தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : கோயமுத்தூர் சிலர் பார்வை
- சுதர்சன்

Coimbatoreஅது என்ன அவ்வளவு பிரபலமான ஊரா என்று யாரிடமாவது கேட்டால் போதும், ஜீ.டி.நாயுடு, சிறுவாணித் தண்ணீர், PSGCTCIT செட்டுகள், சிறுதுளி திட்டம், செழிய, சிவகுமார, மணிவண்ண, சத்ய சுந்தர பாக்கிய ராஜ வகையறாக்கள்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, நரைன் கார்த்திகேயன், குர்லா எக்ஸ்பிரஸ், பிளாக் தண்டர் என்று சங்கிலித் தொடர் போலே நீளும் பதில்கள்.

நம்ம ஊரைப் பத்தி நம்மளோட கருத்துகளும், மதிப்பீடுகளும் எப்பவுமே ஒரு தலைப் பட்சமாகவே இருக்கும்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சும்மாவா சொன்னாங்க.இதோ கோயமுத்தூரைப் பத்தி வெளியூர்க்காரங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போமா..

ஐகாரஸ் பிரகாஷின் பார்வையில்:

வகை தொகையில்லாமல், மானாவாரியாக கெட்ட வார்த்தைகளை - அதன் நிஜ அர்த்தம் தெரியாமலேயே - அள்ளித்தெளிக்கும் கூவாங்கரையில் பிறந்த வளர்ந்த ஒருவனுக்கு,
கோயமுத்தூர் தரும் தரும் அதிர்ச்சிகள், இன்பமானவை. அந்த அதிர்ச்சிகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.

என்னமோ, எனக்கு கோவை என்று சுருக்கமாகச் சொல்வதைவிட, கோயமுத்தூர் என்று நீட்டி முழக்கிச் சொல்வதுதான் பிடித்திருக்கிறது. கோயமுத்தூர் என்றவுடன் சட்டென்று
நினைவுக்கு வருவது என்ன? லக்ஷ்மி மில்ஸ் வளாகம்? மருதலைக் கோயில்? சுகுணா மோட்டார் கம்பெனி ?  நிர்மலா காலேஜ் பெண்கள் ? அங்கண்ணன் கடை ? கோக்குமாக்கான
வடிவத்தில் இருக்கும் ஃப்ளைஓவர் ? டேக் ஓவர் டைக்கூன் பி.ஆர்.ராஜரத்தினம் ?அநியாயமாக ரேஸ் விபத்தில் செத்துப் போன கரிவரதன் ? ராஜ்யஸ்ரீ பதி ? சிறுவாணி ? இல்லை... இதல்லாம் பிறகுதான்... முதலில் நினைவுக்கு வருவது அந்த ஊர் மக்களும், அவர்கள் பேசும் கொங்குத் தமிழும் தான்.

பாரதியார் பல்கலை எம்பிஏ நுழைவுத் தேர்வு எழுதச் சென்று, கேள்வித் தாளுக்காக காத்திருக்கும் போது என்ன வரும்? ஒழுங்காகத் தேர்வு எழுதி சீட்டு கிடைக்குமா என்ற நடுக்கம் வரும் அல்லது  RAC டிக்கட் கன்ஃபர்ம் ஆகுமா யோசனை வரும். எனக்கு தூக்கம் தான் வந்தது. (இரவில் பன்னிரண்டு மணி நேர பேருந்துப் பயணம் + கௌரிஷங்கரில் 'பாத்தி கட்டி அடித்ததன்' விளைவு).

கேள்வித் தாள் விநியோகம் செய்து கொண்டு வந்த நுழைவுத் தேர்வு பொறுப்பாளர், தட்டி எழுப்பி, "பரீட்சை ஆரம்பிச்சுடுச்சுங்க, பயணக் களைப்புங்களா? மொகம் கழுவிக்கிட்டு வந்து எழுதறீங்களா ?" என்று எந்த விதமான நக்கல்/கிண்டலுமில்லாமல் சாதாரணமாகக் கேட்டவர், கோயமுத்தூர் மக்கள்ஸின் ஒரு ரெப்ரசெண்டேடிவ் சாம்பிள் என்று தான் தோன்றுகிறது. வாங்க, போங்க என்று மரியாதையுடன் அழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களையும், தமிழில் பேசும் bartender களையும் அங்கே தான் ஒரு சேரப் பார்க்கலாம்.

கேஜி வளாகத்தின் அருகே இருக்கும் பழமுதிர்ச்சோலையின் கிளை ஒன்று, சென்னையில் சாலிக்கிராமத்தில் துவங்கப்பட்டிருக்கிறது. சரி, போய்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தவுடன், வரவேற்பு, "வா சார், இன்னா வோணும்?"

பூவோடு சேர்ந்த நார், மணக்குமா அல்லது நாறுமா என்பதை யார் சொல்ல முடியும்?


கோபாலின் பார்வையில்.

எனக்குத் தெரிஞ்ச கோவைன்னா 1968லே இருந்துதான். அப்ப எஞ்சிநீயரிங் படிக்கணுமுன்னா, கல்வித்துறை சொல்ற காலேஜுலேதான் சேரணும். அவுங்களும், உள்ளூர்காரனை வெளியூர் அனுப்பறதுலே குறியா இருப்பாங்க. அப்படித்தான் மதுரைக்காரனான நான் கோவை வந்து சேர்ந்தேன்.

ஜனங்க நல்லா சிநேகமாவும், மரியாதையாவும்தான் பழகுனாங்க. மதுரையைவிட 'சேட்டு'ங்க நிறையப் பேர் இருக்காங்க. இந்தி தெரியுதோ இல்லையோ இந்திப் படம் கட்டாயம் பார்க்கணுங்கறது ஒரு ஃபேஷனாப் போச்சு.( இல்லேன்னா சேட்டுப் பொண்ணுங்களை வேற எங்கே பார்க்கறதாம்?).தினம் ஒப்பணக்கார வீதிவரை போய், அங்கே இருக்கற ஒரு 'இண்டியா காஃபி'க் கடையிலே ஒரு வெஜிடபுள் கட்லெட் & காபி குடிக்கும் வழக்கமும் வந்துருச்சு.

நிறைய சினிமாத் தியேட்டர்ங்க, ஓட்டலுங்கன்னு இருந்தாலும் வாழ்க்கை கொஞ்சம் வறட்சியாதான் இருந்துச்சு முதல் ரெண்டு வருஷங்கள்.

அதுக்கப்புறம்?

திடீர் ஒளி. கண்ணைக்கூசும் விதம் ஒரு பேரொளிதான். எங்க C.I.T.க்கு ஜஸ்ட் எதிர்ப்புறம் ஒரு மெடிக்கல் காலேஜ் வந்துச்சு. கலரோ கலர்! ஆரம்ப விழாவா எல்லாருக்கும் 'முதல் உதவி' சொல்லித் தராங்களாம். உண்மையைச் சொன்னால் எங்களுக்கே முதல் உதவி தேவைப்பட்டுச்சு. அதான் ஆளாளுக்கு மயங்கி விழுந்தோமே.ஒரு மருந்துக்குக்கூடப் பெண் வாசனை இல்லாம இருந்துச்சுங்க, இந்த எஞ்சிநீயரிங் கல்லூரிகள் எல்லாம். ஒரு பூவுக்கு ஏங்குன பசங்க முன்னாலெ, இப்ப  ஒரு பூந்தோட்டம்!! நீ,நான்னு ஏகப்பட்ட கூட்டம். எல்லாம் இந்த முதலுதவி கத்துக்கறதுக்குத்தான்:-))))

பசங்களும் ஆளுக்கொரு படகு வாங்கிக்க வேண்டிய நிலமை. அதான் 'ஜொள்ளாறு' ஓடிக்கிட்டு இருந்துச்சே.அடுத்த மூணு வருஷம் ஓடுனதே தெரியலை. 1973யிலே வெளியே வந்து பார்த்தோம். கண் முன்னாலெ யதார்த்தமான 'நிஜ உலகம்' . எண்ணி நாலு வருசத்துக்கப்புறம், (புது மனைவியோடு) கோவைக்கு ஒரு ஆஃபீஸ் வேலையாப் போனோம். மதிப்பைக் காப்பாத்திக்க வேண்டி, நம்ம சரித்திரத்தைக் கொஞ்சம் அடக்கியே வாசிச்சேன். (ஆனால்....... பாம்பின் கால்...........?) பக்தியோடு இருந்தேன்னு காமிச்சுக்கறதுக்காக பேரூர்,
மருதமலைன்னு கூட்டிக்கிட்டுப் போனேன். 'அன்னபூரணா'வுலே 'ஃபேமிலி ரோஸ்ட்' வாங்கித் தின்னோம். கடைவீதி, சவுடாம்பா கோயில்னு கொஞ்சம் ஃபிலிம் காட்டுனேன்.

போனமுறை 1989லே குடும்பத்தோடு கோவைக்குப் போனோம். குழந்தைக்கு குருவாயூரிலே ஒரு பிரார்த்தனை.கோவையிலே தங்குனது தமிழ்நாடு ஹோட்டலில். கோயிலுக்குக் கட்டிக்கிட்டுப்போக ஒரு வேட்டி வாங்க வேண்டியதாப் போச்சு.  எதிர்ப்புறம் ஒரு கடை.  அந்த ஒரே ஒரு கடை & கடைக்காரராலே கோவையைப் பத்தின நல்ல எண்ணங்களை எல்லாம் கடாசிப்புட்டாங்க வீட்டம்மா. 420ன்ற எண்ணம் அழுத்தமாப் பதிஞ்சுருச்சு. அப்பப் பதுங்குன நான் இன்னும் எந்திரிக்கலை.

விடறதில்லை, கூடிய சீக்கிரம் கோவைக்குக் கொண்டு போகணும். எண்ணத்தை மாத்தி அமைக்கணும். நடக்காமயாப் போகப்போகுது? பார்த்துருவோம்:-)


துளசியின் பார்வையில்

கோபால் சொன்னதெல்லாம் நிஜம்தான். ரெண்டே ரெண்டு முறை போனதுலெயே, கோவையைப் பத்தி ரெண்டு விதமான கருத்து வந்துருச்சு. ஆனா மூணாவது முறை போறதை ஆவலுடன் எதிர்பார்க்கறேன்,வலைப்பதிவர் சந்திப்பு நடத்தணுமே :- ))))

Copyright © 2005 Tamiloviam.com - Authors