தமிழோவியம்
இயேசு சொன்ன கதைகள் : நல்ல சமாரியன் கதை
- சிறில் அலெக்ஸ்

GoodSamaritanமுகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை.

நான் சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில், ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன? இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார். அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், வீச்சமும் தங்கள் ஆடைகளை ஒட்டிக்கொள்ளுமோ என ஒதுங்கி நின்றபோது இவன் துணிந்து தன் கடமையை செய்தான். அந்த மனிதரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் வைத்து எடுத்துச் சென்று சேர்த்தான். இந்து நாளிதழில் இந்த செய்தி வந்தபோது கல்லூரியே பெருமை கொண்டது.

"அயலானை அன்பு செய்." இயேசு சொன்ன பொன்மொழிகளில் ஒன்று. ஆங்கில மொழிபெயர்ப்பில் Love your neighbour எனத் தரப்பட்டுள்ளது. தமிழில் அயலான் என்பது இன்னும் தொலைவில் உள்ளவரைக் குறிப்பதுபோலுள்ளது.

ஒருநாள் ஒரு சட்ட வல்லுனர் இயேசுவிடம் கேட்டார்,"அயலானை அன்புசெய் என்கிறீரே யார் என் அயலான்?(Who is my neighbour?)"

இயேசு ஒரு கதையைச் சொன்னார்.

"ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு பயணித்தான். அவனை கள்வர் சூழ்ந்தனர். அடித்து, குற்றுயிராய் அவனை விட்டுச் சென்றனர்.

தற்செயலாய் ஒரு சாமியார் அங்கே வந்தார், இவனைக் கண்டார், ஒதுங்கி சென்றார்.

மத குரு ஒருவர் வந்தார் அவரும் இவனைக் கண்டு ஒதுங்கி சென்றார்.

சமாரியன் ஒருவன் வந்தான். இவன்மேல் பரிவு கொண்டான். அவானது காயங்களுக்கு கட்டுப்போட்டு மருந்திட்டான். அவனது கழுதையின் மேல் காயம்பட்டவனை ஏற்றி விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்து கவனித்தான். மறு நாள் விடுதி காப்பாளனிடம் கொஞ்சம் காசைத் தந்து 'இவனை கவனித்துக்கொள்; நீ அதிகமாய் இவன்பொருட்டு என்ன செலவளித்தாலும் நான் மீண்டும் வரும்போது திருப்பித் தருவேன்' என்றான்.

இந்த மூவரில் யார் கழ்வரால் தாக்கப்பட்டவனுக்கு நல்ல அயலானாய் செயல் பட்டார்?" எனக் கேட்டார் இயேசு.

நல்ல சமாரியன் கதை(The Good Samritan) என புகழ்பெற்ற இந்தக் கதை சொல்லும் உண்மையை விளக்கத்தேவையில்லை.

'பலனை எதிர்பாராதே' என கீதை சொல்வதும் இதத்தானோ ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors