தமிழோவியம்
தராசு : யார் தவறு ?
- மீனா

புதுவருடம் மற்றவர்களுக்கெல்லாம் எப்படி அமைந்ததோ சேலம் காவல் துறையினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. திடீரென்று 11 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக மாயமாய் போன மர்மம் தெரியாமல் சேலம் போலீஸ் தவிக்க, காணாமல் போன 11 மாணவர்களையும் அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து  கிட்டத்தட்ட 10 கிலோமீட்டருக்கும் மேல் உள்ள ஒரு சிற்றூரில் பார்த்த அந்த ஊர் மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் தங்கள் பெற்றோர் திட்டியதால்தான் தாங்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் 11 மாணவர்களும் கோரஸாக போலீஸிடம் தெரிவித்துள்ளார்கள்.

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் சக மாணவனுடன் சண்டையிட்ட ஒரு மாணவனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்வாணமாக நிறுத்தி அவமானப்படுத்தியுள்ளார். அதனால் நிலைகுலைந்த அம்மாணவன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.

ஆக மொத்தத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் பொறுமை இழந்து வருவதையே மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் நிரூபிக்கின்றன. நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தால்தான் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற முடியும் - இல்லையென்றால் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையே இல்லை என்று பெற்றவர்கள் நம்புவதால்தான் படிக்கும் காலத்தில் தங்கள் பிள்ளைகள் மதிப்பெண்கள் குறைந்தால் கண்டபடி திட்டுவது, அடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆசிரியர்களும் மாணவர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்களை அன்பாகவோ சற்று கண்டிப்பாகவோ திருத்துவதை விட்டுவிட்டு வன்முறையாளர்களைப் போல கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மேலும் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே ஒருவரது வாழ்வைத் தீர்மானிக்காது என்பதை மாணவர்களுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்வதை விடுத்து மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மாணவர்களை குத்திக்காட்டி பேசுவதும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமலும் அவமதித்து வருகிறார்கள்.

ஆக மொத்தத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருசாராரின் போக்கால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் வீட்டை விட்டு ஓடுவது, தற்கொலை செய்துகொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலை மாற அனைத்து சாராரும் போதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

பெற்றோர்களுக்கு & ஆசிரியர்களுக்கு : அதிக மற்றும் முதல் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கையில் ஒருவரை முன்னேற்றிவிடாது. இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட தகுதிகள் புதைந்திருக்கும். தங்கள் பிள்ளைகளது தனிப்பட்ட திறைமைகளை கண்டறிந்து அவர்கள் அத்துறையில் முன்னேற பெற்றவர்கள் உதவ வேண்டும். நாட்டின் எதிர்காலம் இன்றைய வளரும் இளையதலைமுறையிடம்தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணரவேண்டும்.

மாணவர்களுக்கு :  பள்ளித் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதற்காக பெற்றோர் மற்றும் ஆசிரியர் திட்டினார்கள் என்றால் அடுத்த முறை அதிக மதிப்பெண் வாங்கி அவர்களிடமே பாராட்டுதல்களைப் பெறவேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டுமே தவிர தற்கொலை செய்து கொள்வது, வீட்டை விட்டு ஓடிப்போவது போன்றவை கோழைத்தனம்.  தோல்வியே வெற்றியின் முதல்படி. தோல்வியால் துவண்டு உட்காருவதையும், விபரீதமான முடிவுகளை எடுப்பதையும் விட்டுவிட்டு சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முயலவேண்டும். இதை மாணவர்கள் தெளிவாக உணரவேண்டும்.

வன்முறை மற்றும் அதீத கண்டிப்பு - இவைகள் எதற்குமே தீர்வாகாது என்பதை அனைத்து சாராரும் தெளிவாக உணரவேண்டும். இளம் வயதில் பிள்ளைகள் மீது திணிக்கப்படும் எண்ணங்களே பிற்காலத்தில் பொறுப்புள்ள அல்லது பொறுப்பற்ற, தீவிரவாத எண்ணங்கள் நிறைந்த குடிமக்களாக அவர்களை உருவாக்குகின்றன. எனவே
பெற்றோர்களே - ஆசிரியர்களே !! நல்ல குடிமக்களை உருவாக்க உங்கள் வேலையை முதலில் சரியாக செய்துவிடுங்கள். பிறகு பிள்ளைகளை குறை கூறுவதைப் பற்றி சிந்திக்கலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors