயணப்படி இன்ன பிற சலுகைகள் என்று பலவற்றையும் அரசே செய்துவருகிறது. வருகின்ற வருமானம் போதாதென்று இவர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் மக்களிடமிருந்தே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். தொகுதியில் ரோடு போட வேண்டுமா - காசு கொடு ; பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி கட்ட வேண்டுமா - காசு கொடு; நிவாரணம் கிடைக்க வேண்டுமா - காசு கொடு; வேலை வாங்கித் தர வேண்டுமா / லோன் வாங்கித் தரவேண்டுமா - காசு கொடு என்று தொட்டதெற்கெல்லாம் காசு கேட்டு மக்களிடம் அரசியல்வாதிகள் செய்யும் அராஜகத்திற்கு எல்லையே இல்லை என்ற நிலையில் இதெல்லாம் போதாது - உங்கள் பிரச்சனையைப் பற்றி பேசவே நீங்கள் எங்களுக்கு காசு கொடுக்கவேண்டும் என்று பட்டவர்த்தனமாக காசு கேட்ட இந்த 10 எம்.பிக்களை என்ன செய்தால் தகும்?

மிகச்சாதாரண நிலையில் உள்ள ஒருவன் கூட எம்.பி, எம்.எல்.ஏ ஆனால் சில ஆண்டுகளிலேயே கோடிக்கணக்கில் சொத்தைக் குவித்துவிடுகிறார்கள். யாராவது சேர்த்த சொத்திற்கு கணக்கு கேட்டால் கூட சாமர்த்தியமாக சமாளித்துவிடும் இந்த எத்தர்கள் என்று சட்டத்தின் முன்பாக / மக்கள் முன்பாக மண்டியிடப்போகிறார்கள்?

பிரபல அரசியல்வாதிகளைக்கூட -  அவர்களது கட்சி மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படாமல் அண்மைக்காலத்தில் தண்டித்துள்ள நம் நீதித்துறை இந்த 10 பேர் விஷயத்திலும் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்ப்பார்ப்போம். இவர்களுக்கு நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு எதிர்காலத்தில் அரசியல்வாதிகள் இத்தகைய தவறைச் செய்யாதவகையில் அவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்கும்படி இருக்கவேண்டும் என்பதே நம் ஆசை..

Copyright © 2005 Tamiloviam.com - Authors